4.0 பாட முன்னுரை முன் பாடத்தில் பெயர்ச் சொல்லின் இலக்கணம் பற்றியும் அதன் வகைகள் பற்றியும் அறிந்தோம். இனி, அதன் தொடர்ச்சியாக இருதிணைகளிலும் வரும் பொதுப் பெயர்கள் பற்றி, இந்தப் பாடத்தில் தெரிந்து கொள்ளலாம். அஃறிணைப் பெயர்களுள் ஒருமை என்றும் பன்மை என்றும் பால் பகுக்கப்படாத பெயர்கள் உள்ளன. இவை அஃறிணை ஒன்றன்பாலுக்கும் அஃறிணைப் பலவின் பாலுக்கும் பொதுப்பெயர்களாக வருவதை இங்கு அறியலாம். உயர்திணை அஃறிணை ஆகிய இருதிணைக்கும் உரிய பொதுப் பெயர்கள் இருபத்து ஆறு ஆகும். இப்பெயர்கள் ஒவ்வொன்றும் உயர்திணையிலும் அஃறிணையிலும் தன் தன் பால்களை ஏற்று வரும். ஆண்மைப் பொதுப் பெயர், உயர்திணை ஆண்பாலையும், அஃறிணை ஆண்பாலையும் ஏற்கும். பெண்மைப் பொதுப் பெயர், உயர்திணைப் பெண்பாலையும், அஃறிணைப் பெண்பாலையும் ஏற்கும். ஒருமைப் பொதுப் பெயர், உயர்திணை ஒருமையையும் அஃறிணை ஒருமையையும் ஏற்கும். பன்மைப் பொதுப் பெயர், உயர்திணைப் பன்மையையும், அஃறிணைப் பன்மையையும் ஏற்கும். இவை பற்றிய விரிவான விளக்கத்தை இனிக் காணலாம். |