1.0 பாட முன்னுரை

சொல்லின் பொது இலக்கணம் என்னும் இந்தப் பாடத்தில் தமிழ் மொழியில் உள்ள சொல்லின் இலக்கணத்தைப் பார்ப்போம்.

ஒரு மொழிக்கு அடிப்படை அம்மொழியில் உள்ள எழுத்துகள் ஆகும். எழுத்துகள் ஒன்றோ பலவோ சேர்ந்து சொல் உருவாகும். ஒரு சொல் தனித்து நின்றோ அல்லது பல சொற்கள் சேர்ந்து நின்றோ சொற்றொடர் உருவாகும். இவ்வாறு ஒரு மொழியின் படிநிலைகள் அமையும்.

மேலே குறிப்பிடப்பட்ட படிநிலைகளில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட சொல், தமிழில் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

கிளவி
மொழி
பதம்

என்பவை சொல் என்னும் ஒரே பொருளைத் தருவன ஆகும்.

தமிழில் சொற்கள் ஓர் எழுத்தாலும் பல எழுத்துகளாலும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போமா?

ஓர் எழுத்து ஒரு சொல் = பூ, வா, ஆ
இரண்டு எழுத்து ஒரு சொல் = நட, நில், படி
மூன்று எழுத்து ஒரு சொல் = நிலம், அறம், கடன்
நான்கு எழுத்து ஒரு சொல் = கடவுள், இறைவன், வேந்தன்

இவ்வாறு மட்டும் அல்லாமல் தமிழில் நான்குக்கு மேற்பட்ட எழுத்துகளாலும் சொற்கள் உருவாக்கப்படும்.

இந்த முறையில் ஆக்கப்பட்ட தமிழ்ச் சொற்களைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றை இங்கே காண்போம்.

1) சொற்பொருளை அடிப்படையாகக் கொண்டவை.
2) பகுப்பை அடிப்படையாகக் கொண்டவை.
3) இலக்கண வகைச் சொற்கள்.
4) இலக்கிய வகைச் சொற்கள்.

ஆகியவை அந்த வகைகள் ஆகும்.