3.4 காப்பிய மாந்தர்கள்

மணிமேகலைக் காப்பியத்தின் முதன்மைப் பாத்திரமும் முக்கியப் பாத்திரமும் மணிமேகலையே. அவளைச் சுற்றியே கதை நிகழ்கிறது. ஒரு சாதாரணக் கணிகை மகளாகத் தோன்றி, உதயகுமரன்பால் காதல் உள்ளம் உடையவளாய் இருந்து, உள்ளம் தெளிந்து அறத்தின் நாயகியாக அவள் மிளிர்வதையே காப்பியம் எடுத்துரைக்கிறது. அவள் தூய்மையான துறவு வாழ்க்கை மேற்கொள்ள எத்தனையோ துணைப் பாத்திரங்கள் துணை நிற்கின்றன. இந்தத் துணைப் பாத்திரங்கள் இல்லை என்றால் மணிமேகலை துறவு கனவாகவே முடிந்திருக்கும்.

தமிழ்க் காப்பியங்களில் பெண்ணைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு எழுந்த இரண்டாவது பெருங்காப்பியம் மணிமேகலை. இளங்கோவடிகள், குல மகளான கண்ணகியை இல்லற மகளாகக் காட்டிக் கடவுள் நிலைக்கு உயர்த்தினார். இதைவிட ஒருபடி உயர்ந்து நிற்கிற நிலையில் மணிமேகலையைச் சாத்தனார் படைத்திருக்கும் திறன், அக்காலத்தில் அவர் செய்த மாபெரும் புரட்சியே எனலாம். இழிவாகக் கருதப்பட்ட கணிகைக் குலத்தில் பிறந்த மாதவியை ஒரு கற்பரசியாக உயர்த்தியவர் இளங்கோ அடிகள். அவள் வயிற்றில் உதித்த மணிமேகலையை ஓர் அறச்செல்வியாக மேலும் உயர்த்திய பெருமைக்கு உரியவர் சாத்தனார்.

3.4.1 மணிமேகலை

காவலன் பேரூர் (மதுரை) கனைஎரி (தீ) ஊட்டிய, மாபெரும் பத்தினி (கண்ணகி) மகள் என்றே மணிமேகலை அறிமுகம் செய்கிறார் சாத்தனார். மாதவி தன் மகள் ஆனாலும் அவளைக் ‘கண்ணகி மகள்’ என்று கூறுவதில் பெருமிதம் கொள்வதாகச் சாத்தனார் பாடுகிறார். தொடக்கத்தே அவளைக் கலைமகளுக்குரிய பேரழகியாகவே காட்டுகிறார் ஆசிரியர். அவள் அழகு கண்டால் காமனும் தன் வில்லை எறிந்து விட்டு நடுங்குவான். ஆடவர்கள் கண்டால் அகன்று செல்லமாட்டார்கள். அசையாமல் நின்றிருந்தாலும் அவர்கள் பேடியரே. “அழகும் இளமையும் கொண்ட இவளைத் துறவறப்படுத்திய தாய் கொடியவள்” என்றனர் நகர மக்கள். மணிமேகலையைக் கண்ட புண்ணியராசன் என்ற ஆபுத்திரன் “பெண் இணையில்லாப் பெருவனப்பு (அழகு) உற்றாள்” என வியக்கிறான்.

இத்தகைய அழகும் இளமையும் மிக்க மணிமேகலை ஊழ்வினைப் பயனால் உதயகுமரன்மீது காதல் கொண்டவளாகவே காணப்படுகிறாள். அவன் தேரொலி கேட்ட அளவில், தன்நெஞ்சு நெகிழ்ந்து ‘என் செய்வேன்’ எனப் பதறுகிறாள். பளிக்கறைக்குள் இருந்து அவனைக் கண்டபோது, காதல் அரும்ப, அவன் தன்னைக் கற்பில்லாதவள், விலைமகள் என்று இகழ்ந்தபோதும் “இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது, புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்; இதுவோ அன்னாய் (தோழியை அழைக்கும் சொல்) காமத்து இயற்கை” என வியக்கிறாள். புத்த பீடிகையால் தன் பிறப்புணர்ந்த மணிமேகலை, “காதலன் பிறப்பும் காட்டாயோ” எனக் கேட்கிறாள். அவளை அடைய விரும்பும் உதயகுமரன், “நற்றவம் ஏற்றது ஏன்?” எனக் கேட்கிறான். அப்போது அவள் மனநிலை என்ன? சாத்தனார் குரலாக வருவதைக் காண்போம்.

என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன்
தன்னடி தொழுதலும் தகவுஎன

                 (உதயகுமரன் அம்பலம் புக்க காதை: 128-129)

(என்னமர் காதலன் இராகுலன் - முற்பிறப்பில் என்னை விரும்பிய கணவனாகிய இராகுலன்; தகவு - தகுதி)

வணங்குகிறாள். அது மட்டுமா?

அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்
இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும்
தொன்று காதலன் சொல்எதிர் மறுத்தல்
நன்றி அன்றுஎன நடுங்கினள் மயங்கி

                   (உதயகுமரன் அம்பலம் புக்க காதை: 130-133)

(அறைபோய் = உள்ளம் தன் நிலை இழந்து; இறைவளை - சிறிய வளையல்; தொன்று - முற்பிறப்பில்; நன்றி அன்று - நல்லது அன்று)

என்று துறவிக் கோலம் பூண்ட மணிமேகலையின் இளமைத் துடிப்பையும், காதல் மயக்கத்தையும் சாத்தனார் வெளிப்படுத்துகிறார்.

உதயகுமரன் இறந்த பின்னும் கூட, அவன்பால் உள்ள காதல் அவளை விட்டு நீங்கியபாடில்லை. அவன் (உதயகுமரன்) விஞ்சையன் (காய சண்டிகையின் கணவன் காஞ்சனன்) வாளால் வீழ்ந்துபட்டபோது, ‘வெவ்வினை உருப்ப விளிந்தனையோ (இறந்தனையோ) காதல’ எனப் புலம்பி அவனைத் தழுவ நினைக்கிறாள். அதைத் தடுக்கிறது கந்திற்பாவை. மணிமேகலைக்குத் துன்பம் செய்த உதயகுமரனின் தாய் அவளது ஆற்றலை உணர்ந்து, காலில் விழுந்து வணங்க, “தகுதி செய்தில்லை; காதலன் பயந்தோய்” என்கிறாள். இப்படிக் காதல் வயப்பட்ட மணிமேகலைக்குத் தீவ திலகை, மணிமேகலா தெய்வம், அறவண அடிகள், கந்திற்பாவை, கண்ணகிக் கடவுள், மாசாத்துவான் - இவர்தம் பெருங்காவலும் வழிப்படுத்தலுமே, தூய்மையான அறவாழ்க்கையை மேற்கொள்ள அடிகோலின எனலாம்.

3.4.2 பிற மானுடப் பாத்திரங்கள்

மணிமேகலை வாழ்வில் நெருங்கிய உறவுத் தொடர்புடைய பாத்திரங்களாக மாதவி, சுதமதி, மாசாத்துவான் அமைவர். இவர்கள் மணிமேகலை துறவு வாழ்வுக்கு உறவு நிலையில் நின்று வழி காட்டியவர்கள். உதயகுமரன், அவன் தாய், தந்தை மாவண்கிள்ளி ஆகியோர் எதிர்நிலையில் நின்று அவள் துறவைப் பலப்படுத்தியவர்கள். இவ்வகையில் சித்திராபதியின் படைப்பும் குறிப்பிடத்தக்கது. இந்நால்வருமே மணிமேகலை வாழ்வில் குறுக்கிட்டுத் தோல்வி கண்டவர்கள். மாவண்கிள்ளி மணிமேகலையைச் சிறை செய்து துன்புறுத்தியவன். அவன் தேவியோ எந்த ஒரு பெண்ணும் செய்யத் துணியாத ஒரு செயலை மணிமேகலையைக் கற்பழிக்க ஆடவரை ஏவி அதில் தோல்வி அடைகிறாள். உதயகுமரன் மணிமேகலையை அடைய முயல்கிறான். மணிமேகலைக்கு அவன்பால் காதல் இருந்தும் அது தோல்வியில் - அவனது இறப்பில் முடிகிறது. இவ்வாறு, இவர்தம் முயற்சிகள், மணிமேகலையின் மன வலிமையாலும் தெய்வ ஆற்றலாலும் முறியடிக்கப்பட்டு, அவள் ஆற்றலை வெளிப்படுத்த மறைமுகமான துணையாக அமைகின்றன.

மாதவி தன் மகள் மணிமேகலையைத் துறவி ஆக்குகிறாள். தானும் துறவி ஆதலால் பற்றுக்களில் இருந்து ஒதுங்கி விடுகிறாள். ஆனால், செவிலித்தாயாக உடனிருந்து உதயகுமரனிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறாள் சுதமதி. அதோடு உதயகுமரனுக்கும் அறிவுரை கூறி, “தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி” என வேண்டுகிறாள். தான் மாருதவேகன் என்பவனால் கற்பிழந்த நிலை மணிமேகலைக்கு வராவண்ணம் தடுப்பவளும் இவளே.

இவர்கள் நீங்கலாக உறவுத் தொடர்பு இல்லாத ஆபுத்திரன், அறவண அடிகள், காஞ்சனன், காய சண்டிகை, ஆதிரை ஆகியோர் பாத்திரங்களும் மணிமேகலைக் காப்பியத்தில் முக்கியப் பங்கு பெறுபவைதாம். ஆபுத்திரன் கதை காப்பியத்தில் நீதி உணர்த்தவும், வினைப் பயன் உணர்த்தவும் பல காதைகளில் எடுத்துரைக்கப்படுகிறது. ஆயினும், அவன் வைத்திருந்த அமுதசுரபி மணிமேகலையிடம் வந்து சேர்கிற தொடர்பே முக்கியத்துவம் பெறுகிறது. அதுவே மணிமேகலை அறச்செல்வியாக உருமாற வழி கோலுகிறது.

அறவண அடிகள் மாதவி, சுதமதி, மணிமேகலை, உதயகுமரன் ஆகியோரின் முற்பிறப்புக் காலத்தே வாழ்ந்த முதுபெரும் துறவியாக அறிமுகமாகிறார். இவரே மாதவியை பௌத்த நெறிப்படுத்தியவர். இவர்களின் பழம்பிறப்பினை அறிவித்தவரும் இவரே. இவரே மணிமேகலை, பிற சமயக் கணக்கர் திறம் அறிதற்கும், பௌத்த நெறியில் தவம் மேற்கொள்ளுவதற்கும் துணையாக நின்றவர்.

3.4.3 தெய்வப் பாத்திரங்கள்

மணிமேகலையின் துறவு வாழ்க்கையைச் செந்நெறிப்படுத்திய தெய்வப் பாத்திரங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று மணிமேகலா தெய்வம். மணிமேகலை பெயர் சூட்டுதற்கே இத்தெய்வ வாக்கே காரணம். இத்தெய்வம் மணிபல்லவத்திற்கு மணிமேகலையை எடுத்துச் சென்றது. அமுத சுரபி பெறவும், பழம்பிறப்பு அறியவும் அவளுக்கு உதவியது. மந்திரம் கூறி மணிமேகலையைப் பல்வேறு துன்பங்களிலிருந்தும் காப்பாற்றியது இத்தெய்வமே. இத்தெய்வம் இல்லை என்றால் மணிமேகலை இல்லை; காப்பியமும் இல்லை என்று கூறும் அளவிற்கு, இதன் பாத்திரப் படைப்பு, காப்பியத்தில் பெருஞ்சிறப்புப் பெறுகின்றது. இதற்குத் துணையாகவே புத்த பீடிகை, கந்திற்பாவை முதலான தெய்வப் படிமங்களும், தீவ திலகை போன்ற தெய்வப் பாத்திரங்களும் அமைந்து, மணிமேகலையின் துறவு வாழ்வை மிளிரச் செய்கின்றன.