2.4 சிலப்பதிகார இலக்கியச் சிறப்பு

இயல், இசை, நாடகம் கலந்தமைந்த சிலப்பதிகாரத்தின் இலக்கியச் சிறப்புக் காரணமாக அதை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றார் பாரதி. கவிதைச் சுவையும், நிகழ்வுகளும், பாத்திரப் படைப்பும் சிறந்தமைந்த காப்பியச் சுவை கொண்டது சிலப்பதிகாரம். இங்குச் சில எடுத்துக்காட்டுகள் கொண்டு அவற்றைக் காணலாம்.

2.4.1 இலக்கிய நயம்

தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம் என்பது மட்டும் அன்று அதன் சிறப்பு. இலக்கிய நயத்திலும் தரத்திலும் சுவையிலும் கூட முதன்மை பெற்று விளங்குகிற ஓர் அருந்தமிழ்க் காப்பியம் சிலம்பு. சிலப்பதிகாரம் என்ற முழுமையான காப்பியத்தைச் சுவைக்க, ரசிக்க இதோ ஒரு சான்று:

 சிலம்பின் முதல் காதை மங்கல வாழ்த்துப் பாடல். அதனை எவ்வளவு மங்கலமாகத் தொடங்குகிறார் பாருங்கள்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்
அங்கண் உலகளித்த லான்.    

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான் 

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்
                                 (சிலப்பதிகாரம்:1: 1-9)

(திங்கள் = நிலவு; போற்றுதும் = போற்றுவோம்; கொங்குஅலர் தார் = தாது நிறைந்த மலர்மாலை; சென்னி = சோழமன்னன்; அங்கண் = அழகிய இடம்; ஞாயிறு = சூரியன்; திகிரி = ஆணைச்சக்கரம்; பொற்கோட்டு = பொன் மயமான சிகரம்; மழை = மேகம்; நாமநீர் = அச்சம் தரும் கடல்; அளி = கருணை)

எனத் தொடங்குவதில் எத்தனை நயங்கள் பாருங்கள். ‘திங்களை முதலில் கூறினார். இது பெண்மைக்கு முதன்மை தரும் காப்பியம் ஆதலால்’ என விளக்கம் கூறுவர். திங்கள் மங்கலமான சொல் என்பதால் முதலில் கூறினார் என்பர். இன்றைய திறனாய்வாளர்கள் திங்கள், ஞாயிறு, மழை ஆகியவற்றை வாழ்த்துவது இயற்கை வாழ்த்து; இயற்கையில் இறைவனைக் கண்டவர்கள் தமிழர்கள். எனவே இவை இறைவாழ்த்து என்கின்றனர். அரசனையே இறைவனாகக் கண்ட இனம் தமிழ் இனம்; எனவே இவை அரசவாழ்த்து என்கின்றனர். சோழனுடைய வெண்கொற்றக் குடை போல் இருப்பதால் திங்களைப் போற்றுகிறார். அவன் ஆட்சிச் சக்கரம் போல் இமயத்தை வலம் வருவதால் ஞாயிற்றைப் போற்றுகிறார். அவன் கொடைபோன்று மேல்நின்று பொழிவதால் மழையைப் போற்றுகிறார். எனவே இவை அரசியல் வாழ்த்தே என்பர். திங்கள், ஞாயிறு, மழை ஆகிய இவை மூன்றும் முக்குடை; முக்குடை அருகக் கடவுளுக்கு உரியவை; பின்னர் மதுரைக்காண்டத் தொடக்கத்தில் அருகக் கடவுளைத் திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடைக்கீழ் இருந்த அறிவன் (சிலப்பதிகாரம்: 11: 1) என்கிறார். எனவே இத்தொடக்க வாழ்த்து அருகக் கடவுள் வாழ்த்தே என்பர்.

இவை மட்டுமா? திங்கள், ஞாயிறு, மழை என்பன மூன்று காண்டப் பொருண்மையை உள்ளடக்கியுள்ளன என்பர். திங்கள் என்பது தண்மை-குளிர்ச்சி; அது இன்பத்தின் குறியீடு. இன்ப வாழ்வைக் கருவாகக் கொண்ட புகார்க் காண்டத்துக்குத் திங்கள் குறியீடு. ஞாயிறு என்பது வெம்மை-அனல்; அது துன்பத்தின் குறியீடு; துன்பியல் சார்ந்த மதுரைக் காண்டத்துக்கு ஞாயிறு குறியீடு. மழை என்பது அருளின் குறியீடு; அது தெய்வம் சார்ந்தது. வஞ்சிக் காண்டம் தெய்வீகம் நிறைந்தது; ஆகவே மழை வஞ்சிக் காண்டத்துக்குக் குறியீடு.

கண்ணகியின் வாழ்வின் மூன்று நிலைகளை (இன்ப-துன்ப-தெய்வநிலை) உணர்த்தும் குறியீடுகளாகவும் இவற்றைக் கொள்வர். இவை மட்டும்தான் இவ்வாழ்த்தில் அடங்கியிருக்கின்றனவா? இல்லை. இன்னும் எத்தனை எத்தனை பொருளையோ உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது. திங்கள் - கண்ணகி; ஞாயிறு - கோவலன்; மழை - மாதவி என மூன்று பாத்திரங்களைக் குறியீடாகக் கொண்டது என்பர். எப்படி? பொருத்திக் காண்போமா? பாருங்கள் எவ்வளவு நயமாக, பொருத்தமாக இது அமைகிறது!

மழை பிறக்கிற மூலம் உவர்நீர்க் கடல்; குடிநீருக்குப் பயன்படாது வெறுத்து ஒதுக்கப்படுவது; அதுபோல மாதவி பிறப்பது உவர்நீர்க் கடல் போன்று சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்படுகிற பரத்தையர் குலம். உவர்நீர்க் கடலில் ஞாயிற்றின் வெம்மை பட உவர்நீர் நன்னீர் ஆவியாகிறது; மேகமாகிறது; அதுபோலக் கோவலனாகிய ஞாயிறு உவர்நீர் ஆகிய மாதவிபால் பட அவள் நன்னீர் மேகமாக நல்ல குலமகளாக மாறுகிறாள். திங்கள் - தண்மையின் குறியீடு. அது மழை மேகத்தில் பட, மேகம் மழையாகப் பொழிகிறது; அதுபோல் நன்னீர் மேகமாய மாதவிபால் கண்ணகியின் தண் ஒளிபட அவள் நல்ல மனைவியாக - தாயாக அமைகிறாள். எனவே திங்கள், ஞாயிறு, மழை என்பன சிலம்பின் முக்கியப் பாத்திரங்களின் குறியீடாக அமைந்து, அவற்றிற்கு இடையேயான புனிதமான உறவு நிலையையும் விளக்குகிறதன்றோ? இவ்வாறு ஆழ்ந்து பார்த்தால் பல பொருள் நயங்களை இவ்வாழ்த்துப் பாடலில் காண முடிகிறது.

2.4.2 நாடக முரண்

நாடகத்தில் பின்னால் நிகழவிருக்கும் செயலை முன்னரே குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதும், முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியைப் பின்னர் எடுத்துரைப்பதுமான உத்திகள் கையாளப்படும். நாடகத்தின் சுவையை, பார்வையாளர்களின் ரசனைத் திறனை அதிகரிக்க இவ்வுத்தி இடம்பெறும். நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இவ்வுத்தி சிறப்பிடம் பெறுகிறது. கோவல - கண்ணகியர் திருமண வாழ்த்தில்,

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீது அறுக

                          (சிலப்பதிகாரம்: 1: 61-62)

(காதலனைப் பிரியாமல், அவன் அவளைப் பற்றிய கை நெகிழாமல் வாழ்க) என வாழ்த்துகின்றனர். பின்னால் கோவலன் பிரியப் போகிறான் என்பதைக் குறிப்பாக இது முன் உணர்த்துகிறது.

இதே போன்று, கோவலனும் கண்ணகியும் வையை ஆற்றைக் கடக்கும் போது வையை என்ற பொய்யாக் குலக்கொடி (சிலப்பதிகாரம்: 13: 170) கண்ணகிக்கு நேரப் போவதை அறிந்தவள் போலப் பூக்களாகிய ஆடையால் தன் கண்ணீரை மறைத்துக் கொண்டாள் எனவும், 

கோட்டை மீது பறந்த கொடிகள் ‘வராதீர்கள்’ என்பதுபோல மறித்துக் கைகாட்டின எனவும் தற்குறிப்பேற்ற அணியின் மூலமாகப் பின்னர்வரும் அவலத்தை முன் அறிவிக்கும் இளங்கோவின் நாடகத் திறனை நன்கு உணரலாம்.

இனிய இசைப்பாடல்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட ஒரு தனிப்பெரும் படைப்பு சிலம்பு. கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகிய காதைகளில் வரும் இசைப்பாடல்கள் ஆழ்வார், நாயன்மார்களின் பக்திப்பாடல்களுக்கு முன்னோடியாவன. இவற்றில் கவிதைச் சுவையும், இசைநயமும், ஆடல் சிறப்பும் நிறைந்துள்ளன.