2.3 இலக்கியச் சான்றுகள்

இலக்கியத்தைப் படைக்கின்ற ஆசிரியர்கள் தாங்கள் இயற்றும் இலக்கியங்களில் தங்கள் கருத்தை வெளிக் கொண்டு வரும்போது அவற்றுடன் தமது காலத்துக்கு முன் நிகழ்ந்த நிகழ்சசிகளையும், தமது காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளையும் நன்கு அறிந்து எழுதுகிறார்கள். இவ்வகையான இலக்கியங்கள் ஒரு நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளைச் சுட்டுவதால் இலக்கியங்கள் இன்றையளவும் தமிழக வரலாற்றை அறிய உதவும் முக்கியச் சான்றுகளாக விளங்குகின்றன.

தமிழக வரலாற்றுக்கான இலக்கியச் சான்றுகளை நாம் இரு பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம். அவையாவன:

1. தமிழ் இலக்கியச் சான்றுகள்
2. பிற இந்திய மொழி இலக்கியச் சான்றுகள்

2.3.1 தமிழ் இலக்கியச் சான்றுகள்

பொதுவாகச் சங்க காலத்தைப் பற்றி இன்றும் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இருப்பினும் நாம் இங்குக் கி.பி. முதலாம், இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளைச் சங்க காலமாகக் கருதலாம். இச்சங்க காலத்தை மூன்றாவது சங்க காலம் என்பர். அதாவது கடைச் சங்க காலம் எனலாம். இதற்கு முன்னர் முதல் இரண்டு சங்கங்கள் இருந்ததாக முன்னரே படித்திருக்கிறோம்.

தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இரண்டாவது சங்க காலத்தில் எழுந்த நூல் என்பது பல அறிஞர்களின் கருத்து. இந்நூலில் தமிழ்ச் சமுதாயத்தை விளக்கும்வண்ணம் எண்ணற்ற கருத்துகள் காணப்படுகின்றன.

சான்று:

ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே

(தொல்காப்பியம்–பொருள்-அகத்திணையியல்-23)

(ஆயர்-முல்லை நில மக்கள் பெயர்; வேட்டுவர்-குறிஞ்சி நில மக்கள் பெயர்; ஆடுஉ-ஆண்; கிழவர்-தலைவர்.)

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் ஆயர், வேட்டுவர் போன்ற பிரிவினர் வாழ்ந்து வந்தனர் என்பது இதன் வழியாக நமக்குக் கிடைக்கின்றது.

சங்க காலத்தில் எழுந்த பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் அக்கால அரசியல், சமுதாய, பொருளாதார வரலாறுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. சில சான்றுகள் காண்போம்.

எட்டுத்தொகையில் ஒன்றான அகநானூறு அகப்பாடல்களின் தொகுப்பாக இருந்தாலும் இந்நூலில் பல வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. நந்தர்கள் வடநாட்டில் பாடலிபுத்திரத்தை ஆண்டு வந்தபோது பகைவர் தமது நாட்டைக் கைப்பற்றி விடுவார்கள் என்று எண்ணித் தம்மிடமுள்ள விலை மதிப்பறியாச் செல்வங்களைப் பாதுகாக்க, அவற்றைப் பேழை ஒன்றில் வைத்து அதைக் கங்கை ஆற்றின் அடியில் புதைத்து மறைத்து வைத்த வரலாற்று நிகழ்ச்சியைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் உணர்த்துகின்றது.

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர் மிகு பாடலிக் குழீஇ கங்கை
நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ

(அகநானூறு, 265: 4-6)

(சீர்மிகு - புகழ் மிக்க; பாடலி - பாடலிபுத்திரம்; குழீஇ - திரண்டு, திரண்டிருந்த செல்வம்; நீர் முதல் - நீரின் அடியில்; கரந்த - மறைத்த; நிதியம் - செல்வம்.)

சங்க காலத்தில் சேர நாட்டை ஆண்ட சேர மன்னர்களில் புகழ் வாய்ந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன் அரபிக் கடலில் கடற்கொள்ளை நடத்தி வந்த கடம்பர்களை வென்று அவர்களுடைய காவல் மரமாகிய கடம்பு மரத்தை அறுத்து, அதைக் கொண்டு வெற்றி முரசு செய்தான் என்ற வரலாற்றுச் செய்தியை அகநானூறு பின்வருமாறு குறிப்பிடுகிறது.

சால் பெருந் தானைச் சேர லாதன்
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
பண்அமை முரசின் கண் அதிர்ந் தன்ன

(அகநானூறு, 347: 3-5)

(மால்கடல்-பெரியகடல்; சேரலாதன்-இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)

மௌரியர் தமிழகத்தில் நிகழ்த்திய படையெடுப்பையும் அவர்களுக்கு வடுகர் துணை நின்றதையும் மாமூலனார் அகநானூற்றில் கூறியுள்ளார். தலையாலங்கானத்துப் போர் நிகழ்ச்சி, பாரி மூவேந்தரை ஓட்டியமை ஆகிய வரலாற்று உண்மைகளையும் அகநானூறு உணர்த்துகின்றது.

புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூல் பழந்தமிழர் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. பண்டைக் காலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் வீரம், கொடை, ஆட்சிமுறை போன்றவற்றையும், குறுநில மன்னர், வேளிர், கடையெழுவள்ளல்கள் ஆகியோர் குறித்த வரலாற்றையும் புறநானூறு கூறுகிறது.

பதிற்றுப்பத்து என்னும் நூல் சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிக் கூறுகிறது. இந்நூல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை போன்றவர்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.

பத்துப்பாட்டில் ஒன்றான பொருநராற்றுப்படை என்னும் நூல் கரிகால் சோழனின் சிறப்பினைக் கூறுகிறது. மற்றொரு நூலான பட்டினப்பாலை பண்டைய தமிழகம் மேற்கொண்டிருந்த தரை மற்றும் கடல் வழி வாணிபத்தைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.

இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்டைய தமிழகத்தின் அரசியல், வாணிபம், சமயம் போன்ற வரலாற்று உண்மைகளை அளிக்கின்றன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்துச் செய்த விழாவில் இலங்கை வேந்தன் கயவாகு கலந்து கொண்ட நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எம்நாட்டு ஆங்கண் இமய வரம்பனின்
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட

(சிலப்பதிகாரம், வரந்தருகாதை: 160-163)

பல்லவர்கள் வரலாறு பற்றித் தேவாரமும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் கூறுகின்றன. சோழர்களைப் பற்றிய வரலாறு நமக்குச் சோழர் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களான மூவருலா, கலிங்கத்துப் பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் போன்றவற்றில் கிடைக்கப் பெறுகின்றது.

2.3.2 பிற இந்திய மொழி இலக்கியச் சான்றுகள்

இராமாயணம், மகாபாரதம் ஆகிய வடமொழிக் காப்பியங்களில் தமிழகத்தைப் பற்றியும், தமிழக மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அயோத்தியில் தசரதன் கூட்டிய அரசர்கள் பேரவையில் பாண்டிய மன்னன் ஒருவன் வந்திருநதான் என வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. பாரதப் போரில் பாண்டவர்களைச் சேர, சோழ, பாண்டிய வீரர்கள் ஆதரித்ததாக வியாசரின் பாரதம் குறிப்பிடுகிறது.

மகேந்திரவர்மன் வடமொழியில் எழுதிய மத்த விலாசப் பிரசகனம் என்னும் நூலில் பௌத்தரும, சமணரும பின்பற்றிய பழக்க வழக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முஸ்லீம் படையெடுப்பாளர்கள் தமிழர்களைத் துன்புறுத்திய செயல் கங்கா தேவி தெலுங்கு மொழியில் இயற்றிய மதுராவிஜயம் என்னும் நூலில் உணர்த்தப்படுகிறது.

நவாபுகளின் ஆட்சிக் காலத்தில் அரபு, உருது ஆகிய மொழிகளில் தோன்றிய இலக்கியங்கள் அக்காலத் தமிழக மன்னர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளன.