தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் / Tamil Software Incubation center

தினமணி 22.02.2015 ஆம் நாளிட்ட செய்தியைப் பார்க்க

  • தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (Tamil Software Incubation Centre) ஒன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

  • இம்மையத்தில் பணியிடமும் (Work Station), இணைய இணைப்புடன் கணினிகளும், மென்பொருள்களும், மற்ற கருவிகளும் இருக்கும்.

  • ஆக்கபூர்வ எண்ணங்களும், தமிழில் மென்பொருள் உருவாக்கும் ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருப்போர், அந்த எண்ணங்களைச் செயல்படுத்தத் தேவையான ஆய்வு மேற்கொள்ளவும், பரிசோதிக்கவும், மேம்படுத்தி உலகிற்கு வழங்கவும் இம்மையம் துணை புரியும்.

  • தொடக்கத்தில், தனியர்களுக்கும், மாணவர்களுக்கும் இவ்வசதி கொடுக்கப்படும். பின்னர் சிறு, குறு நிறுவனங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்.

  • தனியர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.4000/- மும் மாணவர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.1000/-மும் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

  • ஆர்வமுடையோர், தங்கள் பணித்திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  • வல்லுநர் குழுவால் பயனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • மற்ற விவரங்களுக்கு தமிழ் இணையக் கல்விக்கழகத்தை அணுகலாம்.


  • ஆக்கபூர்வமான எண்ணமுடையவர்களுக்கு, அவற்றைச் செயல்படுத்த துணை செய்ய ஏற்பட்டவை தான் தொழில்நுட்பப் பூங்காக்களும் (Tech.Park ) பொருள்/செயல் உருவாக்க மையங்களுமாகும் (Product/ Process Incubation Centers). இவை பொதுவாக உலகில் I.I.T போன்ற கல்வி நிலையங்களிலோ, பெரிய பல்கலைக்கழகங்களிலோ செயல்பட்டு வருகின்றன.

  • தொழிற்சாலைகளில் உள்ள தொழில் நுட்பியலார்கள், இங்கு வந்து தங்கி, இக்கல்வி நிலையங்களில் உள்ள பேராசிரியர்களுடன் ஒருங்கிணைந்து அங்குள்ள ஆய்வுக் கூடங்களை, நூலகத்தை, பிற வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு புதிய எண்ணங்களை, ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்த முனைவார்கள்.

  • தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக, புதிய மென்பொருள்களை உருவாக்குவதின் தேவை மிகுந்த காரணத்தால், அவற்றுக்கெனத் தனியாக மென்பொருள் உருவாக்கும் மையங்கள் கல்வி நிலையங்களில் தோற்றுவிக்கப்பட்டன. மைய அரசும் இம்மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா (Software Technology Park of India – STPI) ஒன்றை சென்னைத் தரமணியில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

இத்தகைய மையங்கள் தமிழ்நாட்டில், கீழ்கண்டுள்ள இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    1. I.I.T, சென்னை

    2. அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை, சென்னை

    3. கொங்கு பொறியியல் கல்லூரி, திருப்பெருந்துறை

    4. V.I.T வேலூர்

இந்திய அளவில், I.I.T., கான்பூர், கரக்பூர் போன்ற இடங்களிலும் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மையங்கள் தொழில்நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றவர்களின் எந்த ஒரு எண்ணத்தையும் செயல்படுத்தப் பயன்படுத்துகின்றன.

  • இன்று தமிழிலும் மென்பொருள்கள் உருவாக்கப்பட வேண்டியதின் தேவை ஏற்பட்டுள்ளது. சிலர் இத்துறையில் ஈடுபட்டு தமிழ்மென்பொருள்களை உருவாக்க முனைந்துள்ளனர். மேலும் பலர் தமிழ் மென்பொருள்களை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு, அதற்குத் தேவையான வசதிகளோ, வசதிகளை உருவாக்க மூலதனமோ இல்லை. எனவே அவர்களுக்கு உதவும் வகையில், தேவையான எல்லா வசதிகளையும் கொண்ட மென்பொருள் உருவாக்க மையங்களை ஏற்படுத்தித் தந்தால், அவர்களுடைய எண்ணங்கள் செயல்வடிவம் பெறும்; பல மென்பொருள்கள் உருவாகும்; அதன் பயன்பாடும், புதிய மென்பொருள்களுக்கான தேவையும் பெருகும். அதனால் கணித்தமிழ் வளர்ச்சி பெறும்.

  • ஆகவே, தமிழில் மென்பொருள்கள் உருவாக்க வேண்டும் என்ற குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் ஏற்படுத்த ஒரு திட்டத்தை தமிழக அரசிடம் முன்வைத்தது. தமிழக அரசும் அதனை ஏற்றுக் கொண்டு உரூ.45.00 லட்சம் நிதியை பகுதி-2 திட்டத்தின்கீழ் ஒதுக்கியுள்ளது.

  • இத்திட்டத்தைச் செயல்படுத்த, த.இ.க-வில் ஒரு வல்லுநர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு கூடி, இம்மையத்தில் இருக்க வேண்டிய கணினி மற்றும் கட்டுமான வசதிகளை வரையறை செய்து தந்துள்ளது. இதன்படி த.இ.க தரைத்தளத்தில், தோராயமாக 64 சதுர அடி கொண்ட தனியறைகளும் ஒரு கலந்துரையாடல் கூடமும், ஒரு நூலகமும், ஒரு வரவேற்புக் கூடமும் ஏற்படுத்தப்படும்.

  • இந்த மையத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்கத் தேவையான கணிப்பொறிகளும், மென்பொருள்களும், மற்ற கருவிகளும், சேவைகளும் இருக்கும். ஆக்கப் பூர்வ எண்ணங்களை கொண்டிருப்போர் அந்த எண்ணங்களை செயல்படுத்தத் தேவையான ஆய்வு மேற்கொள்ளவும், பரிசோதிக்கவும், மேம்படுத்தி செம்மைபடுத்தி உலகிற்கு வழங்கவும் இந்த மையம் துணைபுரியும்.
1. பயனாளர்கள் :
    1. மாணவர்கள்/ஆசிரியர்கள்
    2. ஆக்கபூர்வ எண்ணம் கொண்டுள்ள தனியர்கள்
    3. குறு, சிறு தொழில் நிறுவனங்கள்
2. பயனாளர்களைத் தேர்வு செய்யும் முறை :
  • முதலில் அவர்கள் எண்ணியுள்ள திட்ட கருத்துருவுடன் விண்ணப்பித்து த.இ.க வல்லுநர் குழுவிடம் விளக்க வேண்டும்.
  • திட்டத்தின் தன்மை, தேவை கருதி வல்லுநர் குழு அவர்களைத் தேர்ந்தெடுக்கும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் 64 சதுர அடி கொண்ட பணியிடமும், கணினியும், தேவையான மென்பொருள்களும் தரப்படும்.
  • அவர்கள் த.இ.க நூலகத்தையும், த.இ.க-வில் உள்ள வல்லுநர் உதவியையும் பெற்றுக் கொள்ளலாம்.
  • த.இ.க. வில் உள்ள கருத்தரங்கக் கூடத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. காலம் :
    திட்டத்திற்கேற்ப எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை வல்லுநர் குழு முடிவு செய்யும். இது பொதுவாக ஆறுமாதம் முதல், ஒருவருடம் வரை இருக்கும்.
4.நிதித் தேவை :
    இம்மையத்தை நடத்துவதற்கு தேவைப்படும் நிதியை இலாப நட்டமில்லாத வகையில் திரும்பப்பெறுவதற்கு ஏற்றவகையில் கீழ்க்கண்டுள்ள கட்டணம் வசூலிக்கலாம் என த.இ.க வல்லுநர் குழு தீர்மானித்தது. .
கட்டண விபரம் :
வ.எண்
பயன்பாட்டாளர்கள்
ஒருமாத சேவை கட்டணம்
1.
மாணவர் ஒருவருக்கு
உரூ.1,000/=
2.
தனி நபர் ஒருவருக்கு
உரூ.4,000/=
3.
குறு, சிறுதொழில் முனைவோர் மற்றும் நிறுவனம் ஒருவருக்கு
உரூ.10,000/=

மேலும், உருவாக்கப்படும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்குமாயின், உருவாக்குபவர் செலுத்திய கட்டணத்தில் உரிய கழிவு வழங்கலாம் என்ற திட்டமும் உள்ளது.