3.7 அடுக்குத் தொடர்
 

ஒரு சொல் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம், அசைநிலை, இசைநிறை முதலிய காரணம் பற்றி இரண்டு முதல் நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத் தொடர் எனப்படும். வந்த சொல்லே திரும்பவும் வரும் என்பதறிக.

அசைநிலைக்கு இரண்டு முறையும், பொருள் நிலைக்கு இரண்டு அல்லது மூன்று முறையும், இசைநிறைக்கு இரண்டு, மூன்று அல்லது நான்கு முறையும் ஒரு சொல் அடுக்கி வரும்.

அடுக்குத் தொடரில் அடுக்கிவரும் சொல், பெயர் அல்லது வினைச் சொல் ஆகும்.

(எ.டு)

“ஏஏ யம்பல் மொழிந்தனள் யாயே” - அசைநிலை (2 முறை)
வா வா; போ போ போ -
விரைவு (பொருள்நிலை - 2 /3 முறை)
வருக வருக; வாழ்க வாழ்க, வாழ்க -
உவகை (பொருள்நிலை - 2 / 3 முறை)
பாம்பு பாம்பு; தீத்தீத்தீ -
அச்சம் (பொருள்நிலை - 2 / 3 முறை)
ஐயோ ஐயோ; இழப்பு இழப்பு இழப்பு -
அவலம் (பொருள்நிலை - 2 / 3 முறை)
“நல்குமே நல்குமே நல்குமே நாமகள்” - இசைநிறை (3 -முறை)
“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ" - இசைநிறை (4- முறை)

அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல்
இரண்டு மூன்று நான்கு எல்லைமுறை அடுக்கும்

(நன்னூல் : 395)