2.1 பாரத சக்தி மகாகாவியம்

பாரத சக்தி மகாகாவியம் கவியோகி சுத்தானந்த பாரதியாரின் படைப்புகளுள் ஒன்றாகும். சமயோக வேதம் என்னும் சிறப்பினை இக்காவியம் பெற்றுள்ளது. இதன் முதல் பதிப்பு 1948லும் விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 1969லும் வெளிவந்தன.

இந்நூலுக்கு அண்ணல் காந்தி அடிகள், அன்னிபெசண்ட் அம்மையார், சுவாமி சிவானந்தர், ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள், வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை, நவநீத கிருட்டிண பாரதியார், மட்டக்களப்பு மகாகவி, மகா மகோபாத்யாய உ.வே. சாமிநாதையர், திரு.வி. கல்யாண சுந்தரனார் முதலிய சான்றோர்கள் பாராட்டுரையும் டாக்டர் மு.வரதராசனார் சிறப்புப் பாயிரமும் அளித்துள்ளனர். இந்நூலின் சீர்மையை அவை விளக்கும்.

இக்காப்பியம் பற்றிய மிக வியப்பூட்டும் செய்தி, இது 50,000 (ஐம்பதாயிரம்) அடிகளால் ஆனது என்பதாகும். இக்காவியம்,

(1) சித்தி காண்டம்

(2) கௌரி காண்டம்

(3) சாதன காண்டம்

(4) தானவ காண்டம்

(5) சுத்த சக்தி காண்டம்

என்னும் ஐந்து காண்டங்களைக் கொண்டது. இக்காவியம் படலம் என்னும் அமைப்பு உடையது. ‘மங்கல வாழ்த்துப் படலம்’ முதல் ‘சுத்தவாணிப் படலம்’ ஈறாக 147 படலங்களைக் கொண்டுள்ளது.

மக்கள் அனைவரும் சாதி, சமய, இன, மொழி வேற்றுமை இன்றிச் சன்மார்க்க நெறியில் சமயோக வாழ்வு பெறுவதை நோக்கமாக இக்காப்பியம் முன்னெடுத்துச் செல்கிறது. இச்சமயோகம் பற்றி இந்நூலில் பல இடத்தும் பேசப்பட்டுள்ளது. மகாகவி சுத்தானந்த பாரதியார்

மனத்தைத் திருத்தி இனத்தைத் திருத்தி
காமம் வெகுளி கலக்கம் இல்லாது
உள்ளம் களிக்க உலகம் செழிக்க
எல்லா உயிர்க்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே...
எனும்சம யோகமே இதயத் துடிப்பாய்
அகப்புறத் தூய்மையும் அஞ்சா உரிமையும்
அமரத் தன்மையும் அடைந்து மாந்தர்
வாழும் வகையை வழங்கும் சக்தியே-
சமயோ கந்தரும் பாரத சக்தியாம்.

(பாரத சக்தி மகாகாவியம், பாரத சக்தி மலர்ச்சி, 23)

என்று சமயோகம் பற்றியும் அதனை வழங்கும் பாரதசக்தி பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இக்காப்பியம் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் தலையாயதாகும். இக்காப்பியம் கவியோகி சுத்தானந்த பாரதியின் ஆன்மிகப் பயணம் பற்றியது என்று உறுதியாகக் கூறலாம். சத்தியன், சுத்தன், சக்தி, மாவலி, கலியன், மோகி ஆகிய காப்பிய மாந்தர்கள் பண்பின் உருவகங்களாக அமைந்துள்ளனர். அவ்வகையில் இஃது ஓர் உருவகக் காப்பியமாக (Allegory) அமைந்துள்ளது.

2.1.1 ஆசிரியர்

பாரத சக்தி மகா காவியத்தின் ஆசிரியர் கவியோகி சுத்தானந்த பாரதியார் ஆவார். இவர் சடாதரையர் என்பாருக்கும் காமாட்சி அம்மை என்பாருக்கும் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். இவர் பிறந்த ஊர் சிவகங்கையாகும். பிறந்தநாள் 11.5.1897 என்பதாகும். 92 ஆண்டுகள் நிலவுலகில் வாழ்ந்தார்.

இவர் தெய்வ சிகாமணிப் புலவரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். தேவார, திருவாசகங்களையும், தாயுமானவர், கம்பர் ஆகியோர் படைப்புகளையும், திருக்குறளையும், கைவல்யம், ஞானவாசிட்டம் முதலிய நூல்களையும், மெய்கண்ட சாத்திரங்களையும் விரும்பிக் கற்றார். இசைப் பயிற்சியும் பெற்றார். இளமையிலேயே யோக வாழ்க்கையை மேற்கொண்டார். இவர் ‘ஓம் சுத்த சக்தி’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்தார். தியானம், பக்திப் பாடல்களையே வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தார். தமிழினிடத்தும் நாட்டினிடத்தும் மனித சமுதாயத்திடத்தும் அன்பு பூண்டு வாழ்ந்தார்.

வாழ்வைத் தவத்துக்கே நிலைக்களம் ஆக்கிய சுத்தானந்த பாரதியார் பல இதழ்களையும் நடத்தியுள்ளார். பாலபாரதி, சமாசபோதினி, தொழிற்கல்வி, இயற்கை, தமிழ் சுயராஜ்யா ஆகியவை அவர் நடத்திய இதழ்களாகும்.

அவர் பன்மொழிப் புலமையாளராகவும் இருந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, தெலுங்கு, வடமொழி ஆகியவை அவர் அறிந்த பிற மொழிகளாகும்.

அவர் கைவண்ணத்தில் பல படைப்புகள் உருப்பெற்றன. குண்டலகேசி, வளையாபதி ஆகிய இரண்டையும் ஆசிரியப்பாவில் படைத்துள்ளார். கவிக்குயில் பாரதியார், சிலம்புச் செல்வம், திருக்குறள் இன்பம், தமிழா கேள் முதலிய பல நூல்களைப் படைத்துள்ளார். ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் யூகோவின் Les Miserables என்ற நாவலை ஏழைபடும் பாடு என மொழிபெயர்த்துத் தந்தார். தாந்தே (Dante), வால்ட் விட்மன் (Walt Whitman) முதலியோர் வாழ்க்கை வரலாற்றையும் படைப்புத் திறனையும் நூலாக்கியுள்ளார்.

தாந்தே

வால்ட்விட்மன்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

சுவாமி சுத்தானந்தர் நாடக ஆசிரியராகவும் நாடக நடிகராகவும் திகழ்ந்துள்ளார். "இந்தியாவில் முதல் விடுதலைக்கொடி நாட்டித் திருக்குறள் ஆட்சி நிறுவிய வீரசக்தி வேலுநாச்சியார்" என்னும் நாடகத்தை இயற்றியுள்ளார். அந்நாடகத்தில் நடித்தும் உள்ளார். மற்றொரு குறிப்பிடத்தக்க நாடகம் காலத்தேர் (The Car of Times) என்னும் இனிய காவிய நாடகம் ஆகும்.

இவ்வாறு தம் வாழ்நாளெல்லாம் தமிழின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர் கவியோகி சுத்தானந்தர் என்றால் அது மிகையாகாது.

2.1.2 கதைக்கரு

இக்காப்பியத்தின் கருப்பொருள் தத்துவச் சாயல் உடையதாகும். நன்மையும் தீமையும் மோதுகின்றன. முடிவில் நன்மை வெற்றி பெறுகிறது. தீமையும் தன் இயல்பு மாறி நன்மையின் பக்கம் சாய்கிறது. சாத்வீகம் என்னும் பண்பு மேலோங்கி நிற்கிறது. உலகம் போரும் பூசலும் அற்று, மக்கள் அனைவரும் ஒரே இறைவன்; ஒரே இனம் என்னும் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்து சமயோகம் புரிந்து மேன்மையுற வேண்டும் என்பது பாரதசக்தி மகாகாவியத்தின் கருப்பொருளாகும்.