1.2 பிற்காலப் பாண்டிய மன்னர்கள்

பிற்காலப் பாண்டியப் பேரரசை முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், இரண்டாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஆகிய அறுவர் ஒருவர்பின் ஒருவராக ஆண்டு வந்தவர்கள் ஆவர். இனி இப்பாண்டிய மன்னர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1.2.1 முதலாம் சடையவர்மன் குலேசேகரபாண்டியன் (கி.பி. 1190-1218)

இவன், மூன்றாம் குலோத்துங்க சோழன் உதவியால் பாண்டிய நாட்டு அரியணை ஏறி ஆட்சி செய்த மாறவர்மன் விக்கிரமபாண்டியன் என்பவனுடைய மகன் ஆவான். மாறவர்மன் விக்கிரமபாண்டியன் கி.பி. 1190இல் மறைந்தான். அதே ஆண்டில் சடையவர்மன் குலசேகரபாண்டியன் பாண்டிய நாட்டு மன்னனாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.

இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மூன்றாம் குலோத்துங்கன் தன் தந்தைக்குச் செய்த உதவியை மறந்து அவனோடு பகைமை கொண்டான். அவனுக்கு ஆண்டுதோறும் கொடுத்துவந்த திறையையும் செலுத்த மறுத்துவிட்டான். இதனால் சினமுற்ற மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். சடையவர்மன் குலசேகரபாண்டியனும் பெரும்படையுடன் சென்று மூன்றாம் குலோத்துங்கனை எதிர்த்தான். கி.பி. 1202 இல் மட்டியூர், கழிக்கோட்டை என்னும் ஊர்களில் பெரும்போர்கள் நடைபெற்றன. (இவ்வூர்கள் தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டத்தில் முன்பு இருந்தவை.) இப்போர்களில் பாண்டியப் படைகள் பேரழிவிற்கு உள்ளாகிப் புறங்காட்டி ஓடின. தோல்வியுற்ற பாண்டியன் மதுரையை விட்டு வேறிடம் சென்று ஒளிந்துகொண்டான். வெற்றி பெற்ற மூன்றாம் குலோத்துங்கன் தன் படைகளுடன் மதுரை நகருக்குள் புகுந்தான். அங்குள்ள அரண்மனை மண்டபங்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். பின்பு மதுரை நகரில் சோழ பாண்டியன் என்ற பட்டப்பெயர் சூட்டிக் கொண்டு வீராபிடேகம் செய்து கொண்டான்.

மூன்றாம் குலோத்துங்கன் தான் வென்று கைப்பற்றிய பாண்டிய நாட்டை, ஒரு சில ஆண்டுகள் கழித்துக் குலசேகரபாண்டியனுக்கே மீண்டும் அளித்து, அவனைத் தனக்கு அடங்கித் திறை செலுத்தி ஆளும்படி ஆணையிட்டான். அதன்பின்பு சடையவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1218 வரை மூன்றாம் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்தி ஒரு சிற்றரசன் போலப் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்.

இவன் தன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் (கி.பி. 1216இல்) தனது தம்பியான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி அவன் ஆட்சித் துறையில் பயிற்சி பெற வழி செய்தான்.

1.2.2 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1238)

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1218இல் மறைந்தான். உடனே முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டு ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டான்.

இவன் தனது முன்னோர் சோழர்களுக்கு அடங்கித் திறை செலுத்தித் தம் வாழ்நாளைக் கழித்து வந்த இழிநிலையை எண்ணி மனம் வெதும்பினான். மேலும் தனது இளம்வயதில் மூன்றாம் குலோத்துங்கன் படையெடுத்து வந்து மதுரையில் உள்ள அரண்மனை மண்டபங்களைத் தரை மட்டமாக்கியதை எல்லாம் நேரில் கண்டிருந்தான். எனவே சோழ நாட்டை வென்று பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். இந்நிலையில் மூன்றாம் குலோத்துங்கன் இறந்தான். அவன் மகன் மூன்றாம் இராசராசன் சோழ நாட்டு அரியணை ஏறி ஆட்சி செய்துவந்தான்.

பழிவாங்கும் நோக்குடன் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். மூன்றாம் இராசராசனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். சோழ நாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கு இரையாக்கினான்; அங்குள்ள மணி மண்டபங்களையும், மாட மாளிகைகளையும் இடித்துத் தரை மட்டமாக்கினான். போரில் தோல்வியுற்ற மூன்றாம் இராசராசன் தனது சுற்றத்தாருடன் தலைநகரை விட்டு வெளியேறி ஒரு மறைவிடத்தில் தங்கி வாழ்ந்தான்.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களின் இரண்டாம் தலைநகராகிய பழையாறை சென்று அங்குள்ள அரண்மனையில் வீராபிடேகம் செய்து கொண்டான். பின்னர்ப் பாண்டிய நாடு திரும்பிச் செல்லும் வழியில், பொன்னமராவதியில் உள்ள தனது அரண்மனையில் தங்கினான். நாட்டை இழந்த மூன்றாம் இராசராசனை அழைத்துவரச் செய்து அவனுக்குச் சோழ நாட்டைத் திரும்ப அளித்து அவனைத் தனக்குத் திறை செலுத்தி ஆட்சி செய்து வருமாறு பணித்தான்.

சில ஆண்டுகளுக்குப் பின்பு மூன்றாம் இராசராசன் திறை செலுத்த மறுத்துவிட்டான். இதனால் சினங்கொண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது மீண்டும் ஒரு போர் தொடங்கினான். இப்போரில் தோல்வியுற்ற மூன்றாம் இராசராசன் சோழ நாட்டை விட்டு வடபுலம் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பல்லவ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்கன் என்பவன் தெள்ளாறு என்னும் இடத்தில் மூன்றாம் இராசராசனைக் கைது செய்து, தனது தலைநகராகிய சேந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோட்டையில் சிறைவைத்தான்.

இதே காலத்தில் போசளநாட்டை வீரநரசிம்மன் (1220-1230) என்பவன் ஆண்டு வந்தான். இவன் தன் மகளை மூன்றாம் இராசராசனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தான். கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராசராசனைச் சிறை வைத்ததை அறிந்து மனம் கொதித்த வீரநரசிம்மன் பெரும்படையுடன் சென்றான். கோப்பெருஞ்சிங்கனைப் போரில் தோற்கடித்தான். அவன் சிறைவைத்திருந்த மூன்றாம் இராசராசனை மீட்டான். அதோடு மட்டும் அல்லாமல் தொடர்ந்து படையுடன் வீரநரசிம்மன் சென்று, காவிரியாற்றங்கரையில் உள்ள மகேந்திரமங்கலத்தில் சுந்தரபாண்டியனோடு போரிட்டு அவனை வென்று, அவன் கைப்பற்றியிருந்த சோழ நாட்டை மூன்றாம் இராசராசனுக்கு வழங்கினான். இத்தோல்விக்குப் பின்னர், பாண்டியரும் போசளரோடு மண உறவு செய்து கொண்டனர். தமிழ்நாட்டு அரசியலில் போசளரின் தலையீடு குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் போசளரின் மேலாண்மை நிலைநாட்டப்பட்டது.

1.2.3 இரண்டாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி. 1238)

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்குப் பின்னர் இரண்டாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆட்சிக்கு வந்தான். இவன் ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆட்சி புரிந்து இறந்துபோனான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்குப் பின்பு இவன் அரசாண்ட செய்தி திருத்தங்கால் என்னும் ஊரில் (சிவகாசிக்கு அருகில் உள்ளது) உள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகிறது. அதில் இவனைப் பற்றிய செய்திகள் போதுமான அளவுக்கு இடம் பெறவில்லை.

1.2.4 இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1239-1251)

இரண்டாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் மறைவுக்குப் பின்னர், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239இல் பாண்டிய நாட்டு மன்னனாக அரியணை ஏறினான். இவனுக்குப் போசள மன்னனாகிய வீரசோமேசுவரன் மாமன் ஆவான்; (வீர சோமேசுவரன், வீரநரசிம்மனின் மகனாவான்) கொங்குச் சோழனாகிய விக்கிரமசோழன் மைத்துனன் ஆவான். இவர்களுடைய உறவும் நட்பும் இவனது ஆட்சிக்குப் பெருந்துணையாய் இருந்தன.

இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டை ஆண்டு வந்தவன் மூன்றாம் இராசேந்திர சோழன் ஆவான். அவன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இப்பாண்டியனைப் போரில் வென்று இவனுடைய பாண்டிய நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். போசள மன்னன் வீரசோமேசுவரன் மூன்றாம் இராசேந்திர சோழனுடன் போர் புரிந்து, அவனை வென்று, பாண்டிய நாட்டு ஆட்சியை இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனிடம் ஒப்படைத்தான். இவ்வுண்மையை, அப்போசள மன்னன் தன்னைப் பாண்டியகுல சம்ரட்சகன் எனவும், இராசேந்திரனைப் போரில் வென்றவன் எனவும் தன் கல்வெட்டுகளில் கூறிக் கொள்வதால் அறியலாம்.

1.2.5 முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1251-1268)

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறந்த பிறகு, கி.பி. 1251இல் பாண்டிய நாட்டு மன்னனாக முடி சூடிக் கொண்டவன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆவான். பிற்காலப் பாண்டிய மன்னருள் புகழில் மிகவும் ஓங்கியவன் இவனே ஆவான். வலிமையும் புகழும் இழந்து கிடந்த பாண்டியப் பேரரசை மேலோங்கச் செய்தவன் இவனே என்றால் மிகையாகாது. இவன் அண்டை நாடுகளுடன் போரிட்டு அந்நாடுகளை எல்லாம் வென்று பாண்டியப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினான். இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டியப் பேரரசு தமிழகத்தில் உள்ள சோழ நாடு, சேர நாடு, கொங்கு நாடு, பல்லவ நாடு ஆகிய நாடுகளை உள்ளடக்கி, வடக்கே ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை பரந்து நின்றது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் செய்த போர்களும், அடைந்த வெற்றிகளும், கைப்பற்றிய நாடுகளும் பலவாகும்.

 • சேர நாட்டை வெற்றி கொளல்
 • இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் பாண்டியப் பேரரசின் பரப்பினை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டான். முதலில் சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டை ஆண்டு வந்த வீரரவி உதயமார்த்தாண்டன் என்பவனை வெற்றி கொண்டான். இவ்வெற்றியின் காரணமாக இவனுக்குச் சேரனை வென்றான் என்ற சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. இவன் தனது சேரநாட்டு வெற்றிக்கு நன்றி செலுத்தும் வகையில் திருவானைக்கா கோயிலில் ஆண்டுதோறும் விழா எடுப்பதற்கு முட்டைபாடி, வீர தெங்கபுரம், பாகன்குடி ஆகிய ஊர்களை வழங்கினான்.

 • சோழ நாட்டைக் கைப்பற்றல்
 • சேர நாட்டு வெற்றியால் திடம் கொண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1257இல் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். போரில் மூன்றாம் இராசேந்திரனை வென்று அவனைத் தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக்கி விட்டான். அதற்குப் பின்பு மூன்றாம் இராசேந்திரன் தனது ஆட்சிக் காலம் முழுவதும் பாண்டியருக்குத் திறை செலுத்தியே வாழ்ந்தான். அவனோடு பிற்காலச் சோழர் ஆட்சி மறைந்தது. அவன் இறந்தபின்னர், சோழ நாடு பாண்டிய நாட்டுடன் இணைக்கப்பட்டது.

 • போசளரை அடக்குதல்
 • போசளர் என்போர் (கி.பி. 1026-1343) மைசூரையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் கொண்ட போசள நாட்டைத் துவாரசமுத்திரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தவர்கள் ஆவர். இவர்கள் மூன்றாம் இராசராச சோழன் காலத்தில், சோழ நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, அதனைக் கண்ணனூர்க் கொப்பம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். (கண்ணனூர்க் கொப்பம் என்பது இக்காலத்தில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 12கி.மீ தொலைவில் சமயபுரம் என்ற பெயரில் உள்ளது.) இப்போசளர் பாண்டியரோடும், சோழரோடும் மண உறவு கொண்டு தங்களது மேலாதிக்கத்தைத் தமிழக அரசியலில் நிலைநாட்டியதை ஏற்கெனவே பார்த்தோம்.

  சடையவர்மன் சுந்தரபாண்டியன் போசளரைத் தாக்கி அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சோழ நாட்டுப் பகுதியைத் தன் ஆளுகையின்கீழ்க் கொண்டுவர எண்ணினான். அதனை நிறைவேற்றும் பொருட்டுக் கி.பி. 1262இல் பெரும்படையுடன் சென்று, அப்போசளர்க்கு உரிய தலைநகராகிய கண்ணனூர்க் கொப்பத்தை முற்றுகையிட்டான். அப்போது நடந்த போரில் அவ்வூரில் தன் மகன் இராமநாதன் என்பவனோடு தங்கியிருந்த போசள மன்னன் வீரசோமேசுவரன் கொல்லப்பட்டான். சடையவர்மன் சுந்தரபாண்டியன் கண்ணனூர்க் கொப்பத்தைக் கைப்பற்றினான்

 • மகத நாட்டையும், கொங்கு நாட்டையும் கைப்பற்றல்
 • தோல்வியைக் கண்டறியாத சடையவர்மன் சுந்தரபாண்டியன் மகத நாட்டின் மீதும், கொங்கு மன்னர்களின் கொங்கு நாட்டின் மீதும் படையெடுத்துச் சென்று அந்நாடுகளை வென்று பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொண்டான். (மகத நாடு என்பது தற்போது உள்ள சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியையும், விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும் முற்காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்தது.)

 • இலங்கை வெற்றி
 • சடையவர்மன் சுந்தரபாண்டியன் கப்பற்படையுடன் இலங்கை சென்று, அங்கு ஆண்டு கொண்டிருந்த அரசனை வென்றான். அவனிடமிருந்து யானைகளையும், பலவகை மணிகளையும் திறைப் பொருளாகப் பெற்று நாடு திரும்பினான்.

 • பல்லவன் கோப்பெருஞ்சிங்கனை அடக்குதல்
 • சடையவர்மன் சுந்தரபாண்டியனது அடுக்கடுக்கான வெற்றிகளைக் கண்டு அஞ்சிய பல்லவ அரசன் கோப்பெருஞ்சிங்கன் அவனுக்குத் திறைப்பொருளை அனுப்பி வைத்தான். சுந்தரபாண்டியன் அதை ஏற்றுக் கொள்ளாமல், கோப்பெருஞ்சிங்கன் மீது படையெடுத்துச் சென்று, அவனுடைய தலைநகராகிய சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுப் போர் செய்தான். அப்போரில் கோப்பெருஞ்சிங்கனை வென்று சேந்தமங்கலத்தைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும் அவனுடைய யானைகளையும், குதிரைகளையும், பிற செல்வங்களையும் கவர்ந்து கொண்டான். பிறகு அவற்றையெல்லாம் அவனுக்கே அளித்து, அவனைத் தன் ஆணைக்கு அடங்கி நடக்கும் சிற்றரசனாக்கி விட்டுத் தன் நாடு திரும்பினான்.

 • காஞ்சிபுரத்தைக் கைப்பற்றல்
 • சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழனாகிய விசயகண்ட கோபாலன் என்பவன் ஆண்டு வந்தான். சடையவர்மன் சுந்தரபாண்டியன் அவன் மீது படையெடுத்துச் சென்று, போரில் அவனைக் கொன்று, காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினான். பின்பு விசயகண்ட கோபாலனுடைய தம்பியர் வந்து, தன்னடி பணிந்து வணங்கவே அவர்களுக்குக் காஞ்சிபுரத்தை அளித்து, அவர்களை ஆண்டுதோறும் தனக்குத் திறை செலுத்திக் கொண்டு ஆட்சி செய்து வருமாறு பணித்தான்.

 • நெல்லூரைக் கைப்பற்றல்
 • சடையவர்மன் சுந்தரபாண்டியன் இறுதியாகத் தமிழகத்தின் வடக்கே படையெடுத்துச் சென்றான். அங்கே காகதீய நாட்டை ஆண்டு வந்த கணபதிதேவன் என்பவனைப் போரில் வென்று, அவனுக்கு உரிய நெல்லூரைக் கைப்பற்றி, அந்நகரில் வீராபிடேகம் செய்து கொண்டான்.

 • எம்மண்டலமும் கொண்டருளியவன்
 • இவ்வாறு பல நாடுகளை வென்று தன்னடிப்படுத்தித் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் முடிமன்னனாக விளங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர் என்ற பட்டப் பெயரைப் புனைந்து கொண்டான்.

  1.2.6 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1268-1310)

  முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனை அடுத்து, முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1268இல் பாண்டியநாட்டு அரியணை ஏறினான். இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாடு உயர்நிலையில் இருந்தது. வெனிஸ் நாட்டு வழிப்போக்கனான மார்க்கோ போலோ (Marco Polo) என்பவனும், பெர்சிய நாட்டைச் சார்ந்த இசுலாமிய வரலாற்றாசிரியர் வாசாப் (Wassaf) என்பவரும் இவனுடைய காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தனர்.

  மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்துப் போர் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை அவன் சேரநாட்டில் உள்ள கொல்லத்தைக் கைப்பற்றியதும், ஈழ நாட்டின் மீது படையெடுத்ததும் ஆகும்.

  மாறவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1274இல் சேரநாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டில் உள்ள கொல்லத்தை வென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் இவன் கொல்லம் கொண்ட பாண்டியன் என்னும் பட்டப்பெயர் பெற்றான்.

  மாறவர்மன் குலசேகரபாண்டியனின் ஈழப் படையெடுப்பைப் பற்றி இலங்கை வரலாற்று நூலாகிய மகாவம்சம் விரிவாகக் கூறுகிறது. இப்பாண்டியன் கி.பி. 1284இல் ஆரியச் சக்கரவர்த்தி என்பவன் தலைமையில் பெரும்படை ஒன்றை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். அப்படைத்தலைவன் ஈழத்தின் பல பகுதிகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கி, நகரங்களைக் கொள்ளையிட்டுச் சுபகிரி என்னும் நகரில் இருந்த பெருங்கோட்டையைக் கைப்பற்றினான். இறுதியில் அந்நாட்டில் உள்ள பெருஞ்செல்வங்களையும், புத்தரது பல்லையும் கைப்பற்றிக் கொண்டு வெற்றியுடன் பாண்டிய நாட்டிற்குத் திரும்பினான். புத்தரின் பல்லை ஈழ நாட்டார் புனிதப் பொருளாகக் கருதி வந்தனர். பாண்டியரோடு போர் புரிந்து அப்பல்லைப் பெறுவதற்கு இயலாத நிலையில் இருந்த ஈழநாட்டு மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகு என்பவன் பாண்டிய நாடு வந்தான். மாறவர்மன் குலசேகரபாண்டியனைப் பணிந்து நட்புரிமை கொண்டு புத்தரின் பல்லைப் பெற்றுச் சென்றான்.

  சோழ நாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் உள்ள பல ஊர்களில் இவன் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆகவே இந்நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன எனலாம். இவனுக்கு முன் அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனது ஆட்சியில் பாண்டியப் பேரரசின் கீழ் அடங்கியிருந்த எல்லா நாடுகளும் இவனது ஆட்சிக் காலத்திலும் அங்ஙனமே இருந்தன என்பதில் ஐயமில்லை. எனவே சடையவர்மன் சுந்தர பாண்டியனைப் போலவே இம்மாறவர்மன் குலசேகரபாண்டியனும் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ குலசேகர பாண்டியன் என வழங்கப்பெற்றான். மேலும் இவன் தன் பேரரசிற்கு உட்பட்டிருந்த நாடுகள் எல்லாம் அமைதியாக இருத்தல் வேண்டித் தன் தம்பிமார்களான மாறவர்மன் விக்கிரமபாண்டியன், சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆகியோரை அந்நாடுகளில் அரசப் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்து வருமாறு ஏற்பாடு செய்தான்.