4.2 ஒரு சொல் குறித்த பல பொருள்கள்
 

ஒரு சொல் ஒரு பொருளைக் குறிப்பதும் உண்டு; பல பொருளைக் குறிப்பதும் உண்டு.

(எ-டு:)

மரம் - ஒரு பொருள் குறித்தது
தாமம் -

மலர் மாலை, அச்சம், இடம், உடல், ஒழுங்கு, கயிறு, ஒளித்தொகுதி, கொன்றை மரம், நகரம், பறவைகளின் கழுத்து ஆரம், பூ, பெருமை, போர்க்களம், மணிகள் கோத்த அணிகலன், மலை, மாலை, தலைப்பின்னல் வகையில் ஒன்று, யானை, விருப்பம், வீடு எனப் பல பொருள் குறித்தது.

 

இவ்வாறு, பல பொருள் குறித்த சொல் ஒரு தொடரில் வரும் பொழுது எவ்வாறு பொருள் கொள்வது என்பதற்குச் சான்றோர்கள் வழிகாட்டியுள்ளனர். பல பொருள் குறித்த சொல்லை ஒரு தொடரில் பயன்படுத்தும் பொழுது, வினை, சார்பு, இனம், இடம் என்பனவற்றைக் குறிக்கும் சொற்களைச் சேர்த்துச் சொல்லி அதன் பொருளைத் தெளிவுபடுத்துதல் மரபு.

மா என்னும் சொல் மாமரத்திற்கும் வண்டிற்கும் குதிரைக்கும் இலக்குமிக்கும் பொதுவான பல பொருள் ஒரு சொல்.

இப்பொருள்களுள்,

(எ-டு:)

மா காய்த்தது - மரம் என்பதைக் காய்த்தது என்னும் வினை காட்டுகிறது.
மா மொய்த்த மலர் - வண்டு என்பதை மலர் என்னும் சார்பு காட்டுகிறது.
மா, யானை, தேர், காலாள் - குதிரை என்பதை யானை, தேர்,காலாள் என்னும் இனம் காட்டுகிறது.
மா தங்கும் திருமால் - இலக்குமி என்பதைத் தங்கும் இடமாகிய திருமால் (இன் மார்பு) என்னும் இடம் காட்டுகிறது.
 

இவ்வாறு இல்லாமல் மா ஏறினான், மா யாது என்றால் மா என்பதன் பொருள் விளங்காது. அதனை விளக்குவதற்காக மா என்பதனோடு மேலே குறிப்பிட்டவாறு வேறுபடுத்திக் காட்டும் சிறப்புச் சொல்லையும் அறிஞர் சேர்த்துச் சொல்வது மரபு ஆகும்.

வினைசார்பு இனம்இடம் மேவி விளங்காப்
பலபொருள் ஒருசொல் பணிப்பர் சிறப்பெடுத்தே

(நன்னூல்-390)