5.5 பாண்டிய மன்னர்கள்

பாண்டிய நாடு தென்புலம் என்றும் பாண்டிய மன்னர்கள் தென்புலம் காவலர் பெருமான் என்றும் அழைக்கப் பெறுவர். தென்புலம் என்பது பழனி மலைக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதியாகும். பாண்டிய அரசிற்கு நீண்டதொரு வரலாறு உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்குப் பாண்டிய மன்னன் தூதுவரை அனுப்பினான் என்பது வரலாறு. பாண்டிய நாடு பெருமையோடு விளங்கியதற்குக் காரணம் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, கடல்கடந்து பண்டைய காலத்திலே வாணிபம் மேற்கொண்டதுதான். பாண்டிய நாட்டின் தெற்கே கடல்கோள் நடந்ததால் பெரும் நிலப்பரப்பு நீரில் மூழ்கிப் போய்விட்டது எனப் புவியியலாளர் கூறுவர். அப்படிப்பட்ட பாண்டிய நாட்டைப் புகழ் பெற்ற மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

பண்டைய காலத்தில் பாண்டியர் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். கடல்கோள் காரணமாக அக்கபாடபுரத்திலிருந்து மதுரைக்குத் தலைநகரை மாற்றிப் பாண்டியர் ஆட்சி புரிந்தனர். இம்மதுரைக்குக் கூடல் நகர் என்ற வேறு பெயரும் உண்டு. இம்மாநகரம் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இம்மதுரையில்தான் மூன்றாவது சங்கம் அமைத்துப் பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்தனர். பாண்டிய நாட்டின் கடலில் எடுக்கப்பட்ட முத்துக்கள் அயல்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ப்பட்டன. பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையில் மாட மாளிகைகளும், அகன்ற வீதிகளும் காணப்பட்டன. பாண்டிய மன்னர்கள் நீதி வழுவாது நல்ல முறையில் ஆட்சி புரிந்தனர். மேலும் புலவர்களைப் போற்றி வந்தனர்.

இனிப் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களைப் பற்றிக் காண்போம்.

5.5.1 வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

சங்ககாலப் பாண்டிய மன்னகளுள் காலத்தால் மிகவும் முற்பட்டவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் ஆவான். இவனுடைய அரசவையில்தான் தொல்காப்பியம் அரங்கேறியது என்பர். இவன் முடிசூட்டிக் கொண்டு நெடுங்காலம் ஆண்டு வந்ததால் இம்மன்னன் நெடியோன் என்று பாராட்டப்பெற்றான்.

நிலம்தந்த பேர் உதவி
பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்

(மதுரைக் காஞ்சி: 60-61)

5.5.2 பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

முதுகுடுமிப் பெருவழுதி என்னும் இயற்பெயருடைய இவன் யாகசாலைகள் பல அமைத்து, யாகங்கள் (வேள்விகள்) செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப் பெயர் பெற்றான். இவன் வேள்விகள் செய்வதற்கு உதவிய அந்தணர்களுக்கு வேள்விக்குடி என்னும் சிற்றூரைத் தானமாக அளித்தான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.

இவன் பகைவரோடு போர் செய்யும்போது அறநெறியைக் கடைப்பிடித்தான். பகைவர் நாட்டினுள் படையுடன் புகுந்தவுடன், முதற்கண் போர் நடைபெறும் இடத்தில் உள்ள பசுக்கள், அந்தணர்கள், பிணியுடையோர், பெண்கள், புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோரைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பறையடித்து அறிவித்துவிட்டு, அதற்குப் பின்னரே போர் செய்யத் தொடங்குவான் என்று புறநானூறு கூறுகிறது.

ஆவும், ஆன்இயல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும், பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்

(புறநானூறு, 9:1-5))

( - பசு; ஆன் இயல் – பசுவின் இயல்பை உடைய; கடி விடுதும் – விரைவாகச் செலுத்துவோம்; அரண் – பாதுகாப்பான இடம்; சேர்மின் – சென்று சேருங்கள்)

5.5.3 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இவன் சங்க காலப் பாண்டியருள் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னன் ஆவான். மிக இளமைக் காலத்திலேயே அரசபதவியை அடைந்தான். ஒரு சமயம் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும் ஒன்று கூடிப் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தனர். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த போரில் பாண்டியன் அப்பகைவர் எழுவரையும் தோற்கடித்து வெற்றி பெற்றான். இதனால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எனப்பட்டான்.

பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருதுகளத்து அடலே

(புறநானூறு , 76: 11-13)

(பொருதும் என்று = போர் செய்வோம் என்று கூறி; தன்தலை வந்த = தன்மீது படையெடுத்து வந்த; நல் வலம் = நல்ல வலிமை; அடங்க = கெடும்படி)

ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட

(புறநானூறு , 2: 16)

(ஆலங்கானத்து = தலையாலங்கானத்தே; அமர் கடந்து = போர் செய்து வென்ற)

இப்பாண்டிய மன்னன் பெற்ற வெற்றியைச் சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. பத்துப்பாட்டில் அமைந்து இருக்கும் மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய பாட்டுகளுக்குப் பாட்டுடைத் தலைவனாக இம்மன்னன் இருக்கின்றான்.

5.5.4 கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

இப்பாண்டிய மன்னன் சங்ககாலப் பாண்டிய மன்னருள் இறுதியில் வாழ்ந்தவனாவான். இவன் ஒரு சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். இவன் காலத்தில் பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கானப்பேரெயில் என்னும் கோட்டை உள்ள பகுதியை வேங்கைமார்பன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். உக்கிரப் பெருவழுதி வேங்கை மார்பனை வென்று கானப் பேரெயிலைக் கைப்பற்றித் தனக்கு உரியதாக்கிக் கொண்டான். எனவே இவன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப்பட்டான். கானப் பேரெயில் தற்போது சிவகங்கைக்குக் கிழக்கே 16 கி.மீ தொலைவில் காளையார் கோயில் என்னும் பெயரில் உள்ளது.

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி யாவருடனும் பகைமை பாராட்டாமல் மாரி மாவெண்கோ என்ற சேர மன்னனுடனும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னனுடனும் நட்புப் பூண்டிருந்தான். இந்நட்பினைப் பாராட்டி ஔவையார் புறநானூற்றில் (பாடல் எண் 367) வாழ்த்தியுள்ளார். இப்பாண்டிய மன்னன் சிறந்த புலவனாகவும், புலவர்களைப் போற்றிய புரவலனாகவும் இருந்தான். இவனது அரசவையில்தான் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்று கூறுவர். திருக்குறளைப் பாராட்டும் வகையில் இவன் பாடியதாக அமைந்த ஒரு வெண்பா திருவள்ளுவ மாலையில் காணப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக எட்டுத்தொகையுள் ஒன்றான அகநானூற்றைத் தொகுப்பித்தவன் இம்மன்னனே என்றும் கூறுவர். இப்பாண்டிய மன்னனைப் பற்றிய குறிப்புகள் இறையனார் அகப்பொருள் உரையிலும், சிலப்பதிகார உரையிலும் காணப்படுகின்றன. உக்கிரப் பெருவழுதியைப் பற்றி ஐயூர் மூலங்கிழாரும், ஔவையாரும் புறநானூற்றில் பாடியுள்ளனர்.

5.5.5 பிற பாண்டிய மன்னர்கள்

பாண்டிய மன்னருள் மேலும் ஒரு சில மன்னர்கள் புகழ் பெற்று விளங்கினர். அப்பாண்டிய மன்னர்களைப் பற்றி அகநானூற்றிலும் பிற இலக்கியங்களிலும் சுட்டப்பட்டிருந்தாலும் செய்திகள் அவ்வளவு விரிவாகக் கூறப்படவில்லை. அவர்களுள் சில மன்னர்கள் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி, கீரஞ்சாத்தன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன், மதிவாணன், மாலை மாறன், மாறன் வழுதி, முடத்திருமாறன், வெற்றிவேற் செழியன் ஆவர்.