6.2 நபிநாயகத்தின் பெருமை

நபிகள் நாயகத்தின் பெருமைகளைக் காப்பியத்தில் பல இடங்களில் அப்துல் மஜீது விளக்குகிறார். அவை கவிஞரின் கற்பனை வளத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்கின்றன.

6.2.1 நபிநாயகத்தின் அகவனப்பும் ஆகவனப்பும்

நபி பெருமானாரின் அக வனப்பினையும், ஆக வனப்பினையும் புலவர் ஆறு வெண்பாக்களில் வருணிக்கிறார். (அகம் = மனம்; அகவனப்பு = மனம் பற்றிய வனப்பு; ஆக = மொத்த; ஆகவனப்பு = மொத்த வனப்பு)

இரக்கமான கண்களும், அமைதியான தோற்றமும், ஞானம் பேசும் வாயும், உறுதியான தோள்களும், இருளை நீக்கும் ஒளியுடைய சந்திரன் போன்ற முகமும் கொண்டுள்ள நபிநாயகம் ஒப்பில்லாத புதுமைகளைத் தோற்றுவிக்க வந்தார். மேலும் மிக உயர்ந்த குணங்களையும் உடையவர் நபி பெருமானார். இதனை,

அருள்ஒழுகும் கண்ணும் அமைதி குடிகொண்டு
தெருள்ஒழுகு வாயும் திண்தோளும் - இருள்சீத்து
ஒளிரும் மதிமுகமும் ஒப்பில் புதுமை
மிளிரும் அவரிடத்து மிக்கு

(விலாதத்துக் காண்டம்-107)

(தெருள் = அறிவின் தெளிவு, ஞானம்; சீத்து = கீறி, துடைத்து; மதி = சந்திரன்)

எனப் புலவர் பாடுகிறார்.

6.2.2 நபி நாயகத்தின் இல்வாழ்க்கை

நபிகள் நாயகமும் கதீஜாவும் இல்வாழ்க்கையில் நல்வாழ்க்கை வாழ்ந்த பெருமையினை, அறத்திற்கு வித்தாக, இரக்கத்திற்கு வீடாக, தீமைகளைப் போக்கும் மருந்தாக இருவரும் அன்பால் இணைந்து வாழ்ந்தனர் என்று குறிப்பிடுகின்றார்.

அறநெறிக்கு வித்தாய் அருளிருக்கும் வீடாய்
மறநெறிகள் போக்கும் மருந்தாய் - திறநெறிசேர்
ஆண்டகையும் நாயகியும் அன்பால் பிணிப்புண்டு
காண்டகையர் ஆனார் கனிந்து

(விலாதத்துக் காண்டம் - 186)

(திறநெறி = உயர்நெறி; ஆண்டகை = தலைவர்; பிணிப்பு = இணைதல்; காண்டகையர் = காண்பதற்குத் தகுதி வாய்ந்தவர்)

என்னும் செய்யுள் அதனை அழகுற வெளிப்படுத்துகிறது.

6.2.3 நபிநாயகத்தின் அடக்கமான பண்பு

நபிகள் நாயகத்தின் மதினா வாழ்வில், உணவு இருந்தால் உண்பார். இல்லையெனில் பட்டினி என்பதையும் பிறர்க்குக் காண்பிக்கமாட்டார்; மகிழ்ச்சியோடு இருப்பார்; பிறருக்கு உதவுவார் என்பதனை,

உண்டி இருந்திடில் உண்பார் மற்றுண்டிடும்
பண்டம் இலையாயின் பட்டினியை - விண்டுஎவர்க்கும்
காட்டாதிருந்தே களிப்புறுவார் கையுழைக்க
மாட்டார்க்கு உதவிடும் வள்ளல்.

(ஹிஜ்ரத்துக் காண்டம் - 83)

(உண்டி = உணவு; பண்டம் = பொருள்; களிப்பு = மகிழ்ச்சி)

என்ற பாடலில் எடுத்துரைக்கிறார்.