3.3 மதுரையில் சுல்தானியர் ஆட்சி (கி.பி. 1333-1378)

டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள் தங்களது மேலாண்மையைத் தமிழகத்தின் மீதும் செலுத்தினர். மாலிக்காபூர் படையெடுப்பை அடுத்து குஸ்ருகான், உலூக்கான் போன்றோர் படையெடுத்துத் தமிழகத்தினைச் சிதைத்து வைத்திருந்தனர். இதன் விளைவாக மதுரையில் சுல்தானியர் ஆட்சி நிலைபெற்றது. மதுரையானது டெல்லியின் அரச பிரதிநிதியான ஒருவரால் நிருவாகம் செய்யப்பட்டது.

3.3.1 ஜலாலுதீன் அசன்ஷா (கி.பி.1333-1340)

கியாசுதீன் துக்ளக் இறந்தவுடன் உலூக்கான் டெல்லியில் அரியணை ஏறினான். இவனே முகமதுபின் துக்ளக் ஆவான். இவனது ஆட்சியில் தமிழ்நாடு துக்ளக் பேரரசின் இருபத்து மூன்றாவது மாநிலமாக ஏற்படுத்தப்பட்டது. அதனை நிருவாகம் செய்ய ஜலாலுதீன் அசன்ஷா என்பவன் அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான். துக்ளக் ஆட்சியில் மத்திய அரசாங்கம் சீர்கெட்டு வலிமையை இழந்தது. தமிழ்நாடு போன்ற வெகுதொலைவில் அமைந்த மாநிலங்களைக் கட்டுப்படுத்துவது கடினமாயிற்று. மதுரையில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த ஜலாலுதீன் அசன்ஷா டெல்லி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி, கி.பி. 1333இல் தன்னாட்சியைத் தொடங்கினான். அவன் ஆட்சி தொடங்கியது முதல் மதுரையில் சுல்தானியர் ஆட்சி தொடங்கியது எனலாம்.

இசுலாமியர் பாண்டிய நாடு வரை வந்து ஆதிக்கத்தை நிலை நாட்டியதைக் கண்ட தென் இந்திய இந்து அரசர்கள் வீர உணர்வு கொண்டு எழுந்து இசுலாமியர் மீது படையெடுப்பு நடத்தினர். துவார சமுத்திரத்தில் ஆட்சியில் இருந்த போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தென் இந்தியாவை இசுலாமியர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் போரிட்டான். அதில் வெற்றியும் கண்டான். ஆனால் அவ்வரசனால் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியை மட்டும் கைப்பற்ற முடிந்தது. பின் அப்பகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பைச் சம்புவராயர்களிடம் ஒப்படைத்தான். இதனையடுத்து இசுலாமியர் படையெடுப்பைச் சந்திக்கும் பொருட்டு மூன்றாம் வீரவல்லாளன் திருவண்ணாமலையில் ஒரு படையை நிறுத்தினான்.

மதுரையில் அந்நியர்கள் ஆட்சிக்கு எதிராகச் சூழ்ச்சிகளும் போராட்டங்களும் தொடங்கின. கி.பி.1340இல் மதுரையை ஆட்சி செய்து வந்த ஜலாலுதீன் அசன்ஷா கொல்லப்பட்டான்.

3.3.2 அலாவுதீன் உதாஜி (கி.பி. 1341)

ஜலாலுதீன் அசன்ஷாவை அடுத்து அலாவுதீன் உதாஜி என்பவன் மதுரையில் ஆட்சிப் பொறுப்பேற்றான். இவன் இந்துக்களின் உள்ளங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சமய உணர்வையும், வீர உணர்வையும் அடக்க எண்ணினான். இசுலாமியரின் ஆட்சியை ஒழித்து, இந்து ஆட்சியை நிலைநாட்ட முயன்று கொண்டிருந்த போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளனை அடக்கவும் திட்டம் தீட்டினான். தன் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு வீரவல்லாளனை எதிர்த்து, நேருக்கு நேர் நின்று அவனோடு போர் செய்தான். போர் செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத நேரத்தில் பகைவரின் அம்பு ஒன்று தாக்கி அலாவுதீன் உதாஜி போர்க்களத்திலேயே உயிர் துறந்தான். இவனது ஆட்சி ஓராண்டிலேயே முடிந்துவிட்டது. இதன் மூலம் மதுரையில் இசுலாமியரின் ஆதிக்க வெறி தோல்வி கண்டது.

3.3.3 குத்புதீன்

அலாவுதீன் உதாஜிக்குப் பின்னர் அவனது மருமகன் குத்புதீன் மதுரையில் சுல்தான் பதவியேற்றான். இவனது ஆட்சி வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே நடந்தது. இச்சுல்தானும் இந்துக்களின் வீர உணர்வுக்குப் பலியானான்.

3.3.4 கியாஸ் உதீன் தம்கானி (கி.பி. 1342-1344)

அதன் பின்னர் கியாஸ் உதீன் தம்கானி மதுரையில் சுல்தான் பொறுப்பில் அமர்ந்தான். இச்சமயத்தில் போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தமிழகப் படையெடுப்பைத் தொடங்கினான். கண்ணனூர்க் கொப்பத்தைக் கைப்பற்றும் நோக்குடன் முன்னேறி வந்தான். இசுலாமியருக்கும் இந்து சமயத்தைச் சார்ந்த போசளப் படையினர்க்கும் இடையே கடுமையான போர் மூண்டது. இதில் போசள அரசன் வீரவல்லாளன் தோல்வியுற்று, கைது செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டான். பின்பு வீரவல்லாளனைத் தம்கானி கொன்று அவனுடைய தோலை உரித்து, உடலுக்குள் வைக்கோலை அடைத்து, அதை மதுரையின் மதில் சுவரின் மேல் தொங்கவிட்டான். வீரவல்லாளனின் உடலைக் கி.பி. 1342இல் மதுரையில் பார்த்ததாக பன்பதூதா என்பவன் தனது குறிப்பில் கூறியுள்ளான். இபன்பதூதா மொராக்கா நாட்டைச் சேர்ந்தவன். சிறந்த கல்வியாளன் ஆவான். இவன் பல நாடுகளைச் சுற்றி விட்டுக் கி.பி. 1333இல் டெல்லி வந்தான். இவன் தம்கானியினது மனைவியின் சகோதரியை மணந்தவன் ஆவான். இவன் கி.பி.1334 முதல் 1342 வரை இந்திய நகரங்கள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியில் மதுரை வந்தான். தம்கானியின் நெருங்கிய உறவினனாக இருந்தாலும், தம்கானி பாண்டிய நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததைத் தனது குறிப்பில் இபன்பதூதா விரிவாகக் கூறியுள்ளான்.

தம்கானி இந்துப் பெண்களைக் கொன்று குவித்தான்; ஆண்களைக் கழுவில் ஏற்றினான்; தாயின் மார்பிலே பால் உண்டு கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகளை வாளால் வெட்டிக் கொன்றான். தான் கொன்று குவித்த மக்களின் தலைகளைக் கொய்து மாலைகளாகக் கோத்துச் சூலங்களில் தொங்க விட்டான். இவற்றை எல்லாம் இபன்பதூதா தனது குறிப்பில் விவரித்துள்ளான். கடைசிக் காலத்தில் தம்கானி காலராநோய் வாய்ப்பட்டு இறந்தான்.

3.3.5 பிற சுல்தானிய மன்னர்கள் (கி.பி.1345 – 1378)

கொடுமைகள் நிறைந்த கியாஸ் உதீன் தம்கானிக்குப் பின்பு நாசீர்உதின், அடில்ஷா, பக்ருதீன் முபாரக் ஷா, அலாவுதீன் சிக்கந்தர்ஷா ஆகியோர் ஆண்டனர். இவர்களது ஆட்சி கி.பி.1345 முதல் 1378 வரை மதுரையில் நடந்தது