4.2 மதுரை நாயக்கர்கள்

நாயக்கர் என்னும் சொல் வடசொல்லிலிருந்து வந்தது எனக் கண்டோம். ஆனால் நாயக்கர் என்னும் சொல் இந்நாளில் தெலுங்கர்களைக் குறிக்கின்றது. அதுவும் ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்துள்ளது. இந்த நாயக்கர்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், இக்கேரி, மைசூர் போன்ற இடங்களில் ஆட்சி நடத்தி வந்தனர். முதற்கண் மதுரையில் இருந்து ஆட்சி நடத்தி வந்த மதுரை நாயக்கர்கள் பற்றிப் பார்ப்போம்.

மதுரை நாயக்கர்கள் ஆட்சி கி.பி. 1529இல் விசுவநாத நாயக்கர் என்பவரால் தொடங்கப்பட்டுக் கி.பி. 1736இல் மீனாட்சி அரசியுடன் முடிவடைந்துள்ளது. இந்த மதுரை நாயக்கர் பரம்பரை மதுரை நாட்டில் 207 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. மீனாட்சி அரசியின் ஆட்சியோடு விசுவநாத நாயக்கர் பரம்பரை மட்டும் முடியவில்லை, விசயநகரப் பேரரசே முடிந்துவிட்டது.

இனி மதுரையை ஆட்சி செய்து வந்த நாயக்க மன்னர்களைப் பற்றி ஒருவர் பின் ஒருவராகக் காண்போம்.

4.2.1 விசுவநாத நாயக்கர் (கி.பி. 1529 – 1564)

விசயநகரப் பேரரசின் பெருமைக்குரிய மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இவரது ஆட்சியில் தமிழ்நாட்டைக் கண்காணிக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்தவர் நாகம நாயக்கர் என்பவர் ஆவார். இவருக்கு வாரிசு இல்லாததால் காசிக்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள விசுவநாதப் பெருமானை வணங்கி மகப்பேறு அருளுமாறு வேண்டினார். காசி விசுவநாதப் பெருமான் திருவருளால் கி.பி.1495இல் நாகம நாயக்கருக்கு ஒரு மகன் பிறந்தான். அம்மகனே விசுவநாத நாயக்கர் ஆவார்.

விசுவநாத நாயக்கர் ஏறக்குறையப் பதினாறு வயதினராய் இருந்தபோதே கிருஷ்ணதேவராயரிடம் அடைப்பைக்காரராகப் பணியாற்றினார் (அடைப்பைக்காரர் – அரசருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் அரசாங்க ஊழியர்). இவர் இளமையிலே பல மொழிகளிலும், கணிதத்திலும், போர்ப் பயிற்சியிலும், பிறவற்றிலும் சிறந்து விளங்கினார். இதன் காரணமாகக் கிருஷ்ணதேவராயர் இவரிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தார். எனவே விசுவநாத நாயக்கரை மதுரை நாட்டுக்கு ஆளுநராக நியமித்தார். கி.பி.1529இல் விசுவநாத நாயக்கர் மதுரையின் ஆட்சியை மேற்கொண்டார். அவர் மதுரை நாட்டுக்கு வரும்போது தளவாய் அரியநாதர் என்பவருடன் வந்தார். தளவாய் என்பது படைத்தலைமைப் பதவியும், அமைச்சர் பதவியும் சேர்ந்ததாகும். கிருஷ்ணதேவராயர் கி.பி.1530இல் இறந்ததும் விசுவநாதர் மதுரை நாட்டைச் சீர்திருத்த வேண்டும் எண்ணிச் சீர்படுத்தலானார். பாண்டிய நாட்டுக்கு உரியதாயிருந்த வல்லம் என்னும் ஊரைத் தஞ்சை நாட்டுடன் சேர்த்தார். தஞ்சைக்குச் சொந்தமாயிருந்த திருச்சிராப்பள்ளியை மதுரை நாட்டுடன் இணைக்கச் செய்தார். இவ்வேற்பாட்டினால் தஞ்சை நாட்டிற்கும், மதுரை நாட்டிற்கும் திட்டவட்டமான எல்லை வகுக்கப்பட்டது.

 • சீர்த்திருத்தங்கள்
 • விசுவநாதர் திருச்சிராப்பள்ளியில் தெப்பக் குளத்தை வெட்டினார். தாயுமானவர் கோயிலைச் செப்பனிட்டார். காவிரி ஆற்றின் இருமருங்கிலும் கள்ளர்களின் உறைவிடமாயிருந்த காடுகளை அழித்துச் சாலைகளை அமைத்துக் கள்ளர் தொல்லைகளை ஒழித்தார். திருவரங்கப் பெருங்கோயிலைச் சீர்திருத்தி அக்கோயிலைச் சுற்றித் தெருக்களை அமைத்து, வீடுகளைக் கட்டி அங்கு மக்களை குடியேற்றினார். இவ்வாறு பல சீர்திருத்தங்களைச் செய்தார். இச்சீர்திருத்தங்களால் மதுரை நாட்டின் வடபகுதியாகிய திருச்சிராப்பள்ளியில் ஒழுங்கும் அமைதியும் நிலவலாயின.

  தென்பாண்டி நாட்டில் அமைதியைக் காக்க வேண்டும் என்பதற்காக விசுவநாத நாயக்கரும், தளவாய் அரியநாதரும் அங்குச் சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டார்கள். தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் இருந்த காடுகள் அழிக்கப்பட்டுச் சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் கள்ளர்களின் தொல்லை ஒழிந்தது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் பழுது பார்க்கப்பட்டது. திருநெல்வேலி நகரமும் விரிவாக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டன. பயிர்த்தொழில் இதனால் வளர்ச்சியுற்றது.

 • பாளையப்பட்டு முறை
 • தற்காலத்தில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களும், கேரளாவில் உள்ள திருவாங்கூரின் ஒரு பகுதியும் விசுவநாதர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மதுரை நாடாகும். இப்பரந்த நாட்டில் செம்மையான ஆட்சி முறையை நிறுவ, கி.பி.1533இல் 72 பாளையப்பட்டு முறையை விசுவநாதர் ஏற்படுத்தினார். இந்தப் பாளையப்பட்டு முறை ஒரு வகையில் ஆங்கில நாட்டின் நிலமானிய முறையைச் (Feudal System) சார்ந்ததாகும். நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக மதுரை நாட்டைப் பல பகுதிகளாகப் (பாளையங்களாக) பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஓர் ஆட்சியாளரை நியமித்தனர். அவரைப் பாளையக்காரர் என அழைத்தனர். இந்த 72 பாளையக்காரர்களில் சிலர் கன்னடர், சிலர் தெலுங்கர் ஆவர். மேலும் பாண்டியர் பரம்பரையைச் சேர்ந்தவர்களும் சிற்றரசர்களாய் இருந்தவர்களும் பாளையக்காரர்களாக இருந்தார்கள்.

  பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பாளையங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியை மதுரை நாயக்கருக்குக் கொடுக்க வேண்டும். மற்றொரு பகுதியைப் படைவீரர்களுக்குச் செலவிட வேண்டும். இன்னொரு பகுதியைச் சொந்தச் செலவுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் தங்கள் பகுதியைப் பாதுகாக்க வேண்டும். போர்க்காலங்களில் மதுரை நாயக்கர்களுக்குப் படைத்துணை புரிய வேண்டும். இவர்களே தங்கள் பகுதியில் ஏற்படக்கூடிய வழக்குகளை எல்லாம் விசாரித்து நீதியும் வழங்க வேண்டும்.

  விசுவநாத நாயக்கர், விசயநகரப் பேரரசர்களாயிருந்த அச்சுதராயருக்கும், சதாசிவராயருக்கும், அமைச்சர் இராமராயருக்கும் கீழ்ப்படிந்து, நேர்மை குறையாமல், உண்மை ஊழியராய் இருந்து செங்கோல் ஆட்சி நடத்தி வந்தார். இதனை இவர் காலத்துச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவர் சுமார் 35 ஆண்டுகள் மாட்சியுடன் ஆட்சி செய்தார். தமது 69ஆம் வயதில் கி.பி.1564இல் மறைந்தார்.

  இவரின் மறைவுக்குப் பின் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-1572), வீரப்ப நாயக்கர் (கி.பி.1572-1595), இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1595 – 1601), முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1601 – 1609), முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1609-1623) ஆகியோர் மதுரையை ஆட்சி புரிந்து வந்தனர்.

  4.2.2 திருமலை நாயக்கர் (கி.பி.1623-1659)

  மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் திருமலை நாயக்கர் ஆவார். இவர் முத்துக் கிருஷ்ணப்பருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருமலை நாயக்கரின் முழுப்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யுலுகாரு என்பதாகும். திருமலை நாயக்கர் முதலில் தம்முடைய அண்ணனான முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சியில் சில ஆண்டுகள் சின்ன துரையாக இருந்து ஆட்சி புரிந்து வந்தார். முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் சந்ததியின்றி கி.பி.1623இல் மறைந்தார். வாரிசு ஏதும் இல்லாததால் அவரது உடன்பிறந்தவரான திருமலை நாயக்கர் ஆட்சியை ஏற்றார். திருமலை நாயக்கர் ஆட்சியை ஏற்றபோது அவருக்கு வயது 39 இருக்கும் என்பர்.

  திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைப் பெருநாடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் ஒரு பகுதி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் பரப்புடைய நாடாய் இருந்தது.

 • தலைநகரம் மாற்றம்
 • விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரையே மதுரை நாட்டின் தலைநகராய் இருந்தது. முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் கி.பி.1616இல் மதுரை நகரிலிருந்து தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். திருமலை நாயக்கரும் தம் தமையனாரைப் போலவே மதுரையில் முடிசூட்டிக் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் இருந்தே ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்தார்.

  திருமலை நாயக்கரின் தமையனார் மதுரையைத் தலைநகராகக் கொள்ளாததற்குச் சில காரணங்கள் உள்ளன. மதுரையில் தக்க காவல் நிறைந்த அரண்கள் இல்லை. சோழநாட்டில் பாயும் காவிரி ஆறு போன்று நீர் பெருகி ஓடும் ஆறாக வைகை இல்லை. அடிக்கடி மதுரையில் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தது. இக் காரணங்களால் தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார்.

  கி.பி.1634இல் திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் அமைந்திருந்த தலைநகரை மதுரைக்கு மாற்றினார். ஏனென்றால் ஒரு சமயம் திருமலை நாயக்கருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. பலவகை மருந்துகளை உட்கொண்டும் நோய் தீரவில்லை. அச்சமயத்தில் மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கோயில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. திருமலை நாயக்கர் அத்திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று கொண்டிருந்தபோது, நோய் மிகுதியானபடியால் பயணத்தைத் தொடரமுடியாமல், வழியில் திண்டுக்கல்லில் தங்கினார். அன்று இரவு ஒரு சித்தர் அவருடைய கனவில் தோன்றி “அரசே! நீ மதுரையில் நிலையாகத் தங்கி, மீனாட்சி அம்மையாருக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் வழிபாடும் திருவிழாவும் நடத்தி ஆட்சி புரிந்து வந்தால் இந்நோய் நீங்கும்” என்றார். உடனே திருமலை நாயக்கர் அவ்வாறு நீங்குமானால் ஐந்து லட்சம் பொன்னுக்குத் திருப்பணி திருவாபரணம் செய்து வைக்கிறேன் என்று நேர்ந்து கொண்டார். மறுநாள் காலையில் அந்நோய் அவரை விட்டு நீங்கிவிட்டது. பின்பு தலைநகரையும் மதுரைக்கு மாற்றினார். திருமலை நாயக்கர் தலைநகரைத் திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்கு மாற்றியதற்குக் காரணமாக இக்கதை கூறப்படுகிறது.

 • திருமலை நாயக்கரின் போர்கள்
 • திருமலை நாயக்கர் ஆட்சிப் பீடத்தில் ஏறியதும் மதுரை நாட்டைப் பாதுகாக்க வேண்டியவற்றைச் செய்வதில் முற்பட்டு இரண்டு கோட்டைகளைக் கட்டினார். பின்பு சுமார் 20,000 வீரர்களைக் கொண்ட படையைத் திரட்டினார். திருமலை நாயக்கர் ஐந்து பெரும் போர்களை நடத்தினார்.

  முதலாவதாக, முந்திய பகைமையாலும், செந்தமிழ் மதுரை நாட்டின் செழிப்பாலும் மைசூர் மன்னர் மதுரை மீது படையெடுத்தார். திருமலை நாயக்கர் அவரை எதிர்த்துப் போராட வேண்டியவரானார்.

  இரண்டாவது, திருவாங்கூர் மன்னர் கேரளவர்மா என்பவர் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டாததனால் அவர் மீது படையெடுத்துச் சென்று போர் புரியலானார்.

  மூன்றாவது, விசயநகரப் பேரரசின் பிடியிலிருந்து விடுபட்டு, முழுவுரிமை மன்னராக விரும்பி, விசயநகரப் பேரரசை எதிர்க்க வேண்டிப் போர் தொடுத்தார்.

  நான்காவது, இராமநாதபுரத்தில் அரசுரிமைக் கலகங்கள் ஏற்பட்ட காலத்தில் அவற்றை அடக்கி அமைதியை நிலைநிறுத்த இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதியுடன் போர் செய்தார்.

  ஐந்தாவதாக மைசூர் மன்னர் படைகள் மதுரை நாட்டைத் தாக்கி மதுரைக் குடிமக்களின் மூக்குகளை அறுத்து அவமானப்படுத்தியதால், இரண்டாம் முறை பழிக்குப் பழி வாங்க மைசூரின் மீது மூக்கறுப்புப் போரை நடத்தினார். திருமலை நாயக்கரின் படைவீரர்கள் மைசூர் நாட்டு எல்லைக்குள் புகுந்து, அங்குள்ள மக்களின் மூக்குகளை அறுத்து மூட்டையாகக் கட்டி மதுரைக்குக் கொண்டுவந்தனர்.

  இவ்வாறு திருமலை நாயக்கர் தமது வாழ்நாள் முழுவதும் பெரும்போர் புரிந்துகொண்டே இருக்க வேண்டியவராய் இருந்ததுமின்றி, அப்போர்களுக்காகப் பெரும்பொருள் செலவு செய்ய வேண்டிய நிலையிலும் இருந்து வந்தார். இப்போர்களினால் மதுரை நாட்டு மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளானார்கள்.

 • கலைப் பணிகள்
 • திருமலை நாயக்கர் ஒரு தலைசிறந்த கலைப்பிரியர் ஆவார். மதுரையில் அவர் எழுப்பியுள்ள கட்டடங்கள் இன்றும் நின்று அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. திருமலை நாயக்கர் மகால் இவர் கட்டிய கட்டடங்களுள் புகழ்பெற்றதும், பெரியதுமாகும். ஷாஜகான் பெயர் சொல்லும் தாஜ்மகாலைப் போல, திருமலை நாயக்கரின் பெயர் சொல்லும் வகையில் மகால் அமைந்துள்ளது. இம்மகாலில் உள்ள அற்புதமான வேலைப்பாடு அமைந்த வளைவுகள், வட்டவடிவான மேற்கூரைகள், விரிந்து அகன்ற கூடங்கள், மிகப் பெரிய தூண்கள் காண்போர் கண்ணைப் பறிப்பனவாகும். ஒவ்வொரு தூணும் 40 அடி உயரமும், மூவர் அல்லது நால்வர் சேர்ந்தணைத்தாலும் அணைக்க முடியாத அளவு பருமனும் கொண்டு விளங்குவதை, மகாலின் முற்றத்தில் இன்றும் காணலாம்.

  மேலும் திருமலை நாயக்கர் மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கே உள்ள பெரிய கோபுரத்தின் எதிரே கட்டிய புதுமண்டபம், இராய கோபுரம் மற்றும் மதுரைக்குக் கிழக்கே உள்ள வண்டியூரில் அழகிய மையமண்டபத்துடன் உருவாக்கிய தெப்பக்குளம் ஆகியன அவருடைய புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இராய கோபுரம் முற்றுப்பெறாத நிலையில் நின்றுவிட்டது. இதைத் திருமலை நாயக்கர் கட்டி முடித்திருப்பாரே என்றால், அதுவே மதுரைக் கோபுரங்களில் மிகவும் உயரமாக அமைந்திருக்கும் என்பர்.

 • பொதுநலப் பணிகள்
 • திருமலை நாயக்கர் அரிய பெரிய கட்டடங்களைக் கட்டுவதிலும், தெப்பக்குளம் அமைப்பதிலும் கவனம் செலுத்தியதோடு மட்டும் நிற்கவில்லை. பொதுநலத்திற்குரிய சாலைகள் அமைப்பதிலும், சத்திரங்கள் கட்டுவதிலும் அவர் நாட்டம் செலுத்தினார்.

  திருமலை நாயக்கர் ஊட்டத்தூர் முதல் கன்னியாகுமரி வரையில் சாலை அமைக்கச் செய்து இடையிடையே பயணிகள் தங்குவதற்குச் சத்திரங்கள் பலவற்றைக் கட்டிவைத்தார். பின்பு அச்சத்திரங்களில் அன்னதானம் செய்யுமாறும் ஏற்பாடு செய்தார். இதனை மதுரைத் திருப்பணி மாலை என்னும் நூலில் உள்ள ஒரு செய்யுள் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

  முனைவேல் விழிஅங் கயற்கண்ணி சந்நிதிமுன் மடத்துள்
  அனைவோர்க்கும் அன்னமும் தோழியம் மாடன் அறைக்கும் அனு
  தினம்மே தினியில் நடக்கும் படிக்(கு) ஈந்(து) இசையும் கொண்டான்
  புனவேலி தந்தனன் கச்சித் திருமலை பூபதியே.

 • கோயில் நலப்பணிகள்
 • திருமலை நாயக்கர் கடவுள் பக்தி மிக்கவராய் இருந்ததால் மதுரைக் கோயில்களில் மட்டும் அன்றி, வேறு கோயில்களிலும் திருப்பணிகள் செய்ததாக அறிகிறோம்.

  மதுரைக் கோயில் ஆட்சி, அபிடேக பண்டாரம் என்பவரிடம் இருந்தது. பண்டாரத்தின் ஆட்சியில் கோயில் சீர்கேடான நிலையில் கிடந்தது. வழிபாட்டு முறைகள் நன்றாக நடைபெறவில்லை. கோயில் வருவாய் முழுவதும் அப்பண்டாரத்தால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதனைத் தெரிந்து கொண்ட திருமலை நாயக்கர் அக்கோயில் ஆட்சியைத் தாமே ஏற்றுக்கொண்டு நடத்தினார். மேலும் கோயிலில் அறக்கட்டளைகளை ஏற்படுத்தினார். கோயில் ஆட்சியில் ஒழுங்கு ஏற்பாடுகளைச் செய்தார். மாசி மாதத்தில் நடைபெறும் விழாவைச் சித்திரைக்கு மாற்றினார். பல விழாக்களை எடுத்து நடத்தினார். சான்று : பிட்டுக்கு மண் சுமந்தது போன்ற திருவிளையாடல் விழாக்கள், தெப்பத் திருவிழா போன்றவை.

  4.2.3 சொக்கநாத நாயக்கர் (கி.பி.1659-1682)

  திருமலை நாயக்கர் இறந்தவுடன் அவரது மகன் இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1659) ஆட்சிக்கு வந்தார். இவர் சுமார் நான்கு மாதங்களே ஆட்சி புரிந்து உயிர் நீத்தார். அவருக்குப் பின் அவருடைய மகன் சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார்.

 • சதி
 • சொக்கநாதர் ஆட்சியை ஏற்றபோது அவர் இளைஞராய் இருந்தார். இதனால் அங்குத் தளவாயாகப் பணிபுரிந்த இலிங்கம நாயக்கனும், பிரதானியாய் இருந்தவனும், இராயசமாகப் பணி செய்தவனும் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து சதித் திட்டம் வகுத்தனர்; பெயரளவில் சொக்கநாதரை அரசராக இருக்க வைத்துவிட்டு, அவரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்; மன்னருக்கு ஆதரவாக இருந்தவர்களைச் சிறையில் அடைத்தனர். அச்சமயத்தில் செஞ்சி நகரம் பீஜப்பூர் சுல்தான் ஆட்சியில் இருந்தது. பிரதானியும், இராயசமும் மன்னர் சொக்கநாதரின் இசைவைப் பெறாமல் செஞ்சிமீது போர் தொடுப்பதாகச் சொல்லிப் படையை அங்கு நிறுத்தி வைத்துவிட்டு, மதுரையில் உள்ள மக்களிடம் போர்ச் செலவிற்காகப் பெரும்பொருள் வேண்டும் என்று மக்களைத் துன்புறுத்திப் பணத்தை வசூலித்தனர். அதோடு மட்டுமல்லாமல் செஞ்சியைக் கண்காணித்து வந்த சகோசி என்பவரிடமிருந்து லஞ்சமாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டனர். இதுபோன்ற சதித் திட்டம் அரண்மனைப் பெண் ஒருத்தி மூலம் சொக்கநாத நாயக்கருக்குத் தெரியவந்தது. உடனடியாகச் சொக்கநாத நாயக்கர் இராயசத்தைக் கொன்று, பிரதானியைக் குருடாக்கினார். பின்பு சொக்கநாத நாயக்கர் தமக்கு ஆதரவாக இருந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு விரைவில் அதிகாரத்தைக் கைப்பற்றி முழு உரிமையோடு நாடாளத் தொடங்கினார்.

 • பஞ்சமும் துன்பமும்
 • சொக்கநாதரும் அவர் தந்தையார் முத்துவீரப்பரும் இசுலாமியப் படையெடுப்புகளை இடைவிடாது தடுத்து நிறுத்தினாலும் மதுரைப் பெருநாட்டு மக்களைப் படையெடுப்புகளிலிருந்து பாதுகாத்திருந்தாலும், அந்த இசுலாமியப் படையெடுப்புகளால் நாட்டு மக்களுக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு எல்லையற்ற தொல்லைகள் உண்டாயின. இத்தொல்லைகளோடு பஞ்சம் வேறு வந்துவிட்டது. மக்கள் தங்களின் சொந்த ஊர்களை விட்டுவிட்டு, பற்பல ஊர்களுக்குச் சென்று குடியேறினார்கள். உதாரணமாக, திருச்சியில் இருந்தவர்கள் மதுரையில் குடிபுகுந்தார்கள். கிறிஸ்தவர்களுள் சிலர் நெடுந்தொலைவிலுள்ள சென்னை மயிலாப்பூரில் தஞ்சம் புகுந்தனர். தென்னகத்து நெற்களஞ்சியமான தஞ்சையிலும், திருச்சியிலுமே இப்பஞ்சம் மிகுதியாய் இருந்தது.

  பஞ்சத்தால் நாட்டு மக்கள் உணவின்றி வாடிக் கொண்டிருக்கும்போது டச்சு வணிகர்கள் வறுமையில் வாடும் மக்களுக்கு உணவு, உடை இவைகளைக் கொடுத்து மகிழ்ச்சியூட்டி அவர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைகளாக விற்றனர்.

  தஞ்சையில் பஞ்சம் இருந்தபோது அங்கு ஆண்டுவந்த மன்னர் இப்பஞ்சத்தைப் போக்குவதற்கு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் சொக்கநாதரோ பஞ்சத்தில் வாழும் மக்கள் எந்நாட்டவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தம் நாட்டைச் சேர்ந்த திருச்சியில் வாழ்பவராக இருந்தாலும் சரி எல்லோருக்கும் உணவுகளை வழங்கினார். இருப்பினும் அவர் அளித்த உணவுப் பொருட்கள் போதுமானதாக இல்லை.

  இப்பஞ்சம் மட்டும் அல்லாமல் காடுகளிலிருந்து வனவிலங்குகள் நாட்டில் புகுந்து அதிக சேதத்தை விளைவித்தன. பயிர்கள் அழிக்கப்படலாயின. மதுரையில் உள்ள மக்கள் அதிகமாக நோய்வாய்ப்பட்டு மடிந்தனர். இவ்வாறான பேரின்னல்களைச் சொக்கநாத நாயக்கர் சந்தித்தார்.

  சொக்கநாதர் தாம் அரசாட்சியை ஏற்றதிலிருந்து பல துன்பங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். இவர் ஓயாது போர் புரியவேண்டியிருந்தது. இவர் இளைஞராக இருந்த காரணத்தினால் போரில் ஈடுபட்டார். ஒரு சமயம் வனமியான் என்பவன் தஞ்சையின் உதவியுடன் திருச்சிக்குப் படையெடுத்து வந்தான். இவ்வனமியான் பீஜப்பூர் சுல்தான் அடில்ஷாவிடம் படைத்தலைவனாக இருந்தான். இவன் திருச்சியின் மீது படையெடுத்து வந்தபோது அங்குள்ள பயிர்களை எரித்தான். மக்களைத் துன்புறுத்தினான். மக்கள் சொல்லொணாத் துயருக்கு உள்ளானார்கள். மன்னர் சொக்கநாதரிடம் பெரும்படையிருந்தாலும் தன் குடிமக்களுக்குத் தொல்லை நேராமல் இருக்கும் பொருட்டு, வனமியான் நாட்டை விட்டு அகலுவதற்காக அவனுக்குப் பெரும்பொருளைக் கொடுத்து அனுப்பினார்.

 • சொக்கநாத நாயக்கர் போர்கள்
 • சொக்கநாத நாயக்கர் பல போர்களில் ஈடுபட்டிருந்தாலும் அவருடைய வரலாற்றில் மூன்று முக்கியப் போர்களைக் கூறலாம். அவையாவன: தஞ்சை மீது போர் தொடுத்தது, சேதுபதியுடன் போர் புரிந்தது, தஞ்சை மன்னர் விசயராகவ நாயக்கர் பெண் கொடுக்க மறுத்தமைக்காகப் போர் புரிந்தது என்பன.

 • தஞ்சை மீது போர்
 • பெரும்பொருள் கொடுத்து வனமியானை ஒழித்த பின்பு சொக்கநாத நாயக்கர் வெற்றிச் செருக்குற்றுப் பழி வாங்கும் திட்டத்தில் இறங்கி அழிவுப் பாதையில் செல்ல ஆரம்பித்தார். தஞ்சை விசயராகவ நாயக்கர் முன்னர் நடந்த வனமியான் படையெடுப்பில் தமக்கு உதவி புரியாமல் எதிரிகளோடு சேர்ந்து கொண்டதற்காக அவரைப் பழி வாங்கக் கருதித் தஞ்சை மீது கி.பி.1664இல் படையெடுத்துச் சென்று வல்லத்துக் கோட்டையைக் கைப்பற்றினார். தஞ்சை நாயக்கர் வேறொன்றும் செய்யமுடியாது, சொக்கநாத நாயக்கர் சொற்படி நடக்க ஒப்புக்கொண்டார். ஆதலால், சொக்கநாத நாயக்கர் வல்லத்தில் தமது பாதுகாப்புப் படையை நிறுத்திவிட்டு மதுரைக்குத் திரும்பினார். ஆனால் சிறிது காலம் கழித்து விசயராகவ நாயக்கர் வல்லத்தை மீட்டுக் கொண்டார்.

 • சேதுபதியுடன் போர்
 • சொக்கநாதர் வல்லத்தைக் கைப்பற்றித் தஞ்சை மன்னரைப் பழிவாங்கியதோடு விடாமல், தம் படை வீரர்களின் போர் ஆர்வம் குறைந்து போவதற்குள், வனமியான் படையெடுப்பில் திருமலைச் சேதுபதி தமக்குப் படையுதவி செய்யாமல் இருந்ததற்காக அவர்மீது போர் தொடுத்தார். முதலில் சொக்கநாத நாயக்கர் சேதுபதி ஆண்டு வந்த மறவர் சீமையில் புகுந்து திருப்பத்தூர், புதுக்கோட்டை, மானாமதுரை, காளையார் கோயில் போன்ற இடங்களைக் கைப்பற்றினார். இதை அறிந்த சேதுபதி சிறிதும் மனம் கலங்கவில்லை. நேர்நின்று எதிர்த்துப் போர் புரிவதைக் கைவிட்டு, மறைந்து தாக்கும் மாயப் போரில் ஈடுபட்டார். இதனால் மதுரையிலிருந்து வந்த சொக்கநாத நாயக்கரின் போர்வீரர்கள் மடியலானார்கள். அச்சமயத்தில் மதுரைத் தலைநகரில் சமயச் சார்பான விழாவை முன்னிருந்து நடத்த வேண்டிய பொறுப்பு இருந்ததால் சொக்கநாத நாயக்கர் மறவர் நாட்டுப் போர்ப் பொறுப்பைத் தம் படைத் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டு மதுரைக்குத் திரும்பினார்.

 • பெண் கொடுக்க மறுத்தமைக்காகப் போர்
 • தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலம்பகத்தில் பெண் கொடுக்க மறுத்துப் போர் செய்ததாகக் கூறும் மறம் என்னும் துறை இருக்கக் காண்கிறோம்.

  தஞ்சை மன்னர் விசயராகவ நாயக்கரிடம் தமக்குப் பெண் கொடுக்குமாறு சொக்கநாத நாயக்கர் கேட்க, அவர் மகளைக் கொடுக்க மறுத்த காரணத்தால் சொக்கநாதர் அத்தஞ்சை மன்னரோடு கி.பி.1673இல் போர் தொடுத்தார். விசயராகவ நாயக்கர் அரசர் வழிவந்தவர், ஆனால் சொக்கநாத நாயக்கரோ அரசாங்க ஊழியராக இருந்த விசுவநாத நாயக்கர் பரம்பரையில் வந்தவர். அரசப் பரம்பரை இல்லாத காரணத்தால் சொக்கநாத நாயக்கருக்கு விசயராகவ நாயக்கர் பெண் கொடுக்கவில்லை. பலமுறை சொக்கநாத நாயக்கர் விசயராகவ நாயக்கருக்குத் தூது அனுப்பியும் பெண் கொடுக்க மறுத்துவிட்டார். கடைசியில் விசயராகவ நாயக்கர் அரண்மனையில் அந்தப்புரத்தை வெடிவைத்து அழிக்குமாறு கட்டளையிட்டு விட்டுப் போர்புரிந்து தம் மகளுடன் உயிர் நீத்தார்.

  4.2.4 மங்கம்மாள் (கி.பி. 1689-1706)

  இவள் சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவாள். சொக்கநாத நாயக்கருக்கும் மங்கம்மாளுக்கும் பிறந்த மகன் மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் ஆவார். இவர் தன் தந்தை சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப் பின் பட்டத்திற்கு வந்து ஏழு ஆண்டுகள் (கி.பி. 1682-1689) ஆட்சி புரிந்தார். இவர் தமது ஆட்சிக் காலத்தில், தம் தந்தையார் இழந்த மதுரை நாட்டின் பகுதிகளை மீட்டார். இவருடைய மகன் விசயரங்க சொக்கநாதன் ஆவார். இவர் பிறந்தபோது இவரது தந்தையார் உயிருடன் இல்லை. எனவே மூன்றாம் திங்களிலேயே குழந்தை விசயரங்க சொக்கநாதனுக்குப் பட்டம் சூட்டி, பாட்டியாகிய மங்கம்மாள் அக்குழந்தையின் சார்பாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தலானாள். கி.பி.1689இலிருந்து 1706வரையில் மங்கம்மாளின் சார்பாட்சி மதுரைப் பெருநாட்டில் மாண்புற நடைபெற்றது.

 • மங்கம்மாளின் ஆட்சி
 • ஔரங்கசீபு என்னும் மொகலாய அரசன் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டு வந்தான். தென்னகத்திலிருந்து அம்மன்னனை எதிர்த்துக் கொண்டிருந்த சிவாஜி என்ற மன்னர் மறைந்து விட்டார். இவரது மறைவின் காரணமாகத் தென்னகத்தில் ஔரங்கசீபின் ஆட்சி ஏற்படலாம் என எண்ணிப் பல அரசர்கள் அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். மைசூர் மன்னன் சிக்கதேவராயன் ஔரங்கசீபுடன் உடன்படிக்கை செய்து கொண்டான். தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய வேந்தன் ஷாஜி என்பவனும் ஔரங்கசீப்புக்குத் தலைவணங்கித் திறை செலுத்த முற்பட்டு விட்டான். இவற்றையெல்லாம் அறிந்து கொண்ட மங்கம்மாளும் காலநிலை, மாற்றான் வலிமை அறிந்து ஔரங்கசீப்புக்குத் திறைப் பணம் செலுத்தி மதுரையைத் தக்கவைத்துக் கொண்டாள்.

  மங்கம்மாள் ஔரங்கசீப்புக்குத் திறை செலுத்தி வந்தாலும் அவர்களுடன் நட்புக் கொண்டு அவர்கள் உதவியால் பகைவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த மதுரை நாட்டுப் பகுதிகளை எளிதாக மீட்டுக் கொண்டாள். தஞ்சை மன்னன் மதுரை நாட்டுப் பகுதிகள் சிலவற்றை முன்பே கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்தான். இருப்பினும் இந்தத் தஞ்சை மன்னன் ஷாஜி ஔரங்கசீப்புக்குத் திறை செலுத்தி வந்த காரணத்தால் அவனோடு போர் புரிய முடியவில்லை. இருந்தபோதிலும் மொகலாயப் படைத்தலைவன் சுல்பிர்கான் கி.பி. 1697இல் தெற்கே வந்தபோது, மங்கம்மாள் அவனுக்கு விலையுயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்து அவனுடைய உதவியால் தஞ்சை மன்னன் பிடித்து வைத்திருந்த அப்பகுதிகளை மீட்டுக் கொண்டாள்.

  எனினும் மங்கம்மாளுக்கு மராட்டியர் அடிக்கடி தொல்லைகள் தந்து வந்தனர். அவர்களுக்கு மங்கம்மாள் பல முறை பணம் கொடுத்து அவர்களுடைய தொல்லைகளுக்கு ஓர் எல்லை கட்டி வைத்தாள். மதுரையைக் காக்க மங்கம்மாள் இவ்வாறு எல்லாம் செய்ய வேண்டியதாயிற்று.

 • மங்கம்மாள் செய்த போர்கள்
 • மங்கம்மாள் மைசூர், தஞ்சை போன்ற இடங்களை ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள் மீது போர் தொடுத்தாள்; சேதுபதியுடன் போர் புரிந்தாள்; இரவிவர்மன் என்பவனைத் தண்டிக்க வேண்டியும் படையெடுப்பு நடத்தினாள்.

 • மைசூர் படையெடுப்பு
 • திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்ற வேண்டி மைசூர் மன்னன் சிக்கதேவராயன் தனது படைத்தலைவன் குமரய்யா என்பவனை அனுப்பி வைத்தான். அப்படைத் தலைவன் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டுக் கடும்போர் புரிந்து கொண்டிருந்தான். இச்சமயத்தில் மைசூரை மராட்டியர் தாக்க முற்பட்டனர். இதனை அறிந்த அப்படைத் தலைவன் குமரய்யா திருச்சிராப்பள்ளி முற்றுகையைக் கைவிட்டு, தன் நாட்டைக் காக்கும் பொருட்டுத் திரும்பினான். இந்தச் சந்தர்ப்பத்தை மங்கம்மாள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு எஞ்சி நின்ற மைசூர்ப் படையை அஞ்சாது தாக்கி வெற்றி பெற்றாள். இதனால் மைசூர்த் தொல்லை ஒழிந்தது.

 • தஞ்சைப் போர்
 • தஞ்சையை ஆண்டு வந்த ஷாஜி (கி.பி.1684-1712) என்பவன் கி.பி.1700இல் தனது படைத்தலைவன் மூலம் மதுரை நாட்டில் அடங்கிய திருச்சிப் பகுதியில் நுழைந்து நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தான். இதனை அறிந்த மங்கம்மாள் மொகலாயப் பேரரசின் உதவியின்றித் தனது படைத்தலைவன் தளவாய் நரசப்பய்யா என்பவனை அக்கொள்ளையைத் தடுக்கும்படி உத்தரவிட்டாள். (தளவாய்–படைத்தலைவன்.) எவ்வளவு செய்தும் அக்கொள்ளையைத் தடுக்க முடியாமல் போனதும், நரசப்பய்யா ஒருவருக்கும் தெரியாமல் கொள்ளிடத்தில் வெள்ளம் குறைந்தபோது தனது படைவீரர்களுடன் அக்கரைக்குச் சென்று தஞ்சை நாட்டில் உள்ள நகரங்களைக் கொள்ளையடிக்க முற்பட்டான். இதனை அறிந்து கொண்ட தஞ்சை நாட்டுப் படைவீரர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். இந்நிலையில் தஞ்சை மன்னன் ஷாஜியின் முதல் அமைச்சனாகிய பாலோஜி என்பவன் நிறைய பொருள்களைத் தனது நாட்டின் பெரும் வியாபாரிகளிடமிருந்து வாங்கிக் கொண்டும், கஜானாவிலிருந்து எடுத்துக் கொண்டும் போய்க் கொடுத்து நரசப்பய்யாவிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இதன் மூலம் மங்கம்மாளுக்கும், தஞ்சைக்கும் நல்லுறவு ஏற்பட்டது.

 • இரவிவர்மன் மீது படையெடுப்பு
 • மங்கம்மாளின் சம காலத்தவன் இரவிவர்மன் (கி.பி.1684-1718). இவன் திருவாங்கூரை ஆண்டு வந்தான். இந்த இரவிவர்மன் திருமலை நாயக்கர் காலந்தொட்டு மதுரைக்குச் செலுத்தி வந்த திறைப்பணத்தை நிறுத்திவிட்டான். இதனையறிந்த மதுரைநாட்டு வீரர்கள் திருவாங்கூர் மீது படையெடுத்தனர். அவ்வமயம் இரவிவர்மனின் நாட்டு அமைச்சர்கள் எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள் ஆவர். இவர்கள் இரவிவர்மனுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். இவர்களை ஒழிக்க வேண்டும் என்று எண்ணி இரவிவர்மன் சூழ்ச்சி செய்தான். மதுரைப் படையினரை அணுகி எட்டுவீட்டுப் பிள்ளைமார்களை நாட்டைவிட்டு ஒழித்துக் கட்டினால் திருவாங்கூரில் பாதியைத் தருவதாக ஒப்புக் கொண்டான். இதை நம்பிய மதுரைப்படையினர் எட்டுவீட்டுப் பிள்ளைமார்களைத் தாக்கி ஒழித்தனர். ஆனால் ஒப்பந்தப்படி இரவிவர்மன் நடந்து கொள்ளவில்லை. அதற்கு மாறாக மதுரைப் படையினரைத் தாக்கி அழிக்கலானான். மதுரைப் படையினர் தப்பி ஓடி இச்செய்தியை மங்கம்மாளிடம் கூறினார்கள். இதுகேட்ட மங்கம்மாள் பொங்கி எழுந்தாள். கி.பி.1697இல் தளவாய் நரசப்பய்யா தலைமையில் ஒரு பெரும்படையைத் திருவாங்கூருக்கு அனுப்பினாள். தளவாய் நரசப்பய்யா கடும்போர் நடத்தி வெற்றி பெற்றான். திருவாங்கூர் மன்னன் வெகுநாள் வரைக்கும் கட்டாமல் இருந்த திறைப்பணம் முழுவதையும் பெற்றுக் கொண்டு மதுரை திரும்பினான்.

 • சேதுபதியுடன் போர்
 • மறவர் சீமை எனப்படும் சேதுநாட்டை ஆண்டுவந்த சேதுபதி, மங்கம்மாளின் ஆட்சிக் காலத்தில் கி.பி.1698இல் மதுரையைக் கைப்பற்றிச் சில காலம் ஆண்டு வந்தான். மங்கம்மாளின் ஆணைக்கு ஏற்பத் தளவாய் நரசப்பய்யா, மதுரையின் மீது படையெடுத்துச் சென்று வென்று, சேதுபதியை அங்கிருந்து சேதுநாட்டிற்கு விரட்டியடித்தான். ஆனால் மங்கம்மாள் சேதுபதியை அப்படியே விட்டுவிடவில்லை. கி.பி.1702இல் சேதுநாட்டின் மீது படையெடுத்துச் செல்லுமாறு தளவாய் நரசப்பய்யாவுக்கு ஆணையிட்டாள். அப்போது தஞ்சை மன்னன் ஷாஜி மங்கம்மாளுடன் கொண்டிருந்த நட்புறவைக் கைவிட்டுச் சேதுபதியோடு சேர்ந்து கொண்டான். போரில் நரசப்பய்யா கொல்லப்பட்டான். நரசப்பய்யா தலைமையில் சென்ற மதுரைப் படையும் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் சேதுபதியை மங்கம்மாளால் அடக்க முடியவில்லை. அவள் இறக்கும் முன்னரே சேதுநாடு முழுவுரிமை நாடாயிற்று. (சேது நாடு என்பது தமிழ்நாட்டில் தற்போது உள்ள இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியிருந்த ஒரு நாடு ஆகும்.)

  இவ்வாறாக மங்கம்மாள் பல போர்களைச் செய்து வெற்றியையும் தோல்வியையும் சந்தித்தாள்.

 • சௌராஷ்டிர சாசனம்
 • சௌராஷ்டிரர் என்பவர்கள் ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள். சௌராஷ்டிரர் என்னும் சொல்லுக்குக் கதிரவனை வழிபடுவோர் என்பது பொருள். இவர்களின் முன்னோர்கள் கத்தியவார் என்று சொல்லப்படும் சௌராஷ்டிரா நாட்டைச் சேர்ந்தவர்களாதலால் சௌராஷ்டிரர் எனப்படுவர். இவர்களின் முன்னோர்கள் கத்தியவாரில் பட்டுநூல் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் கி.பி.5ஆம் நூற்றாண்டில் குமார குப்தன் என்ற குப்த மன்னன் விருப்பப்படி மேற்கு மாளவ நாட்டிலுள்ள மந்தகோர் என்ற நகரத்தில் குடியேறினர். அங்குக் கிடைக்கும் கல்வெட்டுகள் சௌராஷ்டிரர்களைப் பட்டவாயகர் என்று குறிப்பிடுகின்றன. இதற்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு பட்டுநூல்காரர் என்பதாகும். இன்றும் மதுரை நகரில் வாழும் சௌராஷ்டிரரைப் பட்டுநூல்காரர் என்றே அழைக்கின்றனர்.

  இவர்கள் கஜினி முகமது படையெடுப்பால் மந்தகோரை விட்டுத் தேவகிரியை அடைந்து அங்கு வசித்தார்கள். அந்தத் தேவகிரி மீது மாலிக்காபூர் படையெடுத்தபோது இவர்கள் விசயநகரத்தை அடைந்து வாழ்ந்து வந்தனர். பின்பு விசயநகரம் தலைக்கோட்டைப் போரில் இசுலாமியரால் அழிக்கப்பட்டபோது சௌராஷ்டிரர்கள் விசயநகரத்தை விட்டு மதுரையை நோக்கி வரலாயினர். திருமலை நாயக்கர் காலத்தில் அவருடைய ஜரிகை வேலைப்பாடமைந்த துணிகளை நெய்வதற்காக மதுரைக்கு வந்து குடியேறி, அவரது அரண்மனையைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்து வரலானார்கள்.

  மதுரையில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் பிராமணர்களுடைய ஆசாரங்கள் சிலவற்றை ( பூணூல் அணிதல் போன்றவற்றை) மேற்கொண்டனர். இதற்குப் பிராமண குலத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, மங்கம்மாள் ‘சௌராஷ்டிரர்கள் பிராமணரது ஆச்சாரங்களுக்கு உரியவர்களா அல்லரா’ என்பதைச் சாத்திர வல்லுநர்களைக் கூட்டி ஆராய்ந்து, அவர்கள் கூறிய முடிவுப்படி ‘சௌராஷ்டிரர்கள் பிராமணரது ஆச்சாரங்களுக்கு உரியவர்களே’ என்று தீர்மானம் செய்தாள். அதைக் கி.பி.1705இல் பனை ஓலையில் ஒரு சாசனமாக அரசாங்க முத்திரையுடன் எழுதிக் கொடுத்தாள். இதனையே சௌராஷ்டிர சாசனம் என்பர்.

 • மங்கம்மாளும் கிறிஸ்தவமும்
 • மதுரை நாட்டின் அண்டை நாடான மறவர் நாடும், தஞ்சையும் கிறிஸ்தவ சமயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இவ்வெதிர்ப்பின் காரணமாக ஜான்-டி-பிரிட்டோ என்ற பாதிரியாரின் உடல் கண்டதுண்டமாக வெட்டப்பட்டுக் கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டது. மேலும் மறவர் நாட்டில் கிறித்தவ சமய ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். பெர்னார்டு பாதிரியார் என்பவரின் பற்கள் உடைக்கப்பட்டன. அவரைப் பின்பற்றியவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கப்பட்டது. மறவர் நாட்டில் எதிர்ப்பு தெரிவித்தது போல் தஞ்சையிலும் பல எதிர்ப்புகள் கிளம்பின. கிறித்தவ சமயம் பரவினால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்று மங்கம்மாளுக்கு அண்டை நாட்டினர் கடிதம் எழுதினர். ஆனால் அதற்கு மாறாக மதுரையை ஆண்ட மங்கம்மாள் கிறித்தவ சமயத்தைப் போதித்தவர்களுக்கும், அச்சமயத்தைத் தழுவியர்களுக்கும் பாதுகாப்பளித்தாள்; அவர்கள் மீது பரிவு காட்டினாள். மறவர் நாட்டுச் சிறையில் அடைபட்டுச் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெல்லோ பாதிரியாரை விடுதலையடையும்படி செய்தாள்.

 • மங்கம்மாளும் இசுலாமும்
 • மங்கம்மாள் இசுலாமியரின் பள்ளிவாசல் மற்றும் தர்க்கா கட்டுவதற்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்ததைச் செப்பேட்டுச் சாசனங்கள் தெரிவிக்கின்றன. கி.பி.1692ஆம் ஆண்டுச் செப்புச் சாசனம் ஒன்று பள்ளிவாசலின் பாதுகாப்புக்காக, தன் பேரன் விசயரங்க சொக்கநாதர் பெயரால் நிலம் கொடுத்ததைக் கூறுகிறது. கி.பி.1701ஆம் ஆண்டுத் தெலுங்குச் சாசனம் ஒன்று, தர்க்காவுக்காகத் திருச்சிக்கு அருகில் இருக்கும் சில கிராமங்களை விட்டுக் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது.

 • மங்கம்மாள் செய்த அறச் செயல்கள்
 • மங்கம்மாள் நாட்டு மக்களுக்குச் செய்து கொடுத்த வசதிகளும், சமய வேறுபாடு இல்லாமல் எல்லாச் சமயத்தார்க்கும் செய்த அறங்களும் இன்றும் மதுரைவாழ் மக்களால் பாராட்டப்படுகின்றன. மங்கம்மாள் கோயிலைக் கட்டி, குளங்களை வெட்டிக் கால்வாய்களைச் செப்பனிட்டுச் சாலைகளையும், சோலைகளையும் அமைத்து, சத்திரங்களையும் சாவடிகளையும் கட்டி, வழிப்போக்கர்களுக்குத் தண்ணீர்ப் பந்தல்களையும் ஏற்படுத்தினாள். கி.பி.1701ஆம் ஆண்டுச் சாசனம் ஒன்று, மங்கம்மாள் அன்ன சத்திரங்களுக்கு நிலங்களைக் கொடுத்ததைக் கூறுகிறது. மதுரையில் புகைவண்டி சந்திப்பிற்கு எதிரே உள்ள மங்கம்மாள் சத்திரம் மங்கம்மாள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது.

  4.2.5 மீனாட்சி அரசி (கி.பி. 1732-1736)

  மங்கம்மாளுக்குப் பிறகு அவருடைய பேரன் விசயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இவர் கி.பி.1706 முதல் 1732 வரை ஆட்சியை நடத்தி வந்தார். இவருடைய மனைவி மீனாட்சி அரசி ஆவாள். இவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லை. மீனாட்சி அரசி மங்கம்மாளைப் போல நாடாளும் ஆசை கொண்டாள். எனவே தன் கணவர் இறந்ததும் திருமலை நாயக்கரின் தம்பி குமாரமுத்துவின் வழிவந்த பங்காரு திருமலையின் மகனாகிய விசயகுமாரன் என்பவனை மகன்மை செய்துகொண்டு (சுவிகாரம் எடுத்துக்கொண்டு), கி.பி. 1732இல் மதுரை நாட்டின் ஆட்சியை மேற்கொண்டாள்.

  மீனாட்சி அரசிக்கு நாடாளும் ஆசையிருந்தாலும், மங்கம்மாளுக்கு இருந்தது போன்ற ஆற்றல் இல்லை; அரசியல் அறிவும் இல்லை; உலக அனுபவமும் இல்லை. சூழ்ச்சிகளும் வீழ்ச்சிகளும் நிறைந்த அக்கால அரச வாழ்வுக்கு அவள் ஏற்றவளாக இல்லை. இதனால் அவள் அரசியல் வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது.

  மீனாட்சி அரசி மகன்மை செய்து கொண்ட விசயகுமாரனின் தந்தை பங்காரு திருமலைக்கு மதுரை நாட்டு மன்னனாகும் ஆசை மனத்தில் புகுந்தது. தளவாய் வேங்கடாசாரியும் அவனது ஆசைக்கு ஆதரவு தந்தான். இருவரும் ஒன்று சேர்ந்து மீனாட்சி அரசியைக் கவிழ்க்க முயற்சி எடுத்தனர். முதலில் திருச்சிக் கோட்டைக்குள் நுழைந்து, மீனாட்சி அரசியை அரசபீடத்திலிருந்து அகற்றிவிட முயன்றனர். இம்முதல் முயற்சி கைகூடாமல் போயிற்று. எனினும் இருவரும் முயற்சியைக் கைவிடாமல் கலகம் செய்து கொண்டிருந்தனர்.

  அப்போது ஆர்க்காட்டை நவாப் தோஸ்து அலிகான் என்பவன் ஆண்டு வந்தான். இவன் மதுரை நாட்டில் நடந்துவரும் கலகத்தை அறிந்தான். மதுரை நாட்டைக் கைப்பற்றிக் கப்பம் வாங்கி வரும்படி தன் மகன் சப்தர் அலிகான், மருமகன் சந்தாசாகிபு ஆகிய இருவர் தலைமையில் மதுரைக்குப் படையை அனுப்பினான். இப்படையெடுப்பு கி.பி.1734இல் நிகழ்ந்தது.

  சந்தாசாகிபு

  ஆர்க்காட்டு நவாப் படை திருச்சியை வந்து அடைந்தது. இதை அறிந்த பங்காரு திருமலை சப்தர் அலிகானை நேரில் கண்டு, திருச்சியைக் கைப்பற்றித் தனக்கு அளித்தால் முப்பது இலட்சம் ரூபாய் அளிப்பதாகக் கூறி, அவனோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான். சப்தர் அலிகான் அப்பணத்தை வாங்கிவருமாறு சந்தாசாகிபுவைப் படையுடன் நிறுத்திவிட்டு ஆர்க்காடு திரும்பினான்.

  இதனைக் கேள்விப்பட்ட மீனாட்சி சந்தாசாகிபுவிடம் ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறி, பங்காருவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதற்குக் குரான் மீது சத்தியம் செய்து தருமாறும் வற்புறுத்தினாள். சந்தாசாகிபு குரான் மேல் கைவைத்துச் சத்தியம் செய்து கொடுத்தான். இதற்கிடையில் பங்காருவுடனும் மீனாட்சி சமாதானம் செய்து கொண்டாள். பங்காரு திண்டுக்கல் பகுதியை ஆட்சி செய்யலானான். எனவே சந்தாசாகிபு இனி இவர்களை மோதவிட்டு இலாபம் பெற இயலாது என அறிந்து ஆர்க்காடு திரும்பினான்.

  ஆனால் சந்தாசாகிபு கி.பி.1736இல் மீண்டும் மதுரையைக் கைப்பற்றும் திட்டத்தோடு திருச்சிக்கு வந்தான். மீனாட்சியோடு சாதுர்யமாகப் பேசி ஆட்சிப் பொறுப்பையும், படைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். திருச்சிக் கோட்டையை வலுப்படுத்தினான். பங்காரு வசம் இருந்த திண்டுக்கல்லை ஒரு பெரும்படை ஒன்றை அனுப்பிக் கைப்பற்றினான். பங்காரு தன் மகன் விசயகுமாரனுடன் சிவகங்கை ஓடி ஒளிந்து கொண்டான். பின்பு மதுரையை முழுக்கத் தன் வசமாக்கிக் கொண்ட சந்தாசாகிபு திருச்சி சென்று மீனாட்சி அரசியைச் சிறை செய்தான். மீனாட்சிக்கு அப்போதுதான் சந்தாசாகிபுவின் வஞ்சகம் தெரிந்தது. வஞ்சகனால் கொலையுண்டு சாவதைவிட, நஞ்சுண்டு இறப்பதே மேல் என்றெண்ணி, நஞ்சு குடித்து உயிர் துறந்தாள். மீனாட்சி அரசியோடு மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்தது.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1.
  நாயக்கர்களின் வரலாறு எப்பேரரசினுடன் பிணைந்துள்ளது?
  2.
  தஞ்சையில் முதன் முதலில் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கியவர் யார்?
  3.
  வையப்ப நாயக்கர் எப்பகுதியில் நாயக்கர் ஆட்சியைத் துவக்கினார்?
  4.
  சதாசிவன் என்பவன் யார்?
  5.
  ‘நாயக்கர்’ என்பது எச்சொல்லின் திரிபாகும்?
  6.
  நாயக்க மன்னர்கள் முதலில் எவ்வாறு இருந்தனர்?
  7.
  மதுரை நாயக்கர் ஆட்சி எவ்வாண்டு தொடங்கப்பட்டது?
  8.
  விசுவநாத நாயக்கர் எத்தனை பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார்?
  9.
  திருமலை நாயக்கர் தலைநகரை எங்கு மாற்றினார்?
  10.
  மதுரையில் உள்ள மகாலைக் கட்டியது யார்?
  11.
  யாருக்காக மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நடத்தினாள்?
  12.
  மங்கம்மாள் ஔரங்கசீப்புடன் நட்புறவு கொண்டிருந்தாளா?
  13.
  ‘சுல்பிர்கான்’ என்பவன் யார்?
  14.
  தளவாய் நரசப்பய்யா யாரின் தளபதி?
  15.
  இரவிவர்மனின் நாட்டு அமைச்சர்கள் யாவர்?
  16.
  ‘பட்டுநூல்காரர்’ என்பவர் யார்?