2.0 பாட முன்னுரை
ஒரு செயலின் முழுமையான (முற்றுப்பெற்ற) தன்மையைக் குறிக்கும் சொல்லையே வினைமுற்று என்கிறோம். ‘முருகன் வந்தான்’ எனும் தொடரில் ‘வந்தான்’ என்பது வினைமுற்று. ‘நீ வருகிறாய்’ எனும் தொடரில் ‘வருகிறாய்’ என்பது வினைமுற்று. ‘நான் வருகிறேன்‘ எனும் தொடரில் ‘வருகிறேன்’ என்பது வினைமுற்று. இம்மூன்று வினைமுற்றுகளிடையே என்ன வேறுபாடு? வந்தான் என்பது பேசப்படுபவனைக் குறிக்கிறது. இது படர்க்கை வினைமுற்று எனப்படும். ‘வருகிறாய்’ என்பது முன்னிருப்பவனைக் குறிக்கிறது. இது முன்னிலை வினைமுற்று எனப்படும். ‘வருகிறேன்’ என்பது பேசுபவனை, அவன் செயலைக் குறிக்கிறது. இது தன்மை வினைமுற்று எனப்படும். தன்னைக் குறிப்பது தன்மை வினைமுற்று. இப்பாடத்தில் தன்மை வினைமுற்றுகள் எவ்வாறு அமைந்துள்ளன, அவை உணர்த்தும் இலக்கண உண்மைகள் யாவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
|