|  இனி, தேம்பாவணி  எனப்படும் இக்காப்பியத்தின் 
 சிறப்புகளையும் பண்புகளையும் காண்போம். இன்னொரு 
 கிறித்தவக் 
 காப்பியமான இரட்சணிய யாத்திரிகத்தைப் போலவே, 
 இத் தமிழ்க் காப்பியமும் பிறமொழிக் காப்பியம் ஒன்றைத் தழுவி, 
 தமிழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். ஸ்பானிய நாட்டு ஆகிருத 
 நகரில் வாழ்ந்த ஆகிர்த மரியாள் என்னும் கன்னி இறைநகரம்   (City of God) என்னும் நூலை, அன்னை மரியின் ஆணைப்படி 
 எழுதியதாகக் கூறியுள்ளார். அன்னை மரியினால் தமக்கு 
 உரைக்கப்பட்ட சூசையப்பரின் வரலாற்றையே தாம் நூலாக 
 எழுதியுள்ளதாக அவர் கூறுகிறார். அந்நூலைத் தழுவி, தமிழ் 
 மரபுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்ப வீரமாமுனிவர் 
 தேம்பாவணியை இயற்றியிருக்கிறார். மேலைநாட்டு நூலின் மொழிபெயர்ப்பு எனத் தோன்றாத 
 வகையில், இக்காப்பியத்தை வீரமாமுனிவர் உருவாக்கியுள்ளார். 
 இங்கு வந்து, தன்னைத் தமிழராக ஆக்கிக் கொண்டு ஒரு 
 காப்பியத்தைத் 
 தழுவி எழுதுவது என்றால், அதுவும் தமிழ்ப் 
 பண்பாட்டிற்கு ஏற்ப என்பது வியப்பைத் தருகிறதல்லவா? 
 காப்பியத்தின் சிறப்புகளைத் தொடர்ந்து காண்போமா? 2.2.1 காப்பியக் 
 கருவும் கதையும் இத்தமிழ்க் காப்பியத்தின் கதைத் தலைவராக விளங்குபவர் 
            இயேசுபெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையே ஆவார். 
            வளன் என்றும் குறிக்கப்படும் இவரைப் பற்றிய வரலாற்றுக் 
            குறிப்பு விவிலியத் திருமறையில் ஐந்தே இடங்களில் சிற்சில 
            வரிகளிலேயே இடம் பெறுகிறது. எனினும், ஆகிர்த மரியாளின் 
            மூலநூலைத் தழுவி, வீரமாமுனிவர் சூசையின் வரலாற்றை 
            விரிவான காப்பியமாக வடித்துள்ளார். ● காப்பியத் தொடக்கம் சூசை எனப்படும் வளனார் பிறந்த நாடான யூதேயா நாட்டு 
            வளமும், அதன் தலைநகராகிய எருசலேம் நகரச் சிறப்பும் கூறிக் 
            காப்பியத்தைத் தொடங்குகிறார் ஆசிரியர். பின்னர் சூசையின் 
            முன்னோரில் சிறந்த தாவீது என்னும் பேரரசனின் வரலாற்றைக் 
            கூறுகிறார். சூசை பன்னிரு வயதிலேயே துறவு மேற்கொள்ளத் 
            துணிவதும், பின்னர் இறைவனின் ஆணைப்படி நாடு திரும்புவதும் 
            முதலிய பல செய்திகள் கூறப்படுகின்றன. ● கதைச் சுருக்கம் கடவுளின் திருவுள்ளப்படி சூசைக்கும் மரிக்கும் திருமணம் 
            நிகழ்கிறது. அவர்கள் இல்லற வாழ்வில் இணைக்கப்பட்டாலும் துறவு 
            நெறியிலேயே வாழ்கின்றனர். இறையாற்றலால் மனித உறவின்றி 
            அன்னை மரியிடம் பிறக்கும் தெய்வக் குமரனாம் இயேசுவை 
            அவர்கள் வளர்த்து வருகின்றனர். வானவரின் கட்டளைப்படி 
            செயல்படும் அவர்கள், அக்கட்டளையால் அரசன் ஏரோதன், 
            திருக்குழந்தைக்குச் செய்ய இருந்த துன்பத்தினின்று நீங்க, எகித்து
      (எகித்து = எகிப்து நாடு) நாடு செல்கின்றனர். அந்நாட்டுக்கு வானவர்களின் துணையுடன் 
            செல்லும் இத்திருக்குடும்பத்தினர் பயணம் பற்றியும், வானவர்கள் 
            இவர்களுக்கு எடுத்துரைத்த விவிலியக் கதைகள் பற்றியும் 
            காப்பியம் கூறுகிறது. ஏரோதன் ஆட்சியின் கொடுமைகள் 
            சித்திரிக்கப்படுகின்றன. இவ்வரசன் இறந்தபிறகு, இவர்கள் தாய் 
            நாடு திரும்புகின்றனர். திருமறை பல நாடுகளிலும் வளரும் பாங்கு 
            விளக்கப்படுகிறது. திருமகன் இயேசு குழந்தையாகவே பல 
            அருஞ்செயல்கள் புரிவதும் கூறப்படுகின்றது. பின்னர் சூசை 
            நோயால் துன்பம் அடைந்து இறந்து, புண்ணிய 
            ஆன்மாக்களுக்குத் திருமகனின் தூதராகச் செல்கிறார். இறைமகன் 
            இயேசுவும் திருப்பாடுகளை அடைந்து, இறந்து உயிர் பெற்றபின், 
            சூசையும் மீண்டும் உயிர்பெற்று எழுகிறார். அவருக்கு 
            விண்ணுலகிலும் மண்ணுலகிலும் திருமுடி சூட்டப்பெறுகிறது. 
            இவ்வாறு வளனார் பெருமையையும் வரலாற்றையும் கூறிக் 
            காப்பியம் நிறைவடைகிறது. 2.2.2 காப்பிய அமைப்பு தேம்பாவணிக் காப்பியம் பாயிரம் எனப்படும் முகவுரையும், 
            படலங்கள் எனப்படும் முப்பத்தாறு சிறு பிரிவுகளும் கொண்டு 
            விளங்குகிறது. இந்த முப்பத்தாறு படலங்களையும் மூன்று 
            காண்டங்களாகப் பிரித்து வெளியிட்டுள்ளனர். தமிழ்க் 
            காப்பியங்களின் அமைப்புக்கும் மரபுக்கும் ஏற்ப, பாயிரப் 
            பகுதியில் நூல் எழுதப்பட்ட வரலாறு கூறப்படுகிறது. அதில் 
            அவையடக்கமாக ‘கடலையே நக்கிக் குடிக்க முற்பட்ட ஒரு 
            பூனையைப் போல, ஊமையன் போன்ற நானும் சொல்லுவதற்கு 
            அரிய வளனாரின் வரலாற்றை வடிக்க முற்பட்டேன்’ எனக் 
            கூறுகிறார். உவமையின் அழகை எண்ணிப் பாருங்கள். எத்துணைத் 
            தன்னடக்கம்! பின்னர் காப்பிய மரபுப்படி நாட்டு வளம், நகர் வளம் 
            முதலியன நன்கு வருணிக்கப்படுகின்றன. ● மூவர் பெருமை காப்பியத்திலுள்ள முப்பத்தாறு படலங்களிலும் காப்பியத் 
            தலைவனாகிய சூசை, அவரது துணைவியாகிய மரியாள், 
            அவர்களால் வளர்க்கப்படும் தெய்வீகத் திருக்குழந்தையாகிய 
            இயேசு ஆகிய மூவரது பேராற்றலும் பெருமைகளும் நன்கு 
            விரித்துரைக்கப்படுகின்றன. ● விவிலியக் கதைகளும் செய்திகளும் விவிலியத் திருமறையில் 
          பழைய ஏற்பாடு எனும் முற்பகுதியில் 
            இடம்பெறும் பல கதைகள், வானவர்களின் வாய்மொழியாகக் 
            கூறப்படுகின்றன. அவ்வாறே புதிய ஏற்பாடு எனும் விவிலியப் 
            பிற்பகுதியில் இடம் பெறும் அரிய செய்திகளும் வரலாறுகளும் 
            காப்பியக் கதையின் ஊடாகவே எடுத்துரைக்கப்படுகின்றன. ● தமிழ் மரபும் மொழிநடையும் தமிழ் மரபுக்கேற்ற உவமைகளும் மரபுத் தொடர்களும் 
            மட்டுமன்றி, பழங்கதைகளும் கூட ஆங்காங்கே பயன்படுத்தப்படுகின்றன. மேலை நாட்டவர் ஒருவர் படைத்த காப்பியம் எனச் 
            சற்றும் நினைக்கத் தோன்றாதவாறு, மிக உயர்ந்த மொழி நடையும், 
            இலக்கியத் திறன்களும் காப்பியம் முழுவதும் வெளிப்படுகின்றன. 2.2.3 காப்பியத்தின் 
 மூல நூல்கள் இக்காப்பியத்தின் மூலநூல் ஆகிர்த மரியாள் என்பார் 
            எழுதிய இறைநகரம் என்ற நூலே என்பது முன்னரே 
            சுட்டப்பட்டது. எனினும், விவிலியத் திருமறை (Bible)யும் இதற்கு 
            முதல் நூல் என்பதை நாம் மறக்கலாகாது. எல்லாக் கிறித்தவ 
            இலக்கியங்களுக்கும் விவிலியமே முதல் நூலாக அமைகிறது. 
            தேம்பாவணிக்கும், விவிலியமே முதல் நூல் எனலாம். 
            தேம்பாவணியில் விரித்துரைக்கப்படும் சூசையின் வரலாறு, 
            விவிலியத்தில் ஐந்தே இடங்களில் மிகச் சில வரிகளிலேயே 
            கூறப்படுவதால், ஆகிர்த மரியாளின் நூலைத் தழுவி ஆசிரியர் 
            காப்பியம் அமைக்கிறார். எனினும் விவிலியத்தின் 
            இருபிரிவுகளிலும் கூறப்படும் ஏராளமான கதைகளையும் 
            வரலாறுகளையும் ஆசிரியர் நூல் முழுவதும் பலவகைகளிலும் 
            எடுத்துரைப்பதால், இக்காப்பியம் விவிலியத் திருமறையின் 
            சாரமாகவே பல இடங்களில் காணக் கிடைக்கிறது. ஆகவே 
            விவிலியமும், இறைநகரம் என்ற நூலும் ஆகிய இரண்டுமே, 
            இக்காப்பியத்தின் மூல நூல்கள் எனக் கருதத்தக்கன.
           |