4.2 மேலை நாட்டாருடன் வாணிபத் தொடர்பு

தமிழகத்துக்கு மேற்கே அமைந்துள்ள நாடுகளைப் பொதுவாக மேலை நாடு என்பதுண்டு. அம்மேலை நாடுகளுடன் பழந்தமிழர்கள் நன்கு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதைப் பல இலக்கியங்கள் வாயிலாகக் காணமுடிகிறது.

4.2.1 எகிப்து

தமிழகத்திற்கும் எகிப்திற்குமிடையே ஏற்பட்டிருந்த வாணிபத் தொடர்பு மிகப் பழைமையானதாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erithraean Sea) என்னும் நூலை டபிள்யூ.எச்.ஸ்காபி என்பவர் பதிப்பித்துள்ளார். அவர் அந்நூலின் பதிப்புரையில் கிரேக்க மக்கள் அநாகரிகத்தினின்று விழித்தெழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்துக்கும் பண்டைய இந்திய நாடுகளுக்கும் இடையே வாணிபத் தொடர்பு இருந்தது என்றும், பாரசீக வளைகுடாவின் வடக்கே இரு நாடுகளும் ஒன்றோடு ஒன்று பண்ட மாற்றத்தைச் செய்து கொண்டன என்றும் குறிப்பிடுகின்றார்.

பண்டைய தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான பண்டங்களுள் சிறப்பானவை மஸ்லின் துணியும், ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களுமாம். தமிழக வணிகர்கள் இச்சரக்குகளை மரக்கலங்களில் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடாவிற்கு இருபுறமுள்ள துறைமுகங்களில் இறக்கினர். பினீஷியர் அல்லது அரேபியர் அச்சரக்குகளைத் தம்வசம் ஏற்றுக் கொண்டு எகிப்துக்கு எடுத்துச் சென்றனர்.

எகிப்தின் பதினேழாம் அரச பரம்பரையினர் காலத்தில் (கி.மு. 1500-1350) அந்நாட்டில் இறக்குமதியான சரக்குகள் பல தந்தத்தினால் கடையப்பட்டவை என அறிகின்றோம். இவை தென் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதியாயிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

தமிழர்களைப் போல எகிப்தியரும் கப்பல்களைக் கட்டி வாணிபத்தில் ஈடுபடலாயினர். இவர்கள் கட்டிய கப்பல்களில் ஏழு பாய்மரங்கள் விரிக்கப்பட்டதாகக் குறிப்புக் கிடைக்கின்றது.

4.2.2 கிரேக்கம்

கிரேக்கர்கள் தமிழகத்துடன் வாணிபத்தில் இறங்கியது சுமார் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் எனலாம். எவ்வாறு எனில் முதன்முதலில், ஹிப்பாலஸ் (Hippalos) என்னும் கிரேக்கர், பண்டைய தமிழகத்தின் மேற்கே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மாதங்களில் காற்று வீசுகிறது எனக் கண்டறிந்தார். இதுவே தென்மேற்குப் பருவக்காற்று ஆகும். இதனைச் சாதகம் ஆக்கிக் கிரேக்கர்கள் பெரிய பெரிய மரக்கலங்களைத் தமிழகத்தின் மேலைக் கரைக்குச் செலுத்தி நங்கூரம் பாய்ச்சினர் என்று ஒரு குறிப்பு உணர்த்துகிறது. பெரிப்ளூஸ் என்னும் ரோம நூலில், அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் சரக்குகளை ஏற்றி வந்த நாவாய்கள் அதாவது மரக்கலங்கள் முசிறியில் நிறையக் கிடந்ததாக ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இவ்வாறு பண்டைய தமிழர்கள் கிரேக்கர்களுடன் கொண்ட வாணிபத் தொடர்பால், தமிழ்ச்சொற்கள் பல கிரேக்க மொழியில் நுழைந்து இடம் பெறலாயின. சொபோகிளிஸ், அரிஸ்டோ பேனீஸ் போன்ற கிரேக்க அறிஞர்களின் நூல்களில் இச்சொற்களைக் காண முடிகிறது.

அரிசி என்னும் தமிழ்ச்சொல் அரிஸா எனவும், இஞ்சி அல்லது இஞ்சிவேர் என்னும் தமிழ்ச் சொல் ஜிஞ்ஜிபேராஸ் எனவும், இலவங்கத்தைக் குறிக்கும் கருவா என்னும் தமிழ்ச்சொல் கர்ப்பியன் எனவும் உருமாற்றம் அடைந்து கிரேக்க மொழியில் நுழைந்து வழங்கின. கிரேக்க வாணிகர்கள் இப்பொருள்களுடன் அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் தமிழகத்திலிருந்து கொண்டு சென்று கிரேக்க நாட்டில் பயன்படுத்தினார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

4.2.3 ரோமாபுரி

தமிழகத்து நறுமணப் பொருள்களின் சுவையையும் ஏனைய ஏற்றுமதிப் பண்டங்களின் பெருமையையும் கிரேக்கர்களின் மூலமே ரோமாபுரி மக்கள் அறிந்து கொண்டனர். எனினும் கி.பி. முதலாம் நூற்றாண்டு வரையில் ரோமரின் வாணிபம் பெரும் அளவு விரிவடையவில்லை. அகஸ்டஸ் ஆட்சியில்தான் தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு ஏற்படலாயிற்று. இவர் கி.மு. 30இல் எகிப்தை வென்று அதன்மேல் தமது ஆட்சியை நிலை நாட்டினார். இவ்வெற்றி அவருக்கு எதிர்பாராத நற்பலனையும் தந்தது. அது யாதெனில் அவருக்குத் தமிழகத்துடன் முதன்முதலாக நேரடியான வாணிபத் தொடர்பு ஏற்பட்டதே ஆகும். அதனையடுத்துத் தமிழகத்துக்கும் ரோமாபுரிக்கும் இடையிலான கடல் வாணிபம் பெருமளவுக்கு ஓங்கி வளரலாயிற்று. அகஸ்டஸின் சம காலத்தவர் ஸ்டிராபோ (Strabo) என்ற நூலாசிரியர். இவர் பூகோள நூல் ஒன்றை எழுதியுள்ளார். எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ் என்ற ஒரு வரலாற்று நூல் கி.பி. 60இல் தோன்றியது. இதன் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. மேலும் கி.பி. 70இல் பிளினி (Pliny) என்பார் எழுதியுள்ள உயிரியல் நூல் ஒன்றும், கி.பி. 160 இல் தாலமி (Ptolemy) என்பார் எழுதியுள்ள பூகோள நூல் ஒன்றும் கிடைத்துள்ளன. இந்நூல்களில் பண்டைத் தமிழகத்திற்கும் ரோமாபுரிக்கும் இடையே நிகழ்ந்த கடல் வாணிபத்தைப் பற்றிய சான்றுகள் பல உள்ளன. இந்நூல்கள் மட்டுமன்றிச் சங்க இலக்கியங்களிலும் அதற்கான பல சான்றுகள் உள்ளன. இவற்றை ஏற்கெனவே பார்த்தோம்.

 

தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் சிலவும் கடல் வாணிபத்தைப் பற்றி அறிய உதவுகின்றன. புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்னும் ஊரில் ஓர் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாராய்ச்சியின் போது ரோமாபுரி நாணயங்கள் கிடைக்கப்பெற்றன. இந்நாணயங்கள் மூலம் பண்டைய தமிழருக்கும் ரோமாபுரி மக்களுக்கும் கடல் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது.

மேலே குறிப்பிட்ட ஸ்டிராபோ, பிளினி, தாலமி போன்ற ரோம ஆசிரியர்கள் தாங்கள் எழுதிய நூல்களில் தமிழகத்தின் துறைமுகங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். அவற்றுள் பல துறைமுகங்களின் பெயர்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான தொண்டியைத் திண்டிஸ் என்றும், முசிறியை முஸிரிஸ் என்றும் குமரியைக் கொமாரி என்றும், தமிழகத்தின் கீழைக் கடற்கரைத் துறைமுகங்களான கொற்கையைக் கொல்சாய் என்றும், நாகப்பட்டினத்தை நிகாமா என்றும், காவிரிப்பூம்பட்டினத்தைக் கமரா என்றும், புதுச்சேரியைப் பொதுகே என்றும், மரக்காணத்தைச் சோபட்மா என்றும், மசூலிப்பட்டினத்தை மசோலியா என்றும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்துடன் ரோமாபுரியினர் மேற்கொண்டிருந்த வாணிபம் அவர்களுடைய பேரரசின் ஆதரவின் கீழ் செழிப்புடன் வளர்ந்து வந்தது எனலாம். இவ்வாணிபத்தின் வளர்ச்சிக்கு ரோமாபுரிப் பேரரசர் அகஸ்டஸ் பெரிதும் ஊக்கம் அளித்தார்.

பாண்டிய மன்னன் ஒருவன் தன் தூதுவர் இருவரைத் தம் அரசவைக்கு அனுப்பி வைத்ததாக அகஸ்டஸ் கூறுகிறார். ரோமாபுரியுடன் தமிழகம் மேற்கொண்டிருந்த கடல் வாணிபம் காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டது. ரோமாபுரிப் பேரரசின் ஆட்சி முடிவுற்றபின் ரோமரின் வாணிபம் தமிழகத்தில் மட்டுமின்றி மசூலிப்பட்டினம், ஒரிஸ்ஸா கடற்கரையிலும் பரவலாயிற்று.

ரோமாபுரியுடன் தொடர்ந்து தமிழகம் கடல் வாணிபத்தில் தொடர்பு கொண்டிருந்ததால் ரோமாபுரி வாணிகர்கள் தமிழகத்திலேயே தங்கிக் குடியேறிவிட்டார்கள். தமிழகத்திற்கு வாணிபம் செய்ய வந்த கிரேக்கரும், யூதரும், சிரியரும் ரோமர்கள் குடியேறி வாழ்ந்த இடங்களில் அவர்களோடு இணைந்து வாழ்ந்து வந்தார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த அவர்களிடமிருந்தே தமிழகத்தினைப் பற்றிய செய்திகளைத் தாம் கேட்டறிந்ததாகப் பிளினி கூறுகின்றார். வாணிபம் விரிவடைய விரிவடையத் தமிழகத்திலே குடியேறிவிட்ட ரோமர்களின் தொகையும் வளர்ந்து வந்தது. அதனால் அவர்களுடைய சேரி ஒன்று மதுரை மாநகருடன் இணைந்து இருந்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் வாழ்ந்தவர்களிடையே புழக்கத்தில் இருந்த பொன், வெள்ளி நாணயங்களும், செப்புக் காசுகளும் இப்போது நமக்கு அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப் பெற்றுள்ளன.

கி.பி. 324 முதல் கி.பி. 337 வரை கான்ஸ்டன்டைன் என்னும் பேரரசன் ரோமாபுரியை ஆண்டு வந்தான். இவன் தனது இறுதிக் காலத்தில் இந்தியத் தூதுவர் ஒருவரைத் தன் அரசவைக்கு வரவழைத்தான் என்ற குறிப்பு ரோமாபுரி வரலாற்றில் இருக்கின்றது என்பர்.

4.2.4 பாபிலோனியா

தமிழகத்துக்கும் பாபிலோனியாவுக்கும் இடையே கடல் வாணிபம் நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பாபிலோனியாவில் நிப்பூர் என்னும் இடத்தில் முரஷீ என்பவரும் அவர் மக்களும் நடத்தி வந்த காசு வாணிபத்தில் கணக்குப் பதியப்பட்ட களிமண் தகடுகள் சிலவற்றில் பாபிலோனியர் தமிழக வாணிகருடன் கொண்டிருந்த பற்று வரவுகள் குறிக்கப்பட்டுள்ளன. அதே காலத்தில் தமிழ் வாணிகர்கள் பாபிலோன் நகரத்தில் குடியேறி அங்கேயே தங்கித் தம் தொழிலை நடத்தி வந்ததற்கும் இத்தகடுகள் சான்று பகர்கின்றன.