3.3. காப்பிய அமைப்பும் கதையும்

கம்பராமாயணம் ஆறு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காண்டமும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அவை :

ஒவ்வொரு காண்டத்திலும் அமைந்துள்ள படலங்களின் எண்ணிக்கை வருமாறு :

1).

பால காண்டம் - 22 படலங்கள்

2).

அயோத்தியா காண்டம் - 12 படலங்கள்

3).

ஆரணிய காண்டம் - 11 படலங்கள்

4).

கிட்கிந்தா காண்டம் - 17 படலங்கள்

5).

சுந்தர காண்டம் - 15 படலங்கள்

6).

யுத்த காண்டம் - 39 படலங்கள்

மொத்தம், காண்டங்கள் - 6,    படலங்கள் - 116.

இனிக் கம்பராமாயணத்தில் காண்டங்கள் தோறும் அமைந்துள்ள கதைப் பாங்கினை அறியலாம்.

3.3.1 பால காண்டம் (இராமனின் இளமைக்கால நிகழ்ச்சிகள்)

இராவணனை வதம் செய்வதற்காக மனிதப் பிறப்பு எடுக்கப் பரம்பொருள் எண்ணம் கொண்டது. அரசை ஆள்வதற்கு மகன் வேண்டும் என்று யாகம் செய்தான் தயரதன். பரம்பொருள் தயரதனுக்கு மகனாகப் பிறக்கிறது. இராமன் அவதரிக்கிறான். தம்பியர் பிறக்கின்றனர். இதற்கு முன்பாக அமைந்துள்ள நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியல் படலம் ஆகியவற்றுள் ஓர் இலட்சியச் சமுதாயத்தைக் கம்பர் படைத்தளிக்கிறார்.

இராமனும் விசுவாமித்திரரும்

இராமனும் தம்பியரும் கல்வி, கேள்வி, வில்வித்தைகளைக் கற்றுச் சிறந்து விளங்கினர். விசுவாமித்திர முனிவர் தயரதனிடம் வந்து யாகத்தைக் காவல் செய்ய இராமனை அனுப்புமாறு கேட்கிறார். பலவாறு வருந்தும் தயரதன் இறுதியில் இராமனை அனுப்புகிறான். தம்பி இலக்குவனும் உடன் செல்கிறான். இதன் பின்னர் தாடகை என்னும் அரக்கியைக் கொல்கிறான் இராமன். தாடகை வதை, இராவணன் வதைக்கு முன் அறிகுறியாகக் காட்டப்பெற்றுள்ளது. பின்னர் விசுவாமித்திரர் யாகம் தொடங்குகிறார். பல்வேறு அரக்கர்களின் தாக்குதல்களில் இருந்து இராமனும் இலக்குவனும் யாகத்தைக் காக்கின்றனர்.

இராமனின் திருமணம்

பின்னர் முனிவர் அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு மிதிலை நகருக்குச் செல்கிறார். வழியில், தன் கணவரின் சாபத்தால் கல்லாகிக் கிடந்த அகலிகை மீது இராமனின் பாதத் தூசி பட்டதும் அவள் மீண்டும் பெண் உருவம் அடைகிறாள். அவளைக் கணவரிடம் சேர்க்கிறான். மிதிலையில் இராமன் சீதையைக் காணுகிறான். இருவரும் காதல் கொள்கின்றனர். இராமன் வில்லை வளைத்து ஒடித்து வெற்றி பெற்றுச் சீதையை மணம் முடிக்கிறான்.

வில் வளைத்தல்

இராமன் - சீதை மணம் தமிழரின் அக மரபுப்படி காதலில் தொடங்கித் திருமணத்தில் முடிகின்றது. பின்னர் அனைவரும் அயோத்திக்குத் திரும்புகின்றனர்.

3.3.2 அயோத்தியா காண்டம் (இராமன் வனவாசமும் பரதன் ஆட்சியும்)

இந்தக் காண்டத்தில், அயோத்தியில் நடந்த நிகழ்ச்சிகள் கூறப்பெற்றுள்ளன. இராமனுக்கு முடிசூடுவது பற்றித் தயரதன் அவையைக் கூட்டி ஆராய்கிறான். இதுவே அயோத்தியா காண்டத்தின் தொடக்கம் ஆகிறது.

கூனியும் கைகேயியும்

இராமன் முடிசூடுவதற்கு இடையூறாக மந்தரை என்னும் சூழ்ச்சிக்காரக் கூனி தோன்றுகிறாள். மந்தரையின் சூழ்ச்சியால் கைகேயியின் (இராமனின் சிற்றன்னை) மனம் மாறுகிறது. கைகேயி தயரதனிடம் சென்று முன்பு அவனிடம் தான் பெற்ற இரு வரங்களைத் தரும்படி வேண்டுகிறாள். ஒரு வரத்தின் மூலம் இராமன் வனவாசம் செல்லவும், மற்றொரு வரத்தின் மூலம் தன் மகன் பரதன் நாடாளவும் உரிமை பெறுகிறாள். புத்திர சோகத்தால் தயரதன் புலம்புகிறான்.

இராமனும் பரதனும்


இராமனும் பரதனும்

இராமன், இலக்குவன், சீதை ஆகியோர் கானகம் செல்கின்றனர். தயரதன் சோகத்தால் மரணமடைகிறான். பரதன் அயோத்தி திரும்புகிறான். நடந்தவற்றை அறிந்து வேதனை அடைகிறான். தயரதனின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. பின்னர்ப் பரதனும் மற்றவரும் இராமனைத் தேடிக் கானகம் செல்கின்றனர். இராமனைப் பரதன் சந்திக்கிறான். அரசாட்சியை ஏற்குமாறு வேண்டுகிறான். இராமன் மறுத்து விடுகிறான். அனைவரும் தயரதன் மரணத்தைக் கேட்டுத் துயரம் அடைகின்றனர். இறுதியில் இராமன் தன் பாதுகைகளைத் (செருப்பு) தருகிறான். அதனைப் பெற்றுக் கொண்ட பரதன் நாடு திரும்பி நந்திக்கிராமத்தில் பாதுகைகளை அரியணையில் வைத்து அங்கிருந்து ஆட்சி செய்கிறான்.

இக்காண்டத்தின் கதைப்பகுதி இத்துடன் நிறைவடைகிறது. இக்காண்டத்தில் குகன் என்னும் படகோட்டியை இராமன் சகோதரனாக ஏற்றுக் கொள்வது சிறந்த பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

3.3.3 ஆரணிய காண்டம் (சீதையின் பிரிவும் இராமனின் துயரும்)

ஆரணிய காண்டம் விராதன் வதைப் படலத்துடன் தொடங்குகிறது. அரக்கர்களின் பாவச் செயல்களை இராமன் நேருக்கு நேர் அறியும் வாய்ப்பை முழுமையாய்த் தருபவன் விராதனே ஆவான். இதன் பின்னர்ச் சரபங்கன் பிறப்பு நீங்கு படலத்தில் இராமனின் அவதார இரகசியம் வலியுறுத்தப்படுகிறது. தண்டக முனிவர்களுக்கு இராமன் அடைக்கலம் தருகிறான். இங்கு இராமன் பத்தாண்டுகள் வாழ்கிறான். அகத்தியர் தெய்வீகப் படைக்கருவிகளை இராமனுக்கு வழங்குகிறார். பின்பு பஞ்சவடி என்னும் காட்டுப் பகுதிக்குச் செல்லும் வழியில் சடாயு என்னும் கழுகு அரசனின் நட்பு ஏற்படுகிறது. இவ்வாறாகப் பதின்மூன்று ஆண்டுகள் கழிந்ததைக் கம்பர் விரைவாகக் கூறி விடுகிறார்.

சூர்ப்பணகை வருகை

அடுத்து இராவணனின் தங்கை சூர்ப்பணகை வருகிறாள். இராமன் மீது காதல் கொள்கிறாள். அவள் விருப்பம் நிறைவேறவில்லை. இலக்குவன் அவள் மூக்கை அறுத்து விடுகிறான். இதனால் கோபம் கொண்ட சூர்ப்பணகை சீதையின் அழகை இராவணனிடம் எடுத்துக் கூறி ஆசையை வளர்க்கிறாள்.

சீதையைக் கவர்தல்

இராவணன் தன் மாமனை மாயமான் உருவில் ஏவி இராமனையும் இலக்குவனையும் சீதையிடமிருந்து பிரிக்கிறான். சீதை, தனித்து இருக்கும் வேளையில் அவளைச் சிறையெடுக்கிறான் (கவர்ந்து செல்கிறான்). இராவணனின் இச்செயல் காப்பியத்திற்குத் திருப்பு முனையாக மாறுகிறது. சீதையைக் கவர்ந்து செல்லும் இராவணனுடன் சடாயு சண்டையிட்டு வீழ்கிறான்


மாயப் பொன்மான்

பின்னர் இராம இலக்குவர்களைக் கண்டு, சீதையை இராவணன் கவர்ந்து சென்றதைக் கூறி உயிர் விடுகிறான். யாருமற்ற சூழலில் இராமன் சீதை நினைவில் ஆழ்ந்து வருந்துகிறான். இத்துடன் ஆரணி காண்டம் நிறைவு பெறுகிறது.

3.3.4 கிட்கிந்தா காண்டம் (இராமனும் வானரப் படைகளும்)

இராமனுக்கும் வானரத் தலைவன் சுக்கிரீவனுக்கும் இடையே ஏற்படும் நட்பைக் கூறுவது கிட்கிந்தா காண்டம். அனுமன் என்னும் தொண்டன் இராமனுக்கு வாய்த்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.

இராமனும் அனுமனும்

அனுமப் படலத்தில் அனுமன் இராமனைச் சந்திக்கிறான். சுக்கிரீவனுடன் நட்புக் கொள்ளச் செய்கிறான். சுக்கிரீவனின் மனைவியை அவன் அண்ணன் வாலி கவர்ந்து கொள்கிறான். இதனால் வாலியைக் கொல்வதற்கு இராமன் உதவியைச் சுக்கிரீவன் வேண்டுகிறான். அதற்குக் கைம்மாறாகச் சீதையைத் தேடுவதற்கும் இலங்கைப் படையெடுப்பிற்கும் வானரப் படை உதவும் என்று கூறுகிறான். இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு முடி சூட்டுகிறான்.

அனுமனின் இலங்கைப் பயணம்

பின்னர்க் கார்காலம் வருகிறது. கார்காலம் கழிந்ததும் அங்கதன் தலைமையில், அனுமனும் பிறரும் சீதையைத் தேடித் தென்திசை நோக்கிச் செல்கின்றனர். வழியில் சடாயுவின் அண்ணன் சம்பாதியைப் பார்க்கின்றனர். சம்பாதி சீதை இலங்கையில் சிறை இருப்பதைக் கூறுகிறான். வானரப் படை இராம நாமம் கூறச் சம்பாதிக்கு முன்பு இழந்த இறக்கை முளைக்கிறது. இலங்கை செல்லக் கடலைக் கடப்பது யார் என்ற பிரச்சனை ஏற்படுகிறது. சாம்பவான் அனுமனின் பேராற்றலைக் கூறுகிறான். அனுமன் இலங்கை செல்ல உடன்பட்டு மயேந்திர மலை உச்சியை அடைந்து கடலைக் கடக்க விஸ்வரூபம் எடுக்கிறான். இத்துடன் கிட்கிந்தா காண்டம் நிறைவடைகிறது.

3.3.5 சுந்தர காண்டம் (அனுமனின் தூது)

சுந்தர காண்டம் என்ற பெயர் குறித்து அறிஞர்கள் பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளனர். இதற்கு முன்பு உள்ள காண்டங்களில் பால காண்டம் இராமனது இளைய பருவத்தால் பெயர் பெற்றது. ஏனையன இடத்தால் பெயர் பெற்றன. அதே போல் சுந்தர காண்டத்திற்கும் இடத்தால் பெயர் இட்டிருக்க வேண்டும். இட்டிருந்தால் இலங்கைக் காண்டம் என்ற பெயர் இருந்திருக்கும்.

சுந்தர காண்டம் என்ற பெயருக்கான காரணங்கள் வருமாறு:

1) ஏனைய காண்டங்களின் கதையை விடச் சுந்தர காண்டத்தின் கதை சுவை அழகு மிக்கதாய் உள்ளது.

2) அனுமனின் பெருமையை விளக்கும் அழகிய பாடல்களைக் கொண்டது.

3) அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு. அனுமன் பற்றிய நிகழ்ச்சிகளையே பெரிதும் விவரிப்பதால் இக்காண்டம் சுந்தர காண்டம் என அவன் பெயராலேயே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

4) இராமன், சீதை இருவருடைய அழகு இக்காண்டத்தில் இனிதாகக் கூறப்பட்டுள்ளது.

5) இராமன் சீதை இருவரின் பிரிவு நிலையில் நுகரப் பெறும் துன்பச் சுவை, இக்காண்டத்தில் கவிதை அழகுடன் பாடப்பட்டுள்ளது. இவ்வாறாகச் சுந்தர காண்டத்தின் பெயர்க் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் அனுமன்

சீதையைத் தேடி அனுமன் இலங்கை நகரத்தை வந்து அடைகிறான். பல்வேறு இடங்களில் சீதையைத் தேடுகிறான். அசோக வனத்தில் துயரமே உருவாகச் சீதை காட்சி அளிக்கிறாள். அங்கு இராவணன் வருவதையும் அவனைக் கண்டு சீதை உடல் நலிவதையும் அனுமன் இருகண்களால் காண்கிறான். சீதை உயிர்விடத் துணிந்தபோது அனுமன் இராம நாமத்தைக் கூறிக் காக்கிறான். பின் இராமன் தந்த அடையாள மோதிரத்தைச் சீதையிடம் அளிக்கிறான். சீதை மகிழ்கிறாள். பின்பு சீதையிடம் இருந்து அடையாளமாகச் சூளாமணியைப் (ஓர் அணி) பெற்றுக் கொண்டு அசோக வனத்தை அழிக்கிறான். இராவணனுக்குப் புத்திமதி கூறுகிறான். இறுதியில் அனுமன் வாலில் தீயிட, அத்தீயால் இலங்கையை அழித்துத் திரும்பி, இராமனிடம் சீதையைக் கண்டதைக் கூறுகிறான். இக்கதை நிகழ்வோடு சுந்தர காண்டம் நிறைவு பெறுகிறது.

3.3.6 யுத்த காண்டம் (இராமனும் இராவணனும் போரிடல்)

இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே நிகழும் போர் நிகழ்ச்சிகளை விவரிப்பது யுத்த காண்டம். போர் மூளும் சூழலில் இராவணன் மந்திராலோசனை நிகழ்த்துகிறான். அதுபோது வீடணன் (இராவணன் தம்பி) அறவழி எடுத்துக் கூறுகிறான். அதனை மதியாத இராவணன் வீடணனை நாடு கடத்துகிறான்.

போர் நிகழ்ச்சி

இராமன் வீடணனுக்கு அடைக்கலம் தருகிறான். இராமன் கடலில் பாலம் இட்டு இலங்கையை அடைகிறான். முதல் நாள் போர் நிகழ்கிறது. இதில் இராவணன் தோற்று அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கிறான். இதனைக் கண்ட இராமன் "இன்று போய் நின் துணையோடு நாளை வருக" என்று அனுப்புகிறான். மானம் இழந்து வெறுங்கையோடு இலங்கை மீண்ட இராவணன் தன் தம்பி கும்பகருணனைப் போருக்கு அனுப்புகிறான். கும்பகருணனும் போரில் இறக்கிறான். இதனைத் தொடர்ந்து பல படைத்தலைவர்கள் போரில் மாள்கின்றனர்.







வீரமும் களத்தே போட்டு....






அடுத்து இந்திரசித்து களம் புகுகிறான். இவன் இராவணனின் மகன். இந்திரசித்து பிரமாத்திரத்தை (ஆற்றல் மிக்க அம்பு) விட்டு இலக்குவன் முதலியோரை வீழ்த்துகிறான்.

இலக்குவன் மயக்கம்

இதனைக் கண்ட இராமன் சோர்ந்து வீழ்கிறான். வீடணனால் மயக்கம் தெளிந்த அனுமன் மருத்து மலையைக் கொண்டு வர அனைவரும் உயிர் பெறுகின்றனர்.


மருத்து மலை

இந்திரசித்து இலக்குவனோடு போர் புரிந்து உயிர் துறக்கிறான். புத்திர சோகம் இராவணனையும் அவன் மனைவி மண்டோதரியையும் வாட்டுகிறது. இறுதியில் இராம இராவண யுத்தம் நிகழ்கிறது. இராமன் அயன் படையை (பிரம்மன் அம்பு) விடுக்க இராவணன் மாய்கிறான். வீடணனுக்கு முடிசூட்டி இலங்கைக்கு அதிபதி ஆக்குகிறான் இராமன்.

அக்கினிப் பிரவேசமும் முடி சூடலும்

சீதை தன் கற்பு நெறியை நிரூபிக்க அக்கினிப் பிரவேசம் செய்கிறாள். இடையில் இராமன் குறித்த காலத்தில் வராததை அறிந்து பரதன் அக்கினிப் பிரவேசம் செய்து உயிர் விட எண்ணுகிறான். அனுமன் விரைந்து சென்று இராமன் வருகையைச் சொல்கிறான். நிறைவாக இராமனுக்கு முடி சூட்டப் பெறுகிறது. இவ்வாறு முடி சூட்டுவதோடு காப்பியம் இனிதே நிறைவடைகிறது.