6.1 பெருங்கதை

வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் என்ற பெருமை இதற்கு உண்டு.

6.1.1 தனிச்சிறப்பு

வேறு எந்தத் தமிழ்க் காப்பியத்திற்கும் இல்லாத தனிச் சிறப்புப் பெருங்கதைக்கு உண்டு என்று அறிஞர் கருதுவர். இது பலவகைக் கருவிகள், பழக்க வழக்கங்கள், கட்டட அமைப்புகள், விளையாட்டுகள் பற்றிய சமுதாயச் செய்திகளை எல்லாம் நுட்பமாகப் பேசும் ஒரு காப்பியம்.

உரையாசிரியர்களின் பாராட்டு

பெருங்கதை பற்றிப் பழைய உரையாசிரியர்கள் பலர் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இக்காப்பியத்தைப் பாராட்டி உள்ளார். “கபாடபுரத்தில் இருந்த இடைச் சங்கத்தில் இயற்றப்பட்டவை கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியங்கள்; இந்த இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து செய்ததே உதயணன் கதை” என்று அவர் கூறியுள்ளார் (உதயணன் கதை - பெருங்கதை). பேராசிரியர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர். தொன்மை முதலிய இலக்கணக் கூறுகளை விளக்கும் இவர் இயைபு என்ற இலக்கணத்தை விளக்கி, அதற்குச் சான்றுகளாகச்     சீத்தலைச் சாத்தனாரால்     செய்யப்பட்ட மணிமேகலையையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட இந்தப் பெருங்கதையையும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களே அன்றி நச்சினார்க்கினியர், மயிலை நாதர், நேமிநாத உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், வீரசோழிய உரையாசிரியர் முதலியோர் உரைகளிலும் பெருங்கதை மேற்கோளாக இடம் பெற்றுள்ளது. இத்தகைய பெருமை பெற்ற பெருங்கதை, உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது. இக்காப்பியத்தை இயற்றிய கொங்குவேளிர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். எனவே இக்காப்பியம் சமணக் கொள்கைகளை மிகுதியும் முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. இப்பெருங்கதை பற்றிய அறிமுகமாக இப்பாடப் பகுதி அமைக்கப்பெற்றுள்ளது.

6.1.2 பெருங்கதை - பெயர் அறிமுகம்

பெருங்கதை என்பதே அச்சிடப்பெற்ற இந்நூலின் பெயராக இப்போது விளங்குகிறது. இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு இரண்டு பெயர்களும் உள்ளன.

கொங்குவேள் மாக்கதை

உ.வே. சாமிநாதையர் பெருங்கதையை முதன்முதலில் 1924இல் பதிப்பித்து வெளியிட்டார். அவர் பதிப்பிற்காக எடுத்துக் கொண்ட இரண்டு சுவடிகளில் கொங்குவேள் மாக்கதை என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. சாமிநாத தேசிகர் எழுதிய இலக்கணக் கொத்துப் பாயிர உரையில் (நூற்பா - 7) இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு,
கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்து”

என்பது அந்த உரையின் ஒரு பகுதி.  தனிப்பாடல் ஒன்று

“உருத்தக்க கொங்குவேள் மாக்கதை”

(உரு = அழகு)

என்று கூறியுள்ளது. பெருந்தேவனார் பாரதம், கம்பராமாயணம், வில்லி பாரதம் என்பன போல, நூலாசிரியர் பெயரும் சேர்த்துக் கொங்குவேள் மாக்கதை என்ற பெயர் இக்காப்பியத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

உதயணன் கதை

உதயணன் கதை என்ற பெயர் பழைய உரையாசிரியர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. உதயணன் கதை என்ற பெயரைச் சுட்டி உரையெழுதிய உரையாசிரியர்கள் வருமாறு:

பேராசிரியர்                 -    தொல். பொருள். செய்யுளியல். 24

அடியார்க்கு நல்லார்         -    சிலம்பு. 4, 3, 41, 42

யாப்பருங்கல விருத்தியுரை  -    நூற்பா. 53, 69

வீரசோழிய உரை           -    யாப்புப்படலம். 9

தக்கயாகப் பரணி உரை     -    தாழிசை 33, 137, 258

எனவே, பழங்காலத்தில் பெருங்கதையின் பெயர் உதயணன் கதை என்பதாகவே இருந்தது என்பதை அறிய முடிகிறது.

பெருங்கதை

மாக்கதை என்பதற்கும் பெருங்கதை என்பதற்கும் தொடர்பு உண்டு. மா என்றால் பெரிய என்பது பொருள். மாக்கதை பெரிய கதை அல்லது பெருங்கதை என்றும் பொருள்படும். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார வேனிற்காதை 23 - 26 அடிகளுக்கு உரை எழுதும்போது, பெருங்கதை என்ற பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இதனை நோக்கப் பெருங்கதை என்ற பெயரும் பழங்காலத்திலேயே வழக்கில் இருந்துள்ளதை அறியலாம்.

6.1.3 பெருங்கதையின் முதல் நூல்கள்

கம்பராமாயணத்திற்கு முதல் நூல் வான்மீகி ராமாயணம். வில்லி பாரதத்திற்கு முதல் நூல் வியாச பாரதம். இதே போல் பெருங்கதைக்கும் மூல நூல் உண்டு. முதல் நூல் என்பதும் மூல நூல் என்பதும் ஒரே பொருள்படும்.

காப்பியத்தின் நிகழ்ச்சிகள் நிகழும் இடம் வட இந்தியா என்று குறிப்பிடப்பட்டது. எனவே பெருங்கதையின் மூல நூலும் வடமொழியில்தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர முடியும். இக்காப்பியத்தின் தலைவனாகிய உதயணன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல்கள் வடமொழியில் பல உள்ளன. அவற்றுள் சில வருமாறு:

1)  பிருகத் கதா சுலோக சங்கிரகம்
2)  பிருகத் கதா மஞ்சரி
3)  பிருகத்கதா சரித் சாகரம்
4)  உதிதோதய காவியம்
5)  இரத்னாவளி
6)  பிரிய தர்சிகா
7)  சொப்பன வாசவதத்தா
8)  பிரதிஞ்ஞா யௌகந்தராயணம்
9)  வாசவதத்தா
10) மிருச்ச கடிகம்
11) கருப்பூர மஞ்சரி
12) காதம்பரி

இவை அன்றி உதயண குமார காவியம் என்பதும் வச்சத் தொள்ளாயிரம் என்பதும் தமிழில் இயற்றப்பட்ட உதயணன் பற்றிய காவியங்கள் ஆகும். வச்சத் தொள்ளாயிரம் முழுவதும் கிடைக்கவில்லை என்பது தெரிகிறது.

சாதவாகனன் அரசவையில் அமைச்சராய் இருந்த குணாட்டியர் என்பவர் பிருகத் கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்கதையே உதயணன் கதை ஆகும். இந்தக் காப்பியமே பெருங்கதையின் மூல நூல் என்று கூறுவது உண்டு. ஆனால் குணாட்டியர் செய்த நூல் சைவ சமயத்தை மிகுதியும் போற்றி உள்ளது. கொங்குவேள் காப்பியம் சமண சமயத்தைப் போற்றி உள்ளது. எனவே குணாட்டியர் செய்த நூலை முதல் நூலாகக் கொண்டு வட மொழியில் வேறு நூல் உள்ளதா? அதுவும் சமணச் சார்புடையதாக உள்ளதா? என்பதை உ.வே.சாமிநாதையர் அவர்கள் ஆராய்ந்து உள்ளார்கள். கி.பி. 570 - 580 வரை ஆட்சி செய்த கங்கமன்னன் துர்விநீதன் என்பவன் பிருகத் கதையை முழுமையும் சமஸ்கிருதத்திலேயே மொழிபெயர்த்தான்.

உ.வே.சாமிநாதையர் இவற்றை எல்லாம் ஆராய்ந்து துர்விநீதன் சமஸ்கிருதத்தில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலே பெருங்கதையின் மூல நூலாக இருக்க வேண்டும் என்று முடிவு கூறியுள்ளார்.