4.3 கீழை நாட்டாருடன் வாணிபத் தொடர்பு

பண்டைய தமிழர்கள் மேலை நாட்டாருடன் மட்டும் கடல் வாணிபம் கொண்டிருக்கவில்லை. கீழை நாடுகளான சீனம், மலேசியா, ஜாவா, வட போர்னியா போன்ற நாடுகளுடனும் கடல் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர்.

4.3.1 சீனம்

சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிபத் தொடர்பு மிகவும் பழைமையானதாகும். இத்தொடர்பு கி.மு. 1000 ஆண்டளவில் தொடங்கியிருக்கலாம் என்பர். தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன.

சீனத்துப் பட்டாடைகளையும், சருக்கரையையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இதனால் இன்றளவும் பட்டுக்குச் சீனம் என்றும், சர்க்கரைக்குச் சீனி என்றும் தமிழில் பெயர் வழங்கி வருகின்றது. மேலும் தமிழில் பல பொருள்களைக் குறிக்கும் சொற்கள் சீனம் என்ற பெயரோடு சேர்ந்து வழங்குவதை இன்றையளவும் நம்மால் காணமுடிகிறது.

சான்று :

சீனாக் களிமண்
சீனப் பட்டாடை
சீனாக் கற்கண்டு
சீனாச் சரக்கு
சீனாக் கிழங்கு
சீனாப் பூண்டு

இச்சான்றுகள் மூலம் தமிழகம் சீனாவுடன் வாணிபத் தொடர்பு கொண்டுள்ளது நன்கு தெரிய வருகிறது.

பண்டைய தமிழகமும் சீனாவும் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் எச்சங்களாகத் தமிழகத்தில் கிடைத்த சீன நாணயங்கள் விளங்குகின்றன என்றால் மிகையாகாது. சீன தேசத்து இலக்கியங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தோடு நிலவிய வாணிப உறவுகள் பற்றிக் குறிக்கின்றன. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் பட்டுக்கோட்டை வட்டம் ஒலயக் குன்னம் என்ற ஊரிலும், மன்னார்குடி வட்டத்திலுள்ள தாலிக்கோட்டை என்ற கிராமத்திலும் அதிக சீன நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் சீனத்திற்கும் பண்டைய தமிழகத்திற்கும் இடையே பெரும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது.

4.3.2 தென்கிழக்கு ஆசிய நாடுகள்

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தாய்லாந்துடன் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பண்டைய தமிழகம் கடல் வாணிபத் தொடர்பினை வைத்திருந்தது தெரிய வருகிறது. அங்கு இந்தியாவிற்குச் சொந்தமான கர்னீலியன் மணிகள், கண்ணாடி மணிகள், கர்னீலியன் முத்திரைகள் போன்றவை கிடைத்துள்ளன. மேலும் சோழ மன்னரின் செப்பு நாணயமும் கிடைத்துள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர் அந்நாட்டுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

பிலிப்பைன் தீவுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பல புதைபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கத்திகள், கோடாரிகள் ஈட்டிகள் போன்ற கருவிகள் கி.பி. முதலாம் நூற்றாண்டில் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த கருவிகளைப் பெரிதும் ஒத்துள்ளன. இச்சான்று சீனம், ஜாவா போன்ற கீழை நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் பழைமையைக் காட்டுகிறது.

கிழக்காசிய நாடுகளுக்கும், ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று வந்த கடல் வாணிபத்தில் தமிழகமும் பெரும்பங்கு ஏற்று வந்தது. சீனம், மலேசியா, ஜாவா போன்ற நாடுகளிலிருந்து பல பண்டங்களைக் கொள்முதல் செய்து அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது எனக் கூறுகின்றனர்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.
பண்டைய தமிழர் எந்த மேலை நாடுகளுடன் வாணிபம் மேற்கொண்டனர்?
2.
பழந்தமிழர்கள் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருட்கள் யாவை?
3.
யவனர்கள் எத்தொழிலைத் தமிழக அரண்மனையில் செய்து வந்தனர்?
4.
எகிப்துடன் கொண்ட வாணிபத் தொடர்பை எந்நூலிலிருந்து அறியலாம்?
5.
பினீஷியர் என்பவர் யார்?
6.
அரிசி, இஞ்சிவேர், கருவா என்னும் தமிழ் சொற்கள் கிரேக்க மொழியில் எவ்வாறு சென்று வழங்கின?
7.
புதுச்சேரிக்கு அருகில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட ஊர் யாது?
8.
ரோம ஆசிரியர்கள் முசிறி, தொண்டி, குமரி ஆகிய துறைமுகப்பட்டினங்களை எவ்வாறு குறிப்பிடுகின்றனர்?
9.
மூன்று கிழக்கு ஆசிய நாடுகளைக் கூறுக.