4.1 பால்பகா அஃறிணைப் பெயர்கள்

ஒன்றன் பாலா அல்லது பலவின் பாலா என்று பகுக்கப்படாத அஃறிணைப் பெயர்ச் சொற்கள், அத்திணையில் இருபால்களுக்கும் பொதுவாகிய பெயர்கள் ஆகும்.

(பகா = பகுக்கப்படாத)

ஒன்றன்பாலும் பலவின்பாலும் அஃறிணைக்கு உரியன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தனித்த ஒரு பொருளைச் சுட்டினால் அது ஒன்றன்பால் ஆகும்.

எடுத்துக்காட்டு:

அது மாடு,   இது பறவை,    இது மரம்

ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைச் சுட்டினால் அது பலவின் பால் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

அவை மாடு,   இவை பறவை,   இவை மரம்

உயர்திணைப் பெயர்களைப் போல அஃறிணைப் பெயர்களுக்குப் பெரும்பாலும் அவற்றின் பால்களைச் சுட்டும் ஈற்று எழுத்துகள் இல்லை. அதனால், அவை ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாகவே வரும். அவற்றை, பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்பர்.

எடுத்துக்காட்டாக,

கல்வி கரை இல, கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல’

என்ற இச்செய்யுளில் கல்வி, நாள், பிணி என்னும் சொற்கள் ஒன்றன் பாலாக இருக்கின்றன. இவை முறையே இல, சில, பல என்னும் பன்மைப் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளன. இவை வழுவோ (குற்றமோ) என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இவை வழுவல்ல.

அஃறிணைப் பெயர்களில் அ, பெரியது என்பன போல இறுதி எழுத்து ஒன்றன் பாலைக் குறிக்கவும். அ, பெரியவை என்பன போல இறுதி எழுத்துப் பலவின்பாலைக் குறிக்கவும் அமைந்தது போல, கல்வி, நாள், பிணி என்னும் சொற்களில் அமையவில்லை. ஆகவே, இவற்றைப் பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்று கூறுவர்.

மாடு, காடு, மரம், செடி, கடல், மலை, பறவை போன்றன எல்லாம் பால்பகா அஃறிணைப் பெயர்களே ஆகும்.

மாடு, காடு, மரம், செடி, கடல், மலை, பறவை போன்ற இப்பெயர்கள் ஒருமையா, பன்மையா என்பதை முடிக்கும் சொல்லே (பயனிலையே) வரையறுக்கும்.

எடுத்துக்காட்டாக,

மாடு வந்தது - என்பதில் மாடு - ஒருமை
மாடு வந்தன - என்பதில் மாடு - பன்மை
மாடு அது - என்பதில் மாடு - ஒருமை
மாடு அவை - என்பதில் மாடு - பன்மை

இங்கு முடிக்கும் வினையாலும், பெயராலும் மாடு தன் பாலை உணர்த்திற்று. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘கள்’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.

எடுத்துக்காட்டு:

மாடுகள், பறவைகள் கள் விகுதியால் பன்மை ஆயின.
பாம்புகள், மரங்கள்

மாடு வந்தன, பறவை பறந்தன சேரும் வினையால்
பன்மை ஆயின.
பாம்பு ஊர்ந்தன, மரம் வளர்ந்தன

(வந்தன, பறந்தன, ஊர்ந்தன, வளர்ந்தன என்பவை வினைச் சொற்கள் ஆகும்.)
 

மாடு அவை,    பறவை அவை சேரும் பெயரால்
பன்மை ஆயின.
பாம்பு அவை,    மரம் அவை

இத்தகைய வினையும் பெயரும் பயனிலையாக அல்லாமல், அஃறிணைப் பெயருக்கு முன்னும் வந்து ஒருமை பன்மையினை உணர்த்தும்.
 

வந்தன மாடு,
பறந்தன பறவை

என, வினைச்சொல் அஃறிணைப் பெயருக்கு முன்வந்து பன்மையைக் காட்டின.

ஊர்ந்தன பாம்பு,
வளர்ந்தன மரம்

அவை மாடு,
அவை பறவை

இங்கு, பெயர்ச்சொல் அஃறிணைப் பெயருக்கு முன்வந்து பன்மையைக் காட்டின.

அவை பாம்பு,
அவை மரம்

இவற்றைக் கொண்டு,

ஒன்றன்பால் விகுதி - து
பலவின்பால் விகுதி - அ, வை, கள்

என அறியலாம்.

உலக வழக்கில் சில சொற்களும் ஒன்றன் பால் விகுதியையோ (து - என்பது ஒன்றன்பால் விகுதி), பலவின்பால் விகுதியையோ (அ, வை, கள்) பெறாமல் இரண்டிற்கும் பொதுவாய் நின்று ஒருமை அடையாலும், பன்மை அடையாலும் ஒன்றன் பாலினையோ, பலவின் பாலினையோ உணர்த்தி நிற்கும்.

எடுத்துக்காட்டு

1) ஒரு காய் என்ன விலை? - ஒருமை (ஒரு என்னும் அடை ஒருமையைச் சுட்டியது)
2) நூறு காய் என்ன விலை? - பன்மை (நூறு என்னும் அடை பன்மையைச் சுட்டியது)
3) ஒருமொழி பயின்றவன் - ஒருமை (ஒரு என்னும் அடை
ஒருமையைச் சுட்டியது.)
4) பல மொழி பயின்றவன் - பன்மை (பல என்னும் அடை
பன்மையைச் சுட்டியது.)

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்
நூறு நாள் ஓதி ஆறு நாள் விடத் தீரும்
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

இப்பழமொழிகளில் ஒருமை, பன்மை ஆகியன அடையால் உணர்த்தப்படுகின்றன. ஆயிரம், ஒரு, நூறு, ஆறு, பல என்ற அடைகள் முறையே காக்கை, கல், நாள், மரம் என்பனவற்றின் ஒருமை, பன்மையை உணர்த்தி நின்றன.

செய்யுள் வழக்கிலும், ஒருமை-பன்மை விகுதிகளைப் பெறாமல் வினை முற்றுகளே ஒருமை பன்மையை உணர்த்துதல் உண்டு.

எடுத்துக்காட்டு.

வாள் ஒடிந்தது - ஒருமை
வாள் ஒடிந்தன - பன்மை
சொல் தளர்ந்தது - ஒருமை
சொல் தளர்ந்தன - பன்மை
புலி பாய்ந்தது - ஒருமை
புலி பாய்ந்தன - பன்மை

வாள், சொல், புலி என்னும் அஃறிணைப் பெயர்கள், தம் பின்வரும் வினைமுற்றுச் சொற்களால் பால்காட்டி நின்றன. (ஒடிந்தது, ஒடிந்தன, தளர்ந்தது, தளர்ந்தன முதலியவை வினைமுற்றுகள் ஆகும்)

பால் பகா அஃறிணைப் பெயர்கள் பால் பொதுமைய

(நன்னூல் 281)

 

இன்ன பால் என்று பிரித்துச் சொல்ல முடியாத பெயர்ச் சொற்கள் பால்பகா அஃறிணைப் பெயர்கள் எனப்படும்.

குறிப்பு: ஒன்றன்பாலைக் காட்டும் ‘து’ விகுதியையும், பலவின் பாலைக் காட்டும் அ, வை, கள் என்னும் விகுதிகளுள் ஒன்றையும் பெறாத அஃறிணைப் பெயர்கள் பால்பகா அஃறிணைப் பெயர்கள் ஆகும். இவை ஒன்றன் பாலுக்கும் பலவின்பாலுக்கும் பொதுவாய் வரும்.