ஒரு வரிசையில் உள்ள பொருளை வேறு ஒரு
வரிசையில்
உள்ள பொருளோடு பொருத்துகிறபோது
அவ்வரிசையைப்
பொருள் பொருத்தமுறப் பொருத்துவது நிரல்நிறைப்
பொருள்கோள் எனப்படும்.
(எ-டு:)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள் - 45)
இப்பாடலில் முதல் வரிசையில் அன்பு, அறன் கூறப்பட்டுள்ளன.
இரண்டாவது வரிசையில் பண்பு, பயன்
கூறப்பட்டுள்ளன.
இல்வாழ்க்கையில் அன்பு பண்பாகவும், அறன் பயனாகவும்
அமைய வேண்டும் என்பது குறளின் கருத்து.
இவ்வாறு முதல் வரிசையில் முதலில் உள்ளதோடு இரண்டாம்
வரிசையில் முதலில் உள்ளதையும், முதல் வரிசையில்
இரண்டாவதாக உள்ளதோடு இரண்டாவது வரிசையில்
இரண்டாவது உள்ளத்தையும் பொருத்திப் பார்ப்பது நேர்
நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும். இதற்கு மாறாக முதல் வரிசையில் முதலில் உள்ளதை
இரண்டாவது வரிசையில் இரண்டாவது உள்ளதோடும்
முதல்
வரிசையில் இரண்டாவது உள்ளத்தை இரண்டாம்
வரிசையில்
முதலில் உள்ளதோடும் பொருந்திப் பார்ப்பது எதிர்நிரல்நிறைப்
பொருள்கோள் எனப்படும். (எ-டு:)
களிறும் கந்தும் போல நளிகடற்
கூம்பும் கலனும் தோன்றும்
தோன்றல் மறந்தோர் துறைகெழு நாட்டே
(களிறு - யானை; கந்து - யானை கட்டும் தறி;
கூம்பு - பாய் மரம்; கலன் - தோணி.) இப்பாடலில் முதல் வரிசையில் களிறு, கந்து. இரண்டாம்
வரிசையில் கூம்பு, கலன் என உள்ளன. களிறு என்பதைக் கலன்
என்பதோடும் கந்து என்பதை கூம்பு என்பதோடும்
பொருந்துவதால் இது எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
ஆகும். இவ்வாறு பொருந்திப் பார்ப்பது செய்யுளுக்கு உரியது என்பது
கவனத்திற்கு உரியது. பெயர்களோடு வினைகளும் நிரனிறையாக
வரும். (எ-டு:)
பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
வேறு நிரனிறீஇ முறையினும் எதிரினும்
நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே
(நன்னூல் - 414)
|