தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை எண் 31 அறிவிப்புகள் 2014 - 2015

தமிழ் மின் நிகண்டு உருவாக்குதல்
(Development of Visual Thesaurus for Tamil)

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மின் நிகண்டு ஒன்றினை ரூபாய் 27.42 இலட்சம் செலவில் உருவாக்கும். இந்த தமிழ் மின் நிகண்டில் ஒரே பொருள் கொண்ட பல்வேறு சொற்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றின் உச்சரிப்பு மற்றும் விளக்கங்கள் ஒரு தொகுப்பாக அமைக்கப்படும். தேவையான சொல்லைத் தட்டச்சு செய்தால், அச்சொல்லின் பொருள் கொண்ட பல சொற்கள் கணினித் திரையில் வெளிப்படும்.

தமிழ் இணையக் கல்விக்கழத்தில் மின்கற்றலுக்கான இணையதளம்
(Development of e-Learning Portal for Tamil Virtual Academy)

ஒன்றாம் வகுப்பு முதல் B.A. (தமிழியல்) வரை பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது. "மின்கற்றலுக்கான இணையதளம்" (e-Learning Portal) தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ரூபாய் 12.26 இலட்சம் செலவில் அமைக்கப்படும். மாணவர்கள் எளிதாக தமிழை கற்க இந்த இணையதளம் உதவும்.

தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் பண்பாடு பற்றிய மாதாந்திர தொடர் சொற்பொழிவு
(Monthly Lecture Series on Tamil Heritage, Art and Culture)

தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் பண்பாடு பற்றிய தொடர் சொற்பொழிவு தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் மாதந்தோறும் நடத்தப்படும். இதில் சிறந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் சொற்பொழிவு ஆற்றுவார்கள். இவை பதிவு செய்யப்பட்டு, உலகெங்கும் வாழும் தமிழகர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் இணையத்தில் ஒளிபரப்பாக (Webcast) ஆவணப்படுத்தப்படும்.

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மின்னுருவாக்கம்
(Digitization of Nationalised Books)

நாட்டுடையாக்கப்பட்ட 2,211 நூல்கள் உரும்படமாக (PDF format) தமிழ் இணையக் கல்விக்கழக மின்நூலகத்தில் ஏற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நூல்களை தேடுதல் வசதியுடன் கூடிய மின்னுருவாக்கம் (digitization) செய்யும் பணிகள் ரூபாய் 10 இலட்சம் செலவில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் மேற்கொள்ளப்படும்.