5.8 தீன் விளக்கம்

தீன் எனும் அரபுச் சொல்லின் பொருள் இசுலாமிய நெறி என்பதாகும். தமிழகத்திற்கு இசுலாமிய நெறியினைப் பரப்ப வந்த செய்யிது இப்ராகீம் அவர்களைப் பற்றிய விளக்கத்தினைக் கூறும் நூல் தீன் விளக்கம் எனப் பெயர் பெற்றது.

ஆசிரியர்

இக்காப்பியத்தினை இயற்றியவர் மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர் ஆவர். இவர் மூன்று காப்பியங்களைப் பாடியவர் என்பதை முன்பே பார்த்தோம்.

காப்பிய நாயகர்

செய்யது இப்ராகீம், நபிகள் நாயகத்தின் பதினெட்டாம் தலைமுறையில் தோன்றிய நபிநேசச் செல்வர் ஆவார். தமது 42ஆம் வயதில் மதீனாவிலிருந்து பாண்டிய நாடு வந்தார். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியன் ஆட்சி செய்தான். அப்பொழுது விக்கிரம பாண்டியனுக்கும் செய்யிது இப்ராகீமுக்கும் போர் நடந்தது. அப்போரில் இவர் வெற்றி பெற்றார். இவ் வரலாற்றுச் செய்திகளும் இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. இசுலாமிய நெறியைத் தமிழகத்தில் நிலைநாட்டினார். பின் கீழைக்கரையின் பக்கத்திலுள்ள ஏர்வாடியில் இறந்தார். அங்குள்ள தர்க்காவில் சாதிமத பேதமின்றி மக்கள் அருள்பெற்று வருகின்றனர். இது இத்தல புராண வரலாறும் ஆகிறது.

5.8.1 காப்பிய அமைப்பு

இது, 22 படலங்களால் ஆனது. 1713 விருத்தப் பாடல்களைக் கொண்டுள்ளது. இதில் 10 படலங்களில் 920 பாடல்கள் போர் பற்றிய வருணனைப் பாடல்களாக விளங்குகின்றன. கடவுள் வாழ்த்து, நாடு, நகரப் படலங்கள், பத்துப் போர்ப் படலங்கள், மீதி ஒன்பது படலங்களில் பிற செய்திகள் அமைந்துள்ளன. பெரும்பாலான படலங்கள் போர் நிகழ்ச்சிகளாக விளங்குகின்றன.

அரசாட்சிப் படலம், செய்யிது இப்றாகீம் பவுத்திர மாணிக்க நகரில் (கீழக்கரை, ஏர்வாடி சார்ந்த பகுதிகள்) செங்கோல் செலுத்தி ஆண்டதைக் கூறுகிறது.

செய்யிது இசுகாக்கு மங்கலப் படலம் திருமண நிகழ்ச்சியைக் கூறுகிறது. இறுதியில் உள்ள தலைமுறை விருத்திப் படலம் இறைநேசச் செல்வரின் தலைமுறையினரது வரலாற்றை விளக்குகிறது. சேதுபதி சந்ததி பெற்ற படலம் செய்யிது இப்றாகீமின் ஆன்மீக ஆற்றலைக் கூறுகிறது. பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல், புலவியிற் புலத்தல், கலவியிற் களித்தல் ஆகிய காப்பிய மரபுகள் இடம்பெறவில்லை. சமயச் சான்றோர்களது தியாக வரலாற்றில் இவற்றிற்கு இடமில்லை. எனவே இவை பாடப்பெறவில்லை.

இக்காப்பியம் வீரகாவியம் என்னும் நிலையில் வைத்துப் பேசப்படும் அளவுக்கு உயர்வானது.

வரலாற்று நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் போர்ச் செய்திகள் முக்கியம் பெறுகின்றன. இயற்கை வருணனை, கற்பனை, கிளைக் கதைகள், பெண்கள் பற்றிய வருணனை, பாத்திர வருணனை போன்றவை மிகக் குறைவு. செய்யிது இசுஹாக்கு திருமணத்தின்போது ஊர்வலம் காண வந்த ஏழு பருவ மாதர் பற்றித் தமிழ்க் காப்பிய மரபுப்படி பாடப்படுகிறது. வேறு பெண் வருணனையே இல்லை எனலாம்.

5.8.2 வருணனை

இக்காப்பியத்தில் இயற்கை வருணனை மிகக் குறைவு. இருந்தாலும் பொருத்தமான உவமை உருவகங்களால் சில இடங்களை அழகு படுத்துகிறார்.

வீரர்களின் எழுச்சி

போர் வீரர்கள் போர் புரிந்தார்கள்; எதிர்த்தார்கள். அவர்களுடைய வீரத்தைப் பொங்கி எழும் கடல் என்றும், சண்டமாருதக் காற்று என்றும், இடி என்றும் உவமைகளைப் பயன்படுத்திப் பாடியுள்ளார்.

வடவைபோல் கொதிப்பன்
     சண்டமாருதம் போல்எதிர்ப்பன்
இடிகள்போல் எதிர்ப்பன்
     போரில் ஏழுலகம் இவனுக்கு ஈடோ
கடிதினில் எதிர்த்து
     யானும் கையிழந்தேன் இங்கே
உடல் உயிரொடுமே சேர்ந்தது
     ஊன்றிய விதி ஒன்றாமே

    (ஒன்பதாம் போர்புரி படலம் -44(253)

(வடவை = ஊழிக்காலம், உலகமழியும் காலம் கடல் பொங்குதல்; சண்டமாருதம் = மிகக் கடுமையாக வீசும் காற்று).

5.8.3 உவமை

நிமிர்ந்த நெற்கதிர்களும் புலவரும்

நெற்கதிர்களின் பல்வேறு தோற்றங்களை உவமையாக அமைத்துப் பாடியுள்ளார். பயிர்கள் நிமிர்ந்து நிற்றலை, ஒப்பற்ற தமிழ்ப் புலவர்களை மேன்மை உடையோர் கண்டு வரவேற்று அன்பாகப் பேசும்போது, அப்புலவர்கள் இறுமாந்து நிற்பது போல நின்றன என்று குறிப்பிடுகிறார்:

. . . . . . . . . . . . . . . . . . . . மேலவர்கள்
அயர்ந்தோர் கொடும் புலவரை உபசரித் தன்பால்
இயம்பு போதிறு மாந்திடலென இறுமாந்து

(நாட்டுப் படலம் - 17  (46)

சூல்முதிர்ந்த நெற்கதிர்களும் பெண்களும்

செந்நெல் கதிர்கள் பால் பிடித்து முற்றியபோது, கர்ப்பம் முதிர்ந்த கற்புடைய பெண்கள் தலை கவிழ்ந்து நிற்பது போல நின்றன. நன்கு முற்றிய நெற்கதிர்கள் சாய்ந்து கிடந்ததை, துன்பம் மிகு உலகில் ஆன்றவிந்த சான்றோரின் தலை நிமிராத் தன்மையினைக் காட்டுகிறது என்கிறார்.

சூல்முதிர்ந்து கற்புடையர் போற்குனிந்து தொல்லுலகின்
மேன்முதிர்ந் துயர் பாசநீத்தவர்கள் எவ்விளைவு
பான்முதிர்ந்து வந்திடினுமே தலைக்கொளாப் பண்பாய்ச்
சேன்முதிர்ந்துறு பணை களிற் சாய்ந்தன செந்நெல்

(நாட்டுப் படலம் - 18  (47)

(சூல் = கர்ப்பமுடைய; பான் முதிர்ந்து = பால் முற்றிய நெல்; பணை = வயல்)

நெற்கதிர்கள் வாயிலாகப் பல உண்மைகளைத் தமிழிலக்கியங்களும் கூறுகின்றன. அம் மரபை வண்ணக் களஞ்சியப் புலவர் போற்றுவதைக் காணலாம்.

எல்லையற்ற பெரும்படை கடல் போல் இருக்கிறது. அப்படையில் வலிமை உடைய குதிரைகள் இருந்தன. குதிரைகளின் பிடரிமயிர், கடலின் நுரை எனக் காட்சி தந்தது. வீரமிகு குதிரைகள் செல்வதால் மேல் எழுந்த தூசிகள் சூரியனை மூடியது போல் இருந்தன. அவை மேகங்களிலிருந்த நீரைக் குடித்தன. குதிரைகள் முன் சென்றன என்பதனை,

கரையிலாப் பெருஞ்சேனை வாருதியினைக் கடுப்ப
நுரைகளாம் எனக்கவரிகள் இரட்ட நுண்துகள்போய்ப்
பருதி போர்த்திட முகில் படலத்திடை படிந்து
செருகி நீர்ப்பசை உண்டிட நடத்தினர் தேசி

(நான்காம் போர் புரி படலம் -11(865)

(சேனை = வீரர்கள்; வாருதி = கடல்; கவரி = குதிரையின் பிடரிமயிர் தொகுப்பு; நுண்துகள் = சிறிய தூசுகள்; பருதி = சூரியன்; முகில் = மேகம்; உண்டிட = பருக; கடுப்ப = ஒப்ப)

என உவமையும் கற்பனையும் செய்யுளில் அமைத்துக் குதிரைகள் சென்ற காட்சியினை விவரிக்கிறார்.

5.8.4 அவலச் சுவை

பாட்டுடைத் தலைவர் செய்யிது இப்ராகீமுக்கும், விக்கிரம பாண்டியனுக்கும் 10 நாட்கள் புனிதப் போர் பாண்டிய நாட்டில் நடைபெற்றதாக இக் காப்பியம் பாடுகிறது.

விக்கிரம பாண்டியனின் மகன் இந்திர பாண்டியன் போர்க்களத்தில் இறந்தான். இந்தச் செய்தியை அறிந்த மன்னன் அழுது புரண்டான். இதைப் பதின்மூன்று பாடல்களில் பாடியுள்ளார். தாயின் புலம்பலும் 16 செய்யுட்களில் இடம் பெற்றுள்ளன. அவலச்சுவையை நெஞ்சு உருகும்படி பாடியுள்ளார். இதோ அந்தத் தாயின் புலம்பலைக் கேட்போம்.

முன்ன முதியவனோ முப்பதுக்கோ ராறுகுறை
சின்ன வயதிலிந்தத் தீவினையுந் தான்வருமோ
மன்னவர்கள் போற்றிசெயு மைந்தா உனைஇழந்தே
இன்னமுயிர் வைத்திருந்தே னென்னைப்போல் நீலியுண்டோ

(ஏழாம் போர் புரி படலம் -90 (1149)

(முப்பத்துக்கோராறு குறை = 24; மைந்தன் = மகன்)

உனக்கு அதிக வயதா ஆகிவிட்டது. உனக்கு இப்பொழுது வயது இருபத்தி நான்குதானே ஆகின்றது! சின்ன வயதுதானே! இந்தத் தீவினைக்கு ஆளாக வேண்டுமோ! நீ இன்று இருந்தால் என் அருமை மகனே! உன்னை மன்னர் புகழ்ந்து இருப்பார்கள். நான் உன்னை இப்பொழுது இழந்து தவிக்கின்றேன். நீ இளைய வயதில் உலகை விட்டுப் பிரிந்த பின்பும் நான் உயிரை வைத்திருக்கின்றேனே. நானும் இறந்து போயிருக்கக்கூடாதா? நான் ஒரு கொடியவளாகிவிட்டேன் எனக் கதறினாள்.