2.2 சிலப்பதிகாரம் - கதைப்பின்னல்

சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. புகார்க்காண்டம் - 10 காதைகள்; மதுரைக்காண்டம் - 13 கதைகள்; வஞ்சிக்காண்டம் - 7 காதைகள்; ஆக முப்பது காதைகளையுடையது. இங்கு, இக்காண்டங்களின் வழியே, சிலப்பதிகாரக் காப்பியத்தின் கதைப்போக்கைக் காண்போம்.

2.2.1 புகார்க் காண்டம்

புகார் நகரப் பெருவணிகன் மாநாய்கன்; அவன் மகள் கண்ணகி; அதே நகரத்து உயர்ந்து ஓங்கு செல்வத்தான் மாசாத்துவான்; அவன் மகன் கோவலன். புகார் நகரமே விழாக்கோலம் கொள்ள, கோவலன்-கண்ணகி திருமணம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து தனிமனையில் குடியிருத்தப் பெறும் புதுமணத் தம்பதியர் புதுமண வாழ்வின் இனிமையைத் துய்த்து மகிழ்கின்றனர். சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த அவர்கள் வாழ்வில் இடையூறு வந்து சேர்கிறது. சோழன் அவையில் நடன அரங்கேற்றம் செய்து தலைக்கோல் அரிவை என்ற பட்டத்தையும், 1008 கழஞ்சு பொன் விலை பெறும் பச்சை மாலையையும் பரிசாகப் பெற்ற மாதவியைச் சேர்ந்து அந்த மகிழ்ச்சியில் தன் மனைவியை மறக்கிறான் கோவலன்.

விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்து

                                 (சிலப்பதிகாரம் : 3:174-175)

(வடு = குற்றம்)

மாதவி ஆர்வ நெஞ்சத்தோடு கோவலனுடன் கூடி மகிழ்ந்திருக்க, கண்ணகி கையற்ற (செயலற்ற) நெஞ்சோடு தனித்துத் தவிக்கிறாள்.

இந்தச் சூழலில் புகார் நகரில் இந்திரவிழா தொடங்குகிறது. விழாவில் மாதவி விண்ணவரும் போற்றப் பதினோரு ஆடல்களை ஆடி மகிழ்விக்கிறாள். அவள் கலைமகள்; விழாவில் ஆடுவது அவளுக்குச் சிறப்பு. கோவலன் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஊடல் கொள்கிறான். அவன் ஊடல் தீர்க்கப் பலவாறாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு அவனோடு கடலாடச் செல்கிறாள் மாதவி. அவன் கையில் யாழைக் கொடுக்கிறாள். கோவலன் மாதவி மனம் மகிழ வாசிக்கிறான். அவன் பாடிய காதற் பாடல்களுள் வேறு யாரையோ விரும்பும் குறிப்பு இருப்பதாக நினைத்த மாதவி, தானும் ஒரு குறிப்புடையவள்போல யாழிசையோடு பாடுகிறாள். மாதவியின் பாடல் கேட்ட கோவலன்,

கானல்வரி யான்பாடத் தான் ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்

                             (சிலப்பதிகாரம்: 7: 52-2-3)

என அவளை இழிவாக நினைத்துப் பிரிந்து போகிறான்.

கோவலன் பிரிவால் வாடிய மாதவி தன் காதல் உணர்வை எல்லாம் தாழை மடலில் கடிதமாகத் தீட்டி வசந்தமாலை என்ற தன் தோழியிடம் கொடுத்தனுப்புகிறாள்; ‘கடிதம் காட்டிக் கோவலனை அழைத்து வா’ என வேண்டுகிறாள். கடிதம் கண்ட கோவலன் ‘அவள் ஒரு நாடக நடிகை; கை தேர்ந்த நடிகை; என்பால் அன்புடையவள் போல் இதுவரை நடித்திருக்கிறாள்’ என்று கூறி மடலை ஏற்காமல் வசந்த மாலையை அனுப்பி விடுகிறான். செய்தியறிந்த மாதவியோ ‘மாலைக்காலத்தே வாரார் ஆயினும் காலையில் காண்போம்’ என்று வருந்திக் காத்திருக்கிறாள்.

ஆனால் கோவலனோ, தன் மனைவி கண்ணகியிடம் செல்கிறான்; தன் செயலுக்கு வருந்துகிறான். அவேளா தீய கனவொன்று கண்ட குழப்பத்தில் இருக்கிறாள். அந்த நேரத்தில் ‘மாதவியோடு வாழ்ந்து என் குலம் தந்த குன்று போன்ற பொருளை எல்லாம் இழந்துவிட்டேன்; அது நாணமாக இருக்கிறது’ என்கிறான். ‘மாதவிக்குப் பொருள் கொடுக்க ஒன்றுமில்லை என வருந்துகிறான் போலும்’ என எண்ணிய கண்ணகி ‘சிலம்புகள் உள்ளன. கொள்க’ என்கிறாள். தன் மனைவியின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட கோவலன் ‘அச்சிலம்பையே முதலாகக் கொண்டு மதுரை சென்று வணிகம் செய்வேன்; புறப்படு’ என்கிறான். மறுப்பு இன்றி அவளும் புறப்படுகிறாள். புகார் நகரிலிருந்து மதுரை வரை அவர்களுக்கு வழித்துணையாகச் சமணப் பெண் துறவி கவுந்தியடிகள் வருகிறார். அவர்கள் சோழ நாட்டு வளங்களைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்து சீரங்கத்தை அடைகின்றனர். பின் காவிரியைக் கடந்து நடக்கின்றனர். இத்துடன் புகார்க் காண்டம் முற்றுப் பெறுகிறது.

2.2.2 மதுரைக் காண்டம்

உறையூரைத் தாண்டி, ஒரு மறையவனிடத்தில் வழிகேட்டு, நடந்து ஒரு கொற்றவை கோயிலை அடைகின்றனர். அங்குப் பாலைநில மக்களின் கொற்றவை வழிபாட்டைக் கண்டு களிக்கின்றனர். சாலினி என்ற வேட்டுவப் பெண்ணின் மேல் வந்த கொற்றவை அங்கிருக்கும் கண்ணகியைப் பலவாறு போற்றுகிறாள்.

இவளோ கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமா மணி

                                   (சிலப்பதிகாரம்: 12: 47-50)

(பொருள்: இவள் கொங்குநாடு, குடநாடு, தென்தமிழ்நாடு ஆகிய நாடுகளை ஆளும் தெய்வ மகள்; முற்பிறப்பில் செய்த தவத்தின் காரணமாக இத்தகைய சிறப்பினைப் பெற்றவள்; மிக உயர்ந்த மாணிக்க மணி திரண்டு பெண் உருக்கொண்டது போன்ற சிறப்புடையவள்.)

பின்னர்க் கோவல - கண்ணகியர் தம் பயணத்தைத் தொடர்கின்றனர். வழியில் மாதவி அனுப்பிய தூதுவனாகிய கோசிகன் எனும் அந்தணன் கோவலனைத் தனியே சந்திக்கிறான். மாதவி கொடுத்தனுப்பிய இரண்டாவது கடிதத்தைக் கொடுக்கிறான்.

கோவலனைப் பிரிந்த அவன் பெற்றோர், புகார் மக்கள், மாதவி முதலானோரின் துயரைக் கோசிகன் மூலம் கேட்டு உணர்கிறான். அதோடு மாதவி தீங்கற்றவள் என்பதைக் கடிதத்தின் மூலம் புரிந்து கொள்கிறான். எல்லாவற்றிக்கும் தன் செயலே காரணம் என உணர்கிறான்.

தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி
என்தீது என்றே எய்தியது உணர்ந்து

                                 (சிலப்பதிகாரம்: 13: 64-65)

பின்னர்ப் பயணம் தொடர்ந்து, அவர்கள் வையை ஆற்றைக் கடந்து மதுரையின் மதில் புறத்தில் உள்ள புறஞ்சேரியை அடைகின்றனர். விடிந்ததும், கோவலன் கவுந்தியிடம் கண்ணகியை ஒப்படைத்து விட்டு மதுரைக்குள் செல்கிறான். தன் வணிக இனத்தாரைக் கண்டு வணிகம் செய்து பொருள் ஈட்டும் நோக்குடன் செல்கிறான். மதுரையிலுள்ள இரத்தினக் கடைவீதி, பொன் கடைவீதி, கூலவீதி, பரத்தையர் வீதி எனப் பலவற்றைக் கண்டு மதுரையின் அழகில், வளத்தில் மகிழ்வு எய்தி, மெய்ம்மறந்து திரும்புகிறான்.

புறஞ்சேரி வந்த மாடலன் என்னும் மறையோன் கவுந்தியடிகளை வணங்குகிறான். மாடலனைக் கோவலன் வணங்குகிறான். தீவினையால் துயருற்ற கோவலனைக் கண்ட மாடலன், அவன் முன்னர்ச் செய்த நல்வினைகளை எல்லாம் எடுத்துரைக்கிறான்.

ஒரு முதிய பார்ப்பனன் உயிரைக் காப்பாற்ற மதயானையை எதிர் கொண்டு அடக்கிய கருணை மறவன்.

அறியாது கீரிப்பிள்ளையைக் கொன்ற ஒரு பார்ப்பனியின் துயர் துடைத்தவன்.

ஒரு பத்தினிபால் பழி சுமத்திய பொய்யன் உயிரைப் பூதத்திடமிருந்து காக்கத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த தியாக சீலன்.

இப்படி இந்தப் பிறவியில் நல்வினையே செய்த கோவலன் துயர் அடையக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினைப் பயன்போலும் - என உரைக்கிறான். அவனிடம் கோவலன் தான் கண்ட தீய கனவினைக் கூறுகிறான்.

கனவில் கீழ்மகன் ஒருவனால் தன் ஆடை களையப்பட்டு எருமைக் கடாவில் ஏறிச் செல்லவும், கண்ணகி மிகப்பெரிய துன்பம் அடையவும், பின்னர் இருவரும் சான்றோர் அடையும் துறக்க உலகம் செல்லவும், மாதவி, மணிமேகலையை பௌத்தத் துறவியாக்கவும் - கண்டதாகக் கூறுகிறான். உடன் கேட்டுக் கொண்டிருந்த கவுந்தியடிகள், இப்புறஞ்சேரி தவத்தோர் வாழும் இடம்; இங்கு இல்லறத்தார் தங்குதல் கூடாது என்று கூறி மாதரி என்னும் ஆயர் மகளிடம் கோவல-கண்ணகியரை அடைக்கலப் படுத்துகிறார். இங்கு அருகனைத் தவிரப் பிற கடவுளரை வணங்காத கவுந்தியடிகள் கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது, பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம் எனக் கண்ணகியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசுகிறார்.

மாதரி வீட்டில் அடைக்கலம் புகுந்த கண்ணகி, அவள் மகள் ஐயை துணையுடன் உணவு சமைத்துக் கோவலனுக்குப் படைக்கிறாள். அமுதுண்ட கோவலன், கண்ணகிக்குத் தான் செய்த தீங்கினை எண்ணி இரங்குகிறான்.

இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்

                               (சிலப்பதிகாரம்: 16: 67-68)

(முதுகுரவர் = பெற்றோர்; முதுக்குறைவி = பெரும் அறிவுடையவள்)

“நான் என்னுடைய தாய் தந்தையர்க்கு ஏவல் செய்வதிலிருந்து தவறிவிட்டேன். சிறிய வயதிலே பெரிய அறிவினை உடையவளாகிய நினக்கும் (கண்ணகிக்கும்) தீங்கு செய்தேன்” என்பது இவ்வடிகளின் பொருள்.

தன் தீங்கை எல்லாம் பொறுத்துக் கொண்ட கண்ணகியைப் போற்றுகிறான்.

என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

                               (சிலப்பதிகாரம் : 16: 88-89)

எனப் பாராட்டுகிறான்.

பின் அவளுடைய சிலம்பில் ஒன்றை எடுத்து விற்றுவரச் செல்கிறான். அவன் எதிரே, நூறு பொற்கொல்லர்களுடன் அரண்மனைப் பொற்கொல்லன் வருகிறான். அவனிடம், காவலன் தேவிக்கு ஆவதோர் காற்குஅணி, நீவிலை இடுதற்கு ஆதியோ (சிலப்பதிகாரம்: 16: 111-112) (அரசனுடைய தேவிக்குப் பொருத்தமான இச்சிலம்பின் விலையை நீ சொல்ல முடியுமா?) எனச் சிலம்பைக் காட்டிக் கேட்கிறான். இது பொற்கொல்லனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. தான் திருடிய சிலம்போடு இச்சிலம்பு ஒத்திருப்பது கண்டு, தேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் என அரசனிடம் காட்டிக் கொடுக்கிறான். அரசனோ, ‘கள்வன் கையில் அச்சிலம்பு இருப்பின் அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவருக’ என ஏவலர்க்கு ஆணையிடுகிறான். இதனால் கோவலன் கொலைப்படுகிறான். இதனை அவலச் சுவையுடன் அனைவர் நெஞ்சமும் நெகிழ வெளியிடுகிறார் இளங்கோ.

மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து

                               (சிலப்பதிகாரம்:16: 215-17)

(நிலமகள் மிகப்பெரிய துன்பம் அடையவும், அரசனின் நீதி பிறழவும், கோவலன் பண்டை வினை காரணமாக வீழ்ந்து படுகிறான்.)

புறஞ்சேரியில் ஆய்ச்சியர்கள் சில தீய நிமித்தங்களைக் கண்டதால் வரும் துயர்கள் நீங்குவதற்காகக் கண்ணனைப் போற்றிக் குரவைக் கூத்தினை நிகழ்த்துகின்றனர். ஆய்ச்சியர் கண்ணனுடைய அவதாரச் சிறப்புக்களை எல்லாம் வியந்து போற்றிப் பாடி ஆடுகின்றனர்.

கூத்தின் முடிவில் கோவலன் கொலைப்பட்டான் என்ற செய்தி வருகிறது. கேட்ட கண்ணகி அழுது புலம்பி அரற்றுகிறாள். அவளது அவலம், பின்னர் அவல வீரமாக மாறுகிறது. மன்னவன் தவற்றால், திருடன் என்று பழி சுமத்தப்பட்டு என் கணவன் கொலைப்பட்டான். அவனுக்கு ஏற்பட்ட பழியைத் துடைப்பேன் என்று வீறு கொண்டு எழுகிறாள். கதிரவனைப் பார்த்துக் கள்வனா என் கணவன்? என்று கேட்கிறாள். அப்போது கள்வன் அல்லன் என அசரீரியாகச் செய்தி வருகிறது. தன் எஞ்சிய ஒரு சிலம்பைக் கையில் ஏந்தியவளாய் மதுரை நகர்ப் பெண்களிடம் பலவாறு சூளுரைத்து நடக்கிறாள். காதற் கணவனைக் காண்பேன்; அவன் வாயில் தீதுஅறு நல்லுரை கேட்பேன் என்கிறாள். மதுரை மக்கள் தென்னவன் கொற்றம் சிதைந்தது என்றும், செம்பொற் சிலம்பொன்று கையேந்தி வம்பப் பெருந்தெய்வம் வந்தது என்றும் அஞ்சிப் பதறுகின்றனர். கொலைப்பட்டுக் கிடக்கும் கோவலன் பாதம் பற்றி அழுகிறாள் கண்ணகி. அப்பொழுது அவன் உயிர்கொண்டு எழுந்து, நீ இங்கு இரு என்று சொல்லி, மறுபடி உடம்பைத் துறந்து வானுலகு செல்கிறான். பின் கண்ணகி தீவேந்தனைக் கண்டு வழக்குரைப்பேன் என அரண்மனை செல்கிறாள்.

    

பாண்டிய மன்னனிடம், ‘தேரா மன்னா! என் கால் சிலம்பை விலைபேச முயன்று உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி நான். என் சிலம்பு மணிகளை உள்ளீடாகக் கொண்டது’ என வழக்குரைக்கிறாள். பாண்டியன் தன் தேவி சிலம்பு முத்துப் பரலை உடையது எனக் கூறிக் கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பை வரவழைத்துக் கொடுக்கிறான். கண்ணகி சிலம்பை உடைக்கிறாள். அதிலிருந்து மாணிக்கப் பரல் தெறித்து வீழ்கிறது; ‘பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட யான் அரசன் அல்லன்; யானே கள்வன்’ எனக் கூறிப் பாண்டிய மன்னன் உயிர்விடுகிறான்.

பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்

                              (சிலப்பதிகாரம்: 20: 74-75)

பாண்டிமாதேவியும் உயிர்விடுகிறாள்.

கண்ணகி புகார் நகரில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்களின் வரலாற்றைக் கூறி, ‘நானும் அவர்களைப் போன்ற ஒரு பத்தினியாகின் இந்த அரசையும் மதுரையையும் ஒழிப்பேன்’ எனச் சூள் உரைக்கிறாள்; தன் இடமுலையைத் திருகி, மதுரையை வலம்வந்து, வீதியில் எறிகிறாள். அப்போது தீக்கடவுள் தோன்றி அவளிடம் ஏவல் கேட்கிறான். பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழந்தைகள் இவர்களை விடுத்துத் தீயவர்களை மட்டுமே அழிக்க என அனல் கடவுளுக்கு ஆணையிடுகிறாள். மதுரை எரிகிறது; அங்கிருந்த அரச-அந்தண, வணிக-வேளாண் பூதங்கள் வெளியேறுகின்றன.

மதுரையின் காவல் தெய்வமான மதுராபதி கண்ணகி முன் தோன்றிக் கோவலன் கொலைப்பட்டதற்கான காரணம் அவன் முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாக அவனுக்கு இடப்பட்ட சாபமே என எடுத்துக்கூறி, மதுரையைத் தீயிலிருந்து விடுவிக்கிறாள். பின்னர்க் கண்ணகி மேற்கு நோக்கி நடந்து சேரநாட்டை அடைகிறாள். நெடுவேள் குன்றில் ஒரு வேங்கை மரத்தின் கீழ் நிற்கிறாள். பதினான்கு நாள் கடந்த பின்னர், இந்திரன் முதலிய தேவர் வந்து அவளைப் போற்றுகின்றனர். அவர்களோடு இருந்த கோவலனோடு சேர்ந்து வான ஊர்தியில் ஏறித் துறக்கம் செல்கிறாள் கண்ணகி. இத்துடன் மதுரைக்காண்டம் முடிகிறது.

2.2.3 வஞ்சிக் காண்டம்

கண்ணகி வானுலகு சென்ற காட்சியைக் கண்ட மலைக்குறவர்கள், அவளைத் தம் குல தெய்வமாகக் கருதி அவளுக்காகக் குரவைக் கூத்து நிகழ்த்துகின்றனர். மலைவளம் காணவந்த அரசன் செங்குட்டுவனிடம் தாம் கண்ட காட்சியை எடுத்துரைக்கின்றனர். உடனிருந்து சாத்தனார் கோவல- கண்ணகியர் வரலாற்றை புகார், மதுரை நிகழ்வுகளை அரசனுக்கு விளக்குகிறார். அதைக் கேட்ட செங்குட்டுவன் மனைவி, ‘நம் சேரநாடு வந்த இப்பத்தினிக் கடவுளுக்கு வழிபாடு எடுக்க வேண்டும்’ என்கிறாள்.

நம் அகல்நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்

                              (சிலப்பதிகாரம்: 25: 113-114)

(பரசல் = வழிபடல்)

கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்தில் கல் எடுத்துக் கங்கையில் புனித நீராட்டிக் கொண்டுவந்து வஞ்சியில் கோயில் எடுப்பதே நோக்கமானாலும், தமிழர் வீரத்தை நிலை நாட்டுவதற்காகவும் சேரன் படை எடுத்துச் செல்கிறான். வழியில் பல மன்னர்கள் திறைப் பொருளுடன் சேரனை வரவேற்கின்றனர்; வாழ்த்துகின்றனர். எதிர்த்த மன்னர்களைச் சேரன் வெல்கிறான்.

கண்ணகி சிலை வடிக்க, இமயத்தில் கல் எடுத்து, தமிழர் தம் வீரத்தைப் பழித்த கனக-விசயர் தலையிலே அக்கல்லைச் சுமந்து வரச் செய்து, கங்கை ஆற்றில் புனித நீராட்டுகிறான். அப்போது அங்கு வந்த மாடல மறையோன் சேரனின் வெற்றியைப் புகழ்கிறான். பின்னர்க் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்தவற்றைக் கேட்ட அவர்களின் தாயர் இறந்துபட்டனர் என்பதையும், அவர்தம் தந்தையர் துறவு மேற்கொண்டனர் என்பதையும், மாதவி-மணிமேகலை பௌத்தத் துறவியாகினர் என்பதையும், கவுந்தியடிகள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்பதையும், அடைக்கலமாகக் கண்ணகியைப் பெற்ற மாதரி தீப்பாய்ந்து உயிர் துறந்தாள் என்பதையும், கொற்கை அரசன் வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பத்தினிக் கடவுளுக்குப் பலியிட்டான் என்பதையும் தெரிவிக்கிறான். இவ்வாறு புகார், மதுரை நிகழ்வுகளைக் கேட்டறிந்த செங்குட்டுவன் வஞ்சி திரும்புகிறான்.

சேரன் சிற்பநூல் வல்லாரைக் கொண்டு கண்ணகிக்குக் கோயில் எழுப்புகிறான். இமயக் கல்லில் வடிக்கப்பட்ட கண்ணகி சிலையைப் பிரதிட்டை செய்து முறைப்படி வழிபாடு நடத்துகிறான். கண்ணகியின் அடித்தோழி, தேவந்தி, காவற்பெண்டு முதலானோர் அங்கு வந்து கண்ணகியை வாழ்த்திப் பாடுகின்றனர். பத்தினிக் கடவுள் மின்னல் கொடியாகச் செங்குட்டுவனுக்கும் காட்சியளிக்கிறாள். முன்பு பாண்டியனைப் பழிவாங்கிய வீரக்கண்ணகி, இங்கு அவனை மன்னித்து அருள் செய்யும் அருள் கடவுளாக மாறுகிறாள்.

தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
நல்விருந்து ஆயினான் நான்அவன் தன் மகள்
வெல்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்

                             (சிலப்பதிகாரம்: 29 பாடல் : 10)

என அருள்புரிகிறாள்.

(பாடல் பொருள்: பாண்டியன் தீமையற்றவன்; அவன் தேவர் உலகம் அடைந்து தேவர்களின் விருந்தினன் ஆகிவிட்டான்; நான் அவனுடைய மகள்; நான் இம்மலை நாட்டில் எப்போதும் நீங்காது தங்குவேன்; என் அருமைத் தோழியரே! நீங்கள் எல்லோரும் வாருங்கள்.)

கண்ணகிக் கடவுளின் அருள்பெற்ற தோழியர் அம்மானை வரி, கந்துகவரி, ஊசல்வரி முதலான வரிப்பாடல்களால் மூவேந்தரையும், பத்தினிக் கடவுளையும் வாழ்த்துகின்றனர். இப்பத்தினி வழிபாட்டில் பன்னாட்டு மன்னர்கள் கலந்து கொள்கின்றனர்; குறிப்பாக இலங்கைக் கயவாகு மன்னன் இவ்விழாவில் கலந்து கொள்கிறான். பத்தினிக் கடவுள், அவ்வந்நாட்டு வழிபாட்டில் தான் எழுந்தருளுவதாக வரமளிக்கிறாள். இத்துடன் வஞ்சிக்காண்டம் நிறைவு பெறுகிறது.