2.3 சிலப்பதிகாரம் - கருத்துக் களஞ்சியம்

சமயம், சமூகம், அரசியல் சார்ந்த பல கருத்துகளைக் கொண்டுள்ள ஒரு சிறந்த படைப்பு சிலம்பு. சிலப்பதிகாரத்தின் அடிப்படையாக மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன.

1) அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும்
2) புகழ்பெற்ற பத்தினியை மேலோர் போற்றுவர்
3) ஊழ்வினை தவறாது தன் பயனை ஊட்டும்

என்பன அவை. இவற்றோடு தமிழர்தம் நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகவும் திகழ்கிறது சிலப்பதிகாரம். இதில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் உண்டு. சமண, பௌத்த, வைதீக நெறிகளும் உண்டு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆய்ச்சியர், குறவர், பரத்தையர் எனப் பல இனத்தவர்களும் இங்குப் பேசப்படுகின்றனர். இவற்றை எல்லாம் தொகுத்துக் காண்பது ஓர் அரிய செயலே. மாணவர் தம் பயன்கருதி ஒரு சில இங்குச் சுட்டப்பெறுகின்றன.

2.3.1 அரசியல்

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே எமனாக மாறும்; செங்கோல் வளைந்தபின் உயிர் வாழ்தல் நன்று அன்று; அரசன் நல்லாட்சி செய்தால்தான் அந்நாட்டில் வாழும் மகளிர்க்கும் கற்பு வாழ்க்கை சிறக்கும் என்பன போன்ற பல அரசியல் உண்மைகளைப் பேசுகிறது சிலம்பு.

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக (சிலப்பதிகாரம் - பதிகம் : 61-62) என்ற சாத்தனார் கூற்றிற்கு இணங்க இளங்கோ தம் காப்பியப் படைப்பை மூவேந்தர்க்கும் உரியதாகவே படைத்துள்ளார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவது போலச் சிலம்பின் தொடக்கமும் அரசியல், முடிவும் அரசியல் என்ற நிலையில் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது சிலப்பதிகாரம். புகார், மதுரை, வஞ்சி எனக் காண்டப் பெயர்களை அமைத்து, மூவேந்தர்களையும், மூன்று நாடுகளையும், அவற்றின் தலைநகரங்களையும் ஒருங்கு இணைக்கிறார் இளங்கோ. மேலும் பத்தினி வழிபாட்டில் தமிழ் மன்னர்களை மட்டுமன்றிப் பிறநாட்டு மன்னர்களையும் இணைத்து ஒற்றுமைப்படுத்துகிறார்.

அறியாது பிழை செய்த பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான்.

வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது

                             (சிலப்பதிகாரம்: 25: 98-99)

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் (சிலப்பதிகாரம்-பதிகம்: 55) என்ற காப்பிய அறம் மதுரைக் காண்டத்தில் எடுத்துரைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் நேர்மை, நீதி தவறாத ஆட்சிமுறை இங்கு விளக்கப்படுகிறது. ‘நற்றிறம் படராக் கொற்கை வேந்தே’ என்றும், ‘தேரா மன்னா’ என்றும் கண்ணகி பாண்டிய மன்னனைப் பழித்தும் கூட, அவன் அமைதியாகக் ‘கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று’ என்று கூறுவது அவனது நேர்மைக்கு - செங்கோன்மைக்கு எடுத்துக்காட்டு. நடுவுநிலையோடு வழக்கைக் கேட்டுத் தன் தவறு உணர்ந்து உயிரையே விடுகிறான் பாண்டியன்.

அறியாது பசுவின் கன்றினைக் கொன்ற இளவரசனைப் பலிகொடுத்துப் பசுவின் துயர் களைந்த மனுநீதிச் சோழனைப் பற்றிய குறிப்பைச் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம். தமிழர் திறம் பழித்த வட ஆரிய மன்னரை வெற்றி கொள்கிறான் சேரன் செங்குட்டுவன். வடநாட்டுப் போர் தொடங்கத் திட்டமிட்ட சேரன் தூது அனுப்ப எண்ணுகிறான். ஆனால் வஞ்சி நகரில் முரசு அறைந்து அறிவித்தாலே போதும்; செய்தி வடநாடு எட்டிவிடும் என்கிறான் அமைச்சன். இது நாட்டில் பிறநாட்டு ஒற்றர்கள் நிறைந்திருந்ததைக் காட்டுகிறது. அரண்மனையைச் சுற்றி அகழி இருந்ததையும் கோட்டை மதிலில் பல்வேறு வகையான போர்க் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததையும் மதுரைக் காண்டத்தில் காண்கிறோம். அரசனுடன் புலவர் பெருமக்களும், பட்டத்து அரசியும் உடன் இருந்து அரசியல் முடிவுகளை எடுத்தமை சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க முடிவு செய்ததன் மூலம் அறியலாம்.

பேரரசின் கீழ் ஆட்சி செய்து வரும் சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் பிறநாட்டு மன்னர்களும் திறை செலுத்திய செய்தியைச் சிலம்பு தெரிவிக்கிறது. அதோடு மன்னனைக் காண வரும் மக்களும் குறுநில மன்னர்களும் காணிக்கைப் பொருளுடன் வந்து அரசனைக் கண்டு வாழ்த்துவதும் அரசியல் வழக்கமாக இருந்திருக்கிறது. போரில் புறமுதுகு காட்டி ஓடியவர்களையும், தவக்கோலம் பூண்டு உயிர் பிழைத்துச் சென்றவரையும் தாக்குவது போர் அறம் அன்று என்பதையும் சிலம்பு சித்திரிக்கிறது. இப்படி எத்தனையோ பல அரசியல் செய்திகளைச் சிலம்பின் வழி அறியலாம். இப்படிப் பல சிறப்புக்களைச் சொன்னாலும், தமிழகத்தில் மூவேந்தர்களும் ஒற்றுமையாக இல்லை என்ற உண்மையைப் பதிவு செய்யவும் இளங்கோ தவறவில்லை; அதற்காகவே ஒற்றுமை உணர்வை வளர்க்கவே அவர் சிலம்பைப் படைத்தார் எனலாம்.

2.3.2 சமயம்

சிலப்பதிகாரத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயச் சிந்தனைகள் நிறைந்து காணப்படுகின்றன. கவந்தியடிகளையும் சாரணர்களையும் படைத்து, அவர்கள் வாயிலாகச் சமண சமயக் கருத்துகளை வெளியிடுகிறார். ஆய்ச்சியர் குரவை என்னும் காதை திருமால் வழிபாட்டை எடுத்துரைக்கிறது. குன்றக்குரவை முருக வழிபாட்டைப் பேசுகிறது. வேட்டுவவரி கொற்றவை வழிபாட்டைச் சிறப்பிக்கிறது. மாதவி, மணிமேகலை துறவு மூலம் பௌத்தக் கோட்பாடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இவை தவிர இந்திரவிகாரம், மணிவண்ணன் கோட்டம், இலகொளிச் சிலாதலம், நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம், ஊர்க்கோட்டம் எனப் பல கோவில்கள் இருந்ததைச் சிலம்பு சுட்டுகிறது. இவை பல்வேறு சமயக் கடவுளருக்குரிய கோயில்கள் ஆகும். இப்படிப் பல சமயங்களை, சமயக் கருத்துகளை விருப்பு வெறுப்பு இன்றி எடுத்துரைக்கும் இளங்கோவடிகள், பத்தினி வழிபாடு என்ற ஒன்றில் அனைத்துச் சமயங்களையும், சமயக் குரவர்களையும் ஒருங்கிணைக்கிறார். இது இளங்கோவின் தனிச் சிறப்பாகும்.

2.3.3 சமூக வாழ்வு

இந்திய சமூகம் ஒரு சாதியச் சமூகம் என்பது அனைவரும் அறிந்ததே. இச்சாதியச் சமூகம் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற முறையிலும் இனக்குழுக்களான குறவர், ஆயர், வேட்டுவர் என்ற நிலையிலும் சிலம்பில் பேசப்படுகிறது. கோவல-கண்ணகியர் பெருவணிக குல மக்கள்; இவர்தம் வாழ்வியல் வளத்தோடு கணிகையர் குலம் இணைகிறது. பெருவணிகர் பற்றிப் பேசும் சிலம்பு சிறுவணிகர்களான அப்பம் விற்போர், பிட்டு விற்போர், பூவிலையாளர், இறைச்சி விற்போர் பற்றியும் பேசுகிறது. பொன்கடை வீதி, இரத்தினக்கடை வீதி, தானியம் விற்கும் கூலவீதி, துணி விற்கும் அறுவை வீதி, நாளங்காடி (பகல் நேரச் சந்தை), அல்லங்காடி (இரவு நேரச் சந்தை) எனப் பெருநகர் ஒரு பெரும் வணிகக் கூடமாகத் திகழ்ந்ததைச் சிலம்பு விரிவாகப் பேசுகிறது. இந்நகர்ப்புற நாகரிக வளர்ச்சியின் ஒரு கூறாகப் பரத்தையர் வீதி தனியாக இருந்ததையும் சிலம்பு எடுத்துரைக்கிறது. நகர அமைப்பே பொருளாதார நிலை, உயர் பதவி ஆகிய அடிப்படையில் அமைந்துள்ளதை இந்திர விழவூரெடுத்த காதை வாயிலாகப் பேசுகிறார் இளங்கோவடிகள். இவ்வகையில் குறிப்பிடத்தக்கது பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்ற புகார் நகர அமைப்பு ஆகும். வணிகரில் பெருவணிகர் இருக்கிற இடம் பட்டினப்பாக்கம்; சிறு வணிகர் வாழிடம் மருவூர்ப்பாக்கம்; உயர் படைத்தளபதிகள் வாழிடம் பட்டினப்பாக்கம்; சாதாரணப் படைவீரர்கள் இருப்பிடம் மருவூர்ப்பாக்கம்; கணிகையரில் தலைக்கோல் பட்டம் பெறும் கணிகையர் வாழிடம் பட்டினப்பாக்கம்; சாதாரண கணிகை வாழிடம் மருவூர்ப்பாக்கம்.

கோவலன்-கண்ணகி திருமணம் கூட நகர்ப்புற நாகரிகத்தின் அடிப்படையில் சடங்குகள் கொண்டதாக அமைகின்றது. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் (சிலப்பதிகாரம்: 1: 52-53) வந்து திருமணம் நடக்கிறது. மணிமேகலைக்குப் பெயர் சூட்டும் விழாவில் ஆயிரம் கணிகையர் வாழ்த்துகின்றனர்; மிகப் பெரிய அளவில் தானம் செய்கிறான் கோவலன். இறந்தோர்க்காகக் கங்கை நீராடி நீர்க்கடன் செய்கிறான் அரசன். இந்திரவிழா புகார் நகரில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அப்போது பல்வேறு கடவுளர்களுக்கு வழிபாடு நடக்கிறது. தலைக்கோல் பட்டம் பெற்ற மாதவி விழாவில் ஆடுகிறாள். இவை அனைத்துமே நகர்ப்புற நாகரிக வாழ்வின் வெளிப்பாடாக அமைகின்றன.

இவையன்றி நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் முறையும் சிலம்பில் சிறப்பிடம் பெறுகின்றது. வேட்டுவர்களின் கொற்றவை வழிபாடு, ஆய்ச்சியர்களின் கண்ணன் வழிபாடு, குன்றக் குறவர்களின் வேலன்-வள்ளி வழிபாடு, அம்மக்களின் ஆடல் பாடல்கள் முதலானவை நாட்டார் வாழ்வியலைச் சித்திரிப்பன. கோவலர் வாழ்க்கை குறையற்றது எனக் கவுந்தியடிகளால் சிறப்பிக்கப்படுகின்றது. வேட்டுவ மகள் சாலினி, தெய்வம் ஏறப்பெற்று, அம்மக்களால் தெய்வமாகவே வழிபடப்படுகின்றாள். வேட்டுவ மக்கள் கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுப்பதும் தம்மையே பலிதருவதும் வழக்கமாக இருந்திருக்கின்றன.

கோவல-கண்ணகியரைத் தனிமனைப்படுத்தும் நிகழ்ச்சி அக்காலத்தே தனிக்குடும்ப வாழ்க்கை முறை வழக்கில் இருந்துள்ளதைத் தெளிவுபடுத்துகிறது.

அரசனும் அரசமாதேவியரும் ஆடம்பரமாக வாழ்ந்தனர். பாண்டிமாதேவி தான் கண்ட கனவினை அரசனுக்குத் தெரியப்படுத்தப் புறப்பட்டுவரும் காட்சி அவர்தம் ஆடம்பர வாழ்வுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இங்குப் பல்வேறு மகளிரும் பணியாட்களும் எண்ணற்ற அணிகலன்களையும், மணப்பொருட்களையும், ஒளி விளக்குகளையும் ஏந்திச் செல்கின்றனர். ஆடி (கண்ணாடி) ஏந்தினர்; கலன் ஏந்தினர்; அவிர்ந்து விளங்கு அணியிழையினர்; கோடி எந்தினர்; பட்டு ஏந்தினர்; கொழுந்திரையலின் செப்பு ஏந்தினர் (சிலப்பதிகாரம்: 20: 13) என்று இவ்வாறு இளங்கோ காட்டும் காட்சி அரசியரின் பெருவாழ்வின் விளக்கமாக அமைகின்றது.

அரண்மனைப் பொற்கொல்லனை அறிமுகம் செய்கிறபோதும் கூட, அவன் நூறு பொற்கொல்லர்கள் பின்வர ஆடம்பரமாக வருவதாக இளங்கோ காட்டுகிறார். அதே நேரத்தில் துறவியர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததும் இங்குக் குறிப்பிடப்படுகிறது. இவர்களுக்குச் சாபமிடும் ஆற்றலும், வருவதுணரும் ஆற்றலும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்ஙனம் அரசன் முதல் ஆண்டிவரை பல்வேறு தளத்திலுள்ள மக்களின் வாழ்வியல் களஞ்சியமாகச் சிலம்பு திகழ்கிறது.

2.3.4 கலை

நாகரிகத்தின் வெளிப்பாடே கலை; இயல், இசை, நாடகம், கூத்து, கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல்வேறு கலைகள், கலைஞர்கள் கலைவாழ்வு சிறந்து விளங்கியமையைச் சிலப்பதிகாரம் வழி அறிகிறோம். கோயில்கள் கோட்டம், நியமம், விகாரம், சிலாதலம் எனப் பல பெயர்களில் வழங்கப்பட்டன. கண்ணகிக்குச் சிலை வடித்தமை, கருங்கல்லில் சிலை செய்த செய்தியைப் புலப்படுத்துகிறது. சிலம்பின் அரங்கேற்று காதை தமிழர்தம் இசைக்கலை, நாட்டியக் கலைக்குச் சிறந்த சான்றாகும். நாட்டியக் கலையில் வேத்தியல், பொதுவியல் என இருவகை இருந்தமை தெரிகிறது. இங்குப் பாடல் ஆசான் இயல்பு, யாழாசிரியன் இயல்பு, குழல் வாசிப்பவன் இயல்பு, தண்ணுமை முழங்குவோன் இயல்பு என இசைக் கலைஞர்களின் இயல்பு தெளிவாக விளக்கப்படுகிறது. மாதவியின் நாட்டியத்திறன், அவளது ஒற்றைக்கை மற்றும் இரட்டைக்கை அவிநயம் பற்றிய விவரிப்பு, அதனால் அவள் தலைக்கோல் அரிவை என்ற பட்டம் பெற்றது, நாட்டிய அரங்கம் (மேடை, விளக்குகள், திரைகள்) பற்றிய விளக்கம் ஆகிய அனைத்தும் சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் இக் கலைகள் பெற்றிருந்த செல்வாக்கினை அறியத் துணைபுரிகின்றன. இவையன்றி மாதவி கடவுளர் வடிவுகொண்டு ஆடிய பாண்டரங்கம், குடை, துடி முதலான 11 வகைக் கூத்துகளும், கோவலன் முன்னின்றாடிய காட்சிவரி, தேர்ச்சிவரி, புன்புறவரி முதலான எண்வகை வரிக்கூத்துகளும் தமிழர்தம் கூத்துக்கலைக்குச் சிறந்த சான்றாகும். அதோடு இன்றைய சாமியாட்டம் போன்று சாலினி தெய்வமுற்று ஆடிய கூத்தும், ஆய்ச்சியர் எண்மர் வட்டமாக நின்று ஆடிய குரவைக் கூத்தும் நாட்டுப்புற மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கூத்து வகைகளைப் புலப்படுத்துவன. கண்ணகி-பாண்டிமாதேவி சிலம்பு மற்றும் மாதவி அணிந்த அணிகலன்கள் பற்றிய விவரிப்பும் அக்கால நுண்கலைகளின் திறத்திற்குச் சான்றாகின்றன. இவ்வாறு, சிலம்பு ஒரு கலையின் களஞ்சியமாகத் திகழ்வதை அறிகிறோமன்றோ!

2.3.5 நம்பிக்கைகள்

கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன (சிலப்பதிகாரம்: 5: 237,239) என்பதில் பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையும், வலக்கண் துடித்தால் தீமையும் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது புலப்படுகிறது. கோவலன் கொல்லப்பட்ட அன்று குடத்துப்பால் உறையாது இருத்தல் முதலானவற்றை ஆய்ச்சியர்கள் தீய சகுனங்களாகக் கொள்கின்றனர். கோவல-கண்ணகியர் தாயரின் மறுபிறப்புப் பற்றிய செய்தி, பிறவிகள் தொடரும் என்ற நம்பிக்கையை எடுத்துரைக்கிறது. இறைவனுக்கு விழா எடுக்கவில்லையானால் தீமை நிகழும் என்ற நம்பிக்கை வேட்டுவ வரி மூலம் சுட்டப்பெறுகிறது. வேட்டுவ வரி வேடர்களின் பலி கொடுக்கும் வழக்கத்தை எடுத்துரைப்பதோடு, தன்மூலம் கொற்றவை வெற்றி தருவாள் என்ற நம்பிக்கை இருந்ததையும் காட்டுகிறது. பத்தினிக் கடவுளுக்காகப் பாண்டியன் வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலியிட்டுச் சாந்தி செய்தான் என்ற செய்தியும் இத்தகைய நம்பிக்கையைத் தெரிவிக்கிறது. கனவு பலிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததைக் கோவலன், கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோர் கண்ட கனவுகள் புலப்படுத்துகின்றன.