6.1 பலகுணம் தழுவிய உரிச்சொல்

பல குணம் தழுவிய உரிச்சொல்லின் இலக்கணத்தை நன்னூல் விளக்குகிறது.

கடிஎன் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே
விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல்
வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்
(நன்னூல் 457)

இதன் பொருள்: கடி என்னும் உரிச்சொல் காவல், கூர்மை, விரை (வாசனை), விளக்கம் (பிரகாசம்), அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல் (ஒலித்தல்), வரைவு (நீக்கல்), மன்றல் (திருமணம்), கரிப்பு ஆகிய பதின்மூன்று பொருள்களை உணர்த்தும்.

கடி என்னும் ஓர் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தருதலால் இது பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்லாகும். இனி, இவ் உரிச்சொல்லை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமாகக் காண்போம்.


6.1.1 கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்கள்

கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களில் செய்யுளில் பயின்று வந்துள்ளதைச் சான்றுகளுடன் பார்ப்போம்.

• காவல்

கடிநகர் அடைந்து = காவல் உடைய ஊரை அடைந்து.

இதில் கடி என்னும் சொல் காவல் என்ற பொருளைத் தருகிறது.

• கூர்மை

கடி நுனைப் பகழி = கூர்மையான நுனியைக் கொண்ட அம்பு.

இத்தொடரில் கடி என்பது கூர்மை என்ற பொருளில் வந்துள்ளது.

• விரை

விரை என்றால் வாசனை (மணம்) என்று பொருள்.

கடி மாலை சூடி = மணம் நிறைந்த மலர் மாலை சூடி

இங்குக் கடி என்னும் சொல் மணம் என்ற பொருளைத் தருகிறது.

• விளக்கம்

விளக்கம் என்பது இங்கு ஒளி, பிரகாசம் எனும் பொருள் தருவது.

‘கண்ணாடி அன்ன கடி மார்பன்’

ஒளி பொருந்திய மார்பு கொண்டவன். கடிமார்பன் என்பதில் கடி, விளக்கம் என்ற பொருளில் வருகிறது.

• அச்சம்

‘கடி யாமம் காக்கும் கைவிளக்கு’

அச்சம் தரும் யாமத்திற்குத் துணையாக உள்ள கைவிளக்கு என்பது பொருள். இங்குக் கடி, அச்சம் எனும் பொருளில் வருகிறது. (யாமம் = நள்ளிரவு)

• சிறப்பு

‘கடி அரண்’

வலிமையான கோட்டை என்பது பொருள். இங்குக் கடி என்பது சிறப்பு (வலிமை) எனும் பொருளில் வருகிறது.

• விரைவு

விரைவு = வேகம்.

‘எம் அம்பு கடி விடுதும்’

இத்தொடரின் பொருள், எம்முடைய அம்புகள் விரைவாகக் செலுத்தப்படும் என்பதாம். இங்குக் கடி என்னும் சொல் விரைவு என்ற பொருளில் வந்துள்ளது.

• மிகுதி

‘கடுங்கால் ஒற்றலின்’

மிகுதியான (கடுமையான) காற்று வீசுவதால் என்பது பொருள். இங்குக் கடி (கடும்) என்பது மிகுதி எனும் பொருளில் வந்தது.

• புதுமை

‘கடி மணச் சாலை’

புதுமை மணம் நிறைந்த இடம். இதில் கடி என்பது புதுமை என்னும் பொருளில் வந்துள்ளது.

• ஆர்த்தல்

ஆர்த்தல் என்றால் ஒலித்தல் என்பது பொருள்.

‘கடி முரசு’ = ஒலிக்கும் முரசு.

இங்குக் கடி என்னும் சொல் ஆர்த்தல் / ஒலித்தல் என்ற பொருளைத் தருகிறது.

• வரைவு

வரைவு என்றால் விலக்குதல் அல்லது நீக்குதல் என்று பொருள்.

‘கடிமது நுகர்வு’

கடிமது நுகர்வு - விலக்கத் தக்க மதுவை அருந்துதல். இத்தொடரில் கடி, விலக்கு என்ற பொருளில் வந்துள்ளது.

• மன்றல்

மன்றல் என்றால் திருமணம் என்று பொருள்.

‘கடிவினை முடுகு இனி’

திருமணத்தை விரைந்து நிகழ்த்து என்பது பொருள். இங்குத் திருமணம் என்ற பொருளில் வந்தது.

• கரிப்பு

கரிப்பு, காரச் சுவையைக் குறிக்கும். கடி என்பதற்குக் காரம் என்ற பொருளும் உண்டு.

‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’

கடிமிளகு = காரமான மிளகு. காரமான மிளகைத் தின்ற அறிவற்ற மந்தி என்பது இதன் பொருள். இங்குக் கடி, கார்ப்பு எனும் பொருளில் வந்தது.

இவ்வாறு, கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தந்து பலகுணம் தழுவிய உரிச்சொல்லாகத் திகழ்வதைச் சான்றுகளுடன் பார்த்தோம்.

இனிக் கடி என்னும் சொல் திரிபு பெற்று வழக்கில் இருப்பதைக் காண்போம்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1)

பலகுணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன?

[விடை]
2)

கடி என்னும் உரிச்சொல் எத்தனை பொருள்களில் வரும்?

[விடை]
3)

‘கடி நுனைப் பகழி’ - விளக்குக

[விடை]
4)

கடி என்னும் சொல்லுக்கு ஆர்த்தல் என்ற பொருளும் உண்டு - விளக்குக.

[விடை]

6.1.2 கடி என்னும் உரிச்சொல் திரிபு

கடி என்னும் உரிச்சொல் ‘கடு’ என்று திரிந்து வேறு சில பொருள்களையும் உணர்த்தும். கடு என்னும் சொல் இன்றும் வழக்கில் உள்ளது.

எடுத்துக்காட்டு:

கடுஞ்சூல் =

முதல் சூல்
கடு என்னும் சொல் முதல் என்னும் பொருளில் வந்துள்ளது.

கடும்புலி =

கொடிய புலி
இதில் கடு என்னும் சொல் கொடிய என்ற பொருளில் வந்துள்ளது.

கடும்பகல் =

நடுப்பகல்
இங்கே கடு என்ற சொல் நடு என்னும் பொருளைத் தருகிறது.

கடுக்காய் =

துவர்ப்புக்காய்
இதில் கடு என்னும் சொல் துவர்ப்பு என்ற பொருளில் வந்துள்ளது.

இவ்வாறு கடி என்னும் சொல் கடு என்று திரிந்து வழக்கிலிருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.