தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஐயமும் தீர்வும்

1. தமிழ் இணையக் கல்விக்கழகம் ஏன் தொடங்கப்பட்டது?

1.உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும்.

2.பாரம்பரியச் சடங்குகளையும், விழாக்களையும் தொடர்ந்து மேற்கொள்ளவும்.

3.தமது தாய் மண்ணோடும் தாய்மொழியோடும் தமிழ் இலக்கியம், கலை,பண்பாடு ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ளவும்.

4.அரிச்சுவடி முதல் ஆராய்ச்சிவரை தமிழ்க்கல்வி வழங்கவும்.

5.மின் நூலகத்தை ஏற்படுத்தவும்.

6.தமிழ் மென்பொருள்களை உருவாக்கவும்.

7.இதற்கான அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் தொடங்கப்பட்டது.

2. த.இ.க-வின் நோக்கம் என்ன?

உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும், வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டைப் பெருக்குதலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நோக்கமாகும்.

3. த.இ.க-வின் நிர்வாகக் கட்டமைப்பு என்ன?

சங்கவிதிமுறைகளின் கீழ், தமிழக அரசு ஆணைப்படி நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் குழுமத்தால் வழிகாட்டப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநரின் மேலாண்மையில் இது இயங்குகிறது.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பதுறை செயலர், நிதித்துறைச் செயலர், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர், உயர்கல்வி மன்றத் துணைத்தலைவர், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்ற ஆலோசகர் ஆகிய அலுவல்சார் உறுப்பினர்கள் குழுமத்தில் உள்ளனர். இவர்களில் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இயக்குநர் பதவி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பதவிக்கு நிகரானது. இவர் ஒரு தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு, இயக்குநர் குழுமத்தால் நியமிக்கப்படுகிறார்.

4. த.இ.க-வின் குறிக்கோள்கள் யாவை?

  • தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கணினித் தமிழ், தமிழில் பயன்பாட்டு மென்பொருள்கள், தமிழில் அறிவியல், தொழில்நுட்பம் பற்றிய கல்வித் திட்டங்களையும், அதற்கேற்பப் பாடத் திட்டங்களையும் தமிழில் உருவாக்கி, இணையம் வழியாக உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழில் ஈடுபாடுள்ள மற்றவர்களுக்கும் அளித்தல்.
  • கேள்வியறிவுக்காகவோ அல்லது சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு இப்பாடங்களைக் கற்க வாய்ப்பளித்தல்; வரையறுக்கப்பட்ட தேவைகளை நிறைவு செய்தோருக்கு, அவர்கள் கற்ற பாடங்களின் தகுதிக்கேற்ப, சான்றிதழ்/ பட்டயம்/ பட்டம் வழங்க ஏற்பாடு செய்தல்.
  • உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வி அறிவுச் சாதனங்களைத் தொகுத்து, அவற்றைப் பரவலாகத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல்.
  • அவர்கள் தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்பு கொண்டு வாழத் துணைபுரிதல்.
  • கணினித் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி ஆராய்ந்து தமிழ் மென்பொருள்களை உருவாக்குதல்.
  • கணினித் தமிழ் மென்பொருள்களைச் சோதித்துச் சான்றிதழ் வழங்குதல்.

5. த.இ.க.வின் கல்வித்திட்டங்கள் யாவை?

(1) மழலையர் கல்வி

(2) சான்றிதழ்க் கல்வி

அடிப்படை நிலை, எழுத்துகளையும் மழலைப் பாடல்களையும் கற்பிக்கிறது. சான்றிதழ்க் கல்வி அடிப்படை, இடைநிலை, மேல்நிலை என்னும் மூன்று நிலைகளில் தமிழ்ப் பயிற்சி அளிக்கிறது. இதை முடித்தால் தமிழ் நாட்டின் ஆறாம் வகுப்புக்குச் சமமான தமிழ் அறிவு பெறலாம்.

(3)மேற்சான்றிதழ்க் கல்வி

மேற்சான்றிதழ்க் கல்வியும் மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. இந்த மேற்சான்றிதழ்ப் படிப்பை முடித்தால் 12ஆம் வகுப்புக்குச் சமமான தமிழ் அறிவைப் பெறலாம்.

(4)பட்டம்

4 மற்றும் 6 தாள்களைக் கொண்டு பட்டயம், மேற்பட்டயம் என்பன முறையே பட்டப் படிப்பு வகுப்பின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன. இதை முடித்து விட்டு மீதி 17 தாள்களைப் படித்துப் பட்டம் பெறலாம்.

I. மழலையர்நிலை

II.சான்றிதழ்

(அ) அடிப்படை நிலை

(தமிழ்நாட்டுக் கல்வித்திட்டத்தின் படி வகுப்புகள் 1&2)

(ஆ) இடைநிலை (வகுப்புகள் 3&4)

(இ) மேல்நிலை (வகுப்புகள் 5&6)

III. (அ) மேற்சான்றிதழ்-நிலை 1 (வகுப்புகள் 7&8)

(ஆ) மேற்சான்றிதழ் - நிலை 2 (வகுப்புகள் 9&10)

(இ) மேற்சான்றிதழ் - நிலை 3 (வகுப்புகள் 11&12)

4. (அ) பட்டயம் - 4 தாள்கள்

(ஆ) மேற்பட்டயம் - 10 தாள்கள்  (பட்டப்படிப்பின் ஒரு பகுதி)

5. பட்டப் படிப்பு

பகுதி I - 4 தாள்கள்

பகுதி II - 4 தாள்கள்

பகுதி III - பட்டயம் - 4 தாள்கள்  (மொத்தம்) 24 தாள்கள்

மேற்பட்டயம் - 6 தாள்கள்   (3ஆண்டுகள்)

கூடுதல் - 6 தாள்கள்

6. பட்ட மேற்படிப்பு

7. ஆய்வு

6. த.இ.க-வின் தேர்வு முறை எப்படி உள்ளது?

ஒவ்வொரு தாளுக்கும் தொடர் மதிப்பீடும், இறுதித் தேர்வும் நடத்தப்படும். தொடர் மதிப்பீட்டுத் தேர்வுகள் இணைய வழியாக 12 வார இடைவெளியில் நடத்தப்படும். இறுதித்தேர்வு எழுத்துத் தேர்வாகத் த.இ.க-வின் தொடர்பு மையங்களில் நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் சூன், திசம்பர் ஆகிய இரு திங்கள்களில் த.இ.க. குறிக்கும் கால அட்டவணைப்படி இத்தேர்வு நிகழும், இறுதித்தேர்வு ஒவ்வொன்றும் 3 மணி நேர அளவைக் கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொரு தாளுக்குமுரிய மதிப்பெண்கள் மொத்தம் 100. இதில் 25 மதிப்பெண்கள் தொடர் மதிப்பீட்டின் வாயிலாகவும் 75 மதிப்பெண்கள் இறுதித்தேர்வு மதிப்பீட்டின் வாயிலாகவும் அளிக்கப்படும். ஒவ்வொரு தாளும் 4 மதிப்பிலக்கங்களைக் கொண்டது.

7. த.இ.க-வின் பாடத்திட்டங்களில் எத்தனை மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்?

சான்றிதழுக்காகப் பதிவானவர்களின் எண்ணிக்கை : 9505

மேற்சான்றிதழுக்காகப் பதிவானவர்களின் எண்ணிக்கை : 288

பட்டத்திற்காகப் பதிவானவர்களின் எண்ணிக்கை : 4354

மொத்தம் : 1414

8. த.இ.க-வின் மின்நூலகத்தில் உள்ள பிரிவுகள் என்ன?

தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் தமிழர்களின் பயன்பாட்டிற்காக மின்நூலகம் உருவமைக்கப்பட்டுள்ளது.

இம்மின்நூலகத்தில் நூல்கள், அகராதிகள், கலைச்சொல் தொகுப்புகள், பண்பாட்டுக்காட்சியகம், சுவடிக்காட்சியகம், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் என்னும் பிரிவுகள் உள்ளன.

  • இலக்கியப் பகுதியில் சங்ககாலம் முதற்கொண்டு தற்காலம் வரையிலான இலக்கியங்களும் இலக்கணங்களும் உரையுடன் தரப்பட்டுள்ளன.
  • தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் ஆங்கில (எழுத்து) வரிவடிவிலும் தரப்பட்டுள்ளன.

9. த.இ.க-வின் மின்நூலகத்தின் தனித்தன்மை என்ன?

  • எளிய முறையில் பதம் பிரிக்கப்பட்ட இலக்கண நூற்பாக்கள், சங்கப் பாடல்கள்.
  • இலக்கண, இலக்கிய நூல்களுக்கு உரிய பல உரைகளை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வசதி.
  • சங்க நூல்களின் பாடுபொருள்களை எண்கள், புலவர்கள், வள்ளல்கள், மன்னர்கள், திணைகள், கூற்றுகள் போன்ற தேடு பொருள்களின் அடிப்படையில் தேடிப் பெறும் வசதி.
  • சங்க நூல்களில் இடம்பெற்றுள்ள மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள், சிறப்புச் செய்திகள் ஆகியவற்றைத் தேடிப் பெறும் வசதி.
  • திருக்குறளுக்கு ஒரே நேரத்தில் பரிமேலழகர், மணக்குடவர், மு.வரதராசனார், தேவநேயப் பாவாணர், கலைஞர், ஜி.யு.போப், சுத்தானந்த பாரதியார் ஆகியோரின் உரைகளை வேண்டியவாறு தேடிப் படிக்கும் வசதி.
  • சொல் தேடல், எண்தேடல், பக்கம் தேடல் போன்ற வசதிகள்.
  • தமிழ் எழுத்துகளைத் தட்டச்சுச் செய்வதை எளிமைப்படுத்தும் வகையில் மிதவை விசைப் பலகை (Floating Key Board) வசதி.
  • தேவாரப் பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி.
  • அகராதிகளில், தமிழ்ச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் தேடிப் பெறும் வசதி
  • பல்வேறு துறைகளைச் சார்ந்த 2 இலட்சம் தமிழ்க் கலைச்சொற்கள்
  • தமிழர் பண்பாட்டை நினைவில் நிறுத்தும் காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பௌத்த, சைவ, வைணவ, இசுலாமிய, கிறித்துவக் கோயில்களின் ஒளிக்காட்சித் தொகுப்புகள் மற்றும் படக்காட்சித் தொகுப்புகள் அடங்கிய பண்பாட்டுக் காட்சியகம்
  • பழந்தமிழ்ச் சுவடிகள் அடங்கிய சுவடிக் காட்சியகம்

10. இதுவரை எத்தனை புத்தகங்கள் மின்நூலகத்தில் உள்ளன?

இதுவரை சுமார் 2631 புத்தகங்கள் மின்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

11. கலைச்சொல் அகராதிகள் எந்தெந்த துறைகளில் உள்ளன?

  • கணிதவியல்
  • புள்ளியியல்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • உயிரியல்
  • கால்நடை வளம்
  • மீன் வளம்
  • பொருளியல்
  • தொழில்நுட்பம்
  • வேளாண்மையியல்
  • மனையியல்
  • சட்டவியல்
  • ஆட்சியியல்
  • மருத்துவவியல்
  • உளவியல்
  • வாழ்வியல் துறைகள்
  • வரலாறு
  • சமூகவியல்
  • மானிடவியல்
  • கல்வெட்டியல்
  • நாட்டுப்புறவியல்
  • அரசியல்
  • மெய்யியல்
  • வணிகவியல்
  • வங்கியியல்
  • மேலாண்மையியல்
  • சூழலியல்
  • கானியல்
  • வானியல்

12. பண்பாட்டுக் காட்சியகத்தில் என்னென்ன கலை நிகழ்ச்சிகளின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன?

  • திருத்தலங்கள்
  • திருவிழாக்கள்
  • வரலாற்றுச் சின்னங்கள்
  • விளையாட்டுகள்
  • கலைகள்

13. கோயில்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியுமா?

பண்பாட்டுக் காட்சியகத்தில் சைவ, வைணவ, சமணக் கோயில்களின் காட்சிகளும் மற்றும் கிறித்துவ தேவாலயங்கள், இசுலாமிய பள்ளிவாசல்கள் ஆகியவற்றின் காட்சிகளும் தலபுராணங்களும் இடம்பெற்றுள்ளன.

14. சுவடிக் காட்சியகம் என்றால் என்ன?

செம்மொழித்தமிழின் இலக்கியச் சுவடிகள் பல ஒடிந்தும் பொடிந்தும் அழிகின்றன. நுண்சுருளில் அவற்றைப் பதிவுசெய்து எதிர்காலச் சமூகத்திற்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயினும் நுண்சுருள் வடிவில் இச்சுவடிகடிளைப் பார்ப்பதும் படிப்பதும் எளிதன்று. தமிழ் இணையக் கல்விக்கழகம், பதிவுசெய்யப்பட்ட சுவடிகளை மின்நூலகத்தின் மூலம் எல்லாரும் பார்த்துப் பயன்படுத்தும் வகையில் சுவடிக் காட்சியகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. சுவடிளுக்குக் காலத்தால் அழிக்கமுடியாத பாதுகாப்பையும் பலரும் பார்க்கும் பயன்பாட்டையும் த.இ.க. உருவாக்கியுள்ளது எனலாம். தமிழ்த்தாத்தா உ.வே.சா. சேகரித்து வைத்த பழஞ்சுவடிகள் உ.வே.சா. நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இச்சுவடிகளில் பலவற்றை, த.இ.க., மின்நூலகத்தில் உள்ளீடு செய்து வருகிறது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, இறையனார் களவியல், சீவகசிந்தாமணி முதலான நூற்சுவடிகள் இப்போது உள்ளீடு பெற்றுள்ளன. வேண்டும் சுவடியைத் தேடிப்பெறும் வசதியும், ஒவ்வொரு சுவடியையும் தனியாகப் பெரிதாக்கிப் பார்க்கும் வசதியும் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் பாடலையோ உரையையோ படிப்பது எளிதன்று. ஆகவே ஒவ்வொரு சுவடியிலும் இடம்பெறும் பாடல் அடிகளையும் உரைவரிகளையும் தட்டச்சு வடிவில் உடன்தரும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சுவடிகளின் எழுத்து வடிவத்தைப் புரிந்துகொள்ளவும் சுவடி வாசிப்பைக் கற்றுக்கொள்ளவும் இயலும். இதன் மூலம் எங்கோ இருக்கும் இச்சுவடிகளை இருக்கும் இடத்திலேயே பார்த்துப் பயன்பெற முடியும்.

15. த.இ.க-உருவாக்கியுள்ள குறுந்தகடுகள் யாவை?

த.இ.க., மழலையர், சான்றிதழ், இடைநிலை, மற்றும் மேல் நிலை, திருக்குறள், Learn Tamil, தமிழ்க் கற்போம், கலைச்சொல் பேரகராதி ஆகிய குறுந்தகடுகளை உருவாக்கியுள்ளது.

16. திருக்குறள் குறுந்தகட்டின் சிறப்பு என்ன?

திருக்குறள் குறுந்தகட்டில் திருக்குறள் மூலம், பதம்பிரித்துத் தரப்பட்டுள்ளது. உரையின் துணையின்றியும் குறளைப் புரிந்துகொள்ள இப்பதப் பிரிப்புமுறை உதவியாக இருக்கும். அத்துடன் திருக்குறளுக்கான பல உரைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் அளிக்கப்பட்ட உரைகளுள் மாதிரிகளாகப் பரிமேலழகர், மணக்குடவர், பாவாணர், மு.வரதராசனார், கலைஞர் ஆகியோரது குறள் உரைகள் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் அறியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் போப், சுத்தானந்த பாரதியார் ஆகியோருடைய ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் குறள்கள் உரைநூலாசிரியர்கள் தந்துள்ள வடிவத்திலேயே தரப்பட்டுள்ளன. திருக்குறள் பரிமேலழகர் உரையடங்கிய ஓலைச்சுவடியும் இத்துடன் தரப்பட்டிருக்கிறது. தனித்தனியாகவும் மொத்தமாகவும் இவ்வுரைகளைப் பார்க்கும் வகையில் தேடுதல் வசதி தரப்பட்டுள்ளது. குறளின் மூலப்பகுதியிலேயே உரை என்ற பகுதியைச் சுட்டி, வேண்டும் உரையைப் பெறமுடியும். குறிப்பிட்ட எண்ணுடைய குறளைத் தேடிப்பெறல், குறிப்பிட்ட சொல் இடம் பெறும் குறள்களைத் தேடிப்பெறல், குறளின் முதற்குறிப்பைக் கொண்டு குறளைத் தேடும் வசதி, பால் தேடுதல், இயல் தேடுதல், அதிகாரம் தேடுதல், குறள் தேடுதல், குறளை ஒலிவடிவில் கேட்கும் வசதி என இருக்கும் வசதிகள், கற்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுவன எனலாம்.

17. த.இ.க.வில் இணைய வகுப்பறை ஏன் ஏற்படுத்தப்பட்டது?

இணையவழிக் கல்வித்திட்டத்தில் கற்பித்தல் மற்றும் கற்றலுக்காகப் பயன்படுத்தப்படும் நெறிமுறைகள் ஒலி, ஒளி முதலிய பல்வேறு வகையான ஊடகங்களின் வாயிலாக வழங்கப்படுகின்றன. இணையத்தள வாயிலான கல்வியை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், விரிவுபடுத்துவதற்காகவும் இணைய வகுப்பறை தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இணைய வகுப்பறை வாயிலாகத் தமிழைக் கற்பிக்க முனைவர் மா.நன்னன் அவர்களின் 39 பாடங்களும், பேரா. தி.ப. சித்தலிங்கையா அவர்களின் 81 பாடங்களும் (ஆங்கில வழி) இணையத் தளத்தில் இடப்பட்டுள்ளன. இளநிலை தமிழியல் 12 பாடங்களும் இணையத் தளத்தில் இடப்பட்டுள்ளன. பிரெஞ்சு மொழி வழியாகத் தமிழ் பயிற்றுவிக்கும் 19 பாடங்கள், கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களது நல்ல தமிழ் கற்போம்-10 நிகழ்ச்சிகள் தற்போது தளத்தில் இடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் youtube-மற்றும் Wikipedia ஆகிய இணையத்தளங்களில் இடப்பட்டுள்ளன. த.இ.க. பகுதி -II திட்டப் பணிகள்

18. மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புடன் கூடிய விரிதரவு (Annotated Tamil Corpus) திட்டம் என்றால் என்ன? அதன் பயன் யாது?

மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புடன் கூடிய விரிதரவு (Annotated Tamil Corpus) திட்டம் என்பது தமிழ்மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய நூல்களுக்கு இலக்கணக் குறிப்புகள் அளித்தல் ஆகும். இது இயல் மொழி செயல்பாட்டிற்குப் (Natural Language Processing) பயன்படுகிறது.

19. வாய்மொழித் தரவு (Speech to Database) திட்டம் என்பது யாது? அதன் பயன் என்ன?

வாய்மொழித் தரவு (Speech to Database) திட்டம் என்பது த.இ.க. -இன் மின் விரிவுரைகள் (E - Lectures) பதிவிறக்கம் செய்யப்பட்டு Speech to Text என்ற முறையில் மென்பொருளைத் தயாரிப்பது ஆகும். இது கணிப்பொறிக்குத் தமிழில் செயற்கையான நுண்ணறிவுத்திறனை அளிப்பதற்குப் பயன்படும்.

20. தொடரியல் & பொருளியல் விளக்கத்துடன் கூடிய விரிதரவு (Syntactically & Semantically Annotated Tamil Corpus) திட்டம் என்பது என்ன? அதன் பயன் யாது?

தொடரியல் & பொருளியல் விளக்கத்துடன் கூடிய விரிதரவு (Syntactically & Semantically Annotated Tamil Corpus) திட்டம் என்பது தமிழ்மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய நூல்களுக்கு எழுவாய், பயனிலை, பெயர்த்தொடர், வினைத்தொடர் மற்றும் பொருள் இடுதல் போன்றவைகளை அளிப்பது ஆகும். இது இயல் மொழி செயல்பாட்டிற்கு (Natural Language Processing) பயன்படும்.

21. உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி (E - Dictionary With Pronounciation) திட்டம் என்பது யாது? அதன் பயன் என்ன?

உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி (E - Dictionary With Pronounciation) திட்டம் என்பது தமிழ்மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய நூல்களில் உள்ள சொற்களுக்கு உச்சரிப்பு அளித்து பொருள் இடுதல் ஆகும். இவையும் இயல் மொழி செயல்பாட்டிற்குப் (Natural Language Processing) பயன்படும் ஒரு வகை மென்பொருள் ஆகும்.

22. தமிழகத் தகவல் தளம் என்றால் என்ன?

தமிழ் இணையக் கல்விக்கழகமும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து கணினி வழி தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காகத் தமிழகத் தகவல் தளம் திட்டம் II (அரசாணை(நிலை) எண்.93, நாள்:3.4.2012 )] - தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெற்றது. தமிழ், தமிழர், தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள், தமிழ்நாட்டுக் கலைகள், தமிழ்நாட்டின் நிலவியல், வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்கள், ஆறுகள், மலைகள், தமிழகத் திருவிழாக்கள், பண்டையப் பெயர்கள், தமிழக மரம், செடி, கொடி, விலங்கினங்கள், கோயில்கள், சிற்பங்கள் போன்ற புள்ளிவிவரங்கள் அனைத்தையும் தகவல் தளங்களாக உருவாக்குதல் இதன் நோக்கமாகும். இத்திட்டத்திற்காக உருபா.12,00,000/-( உருபா பன்னிரண்டு இலக்கம் மட்டும்) தளப்படுத்துவதற்குத் தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கும், உருபா.12,00,000/-( உருபா பன்னிரண்டு இலக்கம் மட்டும்) தரவுகள் திரட்டுவதற்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. மேற்காணும் திட்டப் பணிகளில் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், வழங்கியிள்ள 52,690 ஓலைச் சுவடிகள் தற்பொழுது தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தளமேற்றும் பணி செவ்வனே நிறைவுற்றது..

23. அரசு நிதிபெற்று உருவாகியுள்ள தமிழ் மென்பொருட்கள் யாவை?

தமிழக அரசு, தமிழ்மென்பொருள் வளர்ச்சிக்கான முயற்சிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. இந்த உயர் நோக்கத்தைச் செயல்படுத்தத் தேவையான அளவு நிதி உதவியும் செய்து வருகிறது. இந்த உதவியினால் பல தமிழ்க் கணினி மென்பொருள் பொதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

  • மென்பொருள் வளர்ச்சி நிதியின் உதவியால் நிறைவேற்றப்பட்ட மென்பொருள்கள்
  • OCR for Printed Tamil Text (‘பொன்விழி’ - தமிழ் எழுத்துரு அறிவி)
  • Machine Aided English to Tamil Translation தமிழ்ப் பொறி’ - ஆங்கிலம் தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள்)
  • Idham 2000 - Advanced Tamil Interface for Microsoft Windows (இதம் 2000’ - விண்டோஸ் 2000 மேம்படுத்தப்பட்ட தமிழ் இடைமுகம்)
  • A PC based Speech synthesis in Tamil (‘திருக்குறல்’ - சொல்லை ஒலிவடிவமாக மாற்றுதல்)
  • Localising of Microsoft Windows 95/98 (‘விண்தமிழ் 2.0’ - தமிழில் விண்டோஸ் 95-98)
  • Tamil WordNet to enhance Machine Translation (கணினி வழி மொழி பெயர்ப்புக்கான தமிழ் சொல்வலை உருவாக்கம்)
  • Tamil Linux PC (Zha Kanini)( ழ கணினி)
  • Optical Character Recognition Software for Tamil Handwriting - Phase I (- தமிழ் கையெழுத்துப் பிரதி எழுத்துரு அறிவி)
  • Localisation for Tamil in Mobile Phones (தமிழில் குறுந்தகவல் சேவை)
  • Java-based Tamil Text-To-Speech Synthesizer (ஜாவா மூலம் எழுத்துருவிலிருந்து பேச்சு உருவாக்கி)
  • Tamil Database Management Package (தமிழ்த் தரவு மேலாண்மைப் பொதி)
  • Electronic Dictionary (Tamil - English) ( தகவல் தள மின் அகராதி (தமிழ் - ஆங்கிலம்))
  • Value Added services in Regional Language on handheld devices (கையடக்க சாதனங்களில் கூடுதல் மதிப்பு சேவை - தமிழ் மொழியில்)
  • Speech to Text Synthesis for Tamil (தமிழ்ப் பேச்சுமொழியிலிருந்து எழுத்துரு உருவாக்கி)
  • Tamil Corpus Analysis Tools (சொல் ஆய்வுக் கருவிகள்)
  • Intelligent Information Retrieval of Thirukkural in Handheld Devices (நுண்ணறிவுத் தகவல் பெறும் அமைப்பியலின் செல்பேசி சாதனம்)

24. ஒருங்குறி (Unicode) என்றால் என்ன?

ஒருங்குறி (Unicode) என்பது, (இயங்குத் தளம் எதுவாயினும் (Operating System)) எந்த நிரல் (application) ஆயினும், எந்த மொழி (language) ஆயினும் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண் ஒன்றை வழங்கி செந்தரப்படுத்துவது ஆகும். மேலும் ஒருங்குறி (Unicode) மற்றும் அனைத்துரு எழுத்துரு (TACE) முறைகள் தமிழ்நாடு அரசின் செந்தரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப, எழுத்துருக்களும், விசைப்பலகைகளும் உருவாக்கப்பட்டு, வெளியிடத் தயாரான நிலையில் உள்ளன.

25. த.இ.க. (உட்கட்டமைப்பின்) தற்போதைய நிலை என்ன?

தமிழ் இணையக் கல்விக்கழக நிர்வாகக் கட்டடம், படத்தளம் மற்றும் கலையரங்கம் ஆகியவைகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது படத்தளம் மற்றும் கலையரங்கம் பயன்பாட்டிற்குத் தயார் நிலையில் உள்ளன.

26. தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் என்றால் என்ன?

தமிழ் நாட்டில், தமிழ் மென்பொருள்களை உருவாக்குவோர் மிகக் குறைவாகவே உள்ளனர். ஏனென்றால் அவர்களுக்குத் தமிழில் மென்பொருள்களை உருவாக்கப் போதிய வசதிகள் கிடைப்பதில்லை. எனவே, தமிழ்மென்பொருள் உருவாக்கும் மையம் ஒன்றை ஏற்படுத்த (உருபா.45.00) நாற்பத்தைந்து இலட்ச உருபாயைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த மையத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்கத் தேவையான கணிப்பொறிகளும், மென்பொருள்களும், மற்றக் கருவிகளும், சேவைகளும் இருக்கும். ஆக்கப் பூர்வ எண்ணங்களைக் கொண்டிருப்போர் அந்த எண்ணங்களைக் செயல்படுத்தத் தேவையான ஆய்வு மேற்கொள்ளவும், பரிசோதிக்கவும், மேம்படுத்திச் செம்மைபடுத்தி உலகிற்கு வழங்கவும் இந்த மையம் துணைபுரியும்.

கல்வித் திட்டங்கள் - FAQ

1. இணையக் கல்விக் கழகத்தில் உள்ள கல்வித்திட்டங்கள் யாவை?

  • மழலைக் கதமிழ் ல்வி

தமிழ் பயில்வோருக்கு அடிப்படையானது இக்கல்வித்திட்டம். இக்கல்வி முறையானது கற்பவரின் அடிப்படைத் திறனான எழுத்துகள், உரையாடல்கள், கதைகள், பாடல்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் இப்பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

  • சான்றிதழ்க் கல்வி

சான்றிதழ்க் கல்வி மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது:

  1. அடிப்படை நிலை (வகுப்புகள் 1 & 2)
  2. இடைநிலை (வகுப்புகள் 3 & 4)
  3. மேல்நிலை (வகுப்புகள் 5 & 6)
  • மேற்சான்றிதழ்க் கல்வி

மேற்சான்றிதழ்க் கல்வி மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது:

  1. நிலை -1 (வகுப்புகள் 7 & 8)
  2. நிலை -2 (வகுப்புகள் 9 & 10)
  3. நிலை -3 (வகுப்புகள் 11 & 12)
  • B.A (Tamilology)இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வி.

இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வி பகுதி -1, பகுதி -2 மற்றும் பகுதி- 3 முறையே 24 தாள்களை கொண்டுள்ளது.

2. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சான்றிதழ்க் கல்வி தமிழ்நாடு அரசால் அங்கீகரிகப்பட்டதா?

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சான்றிதழ்க் கல்வி 20.12.2007 நாளிட்ட அரசாணை எண் 300-இன்படி இப்பாடத்திட்டம் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதனைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.http://www.tamilvu.org/coresite/download/gocercou300.pdf

3.தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மேற்சான்றிதழ்க் கல்வி தமிழ்நாடு அரசால் அங்கீகரிகப்பட்டதா?

இல்லை. இது நிலுவையில் உள்ளது.

4.தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இளநிலைத் தமிழியல் கல்வி அங்கீகரிகப்பட்ட ஒன்றா?

இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGO) அங்கீகரிக்கப்பட்ட தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம் இப்பட்டத்தை வழங்குவதால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவோர் இந்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டத்திற்கும் இது ஒப்பானதாகும்.

5.நான் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உள்ள பாடத்திட்டங்களை இலவசமாகக் காண/பதிவிறக்கம் செய்ய முடியுமா?

ஆம். தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உள்ள உள்ளடங்கங்களை இலவசமாகக் காணலாம்/பதிவிறக்கம் செய்யலாம்/ கற்றும் கொள்ளலாம்.

6. தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உள்ள மின்புத்தகங்களை வணிக ரீதியாக பயன்படுத்தலாமா?

இல்லை. தமிழ் இணையக் கல்விக் கழத்தில் உள்ள மின்புத்தகங்களை கொண்டு தமிழ் மொழியை கற்றுக் கொள்ள மட்டுமே வேண்டும்.

7.நான் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உள்ள ஒலி-ஒளி பதிவுகளைக் காணமுடியுமா?

ஆம்.

8.தமிழ் இணையக் கல்வி கழகத்தில் இணைய வழியாக நான் பதிவு செய்ய முடியுமா?

ஆம். தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உள்ள கல்வித்திட்டங்கள் அனைத்திலும் இணைய வழியாக மட்டுமே பதிவுச்செய்ய முடியும்.

9. நான் ஏன் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் பதிவு செய்ய வேண்டும்?

தமிழ் கற்க ஆர்வமுள்ளவர்களும், சான்றிதழ் பெற விருப்பமுள்ளவர்களும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தேர்வு எழுதுவதற்குப் பதிவுச்செய்ய வேண்டும்.

10. தமிழ் இணையக் கல்விக் கழத்தில் பதிவுச்செய்யும் போதே கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டுமா?

தமிழ் இணையக் கல்விக் கழகத் தேர்வின் போதுகூட கட்டணம் செலுத்தலாம்.

11.தமிழ் இணையக் கல்விக் கழகம் எப்போது தேர்வு நடத்தும்?

தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் ஆண்டுக்கு இருமுறை சூன், திசம்பர் திங்களில் தேர்வுகள் நடைபெறும். தேர்வு எழுத விரும்புவர் தமிழ் இணையக் கல்விக் கழத்தின் ஏதேனும் ஒரு தொடர்பு மையங்களில் எழுதலாம். அல்லது தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னையிலும் எழுதலாம்.

12. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தேர்வுகளை எங்கு எழுதலாம்?

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் ஏதேனும் ஒரு தொடர்பு மையங்களில் தேர்வுகளை எழுதலாம். அல்லது தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னையிலும் எழுதலாம்.

13. தமிழ் இணையக் கல்விக் கழகக் கல்வித்திட்டத்தின் மாதிரி வினாத்தாள்களை பெறமுடியுமா?

ஆம். தமிழ் இணையக் கல்விக் கழக இணையதளத்தில் பெறலாம். http://www.tamilvu.org/ta/content/தேர்வு-வினாத்தாள்-தொகுப்பு

14. தமிழ் இணையக் கல்விக் கழக தேர்ச்சி மதிப்பெண் என்ன?

மாணவர்கள் ஒவ்வொரு தாளிலும் 40 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

15. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பட்டயம், மேற்பட்டயம், பட்டம் ஆகியவற்றின் சராசரித் தரப்புள்ளிகள் என்ன?

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பட்டயம், மேற்பட்டயம், பட்டம் ஆகியவற்றில் சான்றிதழ்ப் பெற சராசரியாக 2.5 தரப் புள்ளிகள் எடுத்திருக்க வேண்டும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2019 16:01:54(இந்திய நேரம்)