1.4 இருபதாம் நூற்றாண்டில் மலர்ந்த காப்பியங்கள்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இரட்சணிய யாத்திரிகம் ஒரு கிறித்தவத் தமிழ்க் காப்பியம். இக் காப்பியம் ஜான்பன்யன் என்பவரால் எழுதப்பட்ட புண்ணியப் பயணியின் முன்னேற்றம் (The Pilgrim’s Progress) என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்நூலின் ஆசிரியர் ஹென்றி ஆல்பிரடு கிருட்டிணப் பிள்ளை.

1948ஆம் ஆண்டில் வெளியான பாரத சக்தி மகா காவியம் சுத்தானந்த பாரதியாரால் இயற்றப்பட்டது. "சுத்தானந்தன் தமது வாழ்வையே உருக்கி இக்காவியத்தை வார்த்திருக்கிறார்" என வ.வே.சு.ஐயர் குறிப்பிட்டுள்ளார்.

1979இல் வெளிவந்த அரங்க.சீனிவாசனின் மனித தெய்வம் காந்தி காதை மற்றொரு சிறந்த பெருங்காப்பியமாகக் கருதத்தக்கது. கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற காப்பியமாக இதனையும் கருதலாம்.

1946இல் பதிப்பிக்கப்பட்டு 23 ஆண்டுகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு 1971இல் இரண்டாம் பதிப்பாக இராவண காவியம் வெளிவந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் புலவர் குழந்தை. "தமிழ் இலக்கியத்தில் அணிகலனாய் இருக்கத் தகுந்த அருமையான காவியம்" என்று இதனை நாரண. துரைகண்ணன் புகழ்கின்றார்.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மற்றொரு காப்பியம் பூங்கொடி. இந்நூலின் ஆசிரியர் முடியரசன். இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலையை அடியொற்றித் தோன்றியது பூங்கொடி.

இக்காப்பியங்களைத் தவிர, வேறு பல காப்பியங்களும் தமிழில் வெளிவந்துள்ளன. பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு பல காப்பியங்கள் உருவாகி உள்ளன.

கண்ணகி புரட்சிக் காப்பியம் (பாவேந்தர் பாரதிதாசன்), கண்ணகி வெண்பா (மு.இரா. கந்தசாமிக் கவிராயர்), விதியோ வீணையோ (கவிஞர் தமிழ்ஒளி), மாதவி காப்பியம் (கவிஞர் தமிழ்ஒளி), சிலம்பின் சிறுநகை (சாலை இளந்திரையன்), மணிமேகலை வெண்பா (பாவேந்தர் பாரதிதாசன்), குண்டலகேசி (இரா.குமரன்), சாலி மைந்தன் (ஆ.பழனி), மாதவ மேகலை (நா.மீனவன்) போன்ற வழி நூல்கள் உருவாகியுள்ளன.

பாரதிதாசன்
(பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக)

சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு பாரி காதை (ரா.ராகவையங்கார்), சான்றாண்மை (புலவர் அடிகளாசிரியர்), மாங்கனி (கண்ணதாசன்) ஆகிய சிறு சிறு வழிநூல்கள் எழுந்தன.

நாட்டிற்கு உழைத்த நற்பெரும் தலைவர்களைக் காப்பிய நாயகர்களாகக் கொண்டு இயேசு காவியம் (கண்ணதாசன்), காந்தி புராணம் (பண்டித அசலாம்பிகை அம்மையார்), மனித தெய்வம் காந்தி காதை (அரங்க. சீனிவாசன்), மகாத்மா காந்தி காவியம் (இராமானுஜக் கவிராயர்), நேரு காவியம் (கோ.செல்வம்), நேதாஜி காவியம் (புலவர் வாய்மைநாதன்), பெரியார் காவியம் (பா.நாராயணன்), அண்ணா காவியம் (கவிஞர் ஆனந்தன்), கலைஞர் காவியம் (கபிலன்) எனப் பல காப்பியங்கள் தோன்றியுள்ளன.

கண்ணதாசன்
(பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக)