1.7 களப்பிரர் கால இலக்கிய வளர்ச்சி

களப்பிரர் சமண சமயத்தையும், பௌத்த சமயத்தையும் சார்ந்தவர்களாக இருந்தனர். சமண சமயம் சார்ந்தவர்கள் பிராகிருத மொழியையும், பௌத்த சமயம் சார்ந்தவர்கள் பாலி மொழியையும் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். எனவே இவர்களது ஆட்சிக் காலத்தில் பிராகிருத மொழிக்கும், பாலி மொழிக்கும் உயர்ந்த செல்வாக்குக் கிடைத்தது. மேலும் இவ்விரு மொழிகளும் ஆட்சி மொழிகளாகத் திகழ்ந்தன. சங்க காலத்தில் ஆட்சி மொழியாக இருந்த தமிழ் மொழி, களப்பிரர் காலத்தில் ஆட்சி மொழியாக இல்லாவிட்டாலும் சமயத்தையும், தத்துவத்தையும், ஒழுக்கத்தையும் பொதுமக்களுக்குப் புகட்டும் ஓர் உயர்ந்த நிலைமையை எய்தியது. தமிழில் போதித்தாலொழியத் தத்தம் சமயங்களின் கருத்துகளைப் பொதுமக்களுக்குப் புகட்ட முடியாது எனக் கருதிய சமணரும், பௌத்தரும் தமிழைக் கற்கலானார்கள். நல்ல பல நூல்களைத் தமிழில் எழுதலானார்கள்.

பூச்சியபாதர் என்ற சமண முனிவரின் மாணவராகிய வச்சிரநந்தி என்பவர் மதுரையில் திராவிட சங்கம் என்ற ஒரு சங்கத்தைக் கி.பி. 470இல் நிறுவினார். இதனை நான்காம் தமிழ்ச் சங்கம் என்று கூறுவர். இச்சங்கத்தின் நோக்கம் சமண சமய அறங்களைப் பரப்புவதும், சமண சமயக் கொள்கைகளை விளக்கக் கூடிய நூல்களைத் தோற்றுவிப்பதுமாக இருந்தது.

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டாலும் நல்லதொரு இலக்கிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி நீதி நூல்களும், பக்தி இலக்கியமும் முதலில் தோன்றியது களப்பிரர் காலத்திலேயே ஆகும். சங்க காலத்தில் ஆசிரியப்பாவும், கலிப்பாவும் செல்வாக்குப் பெற்றிருக்க, களப்பிரர் காலத்தில் வெண்பா செல்வாக்குப் பெற்றது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, ஆசாரக்கோவை, ஆகிய ஒன்பது நீதி நூல்களும், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு அகப்பொருள் நூல்களும், களவழி நாற்பது என்ற ஒரு புறப்பொருள் நூலும் களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும். (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள திருக்குறள் சங்க காலத்தில் தோன்றியது; நாலடியார் களப்பிரர் காலத்திற்குப் பின்பு தோன்றியது.)

அறுபத்து மூன்று சைவ சமய நாயன்மார்களில் காலத்தால் முற்பட்டவர்கள் எனக் கருதப்படுபவர்கள் திருமூலர், காரைக்கால் அம்மையார் ஆகிய இருவரும் ஆவர். இவர்கள் இருவரும் களப்பிரர் காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமூலர் திருமந்திரம் என்ற ஒப்பற்ற நூலை எழுதினார். காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திரு இரட்டை மணிமாலை என்னும் நூல்களை எழுதினார். சைவ சமய நாயன்மார்கள் பாடிய நூல்கள் பிற்காலத்தில் பன்னிரு திருமுறையாகத் தொகுக்கப்பட்டன பன்னிரு திருமுறையில் திருமந்திரம் பத்தாவது திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. காரைக்கால் அம்மையார் நூல்கள் பதினொன்றாம் திருமுறையில் வைத்துத் தொகுக்கப்பட்டன.

பன்னிரு ஆழ்வார்களில் காலத்தால் முற்பட்டவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவர் ஆவர். இவர்கள் முதலாழ்வார்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படுவர். இவர்களும் களப்பிரர் காலத்தில் வாழ்ந்தவர்களே ஆவர். இவர்கள் ஒவ்வொருவரும் திருமால் மீது நூறு பாடல்கள் கொண்ட திருவந்தாதி என்னும் பெயருடைய நூலைப் பாடினர்.

களப்பிரர் காலத்தில் தோன்றிய மற்றொரு நூல் முத்தொள்ளாயிரம் ஆகும். இந்நூல் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் நூல் ஆகும்.

மேலே குறிப்பிட்ட களப்பிரர் கால இலக்கிய நூல்களைப் பற்றி இலக்கிய வரலாறு என்ற தாளில் விரிவாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.