5.6 கற்பனை வளம்
கிடைத்துள்ள வளையாபதிப் பாடல்கள் சமய, தத்துவ,
அறச் சிந்தனைகள் தொடர்பானவை என்றாலும், அவற்றில் கற்பனை நயம்
மிக்க பாடல்களும் உண்டு. இயற்கை வளம் பற்றிப் பேசும்
கவிஞரின் கற்பனைக்கு இதோ ஒரு சான்று.
செந்நெல்அம் கரும்பினோடு இகலும் தீஞ்சுவைக்
கன்னல்அம் கரும்பு கமுகைக் காய்ந்து எழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களால் முகம் புதைக்குமே
(இகலும் = போட்டியிட்டு வளரும்;
கன்னல்அம் = சுவை மிக்க; கமுகு = பாக்கு மரம்;
காய்ந்து எழும் = போட்டியிட்டு வளரும்;
பூகம் = பாக்கு மரம்)
பொருள்:
நெற்பயிர் கரும்புடன் போட்டி போட்டுக் கொண்டு
அதனினும் உயரமாக வளரும். பாக்கு மரத்துடன்
போட்டியிட்டுக் கரும்பு உயரமாக வளரும். இதனைக் காண
விரும்பாத பாக்கு மரம் மேகத்திடை தன் முகத்தை மறைத்துக்
கொள்ளும்.
● இடை மடக்குப் பாடல்
உவமை நயம் மிக்க பல பாடல்கள் இடம் பெறுவதுடன்
சொற்பின்வரு நிலையாகவும், இடை மடக்காக வரும்
பாடல்களும் இடம் பெறுவது வளையாபதியின் இலக்கிய
நயத்திற்குச் சான்றாகின்றன. இடை மடக்குப் பாடல் ஒன்று
இதோ:
நீல நிறத்தவனவாய் நெய்கனிந்து போது அவிழ்ந்து
கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே
கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்
காலக் கனல்எரியில் வேம்வாழி நெஞ்சே
காலக் கனல் எரியில் வேவன கண்டாலும்
சால மயங்குவதுஎன்? வாழி நெஞ்சே
பொருள்:
இது ஒரு அகப்பாடல். நீல நிறமுடைய, எண்ணெய்
தேய்த்துப் பூச்சூடிக் கோலம் செய்யப்பட்ட கூந்தலானது,
காலமாகிய தீயில் வெந்து அழியும். அவ்வாறு வெந்து அழிவது
கண்டும் நெஞ்சே! நீ மயங்குவது ஏன்? என்று காதல் வயப்பட
தலைவி வருந்துவதாக அமையும் இப்பாடல், இடைமடக்கு
அணி நயம் பெற்றுச் சிறப்பதைக் காணலாம். இங்கு
இரண்டாவது அடி மூன்றாவது அடியாகவும், நான்காவது அடி
ஐந்தாவது அடியாகவும் மடக்கி வருவதைக் காணலாம்.
● சொற் பின்வரு நிலை
இது போன்றே சொற்பின்வரு நிலையாக அமையும் பாடல்
ஒன்றும் வளையாபதியின் இலக்கியச் சிறப்பினை மெய்ப்பிக்கும்.
பாடல் இதோ:
நாடொறும் நாடொறும் நந்திய காதலை
நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்
நாடொறும் நாடொறும் நந்திஉயர்வு எய்தி
நாடொறுந் தேயும் நகைமதி ஒப்ப
(நாடொறும் = நாள்தோறும்; நந்திய = வளர்ந்த;
நைய = துய்ந்துத் தீர்க்க)
இங்குத் தினம் தினம் வளர்ந்து கொண்டே இருக்கும்
காதலைத் துய்த்துத் தீர்ப்போம் என்று கூறுவது இயலாத ஒன்று.
அது துய்க்கத் துய்க்க (அனுபவிக்க அனுபவிக்க) வளர்ந்து
கொண்டே வரும். இது தேய்ந்து வளரும் மதி போன்றது.
எனவே காதல் உணர்வைத் துய்த்துத் தீர்ப்போம் (அழிப்போம்)
என்பது இயலாத ஒன்று என்கிறார் ஆசிரியர். இங்கு நாடொறும்
என்ற சொல் தொடர்ந்து நான்கு அடிகளிலும் வருவது
குறிப்பிடத்தக்கது. எனவே வளையாபதி காவியம், தக்கயாகப்
பரணி உரையாசிரியர் குறிப்பிட்டது போலக் ‘கவியழகு மிக்க
ஒரு காவியமே’ என்பது தெரிகிறது.
|