5.5 நான்காம் வேற்றுமையும் அதன் பொருள்களும்

நான்காம் வேற்றுமையின் உருபு கு ஒன்றே ஆகும். இதன் பொருள் கோடல்பொருள் என்பதாம். கோடல்பொருள் என்பது கொடுப்பதை ஏற்றுக் கொள்ளுதலாகும்.

இவ்வேற்றுமையின் பொருள் கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என்னும் ஏழு வகைப்படும்.

எடுத்துக்காட்டு

அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தான் - கொடை
கருடன் பாம்பிற்குப் பகை - பகை
கபிலர் பாரிக்கு நண்பர் - நட்பு
கம்பளி குளிருக்கு ஏற்றது - தகுதி
தோசைக்கு மாவு அரைத்தான் - அதுவாதல்
கஞ்சிக்குக் காற்றாய்ப் பறக்கிறான் - பொருட்டு
(காரணம்)
மாதவிக்கு மகள் மணிமேகலை - முறை (உறவு)

மேலே காட்டிய சான்றுகள் இன்னதற்கு இது என வருவதை அறிகிறோம். இதனைக் கோடல்பொருள் என்பர். இவை முறையே, கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை முதலிய கோடல் பொருள்களாக வந்தன.
 

  • சொல்லுருபுகள்
  • நான்காம் வேற்றுமைக்கு, ‘பொருட்டு’, ‘நிமித்தம்’, ‘ஆக’ என்னும் சொல் உருபுகளும் உண்டு. ‘ஆக’ என்ற சொல் உருபு மட்டும் ‘கு’ உருபோடு சேர்ந்துதான் வரும்.

    எடுத்துக்காட்டு

    கூலியின் பொருட்டு வேலை செய்தான் பொருட்டு
    கல்வியின் பொருட்டுச் சென்றான்

    கூலியின் நிமித்தம் உழைத்தான் நிமித்தம்
    உணவின் நிமித்தம் உழைத்தான்

    ஊருக்காக உழைத்தான் ஆக
    கூலிக்காக உழைத்தான்

    ஆக என்ற சொல்லுருபு மட்டும் கூலிக்கு + ஆக, ஊருக்கு + ஆக என, ‘கு’ உருபை ஒட்டியே வந்ததை அறியலாம்.