1.5 வாக்கிய வகைகள்

கருத்து முற்றுப் பெற்ற சொற்றொடர் வாக்கியம் எனப்படும் என்பது மேலே குறிப்பிடப்பட்டது. இவ்வாக்கியங்களைக் கருத்து அடிப்படையிலும் அமைப்பு அடிப்படையிலும் வினை அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.

1.5.1 கருத்து வகை வாக்கியங்கள்
 

கருத்து வகையில் வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவை:

1) செய்தி வாக்கியம்
2) கட்டளை வாக்கியம்
3) வினா வாக்கியம்
4) உணர்ச்சி வாக்கியம்

செய்தி வாக்கியம் என்பது, கூற வந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவதாகும்.

(எ.டு)  திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

கட்டளைவாக்கியம் என்பது, முன்னால் நிற்பவரை ஒரு செயலைச் செய்ய ஏவுவதாகும்.

(எ.டு) திருக்குறளைப் படி

வினா வாக்கியம் என்பது, ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமைவதாகும்.

(எ.டு.) திருக்குறளை எழுதியவர் யார்?

உணர்ச்சி வாக்கியம் என்பது, வியப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைவதாகும்.

(எ.டு) என்னே ! திருக்குறளின் பொருட் சிறப்பு.

1.5.2 அமைப்பு வகை வாக்கியங்கள்

வாக்கியங்களை அமைப்பு வகையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை,

1) தனி வாக்கியம்
2) தொடர் வாக்கியம்
3) கலவை வாக்கியம்

தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும்.

(எ.டு.)

பாரி வந்தான்.
பாரியும் கபிலனும் வந்தனர்.

தொடர் வாக்கியம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்றுவரும் வாக்கியமாகும்.

(எ.டு.) தமிழரசி போட்டியில் பங்கேற்றாள்; வெற்றி பெற்றாள்; பரிசு பெற்றாள்.

கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.

(எ.டு.)

தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும்.
 

1.5.3 வினை வகை வாக்கியங்கள்
 

வாக்கியங்களில் வினைகள், முற்றாகவோ எச்சமாகவோ இடம்பெறுகின்றன. அவ்வினைகளின் அடிப்படையில் அவற்றைப் பெற்று வரும் வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன. இவ்வாக்கியங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1) உடன்பாட்டு வினை / எதிர்மறை வினை வாக்கியங்கள்
2) செய்வினை / செயப்பாட்டு வினை வாக்கியங்கள்
3) தன்வினை / பிறவினை வாக்கியங்கள்

1) உடன்பாடு / எதிர்மறை வினை வாக்கியங்கள்

இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் உடன்பாட்டில் உள்ளனவா எதிர்மறையில் உள்ளனவா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன.

(எ.டு.)

உடன்பாட்டு வினை - காந்தியை அனைவரும் அறிவர்.
எதிர்மறை வினை - காந்தியடிகளை அறியாதார் இலர்.


2) செய்வினை / செயப்பாட்டுவினை வாக்கியங்கள்

இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் செய்வினைக்கு உரியனவா செயப்பாட்டுக்கு உரியனவா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர்பெறுகின்றன.

(எ.டு.)

செய்வினை - பேகன் போர்வை அளித்தான்.
செயப்பாட்டுவினை - பேகனால் போர்வை அளிக்கப்பட்டது.

3) தன்வினை / பிறவினை வாக்கியங்கள்

இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகளை எழுவாயே செய்கிறதா அல்லது தான் வினையாற்றாமல் பிறரை அவ்வினை செய்யத் தூண்டுகிறதா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன.

(எ.டு.)

தன் வினை - பாரி உண்டான்
பிற வினை - பாரி உண்பித்தான்

முதல் வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

இரண்டாம் வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.