1.2 பொருள் புணர்ச்சி

சொற்றொடர்கள் கருத்தை உணர்த்தப் பயன்படுகிறன. சொற்றொடரில் இடம்பெறும் சொற்கள் ஒன்றோடு ஒன்று பொருள் தொடர்பு கொள்வதால் கருத்து உணர்த்தப்படுகிறது. சொற்களின் இத்தொடர்பு ‘புணர்ச்சி’ எனப்படும். புணர்ச்சிக்குக் குறைந்தது இரண்டு சொற்கள் தேவை. இவ்விரண்டு சொற்களில் முதலில் நிற்கும் சொல் ‘நிலைமொழி’ எனப்படும். நிலைமொழியை அடுத்துவரும் சொல் ‘வருமொழி’ எனப்படும்.

(எ.டு)  தாமரை மலர்ந்தது.

இத்தொடரில் ‘தாமரை’ என்பது நிலைமொழி. ‘மலர்ந்தது’என்பது வருமொழி. சொற்றொடரில் உள்ள சொற்களுக்கு இடையிலான பொருள் தொடர்பே பொருள்புணர்ச்சி எனப்படுகிறது. இஃது இரண்டு வகைப்படும். அவை,

  • வேற்றுமைப் புணர்ச்சி
  • அல்வழிப் புணர்ச்சி

சொற்றொடரில் நிலைமொழியும் வருமொழியும் பொருள்தொடர்போடுதான் புணரும் எனக் கூறமுடியாது.

(எ.டு) பவளக் கூர்வாய்ச் செங்கால் நாரை

இத்தொடரில் உள்ள முதல் இரண்டு சொற்களை எடுத்துக்கொள்ளலாம். பவளம் என்பது நிலைமொழி. கூர் என்பது வருமொழி. இந்நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் பொருள் தொடர்பு சரியாக அமையவில்லை. இங்குப் பவளம் என்பது செம்மை வண்ணத்தைக் குறித்து வந்துளளது. அதற்கும் கூர்மைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நிலைமொழிக்கும் வருமொழிக்கும் பொருள் தொடர்பில்லை என்பதை இலக்கணப்படி சொல்வதானால் ‘பவளம் என்னும் சொல் கூர் என்னும் சொல்லைத் தழுவாது தொடர்ந்தது’ என்பர். இவ்வாறு நிலைமொழியோடு வருமொழி பொருள் தொடர்பின்றிப் புணருமானால், நிலைமொழியும் வருமொழியும் சேர்ந்த அத்தொடரைத் ‘தழாத் தொடர்’ என்றும், பொருள் தொடர்போடு புணருமானால், அத்தொடரைத் ‘தழுவு தொடர்’ என்றும் கூறுவர்.

மெய்யுயிர் முதலீறு ஆமிரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப்
பொருளில் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே
                             (நன்னூல் : 151)

1.2.1 வேற்றுமைப் புணர்ச்சி

ஒரு சொற்றொடரில் வேற்றுமைப் பொருளில் சொற்கள் புணர்வதை வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.

(எ.டு)

கம்பன் பாடினான்.
கம்பனைப் பாடினான்.
கம்பனோடு பாடினான்.

முதல்சொற்றொடரில் கம்பன் என்னும் பெயர் எழுவாயாக உள்ளது. இரண்டாம் சொற்றொடரில் அப்பெயர் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு ஏற்றதால் செயப்படுபொருளாக மாறிவிட்டது; மூன்றாம் சொற்றொடரில் ‘ஓடு’ என்னும் உருபு சேர்ந்ததால் உடன்நிகழ்ச்சிப் பொருளாக அப்பெயர் மாறியது. இவ்வாறு ஒரு பெயர் பல்வேறு பொருளைத் தருவதாக மாறுவதற்குக் காரணம் அப்பெயருடன் சேரும் ஐ, ஓடு முதலிய உருபுகள் ஆகும். இவ்வுருபுகள் பெயரை வேறுபடுத்துவதால் ‘வேற்றுமை உருபுகள்’ எனப்படுகின்றன. வேற்றுமை உருபுகள் ஆறு ஆகும்.

  • வேற்றுமை உருபுகள்

    வேற்றுமை உருபுகள் பெயர்களையும் அவற்றின் உருபுகளையும் இனிக் காணலாம்.

  • 1) இரண்டாம் வேற்றுமை -
    2) மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு
    3) நான்காம் வேற்றுமை - கு
    4) ஐந்தாம் வேற்றுமை - இன், இல்
    5) ஆறாம் வேற்றுமை - அது, ஆது
    6) ஏழாம் வேற்றுமை - கண்

    வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகவும் வரும்; மறைந்தும் வரும். எவ்வாறு வந்தாலும் அவ்வேற்றுமைப் பொருளை அப்பெயருக்குத் தரும்.

    (எ.டு)

    பாடம் படித்தான்
    பாடத்தைப் படித்தான்.

    முதல் சொற்றொடரும் இரண்டாம் சொற்றொடரும் ஒரே பொருள் தருவதைக் காணலாம். முதல் சொற்றொடரில் பாடம் என்னும் பெயரில் 'ஐ' உருபு மறைந்து வந்துள்ளது. அதனால் அச்சொற்றொடரை இரண்டாம் வேற்றுமைத்தொகை நிலைத்தொடர் என்பர். இரண்டாம் சொற்றொடரில் பாடம் என்னும் அப்பெயரில், 'ஐ' என்னும் வேற்றுமை உருபு, வெளிப்படையாக வந்துள்ளது. இதனை இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் அல்லது வேற்றுமை விரி என்பர்.

    வேற்றுமைத் தொடர் தழுவு தொடராயும் தழாத் தொடராயும் வரும்.

    (எ.டு)

    பால் குடம் (பாலை உடைய குடம்)
    பால் குடித்தான் (பாலைக் குடித்தான்)

    முதல் தொடராகிய ‘பால் குடம்’ என்பதற்கு என்ன பொருள்? ‘இக்குடம் பாலை உடையது’ என்பதே பொருள். பால் என்பது குடத்தைத் தழுவாமல் ‘உடைய’ என்பதைத் தழுவி உள்ளதை த்தொடர் காட்டுகிறது. எனவே இத்தொடர் தழாத் தொடர் ஆகும். இரண்டாம் தொடராகிய ‘பால் குடித்தான்’ என்பதில் பால் என்பது குடிக்கப்படும் பொருள். எனவே இத் தொடரில் உள்ள வினைமுற்றான ‘குடித்தான்’ என்பதைப் ‘பால்’ தழுவி வந்துள்ளது. எனவே இத்தொடர் தழுவு தொடர் ஆகும்.

    1.2.2 அல்வழிப் புணர்ச்சி
     

    ஒரு சொற்றொடரில் வேற்றுமை அல்லாத பொருளில் சொற்கள் புணர்வது அல்வழிப் புணர்ச்சி எனப்படும்.

    (எ.டு.) ஓடி விழுந்தான்

    இச்சொற்றொடரில் வேற்றுமை உருபு எதுவும் மறைந்தோ வெளிப்பட்டோ வரவில்லை. அதனால் இது வேற்றுமை அல்லாத  சொற்றொடர் ஆயிற்று. வேற்றுமை அல்லாத புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி ஆகும். அவை பதினான்கு வகைப்படும்.

    1) வினைத்தொகை - கொல்யானை
    2) பண்புத்தொகை - செந்தமிழ்
    3) உவமைத்தொகை - தாமரைமுகம்
    4) உம்மைத்தொகை - இராப்பகல்
    5) அன்மொழித்தொகை - பொற்றொடி (வந்தாள்)
    6) எழுவாய்த்தொடர் - ஆசிரியர் வந்தார்
    7) விளித்தொடர் - நண்பா வா
    8) பெயரெச்சத்தொடர் - வந்த மனிதர்
    9) வினையெச்சத்தொடர் - வந்து சேர்ந்தார்
    10) தெரிநிலை வினைமுற்றுத்தொடர் - உறவினர் வந்தனர்
    11) குறிப்பு வினைமுற்றுத் தொடர் - நண்பர் நல்லவர்
    12) இடைச்சொற்றொடர் - மற்றொன்று
    13) உரிச்சொற்றொடர் - மாநகர்
    14) அடுக்குத்தொடர் - உண்மை உண்மை

    அல்வழித்தொடர்கள் தழுவு தொடராகவும் தழாத் தொடராகவும் வரும்.

    ........... ......... ........அல்வழி
    தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி
    எழுவாய் விளிஈர் எச்சம்முற்று இடைஉரி
    தழுவு தொடர்அடுக்கு எனஈர் ஏழே (நன்னூல் : 152)