இப்பாடத்தில் ஐந்தாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையிலான பொருள்களை அறிந்து கொண்டோம். ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ‘இன், இல்’ என்பன. இது நீக்கப்பொருள், ஒப்புப்பொருள், எல்லைப்பொருள், ஏதுப்பொருள்களை உடையது. சில இடங்களில் எல்லைப்பொருளில் இன், இல் உருபுகளின் மேல் ‘காட்டிலும்’, ‘பார்க்கிலும்’ என்பவை சொல்லுருபுகளாக ஐகாரம் பெற்று வருகின்றன. இதன் வேற்றுமை உருபுகள் வினையையும், வினையோடு பொருந்தும் பெயரையும் கொண்டு முடியும். ஆறாம் வேற்றுமையின் உருபுகள் ‘அது, ஆது, அ’ என்பன. ஆறாம் வேற்றுமையில் வருமொழி ஒருமையாக இருந்தால் அது, ஆது என்பன உருபுகளாக வரும். பன்மையாக இருந்தால் ‘அ’ உருபாக வரும். இது, தற்கிழமைப் பொருள்களையும், பிறிதின் கிழமைப் பொருள்களையும் உடையது. (பெயர்ப்பொருள்) தன்னோடு ஒற்றுமை உடையது தற்கிழமை, தன்னின் வேறாகிய பொருளோடு தொடர்புடையது பிறிதின் கிழமை ஆகும். இவ்வேற்றுமைக்கு ‘உடைய’ என்பது சொல்லுருபாகி வரும். ஏழாம் வேற்றுமை உருபுகள் ‘கண்’ முதலாக வரும் பலவாகும். இவை, வினையையும் வினையோடு பொருந்தும் பெயரையும் கொண்டு முடியும். கண், கால், இல், மேல் போன்றவை இடவேறுபாடுகளை உணர்த்தும் சொற்களாக வரும் என்பர். எட்டாம் வேற்றுமை விளிப்பொருளில் வரும். எனவே, விளிவேற்றுமை என்ற பெயரும் பெறும். இதன் உருபுகள் படர்க்கைப் பெயர்களின் இறுதியில் ஏ, ஓ மிகுதலும், அவ்வீறுகள் திரிதலும், கெடுதலும், இயல்பாக வருதலும், ஈற்று அயலெழுத்துத் திரிதலும் ஆகும். இவை ஏவல் வினையைக் கொண்டு முடியும். இவ்வுருபுகள் தம்மைஏற்ற பெயர்ப்பொருளை, முன்னிலையில் விளிக்கப்படு பொருளாக (அழைத்தல்) வேறுபடுத்தும். மேலும், விளி ஏற்காத பெயர்கள், விளியை ஏற்கும் பெயர்கள்
தொடர்களில்
வரும் உருபுமயக்கங்கள் ஆகியனவற்றையும்
இப்பாடத்தின்
வாயிலாகத் தெரிந்து கொண்டோம்.
|