5.8 வினையெச்ச வகைகள்
வினையெச்சம், காலம் காட்டும் முறையின் அடிப்படையில் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரு வகைப்படும்.
5.8.1 தெரிநிலை வினையெச்சம்
வினைப்பகுதி, காலங்காட்டும் இடைநிலை, வினையெச்ச விகுதி ஆகியவற்றை உடையதாய் வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சச்சொல்
தெரிநிலை வினையெச்சம் எனப்படும். காலத்தை வெளிப்படையாகக் காட்டுவதால் தெரிநிலை வினையெச்சம் எனப்பட்டது.
(எ.கா) வந்து நின்றான் - இறந்தகாலம் காட்டியது. 5.8.2 குறிப்பு வினையெச்சம்
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஏதேனும் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டு முடிவது, குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) மெல்ல வந்தான்
விரைவாக வந்தான்.
5.8.3 வினையெச்ச மரபுகள்
வினையெச்சம் எதிர்மறைப் பொருளில் வருதல், அடுக்கி வருதல், இடைப்பிறவரல், வினைமுற்றை அடுத்து வருதல், வினைமுற்று எச்சப்பொருள் தருதல், வினையெச்ச மாற்றங்கள் ஆகிய வினையெச்ச மரபுகள் குறித்துக் காண்போம்.
5.8.4 எதிர்மறை வினையெச்சம்
வினைப்பகுதி, எதிர்மறை இடைநிலை, வினையெச்ச விகுதி ஆகியன கொண்டு, வினைமுற்றால் பொருள் முடிவுபெறும் எச்சம்
எதிர்மறை வினையெச்சம் எனப்படும். இது, காலம் காட்டுவது இல்லை; முக்காலத்திற்கும் உரியதாகக் கருதப்படுகின்றது.
செய்யாமல், செய்யாமே, செய்யாது ஆகிய வாய்பாடுகளில் எதிர்மறை வினையெச்சம் அமையும்.
(எ.கா) | | செய்யாமல் |
- | உண்ணாமல் சென்றான் |
| | செய்யாமே |
- | உண்ணாமே சென்றான் |
| | செய்யாது |
- | உண்ணாது சென்றான் |
• ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்
வினைப்பகுதி, ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை ஆகியவற்றைப் பெற்று, வினையெச்ச விகுதி மறைந்த நிலையில், வினை முற்றைக் கொண்டு முடியும் வினைச்சொல் வடிவம்,
ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) | | உண்ணா வந்தான் |
| | (உண்ணாது வந்தான் என்பது பொருள்) |
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்ச வாய்பாடும் வடிவமைப்பில் இதுபோலவே அமைதலின், இடம் அறிந்து பொருள் கொள்ளுதல் அவசியம் ஆகும்.
• வினையெச்சம் அடுக்கி வருதல்
ஒரு வினையெச்சச் சொல், ஒரு வினைமுற்றைக் கொண்டு முடிவது இயல்பு. பல வினையெச்சச் சொற்கள் அடுத்தடுத்து அடுக்கி வந்து, ஒரே வினைமுற்றைக் கொண்டு முடிவதும் உண்டு.
(எ.கா) வந்து குளித்து உண்டு உறங்கிப் பேசிச் சென்றான்.
இதில் பேசி என்னும் வினையெச்சம் சென்றான் என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிகிறது. அவ்வாறே பிற வினையெச்சங்களும் வந்து சென்றான், உண்டு சென்றான் என அதே வினைமுற்றைக் கொண்டு முடிகின்றன.
• வினையெச்சத்தில் இடைப்பிறவரல்
ஒரு வினையெச்சத்திற்கும், அது கொண்டு முடியும் வினைமுற்றுக்கும் இடையில், பொருள் பொருத்தம் உடையனவாக வரும் பிற சொற்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.
(எ.கா)
உழுது வந்தான் - உழுது ஏரொடு வந்தான்
வந்து போயினான்- வந்து சாத்தன் அவ்வூர்க்குப்
போயினான்.
• வினையெச்சம் வினைமுற்றை அடுத்துவரல்
வினைமுற்றுக்கு முன்னால் வரக்கூடிய வினையெச்சம், வினைமுற்றுக்குப் பின்னால் வருவதும் உண்டு.
(எ.கா)
வந்து போயினான் - முன்னால் வந்தது போயினான் வந்து - பின்னால் வந்தது
செய்யுளில் இவ்வாறு வருதல் இயல்பு.
(எ.கா)
பசிவந்திடப் போம் பறந்து (நல்வழி) (போம் = போகும்)
இப்பாடலில் போகும் என்னும் வினைமுற்றை
அடுத்து, பறந்து என்னும் வினையெச்சம் வந்துள்ளது.
5.8.5 வினைமுற்று வினையெச்சமாதல்
ஒரு வினைமுற்று, தன்னை அடுத்து மற்றொரு வினைமுற்று வரும்பொழுது, எச்சப்பொருள் தரும். இதனை,
முற்றெச்சம் என்பர்.
தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று ஆகிய இரண்டும் முற்றெச்சமாக அமையும் இயல்பினவாகும்.
(1) தெரிநிலை வினைமுற்று எச்சமாதல்
‘கண்டனன் வணங்கினான்’ - இதில்
‘கண்டனன்’ என்னும் முற்று கண்டு என எச்சப்பொருள் தருகிறது.
(2) குறிப்பு வினைமுற்று எச்சமாதல்
‘அவன் வில்லினன் வந்தான்’ - இதில் வில்லினன் என்பது,
வில்லினன்ஆகி என எச்சப்பொருள் தருகிறது.
5.8.6 வினையெச்ச மாற்றங்கள்
வினையெச்ச வாய்பாடுகளுள் சில, வேறு வாய்பாட்டால் வருவதும் உண்டு. ஆனால் பொருள்மாற்றம் அடைவது இல்லை.
சொல்திரி யினும்பொருள் திரியா வினைக்குறை (நன்னூல் : 346) (வினைக்குறை = வினையெச்சம்)
(1) ‘செய’ | வாய்பாடு - ‘செய்து’ எனத் திரிதல் |
| அ. | ஞாயிறு பட்டு வந்தான் |
| | ‘பட’ என வரவேண்டியது திரிந்து வந்தது. |
| ஆ. | மழை பெய்து நெல் விளைந்தது |
| | ‘பெய’ என வரவேண்டியது திரிந்து வந்தது. |
|