3.2 பழந்தமிழகப் பின்னணி

விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பகுதியான அன்றைய திராவிட தேசம், இன்றைய பொதுவழக்கில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மாநிலங்களைக் குறித்தாலும் கூட மொழி, கலாச்சார, தொல்லியற் பின்னணியில் நோக்கும்போது இக்குறிப்பானது தமிழகத்திற்குப் பெரும்பாலும் பொருந்தும் எனலாம். தமிழகம் இந்தியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகக் காணப்பட்டாலும் கூட, இதன் மொழி, கலாச்சாரம் ஆகியவை தொல்லியல் பாரம்பரியம் கொண்டவை ஆகும்.

தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

சான்று:

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப

(புறநானூறு, 168 :18)

இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க

(பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய

( சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)

சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்

(மணிமேகலை, 17: 62)

சங்க இலக்கியங்களில் இச்சொல் மொழியையும், நாட்டையும், நாட்டில் வாழ்ந்த மக்களையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ் நாட்டகம், தமிழ் கூறு நல்லுலகம் எனப் பழந்தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளது.

சான்று:

தமிழ் கூறு நல்லுலகத்து

(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்: 3)

‘தமிழகம்’ என்ற சொல் கிரேக்கரால் தமரிகெ என்றும், உரோமரால் தமிரிக்கா, தமரிகே எனவும் வழங்கப்பட்டது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்குரிய காரவேலனின் காதி கும்பாக் கல்வெட்டில் தமிழகம் திரமிள தேசம் எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வடிவம் ஒரு பரந்த அடிப்படையில் தென் இந்திய மொழிகள் பேசப்படும் நாடுகளைக் குறிக்கும் ஒரு வடிவமாகவே பயன்படுத்தப்படுகிறது, எனினும் தொடக்கத்தில் இன்றைய கேரள மாநிலத்தை உள்ளடக்கிய பண்டைய தமிழகத்தையே இது குறித்து நின்றது. இதனையே வடமொழியாளர் திராவிட என அழைத்தனர்.

3.2.1 தனித்த பண்டைய தமிழகம்

திராவிட மொழிகளுள் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பேசப்படும் மாநிலங்களிலிருந்து தமிழகத்தை ஒரு தனித்துவமான கூறாக ஆக்கி விடலாம். திராவிட மொழிகள் பேசப்படும் மாநிலங்களில் மிகப்பழைய இலக்கியப் பாரம்பரியமுடைய மாநிலம் தமிழகம்தான். கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளின் மீது வடமொழி ஏற்படுத்திய தாக்கத்தினைப் போன்று தமிழ் மொழியின் மீது அது மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சங்க இலக்கியங்களில் வடமொழிச் சொற்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. ஆரிய சமூக அமைப்பில் தமிழகம் இணைந்து கரைந்து போகாமல் தனித்துவத்தைக் காத்துக் கொண்டு நின்றது எனலாம். சுருங்கக் கூறின் தென் இந்தியாவில் ஆரியமயமாக்கும் திட்டம் தோல்வி கண்ட இடமாகவே தமிழகம் விளங்குகிறது.

3.2.2 இலெமூரியாக் கண்டம்

இந்தியாவில் மிகப் பழைய பாறை அமைப்பைக் கொண்டுள்ள தென்னிந்தியா, புவியியல் வரலாற்றில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்த ஒரு நிலப்பரப்பாகும். இந்தத் தென் இந்தியா முன்பு ஒருபுறம் தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றுடனும், மறுபுறம் மலேயாத் தீபகற்பத்தின் ஊடாக ஆஸ்திரேலியாவுடனும் இணைந்திருந்தது. இப்பெரிய பரப்பு இலெமூரியாக் கண்டம் எனப்பட்டது.. பின்னர் இக்கண்டம் கடற்கோள்கள் போன்ற பேரழிவுகளால் சிதைவுற்றுத் தற்போதைய அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவாகின எனப் புவியியலார் கூறுகின்றனர்.

இவ்வாறேதான் தமிழகத்தின் தென் பகுதியிலுள்ள பாண்டி நாட்டைச் சேர்ந்த பகுதிகள் குமரிக் கண்டம் எனப்பட்ட இலெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாக விளங்கின என்றும் கூறப்படுகிறது. ஆனால் இலெமூரியாக் கண்டம் இருந்ததைப் பற்றிய கருத்துகளில் இன்னும் ஆராய்ச்சியாளர்களிடையே முரண்பாடுகள் உள்ளன. இருப்பினும், குமரிக் கண்டம் பற்றிய சான்றுகள் ஓரளவு நம்பகமானவை எனக் கொள்ளப்படுகின்றன. மாறிமாறி வந்த கடற்கோள்களினால் பாண்டி நாட்டைச் சேர்ந்த 49 நாடுகளாகிய ஏழ் தெங்கநாடு , ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு ஆகியன மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். இவற்றுள் குமரியாறும், பஃறுளியாறும், பேராறும், குமரிக்கோடும் மகேந்திர மலையும் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய கடற்கோள்களினால் தமிழகத்தின் எல்லை சுருங்க, வேங்கடம் இதன் வட எல்லையாகவும், குமரி இதன் தென் எல்லையாகவும் ஆயின. இதனையே தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்,

வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகம்

(தொல். சிறப்புப் பாயிரம்: 1-3)

என்றும், சிலப்பதிகாரம்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாடு

(சிலப்பதிகாரம், வேனிற்காதை, 1-2)

என்றும் குறிக்கின்றன.

அக்காலத் தமிழகம் செந்தமிழ் நாடு எனவும், கொடுந்தமிழ் நாடு எனவும் பிரிக்கப்பட்டிருந்தது. செந்தமிழ் நாடான பாண்டிய நாட்டுடன் அதனைச் சூழ்ந்த வைகை ஆற்றின் வடக்கும், மருத ஆற்றின் தெற்கும், மருவூரின் மேற்கும், கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் செந்தமிழ் நாடு எனப்பட்டது. கொடுந்தமிழ் நாடு என்பது செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்திருந்த தென் பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, கற்கா நாடு, வேணாடு, பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, சீத நாடு, மலாடு, புனல் நாடு என்னும் பன்னிரண்டு பகுதிகள் ஆகும்.

3.2.3 பழந்தமிழகத்தின் பிரிவுகள்

தென்னிந்தியாவின் புவியியல் கூறுகளை ஆராய்ந்தவர்கள் இந்நிலப்பரப்பை மூன்று தலையாய கூறுகளாகப் பிரித்தனர். அவையாவன:

1. ஈர்ப்புப் பகுதிகள்
2. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
3. ஓரளவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

தமிழகம் இவ்வட்டவணையில் ஈர்ப்புப் பகுதியாக விளங்குகிறது. இதில் காணப்படும் பல்வேறு தனித்துவம் வாய்ந்த புவியியல் கூறுகளையும் புவியியலார் இனங்காணத் தவறவில்லை. இதனால் இதன் கலாச்சார வளர்ச்சியில் பல்வேறு வகையான தரங்கள் இருப்பதையும் கண்டனர். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த புவியியல் கூறுகளை இனங்கண்டு அவற்றைத் தனித்தனிக் கூறுகளாகப் பிரித்து ஆராய்ந்தனர்.

பழந்தமிழரும் நிலங்களைப் பிரித்து ஆராய்ந்து இருந்தனர். இதற்கான சான்றுகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் போன்ற இலக்கிய, இலக்கண நூல்களில் உள்ளன. ஒவ்வோர் இடத்திலும் காணப்பட்ட தரையின் தோற்றம், கால நிலை, தாவரங்கள், மிருகங்கள், நீர்நிலை வசதிகள், மண்வகை, மனிதச் செயற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலங்களைப் பிரித்திருந்தனர். இவை ஒவ்வொன்றும் பழந்தமிழரைப் பொறுத்தவரையில் தனித்தனியான உலகங்களாகவே காட்சியளிக்கின்றன. இதனையே தொல்காப்பியர்,

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச்,
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

(தொல். பொருள்,5)

எனச் சுட்டிக்காட்டுகின்றார். மேற்கூறிய பகுப்பில் பாலைநிலம் அடங்காததற்குக் காரணம் தமிழகத்தில் வனாந்தரம் அல்லது மிகமிக வறண்ட நிலப்பரப்பு காணப்படாமையே ஆகும். காடும் மலையுமாகிய நிலங்கள் வறட்சி எய்தும்போது பாலை நிலப்பண்பைப் பெற்றதால் இதனை ஒரு தனிப் புவியியல் கூறாகத் தொல்காப்பியர் காணவில்லை.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.
வடஇந்தியா, தென் இந்தியா எனப் பிரிப்பவை எவை ?
2.
வட இந்தியாவில் வாழும் மக்களின் மொழி, கலை, பண்பாடு இவற்றில் எதனால் மாறுதல்கள் ஏற்பட்டன ?
3.
திராவிட தேசம் என்பது எதனைக் குறிக்கிறது ?
4.
கி.மு. 2ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுக்குப் பெயர் என்ன ?
5.
இலெமூரியாக் கண்டம் என்று எதனைக் குறிக்கின்றனர் ?
6.
தொல்காப்பியம் பழந்தமிழக எல்லையாக எவற்றைக் கூறுகிறது ?
7.
பழந்தமிழகத்தின் புவியியல் கூறுகளை ஆராய்ந்தவர்கள் குறிப்பிடும் தலையாய கூறுகள் யாவை?