1.5 இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்களின் போக்கு

உயர்குடி மக்களையும் அரசர்களையும் தலைமை மாந்தர்களாகக் கொண்டு இயற்றப்பட்ட காப்பியங்களிலிருந்து மாறுபட்டதாக 20ஆம் நூற்றாண்டுக் காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன எனலாம்.

1.5.1 இரட்சணிய யாத்திரிகம்

சாதாரண குடிமகன் ஒருவன் தன் பாவத்திலிருந்து விடுதலை பெற விரும்பி இரட்சிப்பினை நோக்கிச் செல்வதாகப் படைக்கப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினுள் வீடுபேற்றைக் குறித்துப் பேசுவதாக இந்நூல் உள்ளது. இல்லறம், துறவறம் என்ற இரண்டினையும் சுட்டிக்காட்டி, வீடுபேறு சிறந்ததென முந்தைய காப்பியங்கள் பேச, இந்நூல் வீடுபேற்றைக் குறித்துப் பேசுவதாக அமைந்துள்ளது எனலாம்.

இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்களையும், 47 படலங்களையும் கொண்டுள்ளது. ஆதி பருவம் 19 படலங்களையும், குமாரபருவம் 4 படலங்களையும், நிதான பருவம் 11 படலங்களையும், ஆரணிய பருவம் 10 படலங்களையும் கொண்டுள்ளன. மொத்தம் 3622 பாடல்களையும் தேவாரம் என்னும் தலைப்பில் இறை வணக்கப் பகுதிகளையும் இந்த நூலில் காணலாம்.

1.5.2 பாரதசக்தி மகாகாவியம்

பிற காப்பியங்களிலிருந்து ஒரு சில கோணங்களில் மாறுபட்டதாய் அமைந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் கடவுள் வாழ்த்தைப் பெறவில்லை. சூளாமணியும் சிந்தாமணியும், கம்பராமாயணமும் வாழ்த்து என்னும் உறுப்பைப் பெற்றுள்ளன. இந்த இடைக்காலக் காப்பியங்களின் மரபைப் பின்பற்றிச் சுத்தானந்தர் கடவுள் வாழ்த்தைத் தன் நூலில் அமைத்துள்ளார். ஒவ்வொரு காண்டத்திலும் தொடக்கத்தில் மட்டுமன்றி, பல்வேறு இடங்களிலும் கடவுள் வாழ்த்தை அமைத்துள்ளார்.

கடவுள் வாழ்த்து இடம் பெற்று உள்ளதாயினும் இந்நூலை இயற்ற, இதன் சிறப்புகள் விளங்க, இது நிலைத்து நிற்க அருளிட வேண்டும் என்னும் நோக்கில் வெளிப்படையாக இடம் பெறவில்லை.

பாரத சக்தி மகா காவியத்தில் கவி சுத்தானந்த பாரதி அரசர்களையும் அவதாரப் பிறப்புகளையும் சமயச் சான்றோர்களையும் குறிப்பிட்டு, பின்னர் ஜராதுஷ்டிரன், கிறிஸ்து, முகம்மது ஆகியோரையும் குறிப்பிட்டு நானகன், இராமதாஸ், இராமமோஹன், தயானந்தன், பரமஹம்சர் ஆகியோரையும் குறிப்பிட்டு, பின்னர் 20ஆம் நூற்றாண்டில் கதை தொடங்குவதாகப் படைத்துள்ளார். இவ்வாறு கால மயக்கம், இட மயக்கம் கொண்டதாகத் தமிழ்க் காப்பியங்கள் வேறு ஏதும் காணப்பெறவில்லை.

இப்பெருங் காப்பியம் சித்தி காண்டம், கௌரி காண்டம், சாதன காண்டம், தானவ காண்டம், சுத்த சக்தி காண்டம் என்னும் 5 காண்டங்களையும் 136 படலங்களையும் கொண்டதாய் அமைந்துள்ளது. கலிவிருத்தம், கலித்துறை, ஆசிரிய விருத்தம், நேரிசை, இன்னிசை, ஆசிரியப்பா, குறள்வெண்பா ஆகிய யாப்பு அமைதிகளைப் பெற்றுக் கலவை வடிவமாகக் காணப்பெறுகின்றது. முந்தைய காப்பியங்களில் இத்தகைய யாப்பு வடிவங்களைக் காணவியலவில்லை எனலாம்.

இரட்சணிய யாத்திரிகத்தைப் போன்று, சுத்தானந்தரின் பாரதசக்தி மகாகாவியமும், தத்துவக் கருத்துகள் உள்ளிட்ட ஒரு தொடர் உருவகக் காப்பியம் ஆகும். இத்தகைய உருவக அமைப்புகளைச் செவ்விலக்கிய மரபில் காண இயலவில்லை. இடைக்காலத்தில் எழுந்த சில நூல்களிலும் சிந்தாமணியிலும் அத்தகைய கருத்தோட்டம் காணப்படினும் தமிழ்க் காப்பிய மரபில் இத்தகைய மரபைக் காண இயலவில்லை.

1.5.3 மனித தெய்வம் காந்தி

அரங்க.சீனிவாசன் எழுதிய மனித தெய்வம் காந்தி காதை என்னும் காப்பிய நூல் 5 காண்டங்கள், 77 படலங்கள், 5183 விருத்தப் பாக்கள் கொண்டு அமைந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற காப்பியங்களைப் போன்றே இந்நூலிலும் கிளைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.

காந்தியடிகள் சிரவணன் கதையைப் படித்தார், அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார் எனக் கூறும் வகையில், சிரவணன் கதை 47 பாடல்களிலும் அரிச்சந்திரன் கதை 126 பாடல்களிலுமாக இவ்விரு கிளைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.

பெருங்காப்பியங்களிலும் சிறு காப்பியங்களிலும் காப்பியத் தலைமகனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடல் புனையும் மரபு காணப்பெறவில்லை எனலாம். ஆனால் மனித தெய்வம் காந்தி காதை காந்தியின் பிள்ளைமைப் பருவத்தைக் குறித்துப் பாடியுள்ளது. பரத கண்டத்தில் கால்பதித்த அயலாரின் மனக்கோட்டையைத் தகர்த்து எறியும் விதத்தில் சிற்றில் சிதைத்தது எனப் பாடியுள்ளது. இதனைக் கீழ்வரும் பாடல் உணர்த்துகின்றது.

இந்நெடும் பரதகண்டம் எம் அடிப் படுதலாலே

பன்னெடுங் காலம் ஆள்வோம் பார்மின்” என்று

அயலார் கட்டும்

அந்நெடு மனத்தின் கோட்டை அடித்தளம்

அழிந்ததென்ன

நன்னெடு மறுகில் சிற்றில் சிதைத்தனள்

நளினத் தாளால்!

 

சிற்றிலக்கியத் தாக்கத்தின் காரணத்தால் இக்கவிஞர் பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கிய வகைமையைத் தன் சிறு காப்பிய நூலில் பயன்படுத்தியிருக்கலாம். காப்பிய வளர்ச்சியில் காணப்பெறும் மற்றுமொரு பரிமாணமாக இதனைக் கருதலாம்.

மனித தெய்வம் காந்தி

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

1.5.4 இராவண காவியம்

புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களைக் கொண்டதாய் அமைந்துள்ளது. 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. காப்பியப் பாகுபாடு வருமாறு:

முதல் நூல், வழி நூல், சார்பு நூல், எதிர் நூல் என்னும் நால்வகையுள் எதிர்நூல் வழி தோன்றியதாகும். கம்பராமாயணத்திற்கு எதிராக எழுந்த எதிர் நூல் இராவண காவியம். எதிர்நூல் எழுவது தமிழ் இலக்கிய உலகில் புதிதல்ல. நீலகேசிக்கு எதிராக முன்னரே குண்டலகேசி தோன்றியுள்ளதைச் சான்றாகக் கூறலாம்.

இராவண காவியம் பாடப்பட்ட முறையில் பல்வேறு நிலைகளில் மாறுபட்ட தன்மையதாய்த் திகழ்கின்றது. நீலகேசி, குண்டலகேசி இரண்டும் எதிரெதிராகத் தோன்றிய நூல்களாயினும் வெவ்வேறு கதை மாந்தர்கள் காவிய முதன்மை மாந்தர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். கம்பராமாயணத்தில் எதிர்முகத் தலைவனாகப் பாடப்பட்ட இராவணனை இராவண காவியம் காவிய நாயகனாகப் படைத்துள்ளது. இத்தகைய போக்கினைத் தமிழ் இலக்கிய உலகில் எங்கும் காணவியலாது எனலாம்.

காப்பிய நாயகனை, உயர்த்திக் காட்டுவது காப்பிய மரபுதான். ஆயினும் இராவண காவியத்தில் ஆசிரியர் ஏன் இந்நூலை இயற்றினார் என்பதற்குக் காரணம் கூறுகின்றார். ஆரியப் பண்பாட்டைத் திராவிடப் பண்பாட்டில் ஏற்றி மொழி, நாடு, மக்கள் என அனைவரின் பெருமையையும் மாற்றிக் காட்டிய தன்மையினை எடுத்துக்காட்டி அதனை மாற்றி, தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் மக்கள் ஆகியோரின் பெருமையை உயர்த்த இந்நூலை இயற்றியதாக இக்கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.

பொய்மையை மெய்ம்மை என நம்பி வாழும் தமிழ் மக்கள் உண்மையை உணர்ந்துகொள்ளப் பாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்பொருள் உணர்த்தும் அப்பாடல் வருமாறு:

கரும்பை வேம்பென வேம்பைக் கரும்பென
விரும்பி வாழுமெய் யாமை வெருவுற
அரும்பி யுண்மை யருந்தமிழ் மக்கள்முன்
திரும்பி வாழ்ந்திடச் செய்யுமிக் காவியம்.

இவ்வாறு இக்காப்பியக் கவிஞர் நூல் எழுதுவதற்கான காரணத்தை எடுத்துரைத்துள்ளதைப் போல, பிற காப்பியக் கவிஞர் எவரும் எடுத்துரைத்துள்ளதாகத் தெரியவில்லை. காவியம் எழுந்த காலத்தின் சமூகச் சூழல் கவிஞர் இவ்வாறு கூறக் காரணமாக அமைந்திருக்கலாம்.

இந்நூல் திருவள்ளுவர் ஆண்டு 2023இல் எழுதப்பட்டதென்றும், கிறித்தவ ஆண்டு 1946இல் இயற்றப்பட்டதாகவும் இந்நூலில் புலவர் குழந்தை குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாது, நூற்பயனை இந்நூலாசிரியர் கூறுவதும் புதுமையாகக் காணப்படுகின்றது.

வாழ்வியல் அறங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நூலும் இயற்றப்பட்டு, அதன் ஊடாகத் தலைவன் வாழ்வினைப் புகுத்தி, தான் கூறும் அறங்களை வெளிப்படுத்திக் கவிஞர் பாடுவர். தமிழர்களது அடிமை வாழ்வை வீழ்த்தி, இழந்த உரிமையை மீண்டும் பெறும்படி காவியம் படிப்போரை உணரச் செய்வதே காப்பிய நூற்பயனாக இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இதைப் போலவே காப்பியம் நிறைவுறும் தறுவாயில் வாழ்த்துப் பாடி முடிப்பது தமிழ்க் காப்பிய மரபில் காணவியலாத ஒன்று. ஆனால் இந்நூலில் தமிழ்மொழி, தமிழினம், தமிழர்கள் வாழுமாறு வாழ்த்து நிறைவுறும் பாங்கு காணப்பெறுகின்றது.

இவ்வாறு ஒருசில நிலைகளில் இராவண காவியம் வேறுபட்டு அமைந்துள்ளது. பிற காப்பிய ஆசிரியர்கள் அவையடக்கம் பாடுவது போலவே இந்நூலிலும் அவையடக்கப் பாடல் காணப்படுகிறது. பெருங்காப்பியம் போன்றே நாட்டு வருணனை, நகர வருணனை, நாயகன் தோற்றம் எனப் பலவற்றைத் தன்னுள் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.

காவியத்தின் வடிவமைப்பில் ஆசிரியர் கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் விரவி வர யாப்பினைப் பயன்படுத்தியுள்ளார். செவ்வியல் இலக்கியங்களைப் போன்று இந்நூலுள் நாடகத் தன்மை மிகுந்து அமைந்துள்ளது.

1.5.5 பூங்கொடி

இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையின் நகலாக, பூங்கொடிக் காப்பியம் அமைந்துள்ளது. மணிமேகலை பௌத்தம் பரவக் காரணமாகத் திகழ, பூங்கொடிக் காப்பியத் தலைவி பூங்கொடி, தமிழ்மொழி வளரத் தொண்டு செய்வதாகப் படைக்கப்பட்டுள்ளாள். மணிமேகலையில் காணப்பெறும் காட்சிகள், கதாபாத்திரங்கள் போன்று இந்நூலிலும் படைக்கப்பட்டுள்ளன.

மணிமேகலையில் பளிக்கறையில் மணிமேகலை நுழைந்தபோது தொடர்ந்து வந்த உதய குமரன் உள் நுழையாது வெளியில் காத்திருந்தது போல் பூங்கொடிக் காப்பியத்தில் கோமகன் என்னும் கதைத் தலைவன் பூங்கொடியைத் தொடர்ந்து சென்றான். அவள் நூலகத்தில் நுழைந்ததால், அவ்விடத்தில் தன் விருப்பத்தைக் கூறாது விலகினான் என அமைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.

மணிமேகலையில் இடம் பெற்றுள்ள கதை மாந்தர்கள் போன்றே பூங்கொடியில் கதை மாந்தர்கள் இடம் பெற்றுள்ளமைக்குக் கீழ்வருவன சான்றுகளாகும்:

மணிமேகலை

பூங்கொடி

மாதவி

அருள் மொழி

வயந்த மாலை

அல்லி

சித்ராபதி

வஞ்சி

காய சண்டிகை

சண்டிலி

அறவணஅடிகள்

மறைமலையடிகள்

உதயகுமரன்

கோமகன்

மணிமேகலை 30 காதைகளில் அமைய, பூங்கொடி 31 காதைகளில் அமைந்துள்ளது. பூங்கொடிக் காப்பியத்தின் காதைப் பெயர்கள் மணிமேகலை காப்பியத்தின் காதைப் பெயர்களோடு ஒத்துக் காணப்படுகின்றன.

மணிமேகலை

பூங்கொடி

விழாவறை காதை

விழாவயர் காதை

மலர்வனம் புக்க காதை

பூங்கா புக்க காதை

பளிக்கறை புக்க காதை

படிப்பகம் புக்க காதை

மணிமேகலா தெய்வம் வந்து

தாமரைக்கண்ணி தோன்றிய

தோன்றிய காதை

காதை

பாத்திரம் பெற்ற காதை

ஏடு பெற்ற காதை

சிறை செய் காதை

சிறை படு காதை

சிறை விடு காதை

சிறை விடு காதை

இவ்வாறு பலநிலைகளில் செவ்விலக்கியத்தோடு ஒத்துப் போகும் இக்காப்பியம் தான் தோன்றிய காலச் சூழலுக்கு ஏற்றவாறு மாறுபட்டுத் தோன்றுகிறது. இந்நூலாசிரியர் முடியரசன் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். ஆதலால் பூங்கொடிக் காப்பியத்தில் மொழிப் போராட்டம், ஆலயங்களில் தமிழ்ப் போராட்டம், தமிழிசைப் போராட்டம் என இருபதாம் நூற்றாண்டின் பின்னணியில் தம் காப்பியத்தைப் படைத்துள்ளார். தமிழ்மொழிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்ட எதிர்ப்பை முன்வைத்துப் படைத்துள்ளதால் இக்காப்பியத்தில் சிலர் மொழிப் போராட்ட வீரர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.