4.6 சின்ன சீறா

உமறுப் புலவர் இயற்றிய சீறாப்புராணம் முழுமை பெறவில்லை. இக்குறையை நிறைவு செய்ய ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியதே சின்ன சீறா.

ஆசிரியர்

இது பனீ அகமது மரைக்காயர் என்பவரால் பாடப்பெற்றது.

அமைப்பு

இதைச் சீறாப் புராணத்தின் தொடர்ச்சியாக 30 படலங்களில் 1823 பாடல்களில் பாடி முடித்துள்ளார். சின்ன சீறாவில் உள்ள பாடல்கள் விருத்தப் பாவில் அமைந்துள்ளன.

4.6.1 உள்ளடக்கம்

இந்நூல் நபிகள் நாயகத்தின் கடைசி ஆறு ஆண்டுகள் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பாடுகிறது. உமறுப் புலவர் தமது சீறாப் புராணத்தில் எழுதி முடிக்காத பகுதியைப் பனீ அகமது மரைக்காயர் எழுதி இதன் மூலம் நிறைவு செய்துள்ளார்.

நபிகள் நாயகம் ஒன்பது பிற நாட்டு மன்னர்களோடு கொண்ட கடிதத் தொடர்பைப் பற்றியும், அவர்களை இசுலாத்தில் சேர அழைத்ததைப் பற்றியும் சின்ன சீறாவில் காணலாம். கைபர், ஹுனைன், தபூக் முதலான போர்களையும், மக்காவின் வெற்றியையும், மக்கா வெற்றிக்குப் பிறகு அரபுநாடு அனைத்தும் இசுலாமியத்தில் இணைந்ததையும் பனீஅகமது மரைக்காயர் பாடியுள்ளார். நபிகள் நாயகம் இறையடி சேர்ந்ததுடன் சின்ன சீறா நிறைவு பெறுகிறது.