திருக்குறள் குறுந்தகடு அறிமுக உரை

முனைவர் வா.செ.குழந்தைசாமி,
தலைவர்,
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.

    முப்பால் என வழங்கப்படும் திருவள்ளுவர் திருக்குறள் மூன்று முக்கியமான
பரிமாணங்களைக் கொண்டது. அது வாழ்வியல் கூறும் தத்துவநூல்; கலை நலம்மிக்க
இலக்கியநூல்; மேலும் அது ஒரு நீதிநூல். இந்திய துணைக்கண்டத்தில் வேத மரபிற்குப்
பகவத்கீதை போன்று தமிழர் பண்பாட்டிற்கு, தத்துவச் சிந்தனைகட்குக் கொள்கலமாக
இருப்பது திருக்குறள்.

    வள்ளுவர் காலம்கடந்து தேசம் கடந்து பொதுவாக நின்று வாழ்வியல் பேசும்
மறையை மனித சமுதாயம் முழுமைக்குமாக வழங்கியிருக்கிறார். இரண்டாயிரம்
ஆண்டுகட்கு முன்பே பிறப்பில் அனைவரும் சமம் எனப் பிரகடனம் செய்தவர்.
மதச்சார்பின்மை என்ற தத்துவம் மலராத காலத்திலேயே மதச்சார்பற்ற ஒரு மறையைப்
படைத்தவர். எந்தப்பொருள் எந்தத் தன்மை உடையதாயினும் எந்தப் பொருள் பற்றி
யார் கூறிய கருத்தாயினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காணவேண்டுமென
உண்மையான அறிவியல் அணுகுமுறைக்கு அன்றே இலக்கணம் வகுத்தவர். உழைப்பின்
வலிமையால் ஊழையும் வெல்லலாம் என மனித முயற்சியை உயர்த்திப் பிடித்தவர்.
அறிவுடையார் எல்லாம் உடையார் என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே
கல்வியுகத்திற்குக் கால்கோள் நாட்டியவர்.

    பலர்எழுதியுள்ள உரைகளைக் கொண்ட திருக்குறளை அதன் மூலத்தொடு
பரிமேலழகர், மணக்குடவர், மு.வரதராசனர், பாவாணர், கலைஞர் ஆகிய
ஐவரின் உரைகளோடும். ஜி.யு.போப், யோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோரின்
ஆங்கில மொழிப்பெயர்ப்புகளோடும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

    பதம்பிரிக்கப்பட்ட மூலப்பகுதி உரைகளின் துணையின்றியே பொருள்காண
உதவும். மூலப்பகுதியிலேயே உரையைப் பார்க்கும் வசதி, எல்லா உரைகளையுமோ
அல்லது காண விரும்பும் உரைகளை மட்டுமோ தேர்ந்தெடுத்துப் பார்க்கும் வசதி,
குறிப்பிட்ட சொல் இடம்பெறும் குறள்களை உடனே பெறும் தேடுதல் வசதி, குறிப்பிட்ட
எண் உடைய குறளை உடனே பெறும் வசதி, குறளின் முதற்குறிப்பு அகராதி கொண்டு
தேடும் வசதி ஆகிய திறவுகோல்கள் வள்ளுவத்தின் கதவுகளை நமக்கு
வேண்டும்பொழுது விரியத்திறக்கின்றன.

    பரிமேலழகர் உள்ளிட்ட ஐவர் உரைகளும் அப்படியே தனித்தனியாகத்
தரப்பட்டுள்ளன. உரைநூலைப் படிப்பது போலப் பக்கம் பக்கமாகவும், பாலையும்
இயலையும் அதிகாரத்தையும் தேர்ந்தெடுத்தும் பார்க்க வசதி உள்ளது.

    ஒரே நேரத்தில் முக்கிய உரைகளைக் காணும் வசதியால் ஒப்பாய்வு பெருகும்,
குறளின் நுட்பம் புரியும், வள்ளுவர் அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்தியுள்ள
திறன் புரியும். வாழ்வாங்கு வாழ்ந்தால் வையகமே சொர்க்கம் மனிதனே தேவன் எனும்
புரட்சிகரமான கருத்தை முன்வைத்த வள்ளுவத்தைப் பரவலாக உலகினுக்குத் தரும்
பணியை மேற்கொள்வதில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பெருமைப் படுகிறது.

திருக்குறள் குறுந்தகட்டைப் பெற, இங்கே சுட்டுக

Back
Back

This site is best viewed at 1024x768 Screen Resolution and 32 Bit True Color Setting
--------------------------------------------------------------------------------
©Copyright 2000 Tamil Virtual Academy, Chennai, India. All Rights Reserved. Disclaimer