6.1 சூளாமணி - பெயர்க் காரணம்

சூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. சூளாமணி என்பதற்கு நச்சினார்க்கினியர் முடியின் மணி என்றும், நாயக மணி என்றும் பொருள் கூறுகிறார். இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர். செங்கண் நெடியான் சரிதம் என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார். இந்நூலில் இரத்தின பல்லவ நகரம் “சூளாமணியின் ஒளிர்வது”, “அருஞ்சயன் அவனை நங்கள் மலைக்கோர் சூளாமணி எனக் கருது”, திவிட்டன் (சூளாமணிக் காப்பியத் தலைவன்) குன்றேந்தி நின்ற கோலம் “முடிமேல் சூளாமணி முளைத்த சோதி” போன்றது; முத்தி நிலை அடைந்த திவிட்டன் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என நான்கு இடங்களில் சூளாமணி என்ற சொல் இடம் பெறுகின்றது. இவை கொண்டு இந்நூலுக்குச் சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர். மேலும் வடமொழி மூலமான மகாபுராணம் சைனருக்குச் சூளாமணி போன்றது. எனவே அந்நூலின் ஒரு பகுதியான இந்நூலுக்கும் சூளாமணி என்ற பெயர் வழங்கலாயிற்று என்றும் கூறுவர். இந்நூலாசிரியர் அவனி சூளாமணி என்ற பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர். எனவே அவன் பெயரால் இந்நூல் வழங்கலாயிற்று என்ற கருத்தும் உண்டு.

6.1.1 நூலாசிரியர் வரலாறு

நூலாசிரியர் தோலாமொழித் தேவர். இது இவரது இயற்பெயர் என்று தோன்றவில்லை. இவரது இயற்பெயர் ஸ்ரீவர்த்த தேவர் எனக் கருதுகிறார் து.அ. கோபிநாதராவ். கன்னட நாட்டிலுள்ள சிரவண பெல்கொளாவில் உள்ள வடமொழிக் கல்வெட்டு, ‘சூடாமணி என்பது காவியங்களுக்கெல்லாம் சூடாமணி போன்றது; இதைக் கீர்த்திபெறத் தக்க புண்ணியம் செய்த ஸ்ரீவர்த்த தேவர் இயற்றினார்’ எனக் குறிப்பிடுகிறது. இங்கு ஸ்ரீவர்த்த தேவர் என்பார் ‘ஸ்ரீவர்த்தமான தேவரே’ என்பர். இவர் சொல்லில் தோற்காதவர்; வெல்லும் சொல் வல்லார் என்பதால் தோலாமொழித் தேவர் என அழைக்கப் பெற்றார் என்று கருதுகின்றனர். இவர் தரும தீர்த்தங்கரரிடத்து ஈடுபாடு கொண்டவர். கார்வெட்டி அரையன் என்ற தலைவன் ஆதரவுடன் வடமொழி மகாபுராணத்தில் உள்ள ‘சிரேயாம்ச சுவாமி சரிதத்தின்’ ஒரு பகுதியான பிரசாபதி அரசன் வரலாற்றைப் பாடுவதே சூளாமணிக் காப்பியமாகும்.

6.1.2 காப்பியக் கட்டமைப்பு

சூளாமணிக் காப்பியம் பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டது. பாயிரப் பகுதி 6 பாடல்களைக் கொண்டது. முதல் பாடல் அருகன் துதி; அடுத்த பாடல் ‘செங்கண் நெடியான் சரிதம் செப்பலுற்றேன்’ எனக் காப்பியம் யாரைப் பற்றியது என்பதை எடுத்துரைக்கிறது. நூல் ‘நெடுஞ்சேந்தன்’ அவையில் அரங்கேற்றப் பெற்றதாகப் பாயிரம் குறிப்பிடுகிறது. நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், குமார காலச் சருக்கம், இரத நூபுரச் சருக்கம், மந்திர சாலைச் சருக்கம், தூதுவிடு சருக்கம், சீயவதைச் சருக்கம், கல்யாணச் சருக்கம், அரசியற் சருக்கம், சுயம்வரச் சருக்கம், துறவுச் சருக்கம், முத்திச் சருக்கம் எனப் பன்னிரு சருக்கங்களைக் கொண்டது சூளாமணிக் காப்பியம்.

6.1.3 காப்பியக் கதை

பரத கண்டத்தில் சுரமை நாட்டின் தலைநகர் போதன மாநகர். அதன் அரசன் பயாபதி. அவனுக்கு மிகாபதி, சசி என இரு மனைவியர். அவர்களுக்கு வெண்ணிறமான விசயன், கருநிறமான திவிட்டன்  ஆகிய இருவரும் பிறந்தனர். இவர்கள் பலராமன், கண்ணன் அவதாரமாகக் கருதப்பட்டனர். திவிட்டன் வித்தியாதர நாட்டு இளவரசியை மணப்பான் என்று நிமித்திகன் (சோதிடன்) கூறுகிறான். அதே நேரத்தில், வித்தியாதரர் (வானவர்) உலகிலுள்ள இரத நூபுரம் என்ற நகரில் ஆட்சி புரியும் சுவலனசடி தன் மகளுக்குச் சுயம்வரம் நடத்த எண்ணுகிறான். சுவலனசடியின் மகள் சுயம்பிரபை. அவளைப் பூலோகத்தில் உள்ள திவிட்டனே மணப்பான் என்று நிமித்திகன் கூறுகிறான். தன் சோதிடக் குறிப்பிற்குச் சான்றாக, திவிட்டன் ஒரு மாதத்திற்குள் ஒரு சிங்கத்தை அடக்குவான் என்கிறான். எனவே சுவலனசடி, மருசி என்பவனைப் பயாபதியிடம் மணத் தூதாக அனுப்புகிறான். பயாபதியின் ஒப்புதலை அறிந்த சுவலனசடி, திவிட்டன் சிங்கத்தை அடக்குகிறானா என்பதை அறிய விரும்புகிறான். சுவலனசடி திவிட்டனுக்குப் பெண் கொடுக்க இருப்பதை அறிந்த மற்றொரு வித்தியாதர அரசன் அச்சுவ கண்டன் பயாபதியைத் தனக்குத் திறை செலுத்த ஆணையிட்டுத் தூதனுப்புகிறான். அத்தூதுவனைத் திவிட்டன் விரட்டியடித்து விடுகிறான். விரட்டியடிக்கப்பட்ட தூதுவன், அச்சுவ கண்டனிடத்தே செல்வதற்கு அஞ்சி, அவனுடைய அமைச்சனாகிய அரிமஞ்சு என்பவனிடம் சென்று திவிட்டன் செயலைக் கூறினான். அதுகேட்ட அவ்வமைச்சன் மாயவித்தையில் வல்ல அரிகேது என்பவனை மாயச் சிங்க உருவில் பயாபதி நாட்டுக்கு அனுப்பி அச்சுறுத்துகிறான். வீரன் திவிட்டன் விட்டுவிடுவானா? அம்மாயச் சிங்கத்தைக் கொல்லும் பொருட்டுத் துரத்திச் செல்கிறான். மாயச்சிங்கமாகிய அரிகேதுவோ உயிருக்குப் பயந்து, உண்மைச் சிங்கம் உறங்கும் ஒரு குகைக்குள் புகுந்து மறைந்து விடுகிறான். உண்மையான சிங்கம் குகையை விட்டு வெளிவர, திவிட்டன் அதனோடு எதிர்த்துப் போரிட்டு, அதன் வாயைப் பிளந்து கொன்று விடுகிறான்.

நிமித்திகன் கூற்று மெய்யாகி விட்டதல்லவா? சுவலனசடிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் மகளைத் திவிட்டனுக்கு மணம் செய்து மகிழ்கிறான். பழியுணர்ச்சியால் குமுறுகிறான் அச்சுவ கண்டன். தன் பெரும்படையுடன் தாக்குகிறான். ஆனால் திவிட்டன் கண்ணனுடைய அவதாரமல்லவா? எனவே அவனிடம் திருமாலின் ஆயுதங்களான பாஞ்ச சன்னியமும் சக்கரமும் வந்து தாமே பொருந்தின. கருடன் வந்து அவன் தோளிலே தங்கினான். பின் கேட்கவா வேண்டும்! போரில் திவிட்டனுக்கே வெற்றி கிடைக்கிறது. வெற்றி வாகை சூடிய திவிட்டனை வாசுதேவன் என்றும், விசயனைப் பலராமன் என்றும் வாழ்த்தி முடி சூட்டினர். கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கியது போலத் திவிட்டனும் கோடிமாசிலை என்ற மலையைத் தூக்கித் தன் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தினான். உரிய காலத்தில் திவிட்டன் - சுயம்பிரபை தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர்; சுயம்பிரபை தமையன் அருக்க கீர்த்திக்கும் ஒருமகனும் மகளும் பிறக்கின்றனர் இவர்கள் வளர்ந்து திருமண வயதுக்கு வர, முறைப்படி அவர்களுக்கு சுயம்வரம் நடத்தித் திருமணம் நடத்தப்படுகிறது. பயாபதி தன் தேவியருடன் துறவு பூண்டு தவம் மேற்கொண்டு முக்தி அடைய முயற்சி மேற்கொள்கிறான். திவிட்டன், விசயன் நாட்டை நன்முறையில் ஆளுகின்றனர். இத்துடன் இக்காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.

6.1.4 காப்பியப் பண்பு

சூளாமணி காப்பியப் பண்பில் சிறப்பானது; விரிவானது; நுட்பமானது. கவிதைச் சிறப்புடன் பல்வேறு பண்புகளுடனும் சிறந்து விளங்குவது. காப்பியக் கதை பயாபதி மன்னன் ஆட்சியோடு தொடங்கி, அவன் முக்தி மகளை மணந்து, உயர்ந்து, உலகின் முடிக்கோர் சூளாமணியானான் என்று முடிகிறது. பயாபதி வரலாற்றை முழுமையாக பெருங்காப்பிய அமைப்பில் பேசுகிறது. இடையில் காவியம் முழுக்கத் திவிட்டனின் ஆற்றல், வீரம், காதல் எனத் திவிட்டனே காப்பியத் தலைவனாக உருவெடுக்கிறான். மூன்று தலைமுறையினர்தம் வாழ்வைக் காப்பியம் எடுத்துரைக்கிறது. ஐந்திணை நிலவளம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, அறம், பொருள், இன்பம், வீடுபேறு; மந்திராலோசனை, தூது, போர், வெற்றி, வேனில் விழா, சுயம்வரம், தெய்வப் போர் எனக் காப்பியம் முழுக்கத் தமிழ் மணம், தமிழர் மரபு ஆதிக்கம் செலுத்துகிறது. சமண சமயக் கொள்கையைக் கற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது இதன் கோட்பாடாக அமைந்தாலும், பிற சமயக் காழ்ப்பு மற்றும் பழிப்பை ஓரிடத்தில் கூடக் காண முடியவில்லை.

சூளாமணி, கவிதைச் சுவையில் சீவக சிந்தாமணியைக் காட்டிலும்  சிறந்தது என்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. அருகனை வணங்கும் துதிப்பாடல்கள் சுவைமிக்கன. இவற்றில் பல ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்த கொச்சக ஒருபோகுப் பாடல்கள்.

ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
சோதியஞ் செல்வநின் திருவடி வணங்கினம்

காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வணங்கிநின் மலரடி வணங்கினம்

ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
சீரருள் மொழியைநின் திருவடி தொழுதனம்

இங்குப் பிரமன், சிவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளை அருகனாகவே கண்டு ஆசிரியர் வழிபடுகிறார்.

6.1.5 தத்துவச் சிந்தனை

சமயம், சமூகம், அரசியல் சார்பான உயர்ந்த கருத்துகளை வெளியிடுவதில் இக்காப்பியம் சிறந்து ஓங்குகிறது. மனித வாழ்க்கை என்பது என்ன? அது துன்பமா? இன்பமா? இரண்டும் கலந்ததே. அது ஒரு திரிசங்கு சொர்க்கம் போன்றது என்பதை ஓர் அருமையான பாடலால் விளக்கி விடுகிறார் ஆசிரியர். பாடல் இதோ:

யானை துரப்ப அரவுஉறை ஆழ்குழி
நால்நவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ

(துரப்ப = விரட்ட; நால்நவிர் = தொங்கும் கொடி; பற்றுபு = பற்றி; அழிதுளி = தேனடையிலிருந்து சொட்டும் தேன்)

பாடல் பொருள்

மதயானை ஒருவனை விரட்டுகிறது; அதினின்று தப்பிக்க ஓடும்போது ஆழமான ஒரு குழியில் விழுகிறான். உள்ளே விழுந்துவிடாமல் இருக்க, அங்குத் தொங்கும் மெல்லிய கொடியைப் பற்றிக் கொண்டு தொங்குகிறான்; கீழே ஒரு பாம்பு படமெடுத்து ஆடுகிறது; கொடியை விட்டுக் கீழே விழுந்தால் பாம்பு கடித்து இறந்துவிடுவான்; மேலே சென்றால் யானை மிதித்துக் கொன்றுவிடும்; இவ்வாறு உயிருக்குப் போராடும் நிலையில் தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுகிறது. அதனை நக்கிச் சுவைக்கிறான். மனிதர் துய்க்கும் இன்பம் இத்தகையதுதான் புரிந்து கொள்.

வாழ்க்கை துன்பங்களே நிறைந்தது. இதில் இடையிடையே கிடைக்கும் இன்பம் சிறிய அளவுடையதுதான். ஆயினும் அதைத் துய்க்க விரும்புவதே மனித இயற்கை. இந்த அரிய உண்மையை எவ்வளவு எளிமையாக, சுவையாகக் காட்டி விட்டார் தோலாமொழித் தேவர்.

இது மட்டுமா? இன்னும் மேலே மேலே சென்று நரககதி, விலங்குகதி, மனிதகதி, தேவகதி என மானுட உடல் நான்கு வகையான பிறப்புகளை எடுத்துத் துன்புறுவதைச் சமண சமயப் பின்னணியில் மிக அற்புதமாக எடுத்தியம்புகின்றார். மனைவியர்கள், தேன் உண்ணாமல், கணவனுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் தேவர் உலகில் பிறப்பர். தானம், தவம், சீலம், ஒழுக்கம் ஆகிய நற்குணங்களே முக்திக்கு வழிவகுக்கும். பணமோ, பொருளோ இல்லை என்றால் இவ்வுலகியல் இன்பம் இல்லை. இரக்கச் சிந்தனை இல்லாதான் வீடுபேறு அடைய முடியாது. நல்ல நீதி நூல்களைக் கல்லாதவனிடத்துத் திருமகள் வந்து தங்க மாட்டாள் என்றிவ்வாறு பல நீதிக் கருத்துகளை அள்ளி வழங்கியுள்ளது சூளாமணிக் காப்பியம்.