6.4 யூசுப் ஜுலைகா

மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தெய்வீகக் காதலை வெளிப்படுத்தும் ஒரு காப்பியம். இக்காப்பியத்தில் பல அறவுரைகள் கூறப்பட்டுள்ளன.

6.4.1 ஆசிரியர்

யூசுப் ஜுலைகா என்ற காப்பியத்தைப் பாடிய கவிஞர் சாரண பாஸ்கரன் ஆவார். இவர் தஞ்சை மாவட்டம் கூத்தா நல்லூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் டி.எம்.எம். அகமது. இவர் 12ஆவது வயதிலிருந்தே இசைப்பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். வேதாந்த வரகவி சாது ஆத்தனார் என்பவர் இவருக்கு இலக்கணப் பயிற்சி அளித்தார். சாரண பாஸ்கரன் என்னும் புனைபெயரை ந.மு. வேங்கடசாமி நாட்டார் இவருக்குச் சூட்டினார்.

(அ) இவரது உரைநடை நூல்கள்

i)  சிந்தனைச் செல்வம்

ii) பாலயோகியின் பிரார்த்தனை

iii) காந்திஜியின் கடைசி வாரம்

iv) சாகாத ஜின்னா

(ஆ)  இவரது கவிதை நூல்கள்

i) மணியோசை

ii) சாபம்

iii) சங்கநாதம்

iv) இதயக்குமுறல்

v) மணிச்சரம்

vi) நாடும் நாமும்

vii) சாரண பாஸ்கரன் கவிதைகள்

viii) யூசுப் சுலைகா

6.4.2 அமைப்பு

இக்காப்பியம் 66 இயல்களைக் கொண்டு, 864 பாடல்களால் ஆனது. நிலைமண்டில ஆசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா அகிய பா வகைகளும், கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம் ஆகிய பாவினங்களும் கலந்துள்ளன. ஆசிரிய விருத்தத்தில் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களே அதிகமாக உள்ளன. அரபுச் சொற்கள் மிக மிகக் குறைவு. இவரது பாடல்களில் பாரதியின் எளிமை, பாரதிதாசனின் வீரம், கம்பனின் கற்பனை, உமறுவின் சொல்லாட்சி, குறளின் தோற்றம், குணங்குடியாரின் ஒலிநயம் ஆகியவற்றைக் காணலாம். இவற்றில் எளிய சொற்களே உள்ளன.

சுருக்கம் கருதியமை

இசுலாமியத் தமிழ்க் காப்பியக் கடவுள் வாழ்த்து முறை பின்பற்றப்படாமல் இறை வாழ்த்து மட்டும் காணப்படுகிறது. நாட்டு வளம், நகர் வளம் விளக்கப்படவில்லை. வரலாற்றுக் கதை கூறுவதிலே கவிஞர் சுருக்கம் பேணுகிறார்.

விவிலியமும் திருக்குர்ஆனும் கூறும் கதை

இது, சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைத்தூதர் நபி யூசுபின் வாழ்க்கை வரலாற்றைப் பாடும் நூல். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விவிலியத்திலும் இவரது வரலாறு கூறப்படுகிறது. இதற்குப் பின் 550 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய குர்ஆனும் கூறும் வரலாறு இது. திருக்குர்ஆனும் விவிலியமும் கூறுகிற இறைவன் எடுத்துக் கூறும் சரித்திர நிகழ்ச்சிகளே இந்நூல். மக்களுக்குப் படிப்பினை தரும் நூல். மாசற்ற காதல் கதை கூறும் நூல். இதில் வரலாற்றுக் கதை கூற வந்த கவிஞரிடம் காப்பிய இலக்கண மரபைப் போற்றாமல் கதை சொல்லும் விரைவு காணப்படுகிறது.

6.4.3 கதைச் சுருக்கம்

இசுலாமிய வரலாற்றின்படி யூசுபும், அவரது தந்தை யாகூபும் இறைத்தூதர்கள். இவர்களின் கதையே இக்காப்பியத்தின் கதைக்கரு ஆகும்.

ஆணழகர் யூசுப்

அழகே உருவான ஆணழகர் யூசுப். தனது சகோதரர்களால், பொறாமையால் கிணற்றில் தள்ளப்பட்டார். வணிகர்களால் காப்பாற்றப்பட்டார். மன்னர் தைமூனின் திருமகள் ஜுலைகா. இவள் ஆணழகன் ஒருவனைக் கனவில் கண்டாள். தன் கனவுக் காதலனையே எண்ணி நினைந்து உருகுகிறாள். இறைவனிடம் இறைஞ்சுகிறாள். மீண்டும் கனவில் சந்திக்கிறாள். ஆனால் அவள் மிஸ்று நாட்டு முதல் அமைச்சரான அஜீஸுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்படுகிறாள். அவர் தனது கனவில் தோன்றிய ஆண் அழகர் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். ஏமாற்றத்தை அறிந்து அவளது உணர்ச்சியை மதித்து ஒதுங்கி வாழ்கிறார் அஜீஸ். கனவுக் காதலனைத் தவிர, காற்றும் தன்னைத் தீண்டக்கூடாது என வாழ்கிறாள் ஜுலைகா. அஜீஸ், அவளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்.

யூசுப்பும் ஜுலைகாவும்

வணிகர் ஒருவர், மிஸ்று நாட்டுக்கு ஆணழகர் யூசுபைக் கொண்டு வருகிறார். காட்சிப் பொருளாக வைத்துப் பொருள் சம்பாதிக்கிறார். அவரது அழகைக் காணக் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுகின்றனர். இச்செய்தி நகர் எங்கும் பரவுகிறது. இதனை அமைச்சர் அஜீஸ் அறிந்தார். அடிமையை அரண்மனைக்குக் கொண்டு வரச் சொல்கிறார். அப்பொழுது ஜுலைகா, தன் கனவுக் காதலன் அவரே என உணர்கிறாள். அவரின் எடைக்கு எடை தங்கம் கொடுத்து யூசுபை அடிமையாகப் பெறுகிறாள் ஜுலைகா. அவரைத் தன்வயமாக்கச் செய்யும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன. அந்நாட்டு உணவு அமைச்சர் ஆகிறார் யூசுப். அஜீஸின் மரணத்திற்குப்பின் முதலமைச்சர் ஆகிறார். அஜீஸின் மரணத்தால் விதவை ஆகிய ஜுலைகாவை யூசுபிற்கே மணமுடித்து வைக்கிறார் மன்னர்.