தமிழ்நாட்டின் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி வட்டத்தைச்
சேர்ந்த பொதட்டூர் பேட்டை என்ற ஊரில், ஒரு விவசாயக் குடும்பத்தில்
பிறந்தவர். அங்கு பள்ளிப் படிப்பையும், கிண்டி பொறியியற்
கல்லூரியில் எந்திரவியல் துறையில் பட்டப் படிப்பையும் உற்பத்திப்
பொறியியல் துறையில் மேற்பட்டப் படிப்பையும் (M.Sc.Engg.)
முடித்து, சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (I.I.T.)
முனைவர் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து நாட்டின் வாரிக் பல்கலைக்கழகத்தில்
தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவர்.
கிண்டி
பொறியியற் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்த இவர், குரோம்பேட்டையில்
உள்ள (M.I.T.)-யில் உற்பத்தி பொறியியல் துறையில் துறைத்
தலைவராகவும் பணியாற்றி விட்டு, பிறகு அண்ணா பல்கலைக்கழக
கிண்டி பொறியியற் கல்லூரியில் எந்திரவியல் துறையில் பேராசிரியராகவும்,
தமிழக அரசின் தமிழ்க்
கலைச்சொல் பேரகராதி உருவாக்கத்திட்டத்தின் தனி அலுவலராகவும்
பணியாற்றினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரிய பயிற்சி
மையத்தின் இயக்குநராகவும், அண்ணா செயற்கைக்கோள் கல்வி ஒளிபரப்பு
(ANNA EDUSAT) நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
பல
பட்ட, மேற்பட்ட மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும்
இருந்திருக்கிறார்.
‘அளவையியல்’ (Metrology) சோதனைக் கூடங்களை வடிவமைத்து நிறுவி,
அதனை ஒரு பாடமாகப் புகுத்தியமையும், இந்தியாவிலேயே முதன்
முறையாக ‘எந்திர மின்னணுவியல்’ (Menatronics) என்ற மேற்பட்டப்
படிப்பை தொடங்கியமையும் இவரின் பெருமைக்கு சான்றுகளாகும்.
தற்போது
11.9.2006 முதல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநராகப்
பொறுப்பேற்றுள்ளார்.
எந்திரவியல்
துறையில் பல கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார்.
இந்திய
மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப இதழ்களிலும், கருந்தரங்குகளிலும்
ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். தமிழில் அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அறிவியல்
தலைப்புகளில் வானொலியில் பல உரைகளை ஆற்றியுள்ளார்.
உற்பத்திப் பொறியியல் துறையில் அளவையியல், தரக்
கட்டுப்பாடு, முழுத்தர மேலாண்மை, பராமரிப்புப் பொறியியல்
மற்றும் கணினிச் சார்ந்த உற்பத்திப் பொறிகள் ஆகியவற்றில்
வல்லுநர்.
பல தொழில்நுட்ப வல்லுநர் குழுக்களில் செயற்குழு உறுப்பினராகவும்
பணியாற்றி உள்ளார். இந்திய தரவட்டக் குழு
ஒன்றியத்தின் தலைமை நிலையத்தில் ஒரு இயக்குநராகவும், QCFI
சென்னைக் கிளையின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
இன்று அண்ணா பல்கலைக்கழக காலாண்டிதழான களஞ்சியம்
என்ற இதழின் ஆசிரியக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இங்கிலாந்து,
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும்
ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ள
இவர் “அறிவியல் கடலில் ஆர்வமூட்டுபவை” என்ற சிறுவர்க்கான
அறிவியல் புத்தகத்தையும், முழுத்தர மேலாண்மை, முழுத்தர மேலாண்மை-சிக்கலைத்
தீர்க்கும் வழிமுறைகள் என்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இதில் ‘முழுத்தர மேலாண்மை’ என்ற புத்தகம் தமிழக அரசின் சிறந்த
புத்தகத்திற்கான பரிசைப் பெற்றிருக்கிறது.
அமெரிக்காவின்
FETNA அமைப்பும், இந்தியாவின் QCFI நிறுவனமும்
இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரப்படுத்தியுள்ளது.
மேலும், QCFI-யின் சென்னைக்கிளை இவருக்கு தரவட்டத்தின்
வளர்ச்சிக்காக பாடுபட்டதிற்கான நிகரில்லா பங்களிப்பு விருதை
வழங்கியுள்ளது.