3.1 இராவண காவியம்

புலவர் குழந்தையின் இராவண காவியம் பழந்தமிழ் மரபைப் பின்பற்றி எழுதப்பட்ட காப்பியமாகும். பழைய யாப்பு மரபினைப் பின்பற்றிக் கலிவிருத்தம், கொச்சகம் முதலிய யாப்பு வகைகளால் இக்காப்பியம் யாக்கப்பட்டுள்ளது.

இக்காப்பியம் ஐந்து காண்டங்களால் ஆனது. அவை, 1) தமிழகக் காண்டம், 2) இலங்கைக் காண்டம், 3) விந்தக் காண்டம், 4) பழிபுரி காண்டம், 5) இலங்கைக் காண்டம்.

இக்காப்பியக் காண்டம் ஒவ்வொன்றும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நூலில் அமைந்துள்ள மொத்தப் படலங்கள் ஐம்பத்தேழாகும். பாயிரம் உட்பட ஐந்து காண்டத்திலும் உள்ள மொத்தப் பாக்கள் 3100.

இக்காப்பியத்தின் தொடக்கப் படலம் தமிழகக் காண்டத்தின் தமிழகப் படலமாகும். இக்காப்பியத்தின் நிறைவுப் படலம் போர்க் காண்டத்தில் உள்ள இறுவாய்ப் படலம் ஆகும்.

புலவர் குழந்தை தாம் படைத்த இக்காவியத்தைத் தமிழர்க்குக் காணிக்கையாக்கியுள்ளார். தமிழர்கள் தம் பண்பாட்டுச் சிறப்பை அறிந்து வாழ்வதற்காக இராவணனின் பெருமை படைப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தமிழன் செந்தமிழ்க்காக வாழ்ந்தஇரா
     வணன்பெருஞ்சீர் இனிது பேசும்
செந்தமிழின் பூங்காவாம் இராவணகா
     வியம்எனும்இத் தேம்பா நூலைத்
தந்தமிழின் பண்பாட்டை அறிந்துநடைப்
     பிடித்தினிது தகவே வாழப்
பைந்தமிழின் பேரேடா வருங்காலத்
     தமிழர்க்குப் படைக்கின் றேனே

(செந்தமிழ்க்கா = செந்தமிழ்க்காக; தேம்பா = இனிய பாக்களால்; பேரேடா = பேரேடு ஆக)

3.1.1 ஆசிரியர்

புலவர் குழந்தை ஓலவலசுப் பண்ணைக்காரர்குடியில் 1-7-1906இல் பிறந்தார். முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார் என்பவர்களின் ஒரே மகனாவார். இவர் திண்ணைப் பள்ளியில் கற்ற காலம் மொத்தமாக எட்டு மாதங்களேயாம். இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். இசைப் பாடல்களே இவர் முதன் முதலாகப் பாடிய பாடல்கள். ஆசிரியர் உதவியின்றித் தாமே முயன்று தமிழ் கற்றுச் சீரிய புலமை எய்தினார். அதன் அடையாளமாக 1934இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் பெற்றார். ஆசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் புலவர் குழந்தை தம்மை இணைத்துக் கொண்டார். சுயமரியாதைக் கொள்கையில் உறுதியுடையவராய்த் திகழ்ந்தார். இறை நம்பிக்கை இல்லாதவர். 1938, 1948 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டார். வேளான் என்னும் மாத இதழை நடத்தினார். விதவை மணம், கலப்பு மணம், சீர்திருத்தமணம் ஆகியவற்றை முன்னின்று நடத்தினார். திருக்குறள் குழந்தை உரை என்ற நூலினை இருபத்தைந்து நாட்களில் எழுதி வெளியிட்டார்.

புலவர் குழந்தை தமிழ்ச் செய்யுள் மரபினைச் சிதையாமல் காக்க வேண்டும் என்னும் கருத்துடையராவார்.

பிற படைப்புகள்

இராவண காவியத்தைத் தவிர, புலவர் குழந்தை மரபுவழி யாப்பில் அமைந்த அரசியலரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவற்றுள் அரசியலரங்கம் சிந்துப்பாவில் தமிழக வரலாற்றினைச் சுவைபடக் கூறுகிறது. காமஞ்சரி என்னும் நாடகநூல் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் போல ஒரு நாடகக் காவியமாகும்.

புலவர் குழந்தை பழந்தமிழ் நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார். திருக்குறள், தொல்காப்பியப் பொருளதிகாரம், நீதிக்களஞ்சியம் ஆகியவை அவரால் விளக்கவுரை எழுதப்பட்ட நூல்களாகும்.

புலவர் குழந்தையின் யாப்பிலக்கண நூல்கள் எளிமையாக யாப்பிலக்கணத்தை, கவிதை இயற்றும் நெறிகளை விளக்குகின்றன. அவ்வகையில் யாப்பதிகாரம், தொடையதிகாரம் ஆகியவை சூத்திர வடிவில் இலக்கண நெறிகளை விளக்குவனவாகும்.

புலவர் குழந்தை சில ஆய்வு நூல்களையும் இயற்றியுள்ளார். அவை தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழகரும், பூவாமுல்லை என்பனவாம். நாட்டு வரலாற்று நூல்கள் கொங்குநாடு, தமிழக வரலாறு ஆகியவையும் தனி மனித வாழ்க்கை வரலாற்று நூல்கள் தீரன் சின்னமலை, அண்ணல் காந்தி ஆகியவையும் குறிப்பிடத்தக்கன. மேலும் பல நூல்களை இயற்றித் தமிழுக்கு அரும்பணி ஆற்றியுள்ளார். அவை கொங்குநாடும் தமிழும், கொங்குக் குல மணிகள், அருந்தமிழ் விருந்து, அருந்தமிழ் அமிழ்து, சங்கத்தமிழ்ச் செல்வம், ஒன்றே குலம், தமிழெழுத்துச் சீர்திருத்தம் என்பனவாம்.

கதைக்கரு

இராவண காவியத்தின் கதைக்கரு புரட்சித் தன்மை உடையது. மரபு வழியாகப் போற்றிப் பேசப்பட்ட இராமனின் பெருமை இக்காப்பியத்தில் இடம் பெறவில்லை. இலங்கை மாமன்னன் வேள்வியின் பெயரால் உயிர்க்கொலை புரிவதைத் தடுத்து நிறுத்தி நல்வழிப்படுத்த முனைகிறான். அதன் காரணமாக இராவணனுக்கும் இராமனுக்கும் போர் நடக்கிறது. உயிர்க்கொலை மறுப்பு இக்காப்பியத்தின் கருப்பொருள் ஆகும்.

3.1.2 கதைச்சுருக்கம்

காவியப் போக்கை அறிந்து கொள்ள இராவண காவியத்தின் கதைச் சுருக்கம் தரப்படுகிறது.

பழந்தமிழகம்

பழந்தமிழகம் ஐந்து பிரிவாக அமைந்திருந்தது. அவையாவன: பெருவளநாடு, தென்பாலி நாடு, திராவிடம், சேரநாடு, சோழநாடு என்பனவாம். முதற் கடல்கோளில் தென்பாலியும் கிழக்கு நாட்டின் பெரும்பகுதியும் இரையாயின. இரண்டாம் கடல்கோளுக்குப் பெருவள நாட்டின் பெரும் பகுதியும் கிழக்கு நாட்டின் எஞ்சிய பகுதிகளும் அழிவுற்றன. மூன்றாம் கடல்கோளால் திராவிடத்தின் ஒரு பகுதி மறைந்தது.

இராவணன் பிறப்பு

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான் தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.

திருமணம்

மலைவளம் காணச் சென்ற இராவணனும் முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்றனர். இராவணன் வண்டார் குழலியை மணந்து கொண்டான். இல்லறப் பயனாய் அவர்களுக்குச் சேயோன் என்னும் மகன் பிறந்தான்.

தாடகை

தமிழகத்தின் வடக்கெல்லையிலிருந்து ஆரியர் விந்தக் காடுகளில் குடியேறினர். அவர்கள் வேள்வியில் உயிர்களைப் பலி கொடுத்து உண்டு வந்தனர். தமிழர்கள் அதனைத் தடுத்தனர். அப்படியும் அவர்கள் உயிர்க்கொலை வேள்வியைத் தொடர்ந்து செய்து வந்தனர். உயிர்க்கொலையைத் தடுக்க வேண்டி இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகையின் வேண்டுகோளை ஏற்று இராவணன் சுவாகு என்னும் படைத்தலைவனை அனுப்பினான். சுவாகு இடைவள நாட்டில் நிகழ்ந்த புலைவேள்வியை அகற்றினான். கோசிகன் என்னும் ஆரிய முனிவன் வேள்வி செய்ய இயலாது மனமுடைந்தான்.

தசரதன்

வடநாட்டில் சரயு ஆற்றின் கரையிலுள்ள அயோத்தியைத் தசரதன் என்னும் சிற்றரசன் ஆண்டு வந்தான். கோசலை, சுமத்திரை என்னும் இரு மனைவியரும் பல காதல் மனைவியரும் இருந்தனர். மேலும் கேகயன் மகள் கைகேசியைத் தன் நாட்டை அவளுக்குப் பரிசமாகக் கொடுத்து மணந்து கொண்டான்.

தசரதன் பிள்ளையில்லாது வருந்தினான். வசிட்டரின் அறிவுரைப்படி கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு குதிரை வேள்வி செய்தான். ஓர் ஆண்குதிரை படையுடன் நாடு முழுவதும் சுற்றித் திரும்பியது. முனிவர்கள் வேள்வி செய்தனர். தசரதன் தன் மனைவியர் கோசலை, சுமத்திரை, கைகேசி ஆகிய மூவரையும், வேள்வியாசிரியன் கலைக் கோட்டு முனிவர் முதலிய முனிவர் மூவர்க்குக் காணிக்கை ஆக்கினான். அம் மூவரும் பொருளைப் பெற்றுக் கொண்டு அவர்களை மன்னனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். சில திங்கள்கள் கழிந்தன. கோசலை இராமனையும், சுமத்திரை இலக்குவனையும், சத்ருக்கனையும் கைகேசி பரதனையும் பெற்றெடுத்தார்கள். மக்கள் நால்வரும் மணப்பருவம் அடைந்தனர்.

தசரதன்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

கோசிகனுடன் இராமலக்குவர்

வேள்வி செய்ய ஏற்பட்ட தடைகளால் மனம் உடைந்த கோசிகன் அயோத்தி சென்றான். அங்குத் தசரதனைச் சந்தித்து இராம இலக்குவனை அழைத்துக் கொண்டு இடைவள நாட்டிற்குத் திரும்பினான். முனிவர் சொற்படி, அங்கு வந்த தாடகையை இராமலக்குவர் கொன்றனர். கோசிகன் தன் குடிலுக்குச் சென்று வேள்வி செய்யத் தொடங்கினான். வேள்வியைச் சுவாகுவும் மாரீசனும் தடுத்தனர். இராமன் அம்பால் சுவாகு இறந்தான்; மாரீசன் உயிர் பிழைத்துச் சென்றான்.

சுவாகு இறந்ததை அறிந்த இராவணன் விந்த நாட்டை ஆண்டு வந்த தன் தங்கை காமவல்லியின் பாதுகாப்பிற்காகக் கரன் என்னும் படைத்தலைவனை அனுப்பி வைத்தான்.

இராமன் திருமணம்

மிதிலைக்குச் சென்ற கோசிகன் தன்னோடு இராமனையும் இலக்குவனையும் அழைத்துச் சென்றான். அங்கு அவர்கள் சனகனின் விருந்தினராக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அங்குக் கோசிகனின் கட்டளைப்படி இராமன் வில்லை ஒடித்தான்.

இராமன் சீதையை மணந்தான்; ஊர்மிளையை இலக்குவனும், மாளவியைப் பரதனும், சுதகீர்த்தியைச் சத்துருக்கனும் மணம் புரிந்து கொண்டனர்.

இராமன் திருமணம்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

இராமன் காடேகுதல்

தசரதன் இராமனிடம் பற்றும் பரிவும் கொண்டிருந்தான். பரதனுக்குரிய நாட்டை இராமனுக்கு உரிமையாக்கக் கருதிய தசரதன் பரதனையும் சத்ருக்கனையும் அவன் பாட்டன் ஊருக்கு அனுப்பினான். இராமன் குடிமக்களிடம் நெருங்கிப் பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றான். தசரதன் தக்க தருணத்தில் அரசர்களையும் குடிமக்களையும் கலந்து இராமனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட முடிவு செய்தான். இதனை அறிந்த கைகேசியின் தோழியாகிய மந்தரை கைகேசியிடம் இராமனுக்கு முடிசூட்டுவதைத் தடுக்கும்படி கூறினாள். சம்பரனைப் போரில் வெற்றி கொள்ளக் கைகேசி உதவியதால், அவளுக்குத் தசரதன் இருவரங்கள் அளித்தான். அவ்வரங்களில் ஒன்றால் பரதன் நாடாளவும், மற்றொன்றால் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காடாளவும் கைகேசி தசரதனிடம் வரம் கேட்டாள். தசரதன் கைகேசியிடம் கெஞ்சியும் இணங்காமல் அவள் உறுதியாக இருந்தாள். தசரதனின் எண்ணம் ஈடேறாமையால் இராமன் காடேக வேண்டியதாயிற்று. இராமனும் இலக்குவனும் சீதையும் காட்டிற்குச் சென்றனர்.

குகனுடைய உதவியால் கங்கையைக் கடந்த மூவரும் வழிநெடுக முனிவர்கள் வரவேற்கச் சித்திரகூட மலையை அடைந்தனர். இராமன் காடேகியதை அறிந்து தசரதன் மாண்டான். தந்தையின் இறப்புச் செய்தியைக் கேட்ட பரதன் அயோத்திக்குத் திரும்பினான். தந்தையை அடக்கம் செய்தான். பின்பு இராமனைத் தேடிப் படைகள் சூழச் சித்திரகூடம் சேர்ந்தான். பரதன் இராமனை நாடாள வரும்படி வேண்டினான். ஆனால் இராமன் நாடு பரதனுக்கு உரியது என்று கூற, பரதன் அதனை இராமனுக்குக் கொடுத்துவிட்டதாகக் கூறினான். அதனை ஏற்காத இராமன், பெற்றோரின் ஆணைப்படி பதினான்கு ஆண்டுகள் கழித்து வரும் வரை தன் சார்பாக நாட்டை ஆண்டு வருமாறு பரதனைக் கேட்டுக் கொண்டான். பரதன் இராமனின் மிதியடியைப் பெற்றுக் கொண்டு நந்தியூரில் தங்கி மிதியடியை அரியணை ஏற்றி வணங்கி வந்தான், சத்ருக்கன் ஆட்சி செய்தான்.

சித்திரகூடத்தை விட்டுச் சரபங்கன் நிலையை (ஆசிரமம்) மூவரும் அடைந்தனர். அங்கிருந்த முனிவர்கள் தாங்கள் வேள்வி செய்யத் தடையாக இருப்பதைக் கூறி, தங்களைக் காக்கும்படி வேண்டிக் கொண்டனர். பின் அகத்தியன் நிலையை (ஆசிரமம்) அடைந்து அவனிடம் ஒரு வில்லும் இரு அம்புக் கூடும் பெற்றுக் கொண்டு பஞ்சவடி என்னும் இடத்தில் தங்கினர்.

இராமன் காடேகுதல்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

இராமனும் காமவல்லியும்

இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு அவள்பால் காமுற்றான். அவள் கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவனுடைய விருப்பத்திற்கு உடன்படாததால் இலக்குவனால் அவள் உறுப்புகள் அறுக்கப்பட்டன. காமவல்லி இறந்தாள். கரனும் அழிக்கப்பட்டான்.

இராவணன் சீதையைக் கவர்தல்

தன் தங்கையும், கரனும் அழிந்த செய்தியை இராவணன் தூதரால் அறிந்தான். உடனே அவன் விந்தம் சென்று காமவல்லி வளர்த்த மானை விட்டு இராமலக்குவரைப் பிரிக்கச் செய்தான். வீரர்களைக் கொண்டு அவர்களை வளைத்துக் கொள்ளுமாறு செய்து சீதையைக் கவர்ந்து சென்று அவளைத் தன் தங்கையின் நிலையில் வைத்துப் போற்றினான். இராமலக்குவர் இலைக்குடிலில் சீதையைக் காணாது வருந்தித் தேடி ஒரு முனிவன் குடிலை அடைந்தனர். அம்முனிவனால் இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு இலங்கை சென்றதையும் வாலியால் துரத்தப்பட்ட சுக்கிரீவன் வரலாற்றையும் கேட்டறிந்தனர். பின்னர், இராமலக்குவர் மதங்கரிடத்தில் நிகழ்ந்தது கூறினர். அனுமன் அவ்விடம் வர அவர்களை அவனுக்கு மதங்கர் அறிமுகப்படுத்தினார். அவர்கள் அவனுடன் சென்று சுக்கிரீவனைக் கண்டு அவனுடைய உதவியை வேண்டினார். வாலியைக் கொன்று தனக்கு அரசு ஈந்தால் தான் சீதையை மீட்க உதவுவதாகச் சுக்கிரீவன் நிபந்தனை விதித்தான். இராமன் அதற்கிசைந்து சுக்கிரீவனை வாலியோடு போரிடச் செய்து, மறைந்திருந்து அம்பெய்து வாலியைக் கொன்றான். சுக்கிரீவனைக் கிட்கிந்தையின் மன்னன் ஆக்கினான்.

இராவணன் சீதை சந்திப்பு

இராவணன் தன் மனைவியோடு சீதையைக் காண வந்தான்; இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவன் படையோடு இலங்கைக்கு வரப்போவதைச் சீதைக்குக் கூறினான். சீதை தன்னால் இலங்கை போர்க்களம் ஆவதை எண்ணி மனம் வருந்தினாள். சீதை தன் தோழி திரிசடையிடம் இலங்கை போர்க்களம் ஆவதைப் பீடணனைக் கொண்டு தடுக்க வேண்டுமெனக் கூறினாள். பீடணன் சுக்கிரீவனைப் போலத் தானும் அரசனாக வேண்டுமென எண்ணித் தன் நண்பன் நீலனிடம் தன் கருத்தை வெளிப்படுத்தி அதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டினான்.

இலங்கையில் அனுமன்

இராமன் சீதையைத் தேட அனுமனை இலங்கைக்கு அனுப்பினான். இலங்கை சென்ற அனுமன் ஓர் ஆரியனால் பீடணன் மனையை அடைந்தான். பீடணன் அவனை வரவேற்றுத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். அனுமன் அவன் எண்ணம் ஈடேற உதவுவதாகக் கூறினான். பின்னர் திரிசடையுடன் சென்று சீதையைத் தனியே கண்டு இராமன் படையுடன் வந்து இலங்கையை அழித்து உன்னை மீட்டுச் செல்வான் என்று கூறினான். சீதை இராவணனின் பெருமைகூறி, இராமனைத் தனியே வரும்படி கூறு என்று அனுமனுக்கு உணர்த்தினாள்.

அனுமனை வாயிற் காவலர்கள் பிடித்து இராவணனிடம் கொண்டு சென்றனர். இராவணன் அனுமனைக் குறித்து அறிந்தான். சுக்கிரீவன் அயலானோடு சேர்ந்து வாலியைக் கொன்றதை இராவணன் கடிந்து கூறினான். இராமனைத் தனியாக வந்து மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்துச் செல்லும்படி இராமனிடம் கூறும்படி சொல்லி அனுமனை அனுப்பி வைத்தான்.

இலங்கையில் அனுமன்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

அதிகாயன் தூது

அனுமன் சென்று கூற, இராமன் பணிய மறுத்துப் படையுடன் இலங்கைப் புறத்தே சென்று தங்கினான். இதனை அறிந்த இராவணன் அதிகாயனை இராமனிடம் தூது அனுப்பினான். இராமன் தூதுவனிடம் தான் போருக்குத் தயார் எனக் கூறி அனுப்பினான்.

பீடணன் வெளியேறல்

இராவணன் பேரவையைக் கூட்டி இராமனை முறியடிப்பதென முடிவு செய்தான். அப்போது பீடணன் அவையில் எழுந்து இராமனின் திறமையைக் கூறிச் ‘சீதையை விட்டு அவனோடு உறவு கொள்வோம்; விந்த நாட்டை விட்டேனும் பகையின்றி வாழ்வோம்’ என்றான். இராவணன் சினமுற்றுப் பீடணனை அவையை விட்டு வெளியேறுமாறு கூற, அவனும் வெளியேறினான்.

பீடணன் தன் படைத்தலைவர்களுடன் இராமனைச் சரண் புகுந்தான். இராமன் அவனை இலங்கை மன்னனாக முடி சூட்டினான். பீடணன் இலங்கையை வெல்லும் வழியையெல்லாம் இராமனுக்கு உணர்த்தினான்.

இராவணன் இதனையறிந்து படைகளைத் திரட்டிப் போருக்குத் தயாரானான். ஒற்றரை நிலைமையை அறிந்து வர ஏவினான். பீடணன் ஒற்றரை இராமனுக்குக் காட்டிக் கொடுத்தான். ஒற்றர்கள் சிறைப்பட்டனர். தமிழர் படைக்கும் ஆரியர் படைக்கும் போர் மூண்டது. இரு தரப்பிலும் பலர் மாண்டனர்.

இராமன் கும்பகன்னன் போர்

போர் நடந்தது. அப்போரில் கும்பகன்னன் கொல்லப்பட்டான். தன் தம்பி கும்பகன்னன் இறந்த செய்தி கேட்டுக் கதறி அழுதான் இராவணன். சேயோன் தன் தந்தையைத் தேற்றிவிட்டுப் போர்க்களம் புகுந்தான். கூட்டமாக இருந்த ஆரியப்படையோடு தனியாகப் போரிட்டான். சேயோனைக் கொல்ல இதுவே தக்க தருணம் என்று பீடணன் இராமனிடம் கூற, இராமனின் ஏவலின்படி இலக்குவன், பீடணன், சுக்கிரீவன், அனுமன் முதலியோர் பெரும்படையுடன் அவனை வளைத்துப் போர் செய்தனர். சேயோனின் தேர்ப்பாகனும் குதிரைகளும் மாண்டனர். அவன் அம்பும் கூடும் வறிதாயிற்று. பின்னர் அவன் வாட்போரில் ஈடுபட்டான். இலக்குவனின் அம்பால் தலை கொய்யப்பட்டுச் சேயோன் போர்க்களத்தில் மாண்டான்.

இராவணன் மாண்டான்

தன் மகன் சேயோன் போரில் இறந்ததைக் கேட்டுக் கதறிப் புலம்பிய இராவணன் போர்க்களம் புகுந்தான். இராமனுக்கும் அவனுக்கும் கடும் போர் நடந்தது. இலக்குவன் முதலியோர் அவனை வளைத்துக் கொண்டு போரிட்டனர். இராமனால் இராவணனின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டான். பீடணனனால் அவன் குதிரைகள் மாண்டன. இராவணன் வெகுண்டு பீடணனை நோக்கி வாளை உயர்த்தினான். இலக்குவன் குறுக்கிட்டு அம்பொன்றால் அதனைத் தடுக்க, அவ்வாளை இலக்குவன் மேல் ஓச்சினான். அப்போது மாதலி என்பான் கூரிய அம்பொன்றை இராமனிடம் கொடுத்து இராவணனைக் கொல்லுமாறு கூறினான். இராமன் விட்ட அம்பு இராவணனின் தலையைக் கொய்து வீழ்த்தியது. அவன் உடல் மண்ணில் புரண்டது. இராவணன் இறப்பை அறிந்த அவன் மனைவி வண்டார்குழலி உயிர்நீத்தாள்.

சீதை மீட்சி

பீடணன் சீதையை அழைத்து வந்து இராமனிடம் சேர்த்தான். இராமன் பீடணனை இலங்கைக்கு அரசனாக்கினான்; பின்னர் இலக்குவனோடும் சீதையோடும் அயோத்தி சென்றான். சுக்கிரீவன் கிட்கிந்தைக்குச் சென்றான்.

அயோத்தியில் இராமன்

இராமன் அயோத்தியில் முடிசூடி மன்னனானான். ஓர் ஆரியன் மாண்ட பிள்ளையுடன் அரண்மனைக்கு வந்து ‘சூத்திரன் ஒருவன் உன் நாட்டில் தவம் செய்வதால் இப்பிள்ளை மாண்டான்’ எனக் கூறினான். அதனைக் கேட்ட இராமன் ஆரியன் வழி காட்டக் கானகம் சென்று உண்ணா நோன்பிருந்த சம்புகன் என்னும் தமிழ்மகனை வெட்டிச் சாய்த்துத் தன் நகரை அடைந்தான்.

ஒரு நாள் ஓர் ஒற்றன் இராமனிடம் அயலான் மனையில் பல மாதம் இருந்தவளை அழைத்து வந்து வைத்துக் கொண்டான் என ஊரார் பழி கூறுகின்றனர் என்று உரைத்தான். இராமன் அதைச் சீதையிடமும் கூறினான். சீதை அதைப் பொருட்படுத்த வேண்டா எனக் கூறியும் கேளாமல் இலக்குவனை ஏவிச் சீதையைக் காட்டில் விடச் செய்து நாடாண்டான்.