5.6 வினையெச்ச வடிவங்கள்

வினையெச்சச் சொற்கள், சில குறிப்பிட்ட வடிவங்களில் அமைகின்றன. அவ்வடிவங்களை வினையெச்ச வாய்பாடுகள், வினையெச்சச் சொற்கள் என இரு வகைப்படுத்தலாம்.

5.6.1 வினையெச்ச வாய்பாடுகள்

வினையெச்ச வாய்பாடுகள் பன்னிரண்டு ஆகும். அவற்றுள் செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்னும் ஐந்து வாய்பாடுகள் இறந்தகாலம் காட்டுவன. செய என்னும் வாய்பாடு நிகழ்காலம் காட்டுவது. செயின், செய்யிய, செய்யியர் வாய்பாடுகள் மற்றும் வான், பான், பாக்கு என்னும் ஈற்று வாய்பாடுகள் ஆகிய ஆறும் எதிர்காலம் காட்டுவனவாகும்.

செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்து ஒன்று ஆறும்முக் காலமும் முறைதரும்
     (343)

என்பது நன்னூல் நூற்பா.

வாய்பாடு காலம்
(1) செய்து இறந்தகாலம்
(2) செய்பு
(3) செய்யா
(4) செய்யூ
(5) செய்தென
(1) செய நிகழ்காலம்
(1) செயின் எதிர்காலம்
(2) செய்யிய
(3) செய்யியர்
(4) வான்
(5) பான்
(6) பாக்கு

• இறந்தகாலம் காட்டுவன

(1) செய்து - (1)

இவ்வாய்பாடு உகரம், இகரம், யகர ஒற்று ஆகிய மூன்று ஈறுகளுள் ஒன்றைப் பெற்று வரும்.

(எ.கா) உ- நடந்து வந்தான்
இ - ஓடி வந்தான்
ய் - போய் வந்தான்
(2) பகுதி விகாரப்பட்டும் வரும்
புகு - புக்கு வந்தான்
(3) விகுதி விகாரப்பட்டும் வரும்
தழுவி - தழீஇக் கொண்டான்
(2) செய்பு - உண்குபு சென்றான் (உண்டு)
(3) செய்யா -

எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

(எ.கா) பெய்யாக் கொடுக்கும்
(பெய்து கொடுக்கும் என்பது பொருள்)

(4) செய்யூ - காணூஉ மகிழ்ந்தான் (கண்டு) (அளபெடையாக எழுதப்பெறுவது உண்டு.)
(5) செய்தென - மருந்து தின்றென நோய் தீர்ந்தது. (தின்று - தின்றதால்)

• நிகழ்காலம் காட்டுவது

செய - ‘இது நிகழ இது நிகழ்ந்தது’ என்னும் நிலையில் நிகழ்காலம் காட்டும்.

(எ.கா)   செல்வன் சூரியன் உதிக்க வந்தான்.

இவ்வாய்பாடு, ஏனைக் காலங்களையும் காட்டுவது உண்டு.

(எ.கா) (1) காரணப் பொருள் உடையதாய் இறந்த காலம் காட்டும்.
(எ.கா) மழை பெய்ய நெல் விளைந்தது. (மழை பெய்ததால்)
(2) காரியப் பொருள் உடையதாய் எதிர் காலம் காட்டும்.
(எ.கா) நெல் விளைய மழை பெய்தது. (நெல் விளையுமாறு)

• எதிர்காலம் காட்டுவன

(1) செயின் - மழை பெய்யின் குளம் நிறையும்
(2) செய்யிய - உண்ணிய வருவான் (உண்ண)
(3) செய்யியர் - உண்ணியர் வருவான் (உண்ண)
(4) வான் -பெறுவான் வருவான் (பெற)
(5) பான்- கற்பான் வருவான் (கற்க)
(6) பாக்கு- தருபாக்கு வருவான் (தர)

இவை செய்யுள்களில் மட்டும் காணப்படுகின்றன.

5.6.2 வினையெச்சச் சொற்கள்

பின், முன், கால், கடை, வழி, இடத்து என்பன காலப் பொருளைக் குறித்து வரும் சொற்கள் ஆகும். இவை வினையெச்சங்களின் பின் சேர்ந்து வரும்

1. பின் - உண்டபின் வந்தான் (இறந்தகாலம்)
2. முன் - உண்ணு முன் வருவான் (எதிர்காலம்)

‘பின்’ என்னும் சொல் இறந்த காலத்தில் இடம்பெறும். ‘முன்’ என்னும் சொல் எதிர்காலம் குறித்துவரும். ஏனைய நான்கு சொற்களும் முக்காலத்திலும் இடம் பெறுவனவாகும்.