5.7 காப்பியச்
செய்திகள் காப்பியத்தில், மனிதர்களின் உணர்வுகளையும், அவற்றின்
வெளிப்பாடுகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார். மேலும்,
பிள்ளைச் செல்வத்தின் மேன்மை, ஒரு நாட்டின் ஆட்சியில்
அமைச்சர் பெறும் சிறப்பிடம், மனிதனின் புனிதத் தன்மை
ஆகியவை பற்றிய செய்திகளையும் காப்பியத்தில் கூறியுள்ளார்.
5.7.1 பெண்ணின்
துடிப்பு
கருப்பமுற்ற பெண்ணின் உடல் மாறுபடும்.
அவளது
உள்ளப்போக்கு,
பிள்ளை பெறும் நேரத்து வேதனை,
இவற்றோடு உடலில்
தோன்றிய மெய்ப்பாடுகள் ஆகியவற்றின்
நுணுக்கங்களைப் (பாடல்கள் 1289 -
1297) பாடியுள்ளார்.
 |
வாய் வெளுத்தது, மயக்கம் தோன்றியது,
தூக்கத்தினால் கண்கள் அடிக்கடி மூடின,
முகம் சோம்பலாக இருந்தது, எல்லா
மணமும் குறிப்பாகக் கறி, பூ போன்றவற்றின் மணம் வெறுப்பூட்டியது.
இவற்றினை, |
வாய்இதழ் வெளுத்தன
மயக்கந் தோன்றின
தூயகண் சொருகின
முகமும் சோம்பின
காயன வாசமும்
கறியின் வாசமும்
மேய பூவாசமும்
வெறுப்ப தாயின (இறந்து வந்து மணஞ்செய் படலம்
- 12 (1290) |
என
கருப்பமுற்ற பெண்ணின் இயல்பினை எடுத்துரைக்கிறார்.
5.7.2 முதிய தாயின்
தோற்றம்
வயது முதிர்ந்த தாயின் முதுமைத்
தோற்றம் மிக அற்புதமாக
வருணிக்கப்படுகிறது. கண்கள் ஒளி
மங்கின. நாணல் போன்ற கூந்தல்
நரைத்து நரம்புகள் தெரிந்தன. வறட்சி
பெற்ற உடல் கூனித் தள்ளாடினாள். தளர்ச்சியுற்ற நடையால் நடந்து வந்தாள் என்பதனை, |
 |
|
நகையறப்
பெயர்ந்து விழிஒளி மழுங்கி
நாணல்போல் கூந்தல் நரைத்துத்
தொகையுற நரம்பு தெரிதர வறழ்ந்து
சுருதியும் அடைத்து உடல் கூனித்
தகுநடை அயர்ந்த விருத்தை வாய்புலம்பித்
தளர்ந்து தள்ளாடியே நடந்து
(அபாபக்கரில் கம்மாமிப் படலம் - 10 (447)
|
(வறழ்ந்து
= உலர்ந்து; தகுநடை = தகுந்த நடை)
என வருணிக்கிறார். மேலும் அவள் இருமிக் கொண்டு, அடிக்கடி
இளைப்பொடு களைத்துப் பெருமூச்சு
விட்டாள் என்றும்
பாடுகிறார்.
5.7.3 குன்ம நோயாளனின்
துடிப்பு
குன்ம நோயாளன் ஒருவன் வயிற்று வலியால் துடித்த காட்சியைப் புலவர் பாடுகிறார். அதில்
நோய் உடையவன் துடித்த துடிப்புக் காட்டும் மெய்ப்பாடுகள் ஐந்து பாடல்களில் (1240
-1244) வருணிக்கப்படுகின்றன. குன்மந் தீர்த்த படலம் என அப்படலத்திற்குப் பெயரும்
அமைத்தார் புலவர். ஈரல் பற்றி
எரிவு கண்டு அவன் தன் கைகள்
இரண்டினால் வயிற்றைப் பற்றி, வீழ்ந்து
உருண்டான்;
புரண்டான்; எழுந்தான்;
விம்மினான்; கண்ணீர் சொரிந்தான்;
அலறினான்; திகைத்தான்;
சோர்ந்தான்; வெம்பினான்; நெருப்பில் விழுந்த புழுப்போல் துடித்தான்
என்பதனை,
வாய்ந்த
தங்கரம் இரண்டினும்
பற்றினர் வயிற்றை
வீழ்ந்து உருண்டனர் புரண்டனர்
எழுந்தனர் விம்மிச்
சேர்ந்த கண்ணினீர் சொரிந்தனர்
அலறினர் திகைத்தார்
சோர்ந்து வெம்பினர் நெருப்பினில்
கிரிமிபோல் துடித்தார்
(குன்மந் தீர்த்த படலம் - 23 (1241) |
என,
அவனது மெய்ப்பாடுகளை, நோய் வருத்தத்தால் பெற்ற
துன்பங்களை எடுத்துரைக்கிறார்.
5.7.4 பிள்ளைச்
செல்வம்
குழந்தை
இல்லாதவர் அதிகம் வருத்தம் அடைவார்கள்.
செல்வம் எவ்வளவுதான் இருந்தாலும் குழந்தை இல்லை
என்பது
ஒரு பெருங்குறை. கொள்ளை கொள்ளையாய்ச்
செல்வம் இருந்தாலும் பிள்ளை இல்லை என்றால் அது பெரிய வறுமை ஆகும்.
பிள்ளை இல்லாத குறை என்பது, தேன் மலரைப் போன்ற அழகிய கண்ணின் கருமணியில்
வெள்ளைப் புரை வளர்ந்தது போன்ற குறை ஆகும் என்று பாடுகிறார்:
பிள்ளையற்ற
பெருஞ்செல்வம் எவ்விதக்
கொள்ளை உற்றிடினுங் குறையே அன்றோ
கள்ளையுற்ற மலர்க்கண் மணியில்ஓர்
வெள்ளையுற்றது போலும் விளங்கலே
(முகியித்தீன் இப்னி அறபி
உதித்து ஓங்கு படலம் - 33 (997) |
(பிள்ளை
= குழந்தை; கள்
= தேன்; கண்மணி = கண்களில்
உள்ள மணி)
மேலும் பிள்ளை இல்லாதவர் பெற்ற பெருஞ்செல்வம்
மணமற்ற மலர் என்று
குறிப்பிடுகிறார். வானத்தில்
ஒளி வீசும்
வெண்ணிலா மனிதர்கள் இல்லாத பூமியில் நிலவை
வீசுவது
பயனற்றது என்றும், அது பிள்ளையில்லாதார் பெற்ற
செல்வம்
போன்றது (பாடல்-999) என்றும் பாடுகிறார்.
மலடானவர் உண்ணும் உணவு வேம்பு போன்று கசப்பானது.
கிருமியை (புழுக்களை)ச் சாப்பிடுவது போன்றதாகும் என்றும் பல
உவமைகளால் ஒரு கருத்தை விளங்க வைக்கும் திறமையினைக்
காணலாம்.
5.7.5 அமைச்சர்
திருக்குறளில் அமைச்சு என்னும் அதிகாரத்தில் அமைச்சின்
சிறந்த
பண்புகளையும், அமைச்சரின் இன்றியமையாமையையும்
குறிப்பிடுகின்றார் வள்ளுவர்.
ஓர் அரசனின் கடமை அறிவுரை கூறும் அமைச்சரைப்
பாதுகாத்தல். அது உயிர் போன்ற கடமை
ஆகும். அமைச்சரின்
அறிவுரைகளை ஆராய்ந்து ஒழுகுதல் அரசன் கடமை ஆகும்.
அரசனை இடித்துரைக்கும்
ஆற்றல் பெற்றவர் அமைச்சர். எனவே
அமைச்சனின் ஆலோசனைகளைக் கேட்டு ஒழுகவேண்டும்.
இல்லையெனில்
அரசும், செல்வமும் வேருடன் அரசனை விட்டு
நீங்கும். அமைச்சர் கூறும் காரணங்களை உணர்ந்து துன்பம்
வருமுன் தடுத்துக் கொள்ளவேண்டும். அரசன் தனக்குத் தீமை
வராமல் அமைச்சர் ஆலோசனையைக்
கேட்டு ஒழுகவேண்டும்
என்பதனை,
பிரித்து
இடித்துரைக்கும் அமைச்சரை உயிர்போல்
பேணிஆய்ந்து ஒழுகிடா மன்னர்
விருப்புறு பெருஞ்செல் வமும்உயர் அரசும்
வேரோடுங் கெடுவதா தலினால்
கருப்பொருள் உணர்ந்து வருமுனந் தடுத்துக்
காப்பவன் ஒருவரற் றிவன்தன்
மருட்குடி யிருக்கு மனப்படி செயுமந்
திரியினால் வந்தகேடு என்பார்
(கலையருட் படலம் - 53(684) |
(கருப்பொருள் =
காரணப் பொருள்)
என அமைச்சரின் தேவையினை அறிவுறுத்துகிறார்.
5.7.6 மனிதப் புனிதன்
ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணநலன்களை
ஒரு பாடலில் கூறுகிறார். மனிதன் புனிதன் ஆகவேண்டும்
என்றால் புலன்கள் வழி மனத்தைச் செல்ல விடக்கூடாது;
கட்டுப்படுத்த வேண்டும்; தவம் புரியவேண்டும்; கல்வி, ஞானம்
இவை கற்றிருக்க வேண்டும்; நல்ல அறிவு உடையவராக
இருக்க வேண்டும்; அன்புடையவராக இருக்க வேண்டும். உலகியல்
நடைமுறைகளைத் தெரிந்து இருக்க வேண்டும். பூமியைப் போன்ற
பொறுமை
உடையவராக இருக்க வேண்டும். இதனை,
பொறிவழி மனம்பு காது
புரிதவம் ஞானம் கல்வி
அறிவுசீர் ஒழுக்கம் அன்போடு
உலகியல் அகிலம் போன்ற
பொறைநிறை அமைத்து வாழ்தல்
சுகம்எனும் புனிதம் மேவு
நெறியினி ஒருவ ரோங்கு
மகிழ்வொடு நிகழ்த்து வாரால் (கிலிறு நபி வாய்மைப் படலம் -1(172) |
(பொறி = ஐம்பொறிகள்; சீர்
= சிறந்த; பொறை = பொறுமை;
அகிலம் = பூமி)
என்று பாடுகிறார். இவ்வாறாக, மனிதப் புனிதர் யார் என
வரையறுத்துப் பாடுகிறார் புலவர். |