ஒரு சொற்றொடரின் பொருளை
உணர்தற்கு நான்கு
காரணங்கள் உள்ளன. அவை வருமாறு:
1) அவாய்நிலை
2) தகுதி
3) அண்மை
4) கருத்துணர்ச்சி
1.4.1 அவாய்நிலை
அவாய்நிலை என்பது, சொற்றொடரில
இடம்பெறும் ஒரு
சொல், தான் உணர்த்த விரும்பிய
கருத்தைத் தெரிவிக்க வேறு
ஒரு சொல்லின் துணையை எதிர்நோக்கி நிற்கும் நிலையாகும்.
அச்சொற்களில் ஒன்றை மட்டும்
கூறினால் கருத்துத்
தொடர்பு இல்லாமல் தெளிவின்மை ஏற்படும்.
(எ.டு.) பாடத்தைப் படி
இத்தொடரில் ‘பாடத்தை’
என்று மட்டும் சொன்னால்
பொருள் முற்றுப்பெறாது. பாடத்தை என்ன செய்யவேண்டும்
என்னும் வினா எழும். அதேபோல் ‘படி’ என்று
மட்டும்
சொன்னால் எதைப் படிக்க வேண்டும் என்னும் வினா எழும்.
இவ்விரு சொற்களும் சேரும்பொழுதே
தொடர்ப்பொருள் தெளிவாகும்.
1.4.2 தகுதி
தகுதி என்பது பொருள்
தொடர்பிற்குத் தடை ஏதும்
இல்லாமையாகும்.
(எ.டு.) நீரால் எரி
நீரால் எப்பொருளையும் எரிக்க
இயலாது. மாறாக நீர்
எரியும் பொருளை நனைக்கப் பயன்படும். நீரின்
இயல்பிற்கு
மாறாக எடுத்துக்காட்டுத் தொடர்
அமைந்துள்ளது. நீர்
என்பதன் பொருள் தொடர்பிற்கு எரி
என்பது தடையாக
உள்ளது. இதனால்
பொருள் தொடர்பு ஏற்படவில்லை.
(எ.டு.) நீரால் நனை
இத்தொடர் நீரின் இயல்பிற்கு
ஏற்றதாக உள்ளது.
அதனால் அத்தொடரின் கருத்தை
எவ்விதத்
தடையும்
இல்லாமல்
உணரமுடிகிறது. இங்குச்
சொற்களின் பொருள்
தகுதியால் தொடர்ப்பொருள் உண்டாகிறது
என்பதை
அறியலாம்.
1.4.3 அண்மை
அண்மை என்பது
தேவையற்ற இடைவெளி
காரணமாகவும் பொருள் தொடர்பற்ற சொற்கள்
இடையே
வருவதனாலும் ஏற்படும் கருத்து வேறுபாட்டைத்
தவிர்த்தல்
ஆகும்.
(எ.டு.)
ஆண்-கள் சாப்பிடும் இடம் புறப்படும் நண்பர் நேரத்தில்
வந்தார் முதல் தொடரில் ‘ஆண்கள்’ என்பது ஒரு சொல்லாகச்
சேர்ந்திருந்தால் ஒரு பொருளும்
‘ஆண்-கள்’ என
இடைவெளி விட்டு இருசொற்களாகப்
பிரிந்திருந்தால்
வேறுபொருளும் தரக்காணலாம். இரண்டாவது தொடரில்
‘புறப்படும்’
என்பதன்
பக்கத்தில் ‘நேரத்தில்’
என்னும் சொல் வந்தால்தான்
அத்தொடரின் பொருள் சிறக்கும். மாறாக இடையில்
‘நண்பர்’
என்னும் சொல் வந்திருப்பதால்
தேவையற்ற பொருள்
குழப்பம் ஏற்படக் காணலாம்.
1.4.4 கருத்துணர்ச்சி
கருத்துணர்ச்சி என்பது,
சொற்றொடரில் இடம்பெறும்
ஒரு சொல் எப்பொருளைத்
தரவேண்டும் என்னும்
நோக்கத்திற்காகச் சொல்லப்பட்டதோ அப்பொருளை
மொழிச்
சூழலால்
அறிதலாகும்.
(எ.டு.) தலையைச் சீவு
இச்சொற்றொடரின்
பொருளை அதன்
மொழிச்சூழல்
அறியாமல் புரிந்து கொள்வது
இயலாது. அரசன்
குற்றாவளிக்குக் கொலைத் தண்டனை
அளித்ததாகக்
கொண்டால், ‘ஓர் ஆளின்
தலையை வெட்ட
ஆணையிட்டதாகப்’ பொருள்படும். தாய்
தன் மகனிடம்
தலைமுடியை ஒழுங்குபடுத்தக் கூறியதாகக்
கொண்டால்,
‘சீப்பினால் தலைமுடியை வாரிக்கொள்’
எனக் கூறியதாகப்
பொருள்படும்.
|