4.3 இடப்பெயர்கள் எண் உணர்த்தல்

மூவிடப் பெயர்களாவன தன்மை, முன்னிலை, படர்க்கை என நீங்கள் அறிவீர்கள். இவை இருதிணைப் பொதுப் பெயர்களாக வருவதை மேலே கண்டீர்கள். இவற்றுள் ஒருமை உணர்த்துபவற்றையும், பன்மை உணர்த்துபவற்றையும் தொகுத்துக் காணலாம்.

அவற்றுள், தன்மைப் பெயர் யான், நான், யாம், நாம், என நான்காகும். முன்னிலைப் பெயர், எல்லீர், நீயிர், நீவீர், நீர், நீ என ஐந்தாகும். தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர் ஆகிய இவ்வொன்பதும் அல்லாத பெயர்கள் படர்க்கை இடத்திற்கு உரியன. இவற்றுள் ‘எல்லாம்’ என்ற ஒரு பெயர் மட்டுமே மூவிடங்களுக்கும் உரியதாய் வரும். இவற்றுள் யான், நான், நீ, தான் - ஒருமை உணர்த்துவன. யாம், நாம், நீர், நீயிர், நீவீர், எல்லீர், தாம், எல்லாம் ஆகியவை பன்மை உணர்த்துவன.