6.1 காலம்

வினைச்சொல் செயல் நிகழ்வையும், அது நிகழும் காலத்தையும் உணர்த்தும் என்பதை அறிவீர்கள். செயல் நிகழ்ந்து முடிந்ததா? நிகழ்ந்து கொண்டுள்ளதா? நிகழ உள்ளதா? என்பதனை, வினைச்சொல்லின் காலம் காட்டும் தன்மையால் அறியலாம்.

6.1.1 காலத்தின் வகைகள்

காலம் மூன்று வகைப்படும். அவை, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பனவாகும்.

• இறந்தகாலம்

செயல் நிகழ்ந்து முற்றுப் பெற்றதைக் குறிப்பது இறந்தகாலம் எனப்படும்.

(எ.கா)  உண்டான்.

இது, உண்ணுதலாகிய செயல் நிகழ்ந்து முற்றுப் பெற்றதைக் குறிக்கின்றது.

• நிகழ்காலம்

செயல் தொடங்கி, முற்றுப் பெறாத நிலை நிகழ்காலம் ஆகும். செயல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது இதன் பொருளாகும்.

(எ.கா)  உண்கின்றான்.

இது, உண்ணுதல் தொழில், தொடங்கப் பெற்று, முற்றுப்பெறாமல் நிகழ்ந்து கொண்டுள்ளது. ஆதலின், இது நிகழ்காலம் உணர்த்துகின்றது.

• எதிர்காலம்

செயல் தொடங்கப் பெறாத நிலை எதிர்காலம் எனப்படும். செயல் இனி நிகழ உள்ளது எனச் சுட்டுவது இதன் நிலையாகும்.

(எ.கா) உண்பான்

இது, உண்ணுதல் செயல் நிகழாத நிலையை, இனி நிகழ உள்ள நிலையைச் சுட்டுகின்றது. ஆகவே, இது எதிர்காலச் சொல்லாகும். இவற்றைக் குறித்து,

இறப்பு எதிர்வு நிகழ்வு எனக் காலம் மூன்றே (382)
என நன்னூல் உரைக்கும்.
(இறப்பு - இறந்தகாலம்; எதிர்வு - எதிர்காலம்)

6.1.2 காலம் காட்டும் சொல் வகைகள்

வினைச்சொல் வகைகளாகிய வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் ஆகியன காலம் காட்டும் இயல்புடையனவாகும்.

பெயர்ச்சொல் வகையுள் வினையாலணையும் பெயர் மட்டும் காலம் காட்டுவதாகும்.

(எ.கா)

  வினைமுற்று - முருகன் வந்தான்
  பெயரெச்சம் - வந்த முருகன்
  வினையெச்சம் - வந்து சென்றான்
  வினையாலணையும் பெயர் - வந்தவனைக் கண்டேன்

இவற்றைக் குறித்து இனி விரிவாகக் காண்போம்.