3.5 இடைச் சொற்றொடர்
|
|
|
இடைச்சொல் என்பது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் அற்றது; பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொல்லாகும். இஃது ஒன்பது வகைப்படும். அவை, (1) வேற்றுமை உருபுகள் - ஐ, ஆல் முதலியன (எ.டு) தேனைக் குடித்தான் (தேன்+ஐ) (2) விகுதி உருபுகள் - ஆன், ஆள் முதலியன (எ.டு) நடந்தான் (நட+த்+த்+ஆன்) (3) இடைநிலை உருபுகள் - ப், வ், த் முதலியன (எ.டு) நடந்தாள் - (நட+த்+த்+ஆள்) (4) சாரியை உருபுகள் - அன், அத்து முதலியன (எ.டு) மரத்தை (மரம்+அத்து+ஐ) (5) உவம உருபுகள் - போல, புரைய முதலியன (எ.டு) புலி போலப் பாய்ந்தான் (போல) (6) தம்பொருள் உணர்த்துவன - அ (சுட்டு), ஆ (வினா) முதலியன (எ.டு) அப்பொருள் - அ+பொருள் (சுட்டு) அவனா - அவன்+ஆ (வினா)
(7)
ஒலிக் குறிப்பு முதலிய பொருள் உணர்த்துவன - ஓ ஓ, ஐயோ (எ.டு) ஐயோ! ஐயோ! (8) (செய்யுளில்) இசைநிறையாய் வருவன (எ.டு) “ஏஎ இவளொருத்தி...” (9) அசைநிலையாய் வருவன (எ.டு) “மற்று என்னை ஆள்க” இசைநிறை என்பது, வேறுபொருள் உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து நிற்பது. அசைநிலை என்பது, வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச் சொல்லோடும் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது.
உவம உருபுகளாயும் ஒலிக்குறிப்பாயும், செய்யுளில்
இசைநிறையாயும் அசைநிலையாயும் வரும் இடைச்சொற்களைத்
தொடர்ந்து வரும் தொடர்கள் இடைச் சொற்றொடர் எனப்படும்.
இவையேயன்றி என, மற்று முதலிய இடைச்சொற்களைத்
தொடர்வனவும் இடைச் சொற்றொடர் எனப்படும். |